Thursday 6 August 2009

நாயகன் -காட்ஃபாதர்: ஒரு ஒப்பீடு

நாயகன் படத்தை பல தடவை பார்த்துவிட்டேன். காட்ஃபாதரின் மூன்று பாகங்களும் சமீபத்தில் கிடைக்க, மூன்றையும் பார்த்து விட்டேன். நாயகன் காட்ஃபாதரின் அப்பட்டமான காப்பி என்பது பலபேரால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதற்காகவே காட்ஃபாதரின் மூன்று பாகமும் கிடைக்காமல் காட்ஃபாதர் பார்ப்பதில்லை என்று காத்திருந்தேன். இரண்டாவது பாகம் இணையங்களில் கிடைக்காமல் கொஞ்சமே படுத்தி எடுத்துவிட்டது. இப்போ காட்ஃபாதரையும், நாயகனையும் என்னால் ஓரளவுக்கு ஒப்பிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இரண்டு படங்களையும் நான் புரிந்து கொண்ட கோணத்திலிருந்து இந்த ஒப்பீட்டை எழுதுகிறேன்.

படம்-1: காட்ஃபாதர் (மார்லன் ப்ராண்டோ), நாயகன் (கமல்)

நாயகன் சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்து, ஒரு கொலை செய்துவிட்டு சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்குப் போகும் சிறுவன் ஒருவன் எப்படி ஒரு நகரத்தையே கலக்கும் தாதா ஆகிறான் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. காட்ஃபாதரின் பிரதான கதைக்களம், காலேஜ் படித்த, அமெரிக்காவுக்காக ராணுவ சேவையாற்றிய, தாதாக்களான தகப்பன் மற்றும் தமையனால் ஒரு நல்ல குடிமகனாகத் தயார் செய்யப்படுகிற, மனம் மயக்கும் அழகை உடைய ஒரு இளைஞன், எவ்வாறு தீவிரமான தாதாவாக உருவாகிறான், அந்த மாற்றத்தால் அவனும் அவன் குடும்பமும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதேயாகும். இதில் ஒரு துணைக்கதையை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றிச் சொன்ன படம்தான் நாயகன். அதாவது காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தில் வரும் ஒரு துணைக்கதையின் மெல்லிய தழுவல் என்றுதான் நாயகனைச் சொல்லலாம்.


படம்-2 : மைக்கல் கோர்லியோன் (அல் பசினோ) மற்றும் காதல் மனைவி கே அடம்ஸ் (டயான் கீற்றன்).

முதலில் ஆஸ்கர் எந்த வகையில் ஒரு பாத்திரத்தைப் பிரதான பாத்திரமாகக் கொள்கிறது என்பதில்தான் சிக்கல். காட்ஃபாதர் முதல் பாகத்தில் விட்டோ கோர்லியோன் (மார்லன் பிராண்டோ) பாத்திரத்தைவிட, திரையில் ஆதிக்கம் செலுத்துவது மைக்கல் கோர்லியோன் (அல் பசினோ) பாத்திரமே. ஆனால், ஆஸ்கர் மார்லன் பிராண்டோவுக்கு Best Actor in a Leading Role என்ற விருதைக் கொடுத்த ஒரே காரணத்துக்காக காட்ஃபாதர் கதையே மார்லன் பிராண்டோவின் ரோலை அடிப்படையாகக் கொண்டது என்பதாகத்தான் எம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தில் ஒரு துணைக்கதையாக இத்தாலியிலிருந்து சின்னப்பையனாக வரும் விட்டோ அண்டோலினி என்ற சிறுவன் எப்படி விட்டோ கோர்லியோன் என்கிற தாதாவாக வளர்கிறான் என்று ஒரு துணைக்கதை போகும். அதன் தழுவல்தான் நாயகன் என்பது என் சிற்றறிவுக்கு தென்படும் கோணம்.படங்கள்-3 & 4: காட்ஃபாதர் மற்றும் நாயக்கராக அல் பசினோ மற்றும் கமல்

