Wednesday 5 August 2009

மனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 2-8, 2009

மனதில் பட்டவை என்கிற தலைப்பில் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில் நுட்பம், சினிமா என்பன பற்றிக் கலந்து கட்டி ஒரு தொடர் பதிவு எழுதி வந்தேன். சென்ற ஜூலை 2ம் திகதிக்குப் பின்னர் அந்த வகையறாப் பதிவுகளை நான் இடவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆக, மறுபடியும் மனதில் பட்டவை.

அரசியல்- இலங்கை
ஜனாதிபதி மகிந்தவுக்கும், இராணுவத் தளப்தி சரத் ஃபொன்சேகவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடாம். அதனால் தான் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவுக்கு ஃபொன்சேகா போகப் போகிறாராம். சரத் ஃபொன்சேகாவுக்குக் கிடைத்த புகழ் காரணமாக ராஜபக்ச சகோதரர்களிடையே அதிருப்தி நிலவி வருவதாக சில நாட்களுக்கு முன் வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து வந்த செய்திகளில் உள்ள உண்மை பொய்களைப் பற்றிக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். என்னதான் அறிவு பூர்வமான சிந்தனை, அங்குள்ள மக்களின் நிலவரம், திடீர் அக்கறை போன்ற தலைப்புகளில் எனக்கு அறிவுரை சொல்லவும், திட்டவும் பலபேர் வருவார்கள் என்றாலும் மனதில் அதிஷா சமீபத்தில் எழுதிய 'அடிச்சுக்கிட்டு' என்று தொடங்கி ‘சாவுங்கடா' என்று முடியும் தலைப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை.

இதே வேளை இலங்கையின் தென் மாகாணத்துக்குத் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கிறது. தென் மாகானத் தேர்தலில் தன்னுடைய செல்வாக்கைப் பொறுத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராஜபக்சே உத்தரவிடலாம என்பது அவதானிகளின் கருத்தாக இருக்கிறது. சமீபகாலமாக 'அரசரே, மன்னரே, ராசராசரே' என்றெல்லாம் புகழ்ந்த மக்கள் தங்களைக் கைவிட்டு விடுவார்களோ என்ற பயம் ராஜபக்ச சகோதரர்களுக்கு வந்திருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. அதுவும் தெற்கிலிருக்கும் சிங்கள் மக்கள் அவ்வாறு பகுத்தாராய்ந்து இவர்களைக் கைவிடும் அளவுக்கு சிந்தனா சக்தி உள்ளவர்களா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இல்லையென்றால் பிரேமதாஸா காலத்தில் தங்களுக்கு நடந்த அநியாயங்களை மறந்து உள்நாட்டு யுத்தத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களைத் தொடர்ந்தும் பதவியில் ஏற்றியிருப்பார்களா?

இதற்கிடையில் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 4000 பேர் மீளக் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 3112 பேரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 964 பேரும் இன்று (ஆகஸ்ட் 5) இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்சே உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள இதை ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார்கள். இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச நான் விரும்பவில்லை. அப்படியான அரசியல் பின்னணி ஏது இருக்கவும் கூடாது என்பது என்னைப்போன்ற கையாலாகாத பிரஜைகளின் விருப்பமும் கூட.

அரசியல்- உலகம்
ஐந்து வருடங்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் தானாகவே பிரஜாவுரிமை வழங்கும் சட்ட மூலத்தை பிரித்தானிய அரசு கைவிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பிரித்தானியாவில் தற்காலிக குடியேற்றவாசிகள் பிரித்தானியப் பிரஜைகளாவதற்கு அவர்களின் தொழில், திறமை மற்றும் தகுதி அடிப்படையிலான ஒரு புள்ளி வழங்கும் முறையில் தேவையான புள்ளிகளைப் பெற்றாக வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய முதல் இலங்கையரான ராஜா ரட்ணம் என்பவர் தமது 75வது வயதில் காலமாகியிருக்கிறார். இவர் தனது 19வது வயதில் (1953ம் வருடம்) அமெரிக்காவில் குடியேறி, 10 வருடம் அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றி, இலங்கையர்களுக்கான முதல் உணவு விடுதியையும் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டொரண்டோ நகரின் மாநகர சபை ஊழியர்கள், 5 வார வேலை நிறுத்தத்தின் பின் சென்ற வாரம் மறுபடியும் வேலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். 5 வாரம் செய்யாமல் விட்டுத் தேங்கியிருந்த வேலைகளின் 80%ஐ ஐந்தே நாட்களில் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த ஊழியர்களின் திறமையைப் பாராட்டுவதா, வேல நிறுத்தம் செய்ததுக்ககத் திட்டுவதா என்று குழம்பிப் போயிருக்கிறார்கள் டொரண்டோ நகரவாசிகள். இதனிடையே இது சம்பந்தமாக நடந்த வாக்கெடுப்பில் 6 கவுன்சிலர்கள் பங்கு பெறாமல் போனதும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பொருளாதாரம்
கனடாவின் நோர்டெல் (Nortel Inc) நிறுவனம் எரிக்சன் (Ericsson) நிறுவனத்திடம் விற்கப்பட்டு உள்ளது. சென்ற மாதம் 1.13 பில்லியன் டாலர்களுக்கு நோர்டெல்லின் வயர்லெஸ் டெக்னாலஜி பிரிவை எரிக்சன் வாங்கியது. இதற்கு முன்னரே ஜனவரி மாதம் நோர்டெல் அமெரிக்கா மற்றும் கனடாவில் வங்குரோத்துப் பாதுகாப்புக்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் இவர்கள் இவ்வாறு ஒரு பிரிவை விற்றது கனடாவுக்கு எவ்வகையில் இலாபம் என்று ஆராய்வதற்காக நோர்டெல் மற்றும் எரிக்சன் பிரதிநிதிகளை கனேடிய பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு அவசர விசாரணைக்கு அழைத்திருக்கிறது. ஏற்கனவே கனடாவின் ஸ்டெல்கோவை (Stelco), அமெரிக்க ஸ்டீல் கார்ப்பரேஷன் வாங்கியபோதும் கனடாவுக்கு அதனால் நட்டமே ஏற்பட்டது என்பதால் இந்த விற்பனை பற்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

