Friday 21 August 2009

தமிழ்த் தொலைக்காட்சிகளின் வண்ணம்

கனடாவில் தமிழ் தொலைக் காட்சிகளின் பெயர்களே ‘தமிழ் வன்' ‘ரி.வி.ஐ' இப்படித்தான் இருக்கின்றன. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் ‘ரி.வி.ஐ' சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ‘தமிழ் வன்' கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அப்படியே ஒளிபரப்புவதுதான். இதற்கு மாதாமாதம் $15 தண்டம் செலுத்த வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை. வீட்டில் High Speed Extreme இணைய வசதி இருப்பதால் விரும்பிய நிகழ்ச்சிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கிப் பார்ப்போம் என்கிற என்னுடைய ஆலோசனை வீட்டில் எடுபடவில்லை. குடும்பத் தலைவர் சொன்ன காரணம் 'ஊர் நிலவரங்களைப் பார்க்க வீட்டில ஒரு தமிழ்ச் சனல் இல்லாட்டி சனம் மதிக்காது'. ஆனால் அவரது மகன் ஏதாவது ஆங்கில ஒளிபரப்புகளைப் பார்த்தால் துள்ளி விழுவார் என்பது வேறு விஷயம்.

சாப்பிடுவதற்காக கீழே போகின்ற தருணங்களையோ, அல்லது விருந்தினர்கள் வீட்டுக்கு வருகின்ற தருணங்களையோ தவிர்த்து நான் தொலைக்காட்சி முன்னால் அமர்வது செய்தி பார்க்க மட்டுமே. கொடுமை என்னவென்றால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளும் சரி, நாங்கள் விருந்தாளிகளாகப் போகும் வீட்டுக்காரர்களும் சரி, போய் உள்ளே நுழைந்ததும் ‘எங்கட வீட்டு ரீ.வீ.ல இதெல்லாம் வரும்' என்று தம்பட்டம் அடித்துச் செய்கிற தொல்லை தாங்க முடிவதில்லை. அதிலும் ‘ரி.வி.ஐ பெஸ்டா, தமிழ் வன் பெஸ்டா' என்பது போன்ற இலக்கியச் சர்ச்சைகளைத் தாங்க முடிவதில்லை. இத்தனைக்கும் இரண்டு தொலைக்காட்சிகளும் முக்கால்வாசி நேரமும் அவைகளின் இந்தியத் தாய் நிறுவன (!!!???) நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றன.

‘அரட்டை அரங்கம்' பாணியில் ரோகிணி நடத்தும் நிகழ்ச்சி மிகவும் பொறுமையை சோதிக்கிறது. விஜய் ரி.வி. ‘நீயா நானா' போல் (ஆங்கிலத்தின் மிகையான பாவனையைக் குறைத்து) நல்ல நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ‘கலக்கப் போவது யாரு', ‘ஜோடி நம்பர் வன்' போன்ற விஜய் நிகழ்ச்சிகளை பிரதி பண்ணிய சன்னும் கலைஞரும் இப்படியான நிகழ்ச்சிகளைப் பிரதி பண்ணப் போவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கள் ஒளிபரப்பும் ரசனைக் குறைவான, அறிவுச் செறிவற்ற நிகழ்ச்சிகளை தமிழ் வன்னும், ரீ.வி.ஐ. யும் ஒளிபரப்புவதை என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்மவர்களின் நிகழ்ச்சிகள் மிகக் குறைவானளவே ஒளிபரப்பாகின்றன. முழுமையாக சன் மற்றும் கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளின் படைப்புகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் வரவேற்பறையை ஆக்கிரமித்துள்ளன.

எல்லா நாட்டுத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு கேள்வி. சுப்பர் சிங்கர், சுப்பர் டான்ஸர் போல ஏன் அறிவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை இவர்கள் தயாரிப்பதில்லை? இந்த சுப்பர் சிங்கர், சுப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளைகளை பாடவிட்டும், ஆட விட்டும் ரசிக்கும் பெற்றோர் ஏன் அந்தக் குழந்தைகளைக் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுப்புவதில்லை. எனக்கு காலாகாலத்துக்கும் மறக்கமுடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்பொருகாலத்தில் பி.பி.சி. யில் ஒளிபரப்பான பொது அறிவு சம்பந்தமான நிகழ்ச்சி. அறிவிப்பாளரின் பெயர் நிகழ்ச்சியின் பெயர்கூட ஞாபகமில்லை, ஆனால் இன்றைக்கும் ஏதாவது பொது அறிவு நிகழ்ச்சிகளில் ஏதாவது கேள்விக்கு நான் சரியாகப் பதில் சொல்கிறேன் (அட, வீட்டில் பக்கத்தில் இருப்பவரிடம்தான்) என்றால் அதற்கு மூல காரணம், பி.பி.சி.யில் வந்த அந்த நிகழ்ச்சிதான்.