நாயகன் பற்றி வைக்கப்படும் சில குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்கிறேன். சில காட்சிகளை அப்பட்டமாக சுட்டிருக்கிறார்கள். வேலு நாயக்கர் (கமல்) மனைவிக்கு ஈமக் கிரியைகள் செய்யும்போது அவரது எதிரிகளை ஆட்களை வைத்துத் தீர்த்துக் கட்டுவார். அதேபோல் காட்ஃபாதர் முதல் பாகத்தில் மைக்கல் கோர்லியோனின் தங்கையின் பிள்ளைக்கு பேப்டிஸம் நடக்கும் போது அவரது எதிரிகள் தீர்த்துக்கட்டப்படுவதாக ஒரு சீன் இருக்கிறது. அதே போல் விட்டோ கோர்லியோனின் மூத்த மகனின் மரணத்தின் பின் அவர் இறந்த உடலைப் பார்க்க வருவது, பேரனுடனான அவரது பிணைப்பு போன்ற காட்சிகளிலும் நாய்கன் காட்ஃபாதரை ரொம்பவே ஒத்துப்போகிறது. தாதாயிசம் பிடிக்காமல் அங்கே மைக்கல் கோர்லியோனின் மனைவி பிரிந்து போவார், இங்கே வேலு நாயக்கரின் மகள் பிரிவார். அதேபோல் கமல் வெற்றிலையை அதக்கியபடி பேசுவதை மார்லன் பிராண்டோவின் மேனரிசத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். மற்றபடி பெரியளவில் நாயகனை காட்ஃபாதரின் அப்பட்டமான காப்பி என்று சொல்ல முடியாது.

படம்-5: வேலு (கமல்) மற்றும் காதல் மனைவி நீலா (சரண்யா)

காட்ஃபாதரும், நாயகனும் வேறுபடுவது இரண்டு முக்கிய இடங்களில். ஒன்று, மைக்கல் கோர்லியோன் என்றாவது தன் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்க முயல்வார். ஆனால் மறுபடி மறுபடி தோற்றுப்போவார். இதனால் அவர் தன் குடும்பத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், யாருமேயில்லாமல் செத்துப் போவதும்தான் காட்ஃபாதரின் இறுதிமுடிவு. ஆனால், நாயகனின் முடிவுக்கும் இதுக்கும் பெரியளவு சம்பந்தமில்லை. கோட்பாட்டு ரீதியாக சம்பந்தம் இருப்பதாக வேண்டுமானால் வாதிடலாம். சினிமா ரீதியாக இல்லை. காட்ஃபாதருக்கும், நாயகனுக்குமான மிகப் பாரிய வித்தியாசம் இரு தாதாக்களின் கொள்கை அல்லது தொழில் தர்மம்.

படம்-6: வேலு கடத்தல் செய்யும் டெக்னிக்

காட்ஃபாதரில் வீட்டோ கோர்லியோன், மைக்கல் கோர்லியோன் இருவருமே போதை மருந்து பிஸினஸ்சில் ஈடுபடுவது இல்லை என்பதைக் கொள்கையாக வைத்திருந்தார்கள். இந்தக் கொள்கைதான் எப்படியோ வாழ்வேண்டிய மைக்கலை தாதாவாக மாற்றுகிறது. ஆனால் வேலு நாயக்கர் 'நாலு பேர் நல்லாயிருக்கணும்னா எதுவும் தப்பில்லை' என்று சொல்லி போதை மருந்து (அந்த சரக்கு போதை மருந்தாகத்தான் இருக்க வேண்டும்) கூடக் கடத்துவதாக ஒரு காட்சி வந்தது ஞாபகம் இருக்கலாம். இதிலேயே படங்களுக்கிடையே வேறுபாடு வருகிறதே. நாயகனில் போதை மருந்து கடத்த கமல் உபயோகிக்கும் டெக்னிக் உண்மையிலேயே இன்னொரு ஆங்கிலப் படத்தில் வந்தது. ஆனால் அதே டெக்னிக் பல கடத்தல் மன்னர்களாலும் பயன்படுத்தப் பட்டது என்பதால், அதை எந்த இயக்குனரும் உரிமை கோர முடியாது. அப்புறம் 'நாயக்கர் மாமா' என்றபடி சுடும் அந்த மனநலம் குன்றிய பையன்/மனிதன் (டின்னு ஆனந்த்) கதாபாத்திரத்தை காட்ஃபாதர் முழுக்கத் தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது கண்டு சொல்வீர்களா?


படங்கள்- 7: நான் சொன்ன அந்த காட்ஃபாதரில் இல்லாத பாத்திரப் படைப்பு. மனவளம் குன்றிய மனித்னாக டின்னு ஆனந்த்.

