Thursday 19 November 2009

விஜய்

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஏற்றுக்கொண்ட வேலை அது. நேர்முகத்திலேயே செய்பணிகளுக்கான உப தலைவர் லொய்ட் சொல்லியிருந்தார், விஜய் என்கிற இந்தியருடன்தான் நீ பணியாற்றவேண்டும் என்று. எங்கள் பணிப்பகுதியின் முகாமையாளரான டெரிக் என்பவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். முதல்நாள் நேரடியாக டெரிக்கின் அலுவலகத்துக்கே சென்றேன். அவர் என்னை விஜயிடம் ஒப்படைத்து, ‘இன்று முதல் இவன் இங்கே உன்னுடன் வேலைசெய்யப்போகிறான். இவனுக்கு அன்றாடக் கருமங்களைப் பற்றிச் சொல்லிக்கொடு என்றுவிட்டு டெரிக் விடைபெற, விஜயுடன் ஐக்கியமானேன்.

ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். வெளிநாட்டுக்காக நான் பயன்படுத்தும் ஆங்கிலப் பெயரைச் சொல்ல, ‘அதுதான் உன்னுடைய உண்மையான பெயரா?' என்றார். நான் இல்லை என்று என் பெயர் சொல்ல ‘ஓ... அப்போது நீ இந்துவா?' என்றார். ‘இந்துவாகத்தான் பிறந்தேன்' என்றேன் வேகமாக. 60 வயதான அவருக்கு அது சரியாகப் புரிந்து போகாமல் இருக்க அவரது வயது மட்டும் காரணமில்லை. தன்னுடைய பெயர் விஜய் குமார் ஷர்மா என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரை திரு.ஷர்மா அல்லது திருவாளர். விஜய் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். காலைச் சிற்றுண்டிக்கான இடைவேளையில் இருப்பதற்கு இடம் தேடியபோது விஜய் என்னை அழைத்துத் தன்னுடைய மேசையில் இடம் தந்தார். அங்கே வேலை செய்யும் சீனப் பெண்ணொருத்தி இருவரையும் வித்தியாசமாகப் பார்த்துச் சிரித்தாற்போல் தோன்றியது (அவளது கண்கள் எப்போதுமே சிரித்துக்கொண்டேயிருந்தன). கடந்து போன ஒரு கரீபியன் பெண் ‘அட, அதெப்படி விஜய் இவனுக்கு மட்டும் உன் மேசையில் இடம் கொடுத்திருக்கிறாய்?' என்றாள். விஜய் சிம்பிளாகச் சொன்னார், 'அவன் ஒரு இந்து ஆண். அதனால் அவன் எனக்குச் சரிசமமாக இருந்து சாப்பிடலாம்'. அதிர்ந்தேன்.

விஜய் என்னை ஒரு சக மனிதனாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் தன்னைப் பற்றி அடுக்கினார். 'நான் ஒரு பிராமணன் தெரியுமா?. என்னுடைய குடும்பப் பெயரே ஷர்மா. நாங்களெல்லாம் மற்றவர்கள் கண்முன்னே சாப்பிடக்கூடாது. நீ ஒரு இந்து ஆணாக இருப்பதால் உனக்கு இந்த மேசையில் இருப்பதற்கு அனுமதி இருக்கிறது' என்றார். எனக்கு மதிய உணவருந்த ஒரு புதிய இடம் தேடவேண்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. காரணம், நல்ல மட்டன் கறிவைத்து சாண்ட்விச் செய்துகொண்டு போயிருந்தேன் அன்றைய மதிய உணவாக. பின்னர் அவரே சொன்னார், ‘இலங்கை இந்துக்கள் மாமிசம் சாப்பிடிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் சாப்பிடுவாயா?. சாப்பிடுவாய் என்றால் பரவாயில்லை. நீ ஒரு இந்து ஆண். ஆகவே உனக்கு இந்த மேசையில் அனுமதி இருக்கிறது'. அப்பாடா...........

விஜய் வேலை செய்யும்போதான சின்னச்சின்ன உரையாடல்களிலும், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார், ‘நான் ஒரு பிராமணன், அதுவும் ஐயர்' என்று. இலங்கை இந்துக்களும் இந்திய இந்துக்களும் வழிபடும் தெய்வங்கள் பற்றி வகுப்பெடுத்தார். கார்த்திகேயன் (கார்த்திக் என்பது விஜயின் பாஷை) என்கிற முருகனின் பெயருக்கும், எனக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்பா சொல்வார் என்று சொல்ல, ‘உங்கள் குடும்பம் நல்ல இந்துக் குடும்பம்' என்று சொல்லிச் சிரித்தார்.

