Thursday 13 August 2009

ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்களா?


யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த தேர்தல்கள், அவற்றின் முடிவுகளில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு சந்தோஷமில்லை என்பது பற்றியெல்லாம் பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். ஆனால் நான் இங்கே ஆராயப் போவது, அந்தத் தேர்தலில் என்னைப் பாதித்த இன்னொரு புள்ளி விபரத்தைப் பற்றி. இந்தப் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பொதுப் பிரச்சினை.

அந்தப் புள்ளி விபரம் இதுதான்:
முறையே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 100, 417; 24,626
செலுத்தப்பட்ட வாக்குகள்: 22,280: 12,850
அங்கீகரிக்கப்பட்ட வாக்குகள்: 20, 922: 12,292
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,358; 558

இந்தப் புள்ளிவிபரங்களில் ஒரே ஒரு விஷயம்தான் சந்தோசமளிக்கிறது. அதாவது வவுனியாவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 95.66% மும், யாழ்ப்பாணத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 93.9% மும் செல்லுபடியான வாக்குகள். அதாவது, வாக்குப் போட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எப்படி சரியாக வாக்களிக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. வவுனியாவில் தகுதிபடைத்த வாக்காளர்களில் வெறும் 52.2% மட்டுமே வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நிலமை இதவிட மோசம்; வெறும் 22.2% தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். (ஆதாரம்: இலங்கைத் தேர்தல் ஆணையம்)

அளிக்கப்பட்ட வாக்குகளில் எத்தனை கள்ள வாக்குகள், எத்தனை நல்ல வாக்குகள் என்ற சர்ச்சைகளை விடுத்து, எல்லாமே நல்ல வாக்குக்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, இந்த எண்ணிக்கைகள் ஜனநாயகத்திலிருந்து மக்கள் தம்மை விலக்கிக் கொள்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதே நாள் ஊவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் 70% பேர் வாக்களித்திருப்பது இந்தக் குழப்பத்தை மேலும் பெரிதாக்குகிறது. எதனால் இப்படிப்பட்ட வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அதையும் தாண்டிய ஒரு பிரச்சினை இருக்கிறது.

இங்கே கனடாவில் சென்ற ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் வெறும் 58.8% வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள் (ஆதாரம்: Elections Canada). உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் பதினான்காவது பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்கள் வெறும் 48.74 பேர் மட்டுமே (ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்). அதாவது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்துக்கு கொஞ்சம் கூடியவர்களோ அல்லது கொஞ்சம் குறைந்த வாக்காளர்களோதான் வாக்களிக்கிறார்கள். இப்படியான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் எப்படி ஒரு நாட்டின் மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும்?

இப்படி ஒரு சாரார் மட்டும் அளிக்கும் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே அரசாங்கம் அமைக்கும் கட்சிக்குப் போய்ச்சேரும். உதாரணத்துக்கு, கடந்த கனேடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 37.65% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது, தகுதியான வாக்காளர்களின் 58.8% வாக்குகளில், 37.65%. ஆக, தகுதியான வாக்காளர்களில் 22.1%ஐ மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி, கனடாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம், இயலுமானளவுக்கு அடக்கு முறையின்மை, கள்ள வாக்குகள் இன்மை போன்ற நல்ல சூழ்நிலை நிலவும் இந்த நாட்டிலேயே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறக்கூடிய இந்த நாட்டிலேயே, வாக்களிப்பு என்கிற கடமை இந்தளவுக்குப் புறக்கணிக்கப்படுவது, உண்மையாகவே ஜனநாயகம் நிலைத்து நிற்குமா என்பது பற்றிய பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஏன் இந்த நிலமை? மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க அனுமதிக்கப் படுவதில்லை. மிரட்டப் படுகிறார்கள் என்கிற சாட்டை ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் சொல்லலாம். ஏதோ திருமண வீட்டுக்கு வருபவரை வரவேற்பது போல் வரவேற்று வாக்களிக்க வைக்கும் வாக்குச் சாவடி அதிகாரிகள் இருக்கும் இந்த நாட்டில் என்னால் அப்படி ஒரு காரணத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆக, எனக்கு மனதில் படுகிற காரணங்களாக இவற்றைத்தான் சொல்லுவேன்
  • மக்கள் ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எல்லா நாடுகளிலும் ஊழலும், ஏமாற்றிச் சொத்துச் சேர்ப்பதும், ஒழுக்கக் குறைவும் பரவிவிட்டன. அதனால் எல்லா நாட்டிலும் மக்கள் மனதில் அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் ஆழமாகப் படிந்துவிட்டது. அந்த எண்ணம் அவர்களை அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அதனால் தேர்தலையும், ஜனநாயகத்தையும் மொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் அரசாங்கத்தைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேல் என்கிற நிலமைக்கு மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
  • எந்த ஒரு நாட்டிலும் உள்ள கல்வித்திட்டங்கள் என்ன வேலை செய்தால் எவ்வளவு உழைக்கலாம் என்று சொல்லித் தருமளவுக்கு, நீ பிறந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகளையும் சொல்லிக் கொடுப்பதில்லை.
  • படித்தவர்களின் மெத்தனப் போக்கு. ஏழைகள், பெரியளவு படிக்காதவர்கள் வாக்குப் போடாவிட்டால் பரவாயில்லை, மன்னிக்கலாம். படித்தவர்கள் வாக்குப் போடாமல் விட்டுவிட்டு, அதைப் பற்றிப் பெருமைவேறு பேசுகிறார்கள். அப்படிப் பேசிவிட்டு பொருளாதாரத் தேக்கநிலை, வேலையின்மை என்று எல்லாப் பிரச்சினைக்கும் அரசாங்கத்தைக் கைகாட்டுகிறார்கள். இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது.
  • இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் தேர்தல் முறைகேடுகள். வறுமைப்பட்டவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சோறு போட்டு வாக்குப் போடவைப்பதை விட ஒரு சமூக அநீதி இல்லை. அது தப்பென்று உணரும் நிலையில் இப்படிப் பயன்படுத்தப்படும் மக்களும் இல்லை. உணரும் நிலையில் இருப்பவர்கள் அதைத் தடுக்க முயல்வதும் இல்லை.
மேலே சொன்னதைவிட உங்கள் மனதில் படும் காரணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எது எப்படியோ, ஜனநாயகத்தை அழியவிடாமல் பார்ப்பது, ஒவ்வொரு குடிமகனதும்/மகளதும் கடமை, அவன்/அவள் எந்த நாட்டவனாக/நாட்டவளாக இருந்தாலும். இல்லாவிட்டால், விரைவில் மனிதகுலம் அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

டிஸ்கி: இது சம்பந்தமாக என் வலைப்பூவின் வலப் பக்க மூலையில் இருக்கும் கருத்துக் கணிப்புக்காவது வாக்களியுங்கள். (அதே போல் திரட்டிகளிலும்தான், ஹி ஹி...)

1 comment:

பனையூரான் said...

"ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் குடும்ப அரசியல் "