ஆக, எனக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச சினிமா அறிவுக்கு எட்டியபடி, நாயகனை காட்ஃபாதர் படத்தின் மெல்லிய தழுவல் என்று சொல்வேனே தவிர அப்பட்டமான காப்பி என்று சொல்லமுடியாது. சில காட்சிகளை மணிரத்னம் உருவியிருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதற்காக நான் மேலே சொன்ன அந்த மனநலம் குன்றிய பாத்திரம், கமல்-சரண்யா காதல், சிறுவயது வேலு நாயக்கரை வளர்க்கும் அந்த முஸ்லீம் பெரியவர், தாராவிக் குப்பம், அந்தக் குப்பத்தைக் காலி செய்ய முயலும் பணக்காரன், கெட்ட இன்ஸ்பெக்டரை வதம் செய்யும் நாயகன், சீழ் பிடித்த சமூகம் பற்றி நாயகன் உணரும் காட்சிகள், நாயகனின் பரிமாண மாற்றங்கள், நாஸரின் பாத்திரம், கடைசிக் காட்சிகள் போன்றவற்றில் நாயகன் காட்ஃபாதரை விட்டு ஓரளவுக்காவது விலகி, கதைக்களத்துக்கு ஏற்றபடி படைக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


ஒரு கேள்வி: போதைமருந்தை ரப்பரோடு சேர்த்துக் கட்டி கடலில் போட்டு கடலில் ரோந்து போகும் அதிகாரிகளிடமிருந்து ஒளிப்பது போன்ற ஒரு காட்சி நாய்கனில் வருகிறது. இதே ஐடியாவைப் பயன்படுத்தி போதை மருந்து கடத்தும் ஒரு காட்சி அதற்கு முன்னமே ஒரு புகழ் பெற்ற, சிறந்த க்ரைம் த்ரில்லஎ என்று புகழப்படும் ஒரு படத்தில் வந்தது. அது எந்தப் படம்? (க்ளூ: அந்தப் படத்தின் நாயகன், காட்ஃபாதர்-2 வில் நடித்ததுக்காக Best Actor in a Supporting Role என்ற விருது வென்றவர்)

30 comments:

நையாண்டி நைனா said...

Haa.. Nice article ya.

vasu balaji said...

அங்கொண்ணு இங்கொண்ணு சுட்டாலும் சுட்டது சுட்டது தானே. ஆனாலும் தெளிவான அலசல்.

Unknown said...

///நையாண்டி நைனா said...
Haa.. Nice article ya.///
நன்றிங்க நையாண்டு நைனா

///வானம்பாடிகள் said...
அங்கொண்ணு இங்கொண்ணு சுட்டாலும் சுட்டது சுட்டது தானே. ஆனாலும் தெளிவான அலசல்.///

அதென்னமோ உண்மைதாங்க பாலா ரண்டு புள்ளி என்று அழைக்கப்பட்ட, பாமரன் ரண்டு புள்ளி எனப்பட்ட வானம்பாடிகள்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அண்ணே எப்படிங்கண்ணே.. இப்படி பிச்சு போட்டு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.

சரி அலசல். கொன்னீட்டீங்க போங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அங்கொண்ணு இங்கொண்ணு சுட்டாலும் சுட்டது சுட்டது தானே. ஆனாலும் தெளிவான அலசல். //

இதன் பெயர் சுடுதல் அல்ல. அந்த படத்தின் தாக்கம் இதில் இருக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னங்க குமாரசாமி அய்யா நான் சொல்வது சரிதானே?

இராகவன் நைஜிரியா said...

// அதென்னமோ உண்மைதாங்க பாலா ரண்டு புள்ளி என்று அழைக்கப்பட்ட, பாமரன் ரண்டு புள்ளி எனப்பட்ட வானம்பாடிகள் //

வானம்பாடிகள் ரண்டு புள்ளி என்று இருக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

// அது எந்தப் படம்? (க்ளூ: அந்தப் படத்தின் நாயகன், காட்ஃபாதர்-2 வில் நடித்ததுக்காக Besy Actor in a Supporting Role என்ற விருது வென்றவர்) //

தமிழ் படத்தைப் பற்றிக் கேட்டாலே இங்க முழி பிதுங்கும்... இதுல ஆங்கிலப் படத்தைப் பற்றி கேள்வி வேறயா?

கேபிளாரே.. ப்ளீஸ் ரிப்ளை..

இராகவன் நைஜிரியா said...

