Saturday 12 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 06-12 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

சென்ற வார நான் பார்க்கும் உலகம் மிகவும் நீண்ட ஒரு பதிவாகி விட்டதாக நினைக்கிறேன். இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஆகக் கூடியது இரண்டு செய்திகளை மட்டும் உள்ளடக்க முயற்சிக்கிறேன்.

பிறந்தகம்
அயலுறவுத் துறை அமைச்சர் பாலித கோகண்ண மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரின் பிரித்தானியா செல்வதற்கான விசா கோரிக்கை பிரித்தானியத் தூதரகத்தால் மறுக்கப்பட்டு இருக்கிறது. இருவருடைய கடவுச்சீட்டுகளும் அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. விசா மறுக்கப்பட்டதுக்குரிய காரணங்கள் சொல்லப்படவில்லை என்றும், அமைச்சர்களை நேரில் வந்து விசா விண்ணப்பத்தைக் கையளித்தால் மட்டுமே விசா வழங்க முடியும் என்று பிரித்தானியத் தூதரகம் சொல்லியிருக்கிறது என்றும் செய்திகள் நிலவுகின்றன. இந்த விஷயத்தில் பிரித்தானியத் தூதரகம் இராஜதந்திர நடைமுறைகளை மீறியிருப்பதாக இலங்கை அயலுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இதேவேளை இலங்கைப் பகுதிக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் ஆணையகத்தின் அதிகாரி ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருத்துச் சொன்னார் என்று சொல்லி அவரை வரும் 21ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்திருக்கிறது இலங்கை அரசு. இந்த வெளியேற்றும் உத்தரவை வாபஸ் வாங்க ஐ.நா. அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எல்டரை வெளியேற்றுவதில் இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புகுந்தகம்

சிறுபான்மை கொன்செர்வேற்றிவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றி அடுத்த வாரம் தமது முடிவை வெளியிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் தெரிவித்திருக்கிறார். அத்துடன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்க மாட்டோம், நாங்கள் தனியாகவே அரசாங்கம் அமைக்க முயல்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் ப்ளொக் க்யூபெக் கட்சி ஆகியன ஒன்றாகச் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயல்வதாகவும், அது பொருளாதாரச் சிதைவிலிருந்து மீளும் நாட்டுக்குக் கேடு விளைவிப்பதாகவே அமையும் என்று ஆளும் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. அதற்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆக மொத்தத்தில் இன்னொரு சிறுபான்மை அரசாங்கம் விரைவில் கனேடிய மக்களை ஆள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

உலகம்
தேசிய நதிகளை இணைப்பது ஆபத்தானது. அது நாட்டின் சுற்றுச்சூழலை ஆபத்தான பாதைக்கு இட்டுச்செல்லும் என்று கூறி எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறார் ராகுல் காந்தி. அவர் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லியே இந்தக் கருத்தினை முன்வைத்திருக்கிறார். சென்னையில் நிருபர்களுடனான சந்திப்பில் இவர் தெரிவித்த மேற்படி கருத்தை தா. பாண்டியன் மற்றும் வைகோ கண்டித்திருக்கிறார்கள். ராகுல் அறியாமையில் பேசுகிறார் என்று பாண்டியனும், வரலாறு அறியாமல் பிதற்றுகிறார் என்று வைகோவும் கூறியிருக்கிறார்கள். இதேவேளை வெவ்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் ராகுல். இப்போதைக்கு பி.ஜே.பி மீள்முடியாது போலிருக்கிறது.

அமெரிக்காவை உலுக்கிய இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் அல்லது 9/11 தாக்குதல்கலின் 8வது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடும் குளிர் மற்றும் மழை மத்தியிலும் மக்கள் முன்பு இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சரியாக 8:46 க்கு வெள்ளை மாளிகை முன்றலில் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். என்னதான் அமெரிக்கர்கள் துக்கம் அனுட்டித்தாலும் அவர்களும் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு ஏறத்தாள 30 ஆண்டுகளுக்கு முன் (1973ல்) இதே நாளில் ஒரு கொடும் செயலைச் செய்தார்கள். 1973 ல் சிலி நாட்டின் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்ஸிஸ்ட் சோஷலிச ஜனாதிபதியான சல்வேற்றோர் அலெண்டே (Salvatore Allende) அவர்களைப் புரட்சிக் குழுக்களின் பின்னணியில் நின்று கொன்று முடித்தது. சிலியின் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளிலேயே அமெரிக்காவுக்கும் ஒரு கறுப்புதினம் வந்து சேர்ந்ததுக்குப் பெயர்தான் விதி என்பதா?

வணிகம்- பொருளாதாரம்

கனேடிய வீடு விற்பனைத் துறையில் வீட்டு விலைகள் கடந்த செப்ரெம்பர் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன் முதலாக ஏறுமுகமாகச் செல்கின்றன என்று கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. புதிய வீடுகளுக்கான விலைகள் கல்கரி, வன்கூவர், ஹமில்ற்றன் மற்றும் வின்சர் ஆகிய இடங்களில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. வீடு விற்பனைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பொருளாதார ரீதியில் மகிழ்ச்சியானது என்றாலும், அரசாங்கம் பற்றி நிலவும் நிலையில்லாத் தன்மை அந்த மகிழ்ச்சியக் கொண்டாட முடியாமல் செய்திருக்கிறது.