அதன் பின் பல விஷயங்கள் உரையாடினோம். விஜய்க்கு கிரிக்கெட் பிடித்திருந்தது. சினிமா பிடித்திருந்தது. கனடா பிடித்திருந்தது. நீல்கிரீஸ் இட்டலி பிடித்திருந்தது. ஏ-வன் லட்டு பிடித்திருந்தது. ஆப்பிள் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் (அந்தச் சீனப் பெண்ணை இப்படித்தான் கூப்பிடுவார் சிங்கன்) பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட இந்துமதம் பிடித்திருந்தது. சிவ சேனாவைப் பிடிக்கவில்லை. மோடியைப் பிடிக்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை தெரிந்திருந்தது. அரசியல் தலைவர்கள் பெயர் தெரிந்திருந்தது. பிரபாகரனின் கதை தெரிந்திருந்தது. சில தமிழ்ச் சொற்களும் தெரிந்திருந்தன. எல்லாவற்றையும் விட மற்ற மதங்களை மட்டம்தட்டிப் பேசத் தெரிந்திருந்தது.

மதம் பற்றியும், தன் குலம் பற்றியும் பெரிதாகப் பீற்றிப் பீற்றியே கடுப்புற வைப்பார் விஜய். நானும் இயன்றவரை இந்தத் தலைப்பிலிருந்து விலகி கிரிக்கெட் பற்றி, வேலை பற்றியெல்லாம் பேசிப்பார்ப்பேன். சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவார் விஜய். இப்படியான ஒரு நாளில் மதிய உணவு நேரத்தில் புதிதாகச் சேர்ந்த என்னுடன் பேசுவதற்காக லொயிட் எங்கள் பகுதிக்கு வந்தார். ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்து லொயிட், பேர்கர் அடைந்த வாயால் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நானும் சொசேஜ் ரோல் அடைந்த வாயால் பதில் சொன்னேன்.

லொயிட் விடைபெற்றுத் திரும்புகையில் நானும் லொயிடும் கவனித்தோம். வியர்த்து விறுவிறுக்க, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விஜய் எழுந்து நின்றார். 'ஏதாவது பிரச்சினையா விஜய்?' என்றார் லொயிட். ‘இல்லை சேர். நீங்கள் என்னுடைய முதலாளி. உங்கள் முன் நான் நிற்பது தவறாகும். என்ன இருந்தாலும் எங்களுக்குச் சோறு போடும் முதலாளி நீங்கள்' என்று உளறினார். லொயிட் 'என்னப்பா இது?' என்கிற மாதிரி என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்ந்தார். கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க, ஆறடி உயரமான, தன் பிறப்புப் பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளைக் கொண்ட, அந்த மதிப்பீடுகளைப் பற்றிய கற்பிதங்களை எனக்குள் ஊட்ட முயன்ற அந்த ஆரியப் பிராமணருக்கு, சுய மரியாதை என்பதன் அர்த்தத்தை விரைவில் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

14 comments:

thiyaa said...

நல்ல இடுகை

ARV Loshan said...

தலைப்பைப் பார்த்து கொலைவெறியோடு வந்தால்... ;)

ஆனால் சுவாரஸ்யமே..
எழுத்துநடை அருமை..

பாவம் விஜய். இங்கே அழைத்து வாருங்கள்.. பாடம் எடுப்போம்.. ;)

Raja said...

அருமை நண்பா. நான் பழகியவரை நிறைய பாப்பான்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் அறியாமை அப்படி. அவர்களுக்கு அவர்கள் முன்னோர் சொல்லித்தந்ததை இன்னமும் பின்பற்றுகிறார்கள். திருத்த முயற்சி செய்வோம்..

vasu balaji said...

சரியாச் சொன்னீங்கள் கிருத்திகன்.

மீன்துள்ளியான் said...

:)) super

அன்புசிவம்(Anbusivam) said...

ஹா...ஹா...

Unknown said...

நன்றி தியா

Unknown said...

லோஷன் அண்ணா...
தலைப்பில அந்தப் பேர் வந்தாலே கொலைவெறியா!!!!! அடப் பாவிகளா. பாவம்யா அந்தாள்.

இந்த விஜய் எல்லாம் தெரிந்த மனநிலையில் இருக்கிறார் பாவம்.

Unknown said...

///அவர்களுக்கு அவர்கள் முன்னோர் சொல்லித்தந்ததை இன்னமும் பின்பற்றுகிறார்கள்///
செ. ஜெபம் ஜெய ராஜா...
உண்மைதான் நண்பரே. இன்னொன்றும் சொல்லவேண்டும்... பார்ப்பனரைப் ‘பாப்பான்' என்பது ஜாதீய இழிவுபடுத்தலே

Unknown said...

நன்றி வானம்பாடிகள் பாலா

Unknown said...

நன்றி meenthulliyan

Unknown said...

அன்பு சிவம் சார்... ஏன் சிரிக்கிறீர்கள்?? :))

தமிழினியன் said...

//சுய மரியாதை என்பதன் அர்த்தத்தை விரைவில் சொல்லிக்கொடுக்கவேண்டும்.//

வெகுவிரைவில் சொல்லிக் கொடுத்துவிடுங்கள்.

Karthikeyan G said...

Very intresting Article..