Wednesday 30 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-4

ஹாட்லிக் கல்லூரியில் உயர்தர வகுப்பு பற்றிய கதைகள் பேசப் போகிறோம் என்றாலே கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அந்தக் கதைகளின் மையமாக இருக்கக் கூடியவர் ராஜேஸ்காந்தன் சேர். ஆள் பயங்கர ‘உசரம்'. பொடியளோட பொடியளா நின்றால் ஆளைத் தெரியாது. அப்படி உயரமான இவர்தான் உயர்தர வகுப்புகளில் நடக்கும் கதைகளின் ஹீரோ.

ராஜேஸ்காந்தன் சேர் எப்ப, என்னத்துக்கு நக்கல் அடிப்பார் என்று தெரியாது. உதாரணத்துக்கு அவர் சொல்லித் தரும் விதத்தில் ஒரு கணக்கைச் செய்யாமல் நாங்கள் தனியார் வகுப்புகளில் கற்ற முறையில் செய்தோமானால் ‘நாங்கள் கடலில் ஏறி அந்தர் அடித்துக் கடலிலும் குதிப்போம், கப்பலையும் கவிழ்ப்போம்' என்றொரு வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு பேசுவார் பாருங்கள், சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அது போல் எறியம் பற்றி எல்லாம் படிப்பிக்கிற போது ‘நான் இங்க பீரங்கி பற்றிப் படிப்பிக்க அவர் தன்ர பீரங்கிய ஆராய்ச்சி பண்ணுறார்' என்று மேசைக்குக் கீழே குனிந்து பார்த்த வாகீசனுக்கு அவர் அடித்த நக்கலையும், சிவாஜிலிங்கம் எம்.பி. யின் மனைவி மலர்விழி பற்றி நாங்கள் பேச ஏதோ எங்கள் வகுப்புப் பெண் பிள்ளை பற்றிப் பேசுகிறோம் என்று சொல்லி இவர் அடித்த நக்கலும் மறவாது.

இவருக்கும் நிதிக்கும் நல்ல பொருத்தம். அடிக்கடி இருவரும் அன்பு பாராட்டுவார்கள். ஒரு முறை பாடங்கள் போரடித்த நிலையில் நிதி ராஜேஸ்காந்தன் சேர் மீதான தன் அன்பைக் காட்ட முயன்றான். இவரை நாங்கள் ஆர்.கே. என்றுதான் அழைப்போம். நிதி அன்பு மிகுதியால் எங்கள் வகுப்புக்கு அருகே இருந்த கழிவறைச் சுவரில் ‘பேராசிரியர் ஆர்.கே. மண்டபம்' என்று பெரிதாக எழுதினான். (எங்கள் பாடசாலையில் துரைராசா மண்டபம், தாமோதரம் பிள்ளை மண்டபம் என்று கன வகுப்பறைத் தொகுதிகள் உண்டு). அவன் எழுதிக் கொண்டிருக்க தூரத்தில் ஆர்.கே. சேர் வந்து கொண்டிருந்தார். மெதுவாக அவனை எச்சரித்தும் அவனுக்குக் கேட்கவில்லை. நான் வகுப்புக்குள்ளேயே இருந்தபடியால் தப்பி நல்ல பிள்ளையாக இருந்து விட்டேன். அதன் பின் நடந்ததை நிதி விபரித்தான்.

மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த நிதியை யாரோ முதுகில் தட்டியிருக்கிறார்கள். நிதி யாரோ நண்பன் என நினைத்து 'பொறடா மச்சான் வாறன்' என்றிருக்கிறான். மீண்டும் தட்டக் கடுப்பாகித் திரும்பியவன் அங்கே கண்டது ஆர்.கே. சேரை. நாங்கள் இருந்த கட்டடத் தொகுதியில் இருந்த 8 வகுப்பறைகளுக்கும் நிதியைக் கூட்டிக் கொண்டுபோய் ‘இவர், எனக்கு மண்டபம் கட்டிறார்' என்று ஆர்.கே சேர் சொல்லிக் கொண்டுவர, எங்கள் இரண்டாம் கதாநாயகன் அருளானந்தம் சேர் மஜிந்தனையும் சோமுவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். 'என்ன விஷயம் உவை செய்தவை' என்று ஆர்.கே. சேர் கேட்க, அருளர் சொன்னார் ‘இவை ரண்டு பேரும் சைக்கிள் பார்க்கில சைக்கிள் ஸ்ராண்ட் உடைக்கினம் சேர்'. அதுவரை பொழுது போகாமல் வாங்கில் மேசைகளை உடைத்துக் கிரிக்கெட் மட்டும் விளையாடி வந்தவர்கள் சுவாரஷ்யப் பற்றாக்குறை காரணமாக இதெல்லாம் செய்தோம்.