எனக்குப் புரியாதது இதுதான். கிட்டத்தட்ட அரைமணிக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் எல்லாத் தொடருமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இரண்டு மணிக்குப் போகும் தொடரின் கதைக்கும், நான்கு மணிக்கு போகும் தொடரின் கதைக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எல்லாத் தொடர்களும் ஒரு இடிதாங்கி, ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், நல்லவராக யாரையாவது காட்ட வேண்டுமே என்பதற்காக ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறது. இப்படியான தொடர்களில் வாரி இறைக்கும் காசை, ஒரு நல்ல பொது அறிவுப் போட்டி, உச்சரிப்புப் போட்டி, தமிழறிவுப் போட்டி, குறள் மனனப் போட்டி போன்ற போட்டிகளை இதே ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக தயாரிக்கலாம் அல்லவா?

டென்மார்க்கில் வசிக்கும் என்னுடைய அக்கா ஒருவரின் மகள் இந்த சுப்பர் சிங்கர் யூனியர் போன்றதொரு நிகழ்ச்சியில் டென்மார்க்கில் தெரியப்பட்ட 10, இருவர் கொண்ட குழுக்களில் இடம்பெற்றிருக்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கும் சுப்பர் சிங்கருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் தாமே எழுதி, தாமே இசையமைத்துப் பாடவேண்டும். அவர்களின் வயதுகளுக்கேற்றபடி தரம் நிர்ணயம் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள். அக்காவின் மகளும் அவளோடு சேர்ந்து சங்கீதம் கற்கும் இன்னொரு பெண் பிள்ளையும் (15 வயதுதான்) சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, போட்டியிடுகிறார்கள். இப்படியான நிகழ்ச்சி அழகானது.
அதை விடுத்து ‘த வே ஒஃப் யுவர் சிங்கிங் இஸ் நொட் அப் டு த மார்க்' ‘வாவ்.. அம்ம்ம்மேஸிங்..எக்ஸலண்ட்... சான்சே இல்ல' இப்படியான இரண்டு விமர்சனங்களை மட்டும் வைத்து காலத்தை ஓட்டும் நடுவர்களை வைத்து நடத்தப்படும், பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக நடிப்புச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கப்படும் நிகழ்ச்சிகள், ம்ஹூம்.. அதிலும் ஒரு கொஞ்சக்காலம் கிரிஷ் (சங்கீதா புருஷன்)செய்த அட்டகாசம் தாங்காமல் கிரிஷ் பாடும் சினிமாப் பாடல்கள்கூட வெறுத்துப் போனது. இவர்கள் எஸ்.பி.பியிடம் பாடுவதில் மட்டுமல்ல, ஒரு நிகழ்ச்சியை விமர்சனம் செய்வதில் கூட டியூஷன் எடுக்கலாம்.

முற்றுமுழுதாக கல்வி, அரசியல், சமூகம் என்று போய்விடுங்கள் என்பது என்னுடைய வாதம் இல்லை. நிச்சயமாக சில entertaining நிகழ்ச்சிகள் அவசியம்தான். அதற்காக முழுக்க முழுக்க entertainment என்று போய்விடக் கூடாது. இப்போதெல்லாம் தியேட்டரில் போய் படம் பார்ப்பதைவிட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்பது பிரதானமான பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், திரைப்படங்களை நம்பி தொலைக்காட்சிகள் என்ற நிலை தலைகீழாகிவிட்ட நிலையில் தொலைக்காட்சிகளுக்கு அதிகப் பொறுப்பிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இதை யாரிடம் சொல்லி அழ?

எங்களுக்கு தொலைக்காட்சி கேபிள் தருபவர்கள் ‘ரோஜேர்ஸ்' என்னும் நிறுவனத்தினர். அவர்கள் இரண்டு வாரத்துக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பினார்கள். ஓகஸ்ட் 20ம் திகதியிலிருந்து குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்கும் சில தொலைக்காட்சிச் சானல்களை வேறு அலைவரிசைக்கு மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். முக்கால்வாசிப் பேர் அந்தக் கடிதத்தை வாசிக்காமல் எறிந்து விட்டார்கள். நான் recycle binக்குளிருந்து கவனமாக எடுத்து வைத்திருந்தேன். ஓகஸ்ட் 2ஒம் திகதி 622ம் இலக்கத்தில் அதுவரை ஒளிபரப்பான தமிழ் வன்னைக் காணவில்லை. நான் என்னிடம் இருந்த கடிதம் மூலமாக அது 868ல் வருகிறது என அறிந்து வீட்டாருக்கும் சொன்னேன். 868 ல் ஒளிபரப்பான தமிழ் வன்னில் அடிக்கடி ஒரு அறிவிப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் வன் இன்றுமுதல் 622இலிருந்து 868 க்கு மாற்றப்பட்டிருக்கிறது'. ‘இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே எனக்குத் தெரியப்படுத்தவும்' என்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். 622லிருந்து 868க்கு மாற்றப்பட முன்னரே இந்த அறிவிப்பு வந்திருக்க வேண்டாமா?