டு ஆல் ப்ரண்ட்ஸ்....

ஆர்டிகிள் பிடிச்சு இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு, நல்லா அலசி இருக்கீங்க அப்படின்னு பின்னூட்டம் போடும் போது கூடவே தமிழிஷ், தமிஷ்மணம் இப்படி இருக்கின்ற திரட்டிகளில் எதாவது இரண்டிலாவது ஒட்டுப் போட்டுவிட்டுப் போன்னீங்கன்னா சந்தோஷப்படுவாரில்ல அய்யா குமாரசாமி..

Unknown said...

இராகவன் நைஜீரியா... என்னங்க இப்புடி போட்டு தாக்குறீங்க.
///இதன் பெயர் சுடுதல் அல்ல. அந்த படத்தின் தாக்கம் இதில் இருக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம்.//
சிலவிஷயங்கள சுட்டிருக்காங்க... அத ஒப்புக்கொள்ளத்தான் வேணும்... முழுப் படத்தையும் அப்பிடியே உருவிட்டாங்கன்னு சொல்றதுதான் தப்பு

///வானம்பாடிகள் ரண்டு புள்ளி என்று இருக்கணும்./// அந்த ரண்டு புள்ளிய காணோம் தல.. நேத்துப்பாக்கும் போது

அப்புறம் ஓட்டுப் போடச் சொல்லி பிரசாரம் பண்ணதுக்கும் நன்றி தல... ஊரான் பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டு வளத்தா ஜனநாயகம் தானா வளரும்கறது இவனுங்களுக்கு தெரியறதே இல்லை

Joe said...

காட்சிகளை மட்டும் சுடுவதும், கதை/திரைக்கதையை அப்படியே சுடுவதும் ... எப்படியோ கோடி கோடியா சம்பாரிக்கிறாங்க அவுங்க.

Anonymous said...

நாயகனில் வரும் போதைவஸ்து கடத்தல் சீன் - பணத்துக்காக ’கண்ராட்க்’ இல் தாதாவுக்காக போதை வஸ்து கடத்தும் கமல் அதை தனது அன்பளிப்பாக வைத்துக்கொள்ள கோரும் சீன் - அல் பச்சினோ நடித்த ஒலிவர் ஸ்டோனின் ‘ஸ்கார் ஃபேஸ்” படத்தில் இருந்து அப்பட்டமாக சுட்டது.( Here's the stuff: two keys. It cost my friend Angel his life. Here's the money; my gift to you." - Tony Montana to Frank Lopez)
இவை மட்டுமல்ல பல இருக்கின்றன.
இன்னொன்று தெரியுமா உங்களுக்கு, ஆய்த எழுத்து திரைப்பட கதை காட்சி அமைப்புகள் அமோரேஸ் பெர்ரோஸ் மற்றும் சிற்றி ஒஃப் கோட் (Amores Perros, City of God)இல் இருந்து சுடப்பட்டவை!
நல்ல சினிமா பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் இவ்விரு படங்களையும் பாருங்கள்.

Unknown said...

Joe said...
///காட்சிகளை மட்டும் சுடுவதும், கதை/திரைக்கதையை அப்படியே சுடுவதும் ... எப்படியோ கோடி கோடியா சம்பாரிக்கிறாங்க அவுங்க///
ஜோ... இதத்தான் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்கன்னு சொல்லுவாங்க.

தகவல்களுக்கு நன்றி அனானி. கதை சொல்லும் அணுக்கு முறையில் வேறூ படங்களைப் பின்பற்றுவது தவறில்லை...வேறு ஒருவரின் கதையை தான் எடுப்பதும் தவறில்லை... Creditல் Original படைப்பின் பெயரைப் போட்டால்

துபாய் ராஜா said...

அருமையான விவரமான புள்ளிவிவரங்களோடு அழுத்தமான அலசல் பதிவு.

Unknown said...

நன்றி துபாய் ராஜா

Arvind said...