அருளருக்கும் எனக்கும் ஒரு காதல் கதையே இருக்கிறது என்று ஜெயன் அடிக்கடி சொல்வான். ஒரு முறை பாடசாலைக் கன்ரீனில் நானும் நிதியும் இருந்து ‘ரீ' யும் இறால் பொரியும் சுவைத்துக் கொண்டிருந்தோம். 'ரீ' குடித்து முடிந்த கோப்பைகளை அங்கே ஒரு பூக்கல்லு உள்ள சுவரில் எல்லோரும் செருகி வைப்பார்கள். அப்படிச் செருகி வைத்த கோப்பைகளை வாசு குறிபார்த்துக் கல்லால் அடித்துக் கொண்டிருந்தான். அருளருக்கு யார் எறிவது என்று தெரியாமல் வந்து அங்கிருந்தவர்களை விசாரித்தார். நானும் நிதியும் அதைச் செய்யாதபடியால் எங்கள் பாட்டுக்கு கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். அருளருக்குக் கோபம் பத்திவிட்டது. ‘நான் ஒரு வாத்தியார் நிண்டு கொண்டு கதைக்கிறன். நீங்கள் மரியாதை இல்லாமல் இருந்து கொண்டு கதைக்கிறியள்' என்று சொல்லி எனக்கும் நிதிக்கும் ‘துள்ளித் துள்ளி' அடித்தார். ‘இவை ரண்டு பேரும் நோட்டட் ஆ' என்று விட்டு அருளர் போய்விட, நான் அடிவாங்கிய கதையைப் பள்ளிக்கூடம் முழுக்கப் பரப்பினான் ஜெயன்.

இது நடந்து கொஞ்சக் காலத்தின் பின் வகுப்பில் கிரிக்கெட் (வகுப்பில் என்றால், வகுப்பறைக்குள்ளே தான்) விளையாடிய போது எங்கள் எதிர் அணி, ஸ்கோரை பிழையாகச் சொன்னதால் ‘கூழ், கூழ்' என்று பகிடியாகக் கத்தினோம். (கிட்டிப் புள்ளு விளையாடுபவர்களுக்கு இது அறிமுகம்). அதாவது ஸ்கோர் பிழையாகச் சொன்னால் மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அந்தச் சத்தம் கேட்டு 4 வகுப்புத் தள்ளிப் பாடம் படிப்பித்த அருளர் வந்துவிட்டார். வகுப்பில் இருந்த எல்லாரையும் வகுப்பைவிட்டு வெளியே போய் வெயிலில் நிற்கச் சொன்னார். ஜெயன் சுவரெல்லாம் பாய்ந்து அடி வாங்காமல் ஓடினான். நான் ஆறுதலாக நல்ல பொடியன் மாதிரி வெளியே போக, அருளரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். பிறகு சொல்லவா வேண்டும்? 'துள்ளித் துள்ளி' அடித்தார். (அருளர் தன் பெரிய உடம்பைத் தூக்கித் துள்ளுவதிலேயே முக்கால்வாசிச் சக்தி போய்விடுவதால் நோகவே நோகாது). இந்தக் கதையையும் பள்ளிக்கூடம் முழுக்க ஜெயன் பரப்பினான்.

கடைசி நாட்களில் நான் செய்த இன்னொரு சின்னக் குறும்பும் பிரபலமானது. அப்போது யாழ்ப்பாணம் முழுவதும் உயர்தர வகுப்புத் தவணைப் பரீட்சைகளை தொண்டைமானாறு Field Work Centre (FWC) நடத்துவார்கள். கணிதம், இரசாயனம், பௌதிகம் மூன்றும் பயங்கரக் கஷ்டமான பரீட்சைகள். ஆங்கிலப் பரீட்சையை 3 மணித்தியாலத்துக்குப் பதிலாக ஒரு மணித்தியாலத்தில் எழுதிவிட்டேன். அந்தக் கடுப்பில் FWC= Federation of Workless Culprits என்று ஆங்கில விடைத்தாளில் எழுத, அதைத் திருத்திய சத்தியசீலன் மாஸ்ரர் பள்ளிக்கூடம் முழுவதும் பரப்பி விட்டார். எங்கள் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் FWCக்காக வினாத்தாள்கள் உருவாக்குபவர்கள். அவர்கள் எல்லாம் என்னைத் தேடிவந்து கேட்டார்கள். (எல்லாருமே அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்கள்)