12 comments:

பனைவிழுங்கி said...

தம்பி மோனை..
சமாதானமாப் போவம்.எண்டு தான் நான் நினைக்கிறது. ஆனா ஆரு விடுகிறான். சும்மாயிருக்கப் பிரச்சனையளைக் கொண்டு வந்து தலயால சுத்தி காலடியில போட்டிட்டு இந்த கிழவனிட்டை சாமாதானமாப் போயிடுங்கோ எண்டால் எப்பிடி முடியும் மோனை??? நீயும் ஸ்காபரோக்காரன் எண்டு எழுதியிருக்கிறாய் பயம் தான் சுட்டாலும் சுட்டுப் போடுவியள்.
உவங்கள் டிவிக்காரப்பயலுகளைப் பற்றிப் புலம்பியிருக்கிறாய்? உவங்களின்ர டிவியை என்ன கோதாரிக்கு இன்னமும் வைத்துக் கட்டியழுது கொண்டு அவங்களுக்கு ஒரு கருத்து எழுதிறீங்கள். அடா தம்பி இவங்களுக்கு என்ன அறிவிருக்கெண்டு நீ இந்தியாகாரன் டிவியைக் கொப்பியடிக்க வேண்டாமெண்டு புத்தி சொல்கின்றாய்??? இவங்களுக்கு அ ஆ வே தெரியாது. இந்தியாக்காரனை விட்டால் இந்தத் தறுதலைகள் வெறும் டிவியைதான் காட்டுவானுகள்.என்னத்தையெண்டாலும் அவிட்டுக் காட்டீற்றுப்போகட்டும் எண்டு நீ நினத்தால் இந்தியாக்காரன் டிவியை நிப்பாட்டச் சொல்லு??.இவங்கள் அவிட்டுபோட்டுத்தான் காட்டுவங்கள்.
பனை விழுங்கி

vasu balaji said...

ஐ. ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் என்னமோ நம்ம ஊர் டி.விக் காரனுங்கதான் இப்படின்னு நொந்து போனேன். கைரளி, ஆசியாநெட் போன்ற மலையாள சேனல் அங்க வருமா தெரியலை. அவனும்தான் என்டெர்டெயின்மென்ட் போடுறான். அதும் பெஸ்ட் சிங்கரெல்லாம் முதல் ரவுண்டில போறதே அவ்வளவு நேர்த்தியா பாடும். நம்மள முட்டாளாவே வெச்சிருக்க நினைச்சுட்டாங்களோ? உங்களுக்குத் தெரியுமா கீத்? தமிழனுடைய டேஸ்ட் சினி பீல்ட்ல வன்முறை விரும்பின்னு தான் வகைப் படுத்தி இருக்காங்க.

அருண்மொழிவர்மன் said...

நல்ல பதிவு கீத்

தமிழ் வன்னும் சரி, டிவிஐயும் சரி அப்படியே இந்திய நிக்ழ்ச்சிகளை தான் ஒளிபரப்புகின்றன. அதிலும் இவர்கள் ஒளிபரப்பும் நாடகங்களில் இருக்கும் அபத்தங்கள் எண்ணற்றவை. எம்மவர்களில் இருக்கும் எத்தனையோ படைப்பாளிகளை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

தென்னிந்திய தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி நீங்கள் சொன்னவற்றை நானும் உணர்ந்துள்ளேன். இது பற்றி சுஜாதா பல முறை எழுதியுள்ளார்.

இசை சம்பந்தமான் நிகழ்ச்சிகளில் ஜெயா டிவியில் வரும் பாலாவின் என்னோடு பாட்டுப் பாடுங்கள் தவிர மிச்ச எல்லாமே குப்பைகள்.

நீயா நானா மற்றும் இப்படிக்கு ரோஸ் போன்றன விஜய் டிவியில் சிறப்பாக வெளியாகின. இப்பொது இப்படிக்கு ரோஸ் இடம்பெயர்ந்துவிட்டது என்று நினைக்கின்றேன்.