விளையாட்டு
ஆஷஸ் தொடர் முடிவை நெருங்குகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி வகிக்கிறது. வருகின்ற போட்டியில் ப்ரெட் லீ ஆஸ்திரேலியாவுக்கு மீண்டு வருகின்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆஷஸ் தொடர் பற்றி தொடர் முடிந்ததும் ஒரு விமர்சனத் தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். விரைவில் எதிர்பாருங்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் செமத்தியாக நாறுகிறது. 68 வயதான கோச், மைதானத்தில் அணி விளையாடும்போது தூங்கும் மேனேஜர், கோச்சோடு ஒத்துப்போகாத கேப்டன், கேப்டனுக்கு எதிராகக் கோஷ்டி நடத்தும் முன்னாள் கேப்டன் என்று அருமையான டீம். இவர்களா இருபது-இருபது உலகக் கோப்பையை வென்றார்கள்? நம்பவே முடியவில்லை.

போதை மருந்து சட்ட திட்டம் பற்றிய இந்திய அணிக்கும், ஐ.சி.சி.க்குமான பனிப்போர் கவலையளிப்பதாக உள்ளது. கிரிக்கெட் ஆட்டக்கரர்களை வித்தியாசமாக நடத்துங்கள் என்று யுவராஜ் கேட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் மற்ற விளையாட்டுக்களையும், வீரர்களையும் கொச்சைப்படுத்துவது போல் தோன்றினாலும், இந்தியக் கிரிக்கெட்டர்கள் விஷயத்தில் இது யதார்த்தமான உண்மை. இது பற்றிய எனது பதிவு இங்கே. இதற்கிடையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரை இந்தியா ஜெயித்திருக்கிறது. அது பற்றிய விபரம் இங்கே.

ஒரு வருத்தம்
அடிக்கடி இதைப் பற்றி எழுதவேண்டும் என நினைப்பேன். குடிவருபவர்களுக்கு இயலுமானளவு நல்ல வசதி செய்து கொடுக்கக்கூடிய கனடாவின் தெருக்களிலும் பிச்சைக்காரர்களைக் காண்கிறேன். 11ம் வகுப்பில் படித்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கனடாவும் இருந்தது. அப்படியானால் நான் படித்தது பொய்யா? எல்லா நாடுகளிலும் வறுமை இன்றைக்கும் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.

ஒரு அடப்பாவிகளா!!! தருணம்
மொண்ட்ரியால் நகரத்திலே தன்னுடைய ஏழு வயது மகனை, பாதுகாப்புக்கான சீட்-பெல்ட் அணியாமல், பின்னே மனைவியையும், மகளையும் ஏற்றியபடி வாகனம் ஓட்ட விட்டுப் படம் பிடித்து, பெருமையாக You Tubeல் விட்டிருக்கிறார் ஒரு தகப்பன். இப்போ போலீசார் பிடித்துக்கொண்டு விட்டார்கள். அந்தத் தகப்பனை கிரிமினல் சட்டக் கோவையில் தண்டிக்க வேண்டும் என்று சிலரும், இல்லை சாலை விதிகளுக்கான சட்டக்கோவையின் கீழ் தண்டித்தால் போதும் என்று சிலரும் வாதாடுகிறார்கள். கடந்த சில நாட்களாக மீடியாவுக்கு நல்ல தீனி போட்ட சம்பவமாக இது அமைந்தது. வீடியோவைக் கீழே காண்க. இதைத் தான் நம்ம பதிவர்கள் சொந்த செலவுல சூனியம் வைக்கிறது என்பார்கள்..

4 comments:

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

// எல்லா நாடுகளிலும் வறுமை இன்றைக்கும் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.//
வறுமையும் மூட நம்பிக்கையும் உலகை பிடித்துள்ள
பெரு நோய்கள்..!

Unknown said...

உண்மைதான் வெங்கட்

Anonymous said...

பொன்னர் யூஎன்பியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். மகிந்தர் அன்ட் சகோதரர்கள் நாட்டை சுருட்டிவிட்டு ஓடிவிடுவார்கள் இன்னும் சில நாளில் அதுவரை அட்டகாசம் தொடரும்.

Unknown said...

நல்லா சொன்னீங்க அனானி