இப்படி குறும்பாகக் கழிந்த பாடசாலைப் பருவம் முடிவுக்கு வந்த சில நாட்களில் விசர் பிடித்தது போல் இருந்தது என்னவோ உண்மைதான். கடைசி நாளில் பிரியாவிடை போல் என்ன செய்தோம் தெரியுமா? உயர்தர வகுப்புகளில் படிக்கும் அன்றைக்கு வந்த அத்தனை மாணவர்களின் வெள்ளை உடைகளிலும் மை தெளித்துத் தான் வீட்டுக்கு அனுப்பினோம். மை தெளிபடாமல் ஒளித்துத் திரிந்த செந்தூரின் உடுப்பில் மை தெளித்து நான் வெற்றிகரமாக அந்த நாளை முடித்து வைத்தது ஞாபகம் இருக்கிறது. பிரியும்போது கூட எங்களிடம் இருந்த குறும்புத்தனம் ஒருதுளி கூடக் குறையவில்லை.

நாங்கள் கிரிக்கெட் விளையாடி உடைத்த மேசைகள், ஓடுகள் எத்தனை. புதிதாக கீழ் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகமான விவசாயப் பாடத்துக்காக நட்ட எத்தனை கரும்புகளை நாசம் செய்தோம். ஓட்டையாக்கிய சைக்கிள் ரியூப்கள் கணக்கில் அடங்காது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் வைத்த பட்டப் பெயர்கள் மறக்குமா. அழகான பரீதா ரீச்சரிடம் ஒரு நாளாவது படிக்க வேண்டும் என்று சித்திரத்தில் இருந்து சங்கீதத்துக்கு மாறிய பொடியங்களை மறக்க முடியுமா. தடை செய்யப்பட்ட ‘போய்ஸ்' படத்தை வேக வேகமாகப் பரப்பிய அந்த அசட்டுத் தைரியத்தை மறக்க முடியுமா (பேசாமல் போய்ஸ்சை ஓடின மாதிரி தியேட்டரில ஓடவிட்டிருக்கலாம். இலவச விளம்பரம் செய்து எல்லாருமே போய்ஸ் பாக்க வழி வகுத்தார்கள்). ஊடல்கள், கூடல்கள் என்று வாழ்ந்த அந்த நாட்கள் திரும்பிக் கிடைக்குமா. நாளை என்றொரு நாளைப் பற்றிக் கவலையின்றி நாங்கள் வாழ்ந்த அந்த நாட்கள் உண்மையிலேயே ‘துள்ளித் திரிந்த காலம்' தான்.

என்னுடைய பள்ளிப் பருவம் பற்றிய மேலும் பல படைப்புகளை இங்கே சென்று பார்க்கலாம். அதே போல் இந்தத் தொடரின் மற்றைய பாகங்களை இங்கே சென்று பார்க்கலாம்.

இந்தத் தொடரில் என் பாடசாலை வாழ்க்கையில் நடந்த சில துளிகளை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இந்த வலைப்பூவில் என் பாடசாலை வாழ்க்கை பற்றிப் பல இடங்களில் தொட்டுச் சென்றிருக்கிறேன், இனியும் தொடுவேன். ஆகவே, துள்ளித் திரிந்த காலம் தொடரை இத்துடன் முடிப்போமா?

நன்றி

23 comments:

Anonymous said...

குளப்படி பிள்ளை:P

Unknown said...

அப்பாடா.... கடைசியா நீங்களாவது என்னைக் குளப்படிப் பிள்ளை என்று ஒப்புக்கொண்டீர்களே... நன்றி தூயா. நானும் ரவுடிதான்... ரவுடிதான்... ரவுடிதான்

ஆதிரை said...

துள்ளி துள்ளி அடிப்பார்

ரசித்தேன்.. :-)

M.Thevesh said...

ஏன் கிருத்திகன் "ரவுடி" என்ற பெயர்
கேட்ப்பதில் அவ்வளவு ஆசையா?

கலையரசன் said...

:-))
முடிச்சிக்கலாம்!

வந்தியத்தேவன் said...

அடப்பாவி இவ்வளவு குழப்படி செய்தீயா? நாங்கள் உன்னுடன் ஒப்பிடும் போது செய்தவை மிகமிகக் குறைவு

vasu balaji said...

ஏனோ இவ்வளவு அவசரமாக முடித்து விட்டீர்கள். நனவுகள் என்றும் சுகம்தானே?

Unknown said...