//ஒரு கேள்வி: போதைமருந்தை ரப்பரோடு சேர்த்துக் கட்டி கடலில் போட்டு கடலில் ரோந்து போகும் அதிகாரிகளிடமிருந்து ஒளிப்பது போன்ற ஒரு காட்சி நாய்கனில் வருகிறது. இதே ஐடியாவைப் பயன்படுத்தி போதை மருந்து கடத்தும் ஒரு காட்சி அதற்கு முன்னமே ஒரு புகழ் பெற்ற, சிறந்த க்ரைம் த்ரில்லஎ என்று புகழப்படும் ஒரு படத்தில் வந்தது. அது எந்தப் படம்? (க்ளூ: அந்தப் படத்தின் நாயகன், காட்ஃபாதர்-2 வில் நடித்ததுக்காக Besy Actor in a Supporting Role என்ற விருது வென்றவர்)//

It is 'Once Upon a Time in America'. De Niro plays the lead.

Unknown said...

Arvind...என் செல்லமே... நீ ஒருத்தன் மட்டும்தான் விடை சொல்ல முயற்சித்திருக்கிறாய்... அதே படம்தான்...322 நிமிடங்கள் ஒரிஜினல் திரைக்கதையையும், 289 நிமிடங்கள் Direcors Cut Version, 229 நிமிடங்கள் ஐரோப்பிய வர்ஷனும், 140 நிமிட அமெரிக்க வர்ஷனும் கொண்ட Once Upon a Time in America என்ற படம்தான் அது.. அதில் பயன்படுத்தப்பட்ட சில பின்னணி இசைக் கோர்வைகள் இன்றைக்கும் பிரபலம்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் முடிந்ததும் 15 நிமிடம் தொடர்ந்து எழுந்து நின்று எல்லோரும் கைதட்டினார்களாம்..

Arvind said...

The inspiration that Devar Magan derives from God Father is something that I would call 'clever' and 'innovative'. Give that analysis a shot when you get time.

dagalti said...

காட்ஃபாதர் 1,2 இரண்டுமே மரியா பூஸொவின் காட்ஃபாதர் புதினத்தின் கதையை சொல்பவை. இந்நாவல் பலர் மெல் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. அதுபோலவே இப்படமும்.

மாஃபியா என்பது இக்கதையின் சூழல், கதை அல்ல. தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரியம். ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது. Tally ஆகுதா :-)


நாயகனில் பெரும்பாலும் நிகழ்ந்தது ஒரு வித inspiration தான். சில காட்சிகள் நேரே எடுத்துவைக்கப்பட்டிருந்தாலும் மிகுந்த நுண்ரசனையுடன் செய்யப்பட்ட தேர்வுகள் அவை. நீங்கள் குறிப்பிட்ட ஈமச்சடங்கு காட்சியில், ரெட்டி சகோதரர்களில் ஒருவர், காரில் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவார். அப்போது காலால் முன்கண்ணாடியை உதைத்து உடைப்பார். இதுவும் காட்ஃபாதரில் வரும் ஒரு காட்சி.

மிக சிறப்பாக 'இந்தியப்படுத்தப்பட்ட' காட்சிகளும் உண்டு.அமெரிகொ பொனான்செராவின் funeral parlour இல், தன் மகன் சாண்டினோவில் பிணத்தைக் காட்டி: 'Look what they did to my son' என்று துக்கத்தை மிதமாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துவார் டான் விட்டோ. ஆனால் வேலுநாயக்கரின் மனதைப்பிழியும் ஓலம் பிரசித்தம்.
கதைக்கு உகந்ததை எடுத்து, கதைக்குத் தேர்ந்தார்போல் வடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அக்னி நட்சத்திரத்தின் இறுதிச்சண்டை : சுயநினைவின்று மருத்துவமனையில் இருக்கும் தந்தையை மகன்கள் இடம்பெயர்க்கும் காட்சி. இது காட்ஃபாதரில் மைக்கேல், டான் விட்டோவை இடம் மாற்றும் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால் நீளத்தில், காட்சியமைப்பில், overall stylistics இது தனிச்சிறப்பை எட்டியது என்றே சொல்லவேண்டும்.

btw காட்ஃபாதர்-3 நாயகனுக்குப் பின் வெளிவந்த படம் (1990). ஒரு வேளை நாயகனின் பாதிப்பு அதில் இருக்கிறதா என்று தேடியிருக்கலாம் :-)

Unknown said...