நீங்கள் எழுதும் பதிவுகளில் சொல்லும் கருத்துக்களில் பெரிதும் நானும் ஒத்தே போகின்றென் நன்றாக இருக்கின்றது. தொடருங்கள்

Unknown said...

பனைவிழுங்கி...
நீங்களே சொல்லுங்கோண்ணை,
நானிருக்கிற வீட்டில நான் சாப்பிடக் கீழ போனா அந்த ரி.வி. தான் ஓடுது, ஆரும் விருந்தாளியளோட கதைக்க கீழ போனால் அதுவள் விரும்பிக் கேட்டு இந்த ரி.வி. பாக்குதுகள்.... இப்பிடி இருந்திருந்திட்டு ரி.வி. கண்ணில பட்டதுக்கே எனக்கு இவ்வளவு எண்டால்...இந்தச் சனம் எப்பிடி முழு நேரமும் பாக்குதோ? நீங்கள் சொன்ன மாதிரி அறிவுள்ள ஆக்கள் எண்டால் ‘தமிழ் வன் இன்று முதல் இலக்கம் 622இலிருந்து 868க்கு மாற்றப்பட்டுள்ளது' என்று இலக்கம் 868ல போடுவாங்களே..

Unknown said...

வானம்பாடிகள்..
நீங்கள் சொன்ன சேனலெல்லாம் வாறதில்லை தலை... எனக்கென்னவோ ரி.வி.ன்னா நியூஸ் அல்லது ஸ்போர்ட்ஸ் மட்டும்தான்.. இல்லைன்னா ஏதாவது ரொமப நல்ல நிகழ்ச்சின்னா ஓகே. நீயா நானா வலைத்தளங்களில் பார்ப்பதுண்டு.... என்ன சில சமயம் வீட்டுக்கு யாராவது வந்தா மொத்தமா இருத்தி வச்சி மானாட மயிலாட பாக்க விடுறாங்க... கொடுமை என்னானா.. விருந்தாளிகள் இல்லாத அல்லது விருந்தாளிகளாய் போகாத வார விடுமுறையை அனுபவித்து கிட்டத்தட்ட 4 வருஷமாச்சு

Unknown said...

அருண்மொழிவர்மன்..
நீங்களும் இங்கதான் இருக்கிறியளா? அப்ப உங்களுக்கும் same bloodஆ? எம்மவர்களில் இவர்கள் கண்டுகொண்ட ஒரே படைப்பாளி கணபதி ரவீந்திரனை மட்டும். தீசனை சில சமயங்களில் கண்டு கொள்வார்கள். மற்றபடி ஒரு குழுமத்தைச் சேர்ந்த பழைய எழுத்தாளர்கள், கலைஞர்களை மட்டும் எப்போதாவது கண்டு கொள்கிறார்கள். மற்றபடி..ம்ஹூம்

vasu balaji said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

அருண்மொழிவர்மன் said...

ம்ம் கீத்.

நானும் டொரண்டோதான்.

இவர்கள் அடிக்கிற கூத்தில் சலித்துப் போய் நான் முன்னர் எழுதிய ஒரு பதிவு இது
http://solvathellamunmai.blogspot.com/2009/03/blog-post_25.html

Jeya-S said...

எனது வீட்டிலோ இந்த தொல்லை இல்லை முன்பு TVi மட்டும் வைத்திருந்தோம்.. ஆனால் யாருமே பார்ப்பதில்லை இரவு நேர செய்தி மட்டும் பார்த்து வந்தோம் அதனால் இணைப்பை இப்போ துண்டித்து விட்டோம் ஆனால் நீங்கள் பதிவிட்ட அனைத்துமே உண்மை தான் ... எப்போது திருந்துவார்களோ..

\\விருந்தாளிகள் இல்லாத அல்லது விருந்தாளிகளாய் போகாத வார விடுமுறையை அனுபவித்து கிட்டத்தட்ட 4 வருஷமாச்சு//

அட நீங்களும் நம்ம கட்சியா?? இதனால் நானும் எனது சகோதரர்களும் எத்தனையையோ நாட்கள் சண்டை பிடித்தது கூட உண்டு..

Unknown said...

ஜெயா... அப்ப எல்லா வீட்டிலயும் இதே பிரச்சினைதானா... ஆஹா why blood...same blood (thanks வடிவேல்)

Jeya-S said...

ஆமா அதே same blood தான் ..lolz அதனால் நான் ஒரு request, President kku அனுப்பி வைசுருகிறேன் நடந்திட்டால் சொல்லி அனுப்புறன்..

Unknown said...

அடிசக்கை..request அனுப்பிற அளவு பாதிப்போ... ஹும்