ஆதிரை அண்ணா..
உங்களுக்கும் அடிவாங்கும் பாக்கியம் கிட்டியதுண்டா??? பால்குடி ஒருக்கா வாங்கினவர் எண்டு நினைக்கிறேன்

Unknown said...

எல்லாம் ஒரு நப்பாசைதான் தேவேஷ்

Unknown said...

முடிச்சிக்கலாம் கலை...இப்போதைக்கு

Unknown said...

பாலா..
அவசரமாக முடிக்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் ஒரே பதிவில் போட்டதை நான் நாலு பதிவாக இழுத்துத்தான் முடித்திருக்கிறேன். பதிவில் சொன்னது மாதிரியே பல அனுபவங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். வேறு சில இனி வரும் காலங்களில் வரும்...

Unknown said...

வந்தியண்ணா... குழப்படி நான்தான் செய்யோணும் எண்டில்லை. என்னைச் சேர்ந்தவையும் செய்யலாம். உங்களைச் சேர்ந்த எல்லாருமே நல்ல பெடியள் போல இருக்கு :p

நிலாமதி said...

துள்ளித்திரிந்த காலத்தின் சுவை இன்றும நினைத்து எழுத வைக்கிறது கோர்வையாக் சொன்ன விதம் அழகு ...பாராடுக்கள். நிலாமதி அக்கா

Jeya-S said...

சிரிச்சு சிரிச்சு முடியலை உங்க குறும்புகளை வாசித்து... படிச்சதை விட அடிவாங்கினதுதான் ரொம்ப போல...:P நாங்களும் நிறைய செய்திருக்கிறம் உங்களை போல...

Unknown said...

அடிவாங்கினதும் குறைவுதான் ஜெயா.. பிடிபட்டால்தானே அடி வாங்க

டவுட்டு கணேஷன் said...

கீத் அருளர் அப்ப எங்கட வகுப்புக்குள் தான் படிப்பிச்சு கொண்டிருந்தவர்....எனக்கு ஞாபகம் இருக்கிறது அருளரின் அடியை.
மற்றது எங்க்ட batch பெடியள் ‘வன்னி’ யில செய்த கூத்துக்கள் மறக்க ஏலாது.. prefectes இற்கு எதிரான HEPP,வன்னி முழுக்க கத்ரை மேசை துண்டுகளோடையும் கல்லிலையும் கிரிகட் விளையாடினது...பரிதா ரீச்சருக்காக ச்ங்கீதம் மாறின பெடியள், அவவுக்கு ரொக்கட் அடித்து பிடி பட்ட ஊழ், சிறீதேவி டீச்சர்,ராமனாதன் டீச்சர், பரா சேர், ....

டவுட்டு கணேஷன் said...

கீத் அருளர் அப்ப எங்கட வகுப்புக்குள் தான் படிப்பிச்சு கொண்டிருந்தவர்....எனக்கு ஞாபகம் இருக்கிறது அருளரின் அடியை.
மற்றது எங்க்ட batch பெடியள் ‘வன்னி’ யில செய்த கூத்துக்கள் மறக்க ஏலாது.. prefectes இற்கு எதிரான HEPP,வன்னி முழுக்க கத்ரை மேசை துண்டுகளோடையும் கல்லிலையும் கிரிகட் விளையாடினது...பரிதா ரீச்சருக்காக ச்ங்கீதம் மாறின பெடியள், அவவுக்கு ரொக்கட் அடித்து பிடி பட்ட ஊழ், சிறீதேவி டீச்சர்,ராமனாதன் டீச்சர், பரா சேர், ....

பால்குடி said...

உண்மையிலே என்னால் இந்தச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர முடிவதில்லை. ஆனால் உம்முடைய பதிவை வாசித்த பின்னர் அனைத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தேன். அருமையான நினைவுப் பதிவு.
விளையாட்டுப் போட்டிக்காலத்தில எங்கட இல்லத்தில நடந்த குழறுபடிக்கு நானும் நீரும் ஆர். கே ஆசிரியரிடம் வாங்கிய பேச்சு மறந்து போச்சோ?

‘வன்னி’ வகுப்பறைத் தொகுதி பாவம். எப்பிடித்தான் இத்தனை குழப்படிகளையும் தாங்கிச்சுதோ?

Unknown said...

டவுட்டுக் கணேசன்..
அதெல்லாம் ஒரு காலமய்யா... என்னெண்டு மறந்து போகும்

Unknown said...

பால்குடி... ஏற்கனவே என்ர இமேஜ் பாழாய்ப் போச்சு... இதிலை விளையாட்டுப் போட்டியிலையும் குதிரை ஓட வச்ச கேவலத்தையும் சொல்ல வேணுமே... என்னா வில்லத்தனம்??