டகால்டி... என்னங்க ஒரு பதிவையே பின்னூட்டமா போட்டுட்டீங்க... நீங்க சொல்றதைத்தான் நானும் சொல்றேன்... காட்ஃபாதரின் அப்பட்டமான காப்பி நாயகன் இல்லை என்று எவ்வளவு வாதாடினாலும் கேட்கிறார்கள் இல்லை... நீங்கள் சொன்ன மாதிரி மகனின் பிணத்தைப் பார்க்கும் காட்சியில் கமலின் ஓலம் தந்த வலியை மார்லன் ப்ராண்டோ தரவில்லை என்பது உண்மை... காட்ஃபாதர்-3 காட்ஃபாதர் சீரிஸிலேயே மோசமான படம்... ரொம்பவே போரடிக்கும்

அர்விந்த்...கட்டாயம் செய்கிறேன்

randramble said...

நல்ல பதிவு, நல்ல விவாதம். நாயகனுக்கு விடோ கோர்லேஒனே-வின் கதை inspiration, தேவர் மகனுக்கு மைகேல் கோர்லேஒனே-வின் கதை inspiration...

Unknown said...

@randramble நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும்

Hari said...

Here is my comment.

Times magazine is not a fool to have given Nayagan a place in the greatest 100 movies ever produced without analysing the differences.

There is a great deal of difference between inspiration and carbon copy. Even if it had been a copy, it will never be a scene by scene copy. So, instead of yelling "Copy....copy" to show that you are intelligent to find out, go on a positive note and appreciate the performances.

Anonymous said...

கீத்,
Godfather III நீங்கள் சொல்வது போல GF Trilogy இலேயே மோசமான படம் தான். இதற்கு நான் நினைக்கும் முக்கிய காரணம் அமெரிக்கவில் இத்தாலிய மாஃபியாவின் செய்ற்பாடுகள் மாற்ரமடைந்தது தான். அவர்கள் இரண்டாவது தலைமுறையாக இருப்பது, எஃப்.பி.ஐ யின் ஊடுருவல், மாஃபியா அங்கத்தினரிடையே போதைவஸ்து பாவனை அதிகரிப்பு, சட்டத்தின் பிடி இறுகியது போனறன. 1979 இன் இறுதிப்பகுதிகளில் அவர்களின் நடவடிக்கைகள் முன்னைப்போலல்லாமல் மிக மாறிவிட்டிருந்தன. எனவே 1940களில் இருந்ததைபோல் ஆவலைத்தூண்டும் வகையில் இருகாது. மேலும் இத்தாலிய மாஃபியாக்களின் பலம் நியூயோர்க்கிலும் கலிபோர்னியாவிலும் வியட்நாமிய, ரஷ்ய , தென் அமெரிக்க மாஃபியாக்களின் வரவுகளால் குறைந்திருப்பதும் கூட உண்மைதான்.அதனால்தான் HBOவின் தொடராக வந்த Sopranos ஒரு கலக்கு கலக்கியது. இது செல்வாக்கிழந்து செல்லும் இரண்டாம் தலைமுறை மாஃபியாக்குடும்பன் ஒன்றின் கதையைச் சொல்வது. DVD இல் கிடைக்கும்.

Hari,

”Times magazine is not a fool ......”

ரைம் மகசீன் சொல்வதெல்லாம் வேத வாக்கல்ல. அவர்கள் இப்படி எத்தனையோ லிஸ்ற் வைத்திருக்கின்றனர். ரைம் மகசீன் , நியூஸ் வீக் போன்றவை தமது செல்வாக்கை இழந்து வருகிறன. தற்போது அவை கீழைத்தேய நாடுகளின் விற்பனையை ஊக்குவிக்க என்னவெல்லாமோ செய்கின்றனர். மிக நல்ல உதாரணம் உலக அழகிப்போட்டிகள்.

’...There is a great deal of difference between inspiration and carbon copy....’
உண்மை. ஆனால் நாயகன் கதை ஒரு இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் காட்சி அமைப்புகள் அவ்வாறல்ல. மணிரத்தினம் ஒரு புத்திசாலித்தனமான
கொப்பிக்காரர். அவர் ஒரே படத்தில் சுட்ட சீன்களை வைக்காமல் பல படங்களில் வைப்பார். டகால்டியின் பின்னூட்டத்தில் சுட்டிக்கட்டியுள்ளார். இப்போதெல்லாம் மணியின் படங்களில் நல்ல காட்சிகள் வரும்போதெல்லாம் கவலையாக இருக்கும், இது ஏதாவது ஆங்கிலப்படத்தில் சுட்டது என அறியவருமோ என :( .