விளையாட்டு
இலங்கை முத்தரப்புப் போட்டி இறுதியாட்டத்துக்கு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இரு அணிகளுமே நியூசிலாந்து அணியை இலகுவாக வென்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார்கள். முத்தரப்புப் போட்டி பற்றிய என்னுடைய கருத்துக்களைத் தனிப் பதிவாக எதிர்பாருங்கள். இதே வேளை 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை முதல் மூன்று போட்டிகளில் படுதோல்வி அடையச் செய்திருக்கிறது.

அமெரிக்க ஓபன் ரென்னிஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகின்றன. ஆடவர் பிரிவில் ஃபெடரெர் மற்றும் நடால் இறுதிப்போட்டியில் மோதும் சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. அதே வேளை மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெல்லலாம் என்று எதிர்பார்க்கக் கூடியதாய் உள்ளது. வெள்ளிக் கிழமை (11/09/09) ஆட்டம் கடுமையான மழையால் முழுமையாகக் கைவிடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் லியாண்டர் பயஸ்சும், மகேஷ் பூபதியும் விளையாடுகிறார்கள், எதிர் எதிர் அணிகளில்.

சினிமா
கமலஹாசன் 10 கோடியே 90 லட்சம் ரூபாவை 24% வட்டியோடு திருப்பித் தரவேண்டும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இவர்கள் தயாரித்த மர்மயோகி படம் இடையில் கைவிட்டதால் வந்திருக்கும் இழு பறிதான் இது. 'நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. என்னுடைய ஒரு ஆண்டு உழைப்பை வீணடித்த அவர்கள்தான் எனக்கு நாற்பது கோடி தரவேண்டும்' என்று கமல் திருப்பி அடித்திருக்கிறார். இரு சாராரும் நீதிமன்றம் போகாமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. இதே வேளை மகளின் இசையில் உருவான ‘உன்னைப் போல் ஒருவன்' பாடல்களை வெளியிட்டிருக்கிறார் கமல். அவர்கள் வெளியிட்ட அந்தப் பாடல் காணொளி சகிக்கவில்லை (பிளாசே+ஸ்ருதி) ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கிறது, முக்கியமாக மானுஷ்யபுத்திரனின் 'அல்லா ஜானே'.


அடப்பாவிகளா தகவல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்துக்கு உண்டு- குறள் 1281

இதை எங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு செக்ஸ் வலைப்பூவில். ‘நம்ம ஊர் ரெக்கார்ட் டான்ஸ்' என்று கிடைத்த ஒரு சுட்டியைத் தொடர இந்த வலைப்பூவில் கொண்டு சேர்த்தது. வள்ளுவரை எங்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.

அதைவிடுங்கள, ரெக்கார்ட் டான்ஸ் எப்படி இருந்தது என்கிறீர்களா?? விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘ரெக்கார்ட் டான்ஸ் கூடவே கூடாது' என்று ஒரு கூட்டம் வாதிட்டபோது எனக்கு விபரீதம் புரியவில்லை. நான் ஏதோ சும்மா பாட்டுக்கு ஆடுவதுதானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைத்தேன். மேற்படி வலைப்பூவில் இருந்த அந்த நடனங்கள் ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் ஆடப்பட்டவை. ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக உடலுறவு கொள்வதைத் தவிர எல்லாம் செய்தார்கள் மேடையில்.

8 comments:

vasu balaji said...

அழகான தொகுப்பு. நன்றி கிருத்திகன்!

Unknown said...

நன்றி பாலா

அருண்மொழிவர்மன் said...

உங்களின் மெய் சொல்லப் போறேனை வாரா வாரம் வாசிக்கிறேன். நன்றாக இருக்கிறது.

கலையரசன் said...

நான் பார்த்த உலகம் என்று இருக்க வேண்டும் கீத்! பொருள் மாறுகிறது பாருங்கள்...
அருமையான தொகுப்பு!!

வந்தியத்தேவன் said...

கீத் உன்னைப்போல் ஒருவனில் அந்த வீடீயோக் காட்சி வராது என நினைக்கின்றேன் அதனை அல்பம் போல் செய்திருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் வரிகள் அருமை.

அந்த ரொக்கோர்ட் டான்ஸ் நானும் பார்த்தேன், கோயிலில் வைத்து இதெல்லாம் செய்வது சரியில்லை

Unknown said...

நன்றி அருண்மொழிவர்மன் அண்ணா

Unknown said...

நான் பார்க்கும் உலகத்தில் என்னைத் தாக்கியவையைப் பதிகிறேன் கலை... பொருள் ஓ.கே போலத் தெரிகிறது

Unknown said...

வந்தியண்ணா..
அது உன்னைப் போல் ஒருவனுக்கு ஒரு Promotional Video.. படத்தில் வராது.. இந்தப் பாணியை முதலில் அறிமுகம் செய்தது (தமிழில்) சசிக்குமார் என்று நினைக்கிறேன். (தேநீரில் சினேகிதம்).. என்ன சசி எடுத்த அளவுக்குக்கூட இது இல்லை.. இது ஸ்ருதியின் ஐடியா போல இருக்கிறது.. அவ்வளவு அமெச்சூர்த்தனமான வீடியோ.

அந்த ரெக்கோர்ட் டான்ஸ் பாத்த பிறகு ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' பாட்டை இப்பிடியும் பாக்கலாமா என்று தோன்றியது