மறக்குமா அந்தத் திட்டு... ஆனா நொங்கு திண்டது ஆரோ, நோண்டித் திண்ட நீரும் நானும் மாட்டினம்

தும்பளையான் said...

நல்ல பதிவு கிருத்தி.... அணைக்கும் ஆர்.கே செருக்கும் கூட சரியான காதல். மனிசன் பின்வாங்கில் மூளையில இருந்த என்ன முன்னுக்கு வாட ----------- எண்டு சொல்லி அப்பாட பேரால கூப்பிடும். அப்பாவோட அந்தகாலத்தில ஹாட்லியில படிச்சவராம் அந்த அன்பு. பிறகு மனிசனுக்கு என நடந்ததோ தெரியேல்ல என்ன வகுப்புக்கு வெளியால அடிகடி கலைக்கும். நானும் ஏன் வீண் சோலி எண்டு சொல்லிப் போட்டு நூலகத்துக்குப் பக்கத்தில இருந்த வாசிப்பு அறையுக்க போய் நல்ல நித்திரை கொள்ளுவன். மனிசனும் நான் எதோ அங்க படிச்சுக் கிழிக்கிறான் எண்டு நினைச்சுது போல. ஒருக்கா வளமா அம்பிட்டு குன்சியிடை எல்லாம் போய் நான் வந்தது பெரிய கதை.

தும்பளையான் said...

அருளர் எனக்கு அடிகேல்ல ஆனா "இவை ரண்டு பேரும் நோட்டட் ஆ" போல "இவர் நோட்டட் ஆ" எண்டு சொன்ன ஒரு விஷயம் நடந்திச்சு. விஷயம் வெறி சிம்பிள். எங்கட உயர்தர மாணவர் ஒன்று கூடல் நடந்து முடிஞ்சாப் பிறகு அருளர் கழுவி வந்த படங்களை எல்லா வகுப்புக்களுக்கும் காட்டிக் கொண்டு வந்தார். பெடியளத் தெரியும் தானே, எங்கட ரகு "சேர் எனக்கு இந்தப் படங்கள் வேணும்" எண்டு ஒரு மூண்டு படங்கள நீட்டினான். அருளர் பாத்துப் போட்டு "பொம்பிளப் பிள்ளயளிண்ட படம் ஒருத்தருக்கும் தாறேல்ல" எண்டு போட்டு மனிசன் அடுத்த வகுப்புக்கு போச்சுது. போன வேகத்திலேயே வந்து ரகுவிட்ட எங்கடா அந்தப் படம் எண்டு கேக்க அவனும் எந்தப் படம் எண்ட. செயிரத்யும் செய்து போட்டு நடிக்கிறியா வடுவா ராஸ்கல் எண்டு பளார் பளார் எண்டு விழுந்திச்சு. இதுக்குள்ள ரகுவும் நானும் பின் மேசையில இருந்து கள்ளமா எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்தனாங்கள் எனக்கும் ரகுவுக்கும் என்ன நடகிதேண்டே விளங்கேல்ல. யாரோ ஒரு புண்ணியவான் நானும் ரகுவும் சேர்ந்துதான் படத்த அபேஸ் பண்ணினது எண்டும் சொல்லிவிட்டாங்கள். பிறகென்ன அருளர் ஒரு துள்ளு துள்ளினார். படத்த உடனே தராட்டில் என்னையும் ரகுவசும் பள்ளிக்கூடத்தால கலைக்கப் போறன் எண்டும் வெருட்டினார். நாங்கள் எடுத்தாத்தானே குடுக்கிறதுக்கு. எங்கட நல்ல காலத்துக்கு படத்த சுட்டுக் கொண்டு போன ஆட்ஸ் பெடியளுக்கு கதை போகவே அவங்கள் ஒருமாரி படத்த கொண்டந்து குடுக்க எங்கட சீன முடிவுக்கு வந்திச்சு. இதில எனக்கு என்ன பிடிகேள்ள எண்டா படத்த எடுத்த எண்டு பிழையா சொல்லி அடிச்சாப் பிறகும் அந்தப் படிச்ச மனுஷன் ஒருக்கா மன்னிப்பு கேக்கோணும் எண்டு யோசிக்காதது தான்.

Unknown said...

ஆர்.கே சேரைப் பலபேர் காதலிச்சிருக்கிறம் போல கிடக்கு தும்பளையான்....
அருளரோட உங்களுக்கும் நல்ல ‘அன்பு'தான்