’..Even if it had been a copy, it will never be a scene by scene copy....’
ஆம். சீனுக்கு சீன் கொப்பி அடித்தால் மாட்டுப்படுவார். அப்பப்போ வைத்தால் இன்ஸ்பிரேஷன் என சொல்லி தப்பலாம் :)

‘... So, instead of yelling "Copy....copy" to show that you are intelligent to find out, go on a positive note and appreciate the performances.’’’

அது தானே இங்கே சொல்கிறார்கள். காட் ஃபாதரில் இருந்து ஒன்ஸ் அப்போன் எ ரைம் இன் அமெரிக்கா வரை ஒப்பிட்டிருக்கிறார்களே கவனிக்கவில்லையா? எல்லாவற்றையும் பொசிற்றிவ் நோட்டில் பார்க்கலாம். ஆனால் ஒரிஜினல் கதைக்காரன் பிளேஜரிசம் என வழக்க்குப்போட்டால் என்ன நடக்கும் என நான் சொல்லத்தேவையில்லை.

Unknown said...

அனானி நண்பா... Hariக்கு நான் சொல்லவந்த பதிலை நீயே சொல்லியதுக்கு நன்றி... Hari என் பதிவை சரியாக வாசியுங்கள்.. நான் நாயகன் ஒரு முழுமையான காப்பி என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை.. ஆனால் சில காட்சிகள் அப்படியே ஒத்துப்போகின்றன என்பது வலிக்கும் உண்மை.. நேரம் கிடைத்தா டகால்டி போட்டிருக்கிற பின்னூட்டத்தையும் வாசியுங்கள்.... சில கெட்டிக்கார இயக்குனர்கள் தமது படங்களில் ஒத்துவரக்கூடிய காட்சிகளை வேறு படங்களிலிருந்து நேரடியாக உருவுகிறார்கள்.. (ஸ்பீல் பெர்க்கின் ஷிண்ட்லேர்ஸ் லிஸ்டில் கூட அப்படி ஒரு சுடப்பட்ட காட்சி இருக்கிறதாகக் கேள்வி). அது தப்பு. ஆனால், மூவரின் கோணத்திலிருந்து கதை சொல்லும் அமெரோஸ் பெர்ரோஸ் முறையை ஆய்த எழுத்தில் பயன்படுத்தியது தப்பல்ல... அப்படி இன்னொருவரின் கதை சொல்லும் முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் வாதாடினால், முதன் முதலாக Moving Pictures மூலம் கதை சொன்னவரைத் தவிர யாருமே சினிமா எடுக்கக்கூடாது என்றும் வாதாடலாம்.. கலிலியோ சொன்ன சூரிய மையக் கொள்கையை மற்ற வானசாஸ்திர நிபுணர்கள் பயன் படுத்தக் கூடாது என்றும் வாதாடலாம்

ப்ரியமுடன் வசந்த் said...

இவ்விடுகை இளமைவிகடனில் குட் ப்லாக் பகுதியில் வாழ்த்துக்கள்

Unknown said...

வசந்து.. நெசமாத்தான் சொல்றியா.. அது சரி.. இளமை விகடன்கறது என்ன??

ARV Loshan said...

இளமை விகடன் என்பது விகடனின் இணையப் பதிப்பு..
நான் உங்களைத் தொடர்ந்தாலும் அங்கே பார்த்து தான் இங்கே வந்தேன்..

உங்கள் சினிமா எழுத்துக்களின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.. (ஒரே மாதிரியான ரசனை தான் காரணமோ தெரியவில்லை)

நல்ல அலசல்.. God father பகுதி 1 பார்த்தேன்.. உங்கள் பதிவு பார்த்த பிறகு ஏனைய பகுதிகளையும் தேடி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

நாயகனை பார்த்த எண்ணிக்கை கணக்கில் இல்லை..

தொடரட்டும் உங்கள் தரமான பதிவுகள்...

வாக்கும் போடுகிறேன்..

Unknown said...

ஆகா... வாங்கோ லோஷன் அண்ணா.. Godfather-2ம் பாகம் இணையத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தேடினால் கிடைக்கலாம்... மூன்றாம் பாகத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கமாட்டேன்... மூன்றுபாகங்களிலும் குப்பை மூன்றாம் பாகம் தான்.. மற்றது வாக்குக்கு நன்றி

ஜியா said...

அப்படியே காட் ஃபாதர் 1ஐயும் தேவர் மகன் படத்தையும் கம்பேர் பண்ணி பாருங்க :))

Unknown said...

பண்றேன் ஜியா