Tuesday 26 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம்- 07

வினைமுற்று முதலியன

படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.

படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.
படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.
படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.


மூன்று காலங்கள்

கம்பர் இராமாயணம் பாடினார்.
பையன் பாடம் படிக்கிறான்.
குழந்தை பால் குடிக்கும்.
பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால
நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?
பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.
படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,
குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும்
காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,
இறந்த கால வினைமுற்று
நிகழ்கால வினைமுற்று
எதிர்கால வினைமுற்று
எனப்படும்.
பாடினார் - இறந்தகால வினைமுற்று.
படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.
குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.

செய்தான் - செய் + த் + ஆன்
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.

த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்
கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்
வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை
இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை
காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.

செய்தான் - செய் + த் + ஆன்
உண்டான் - உண் + ட் + ஆன்
கற்றான் - கல் + ற் + ஆன்
விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.
இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள். த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.

உண்கிறான் - உண் + கிறு + ஆன்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன்
இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக
இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள்.
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.

உண்பான் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள். ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.

வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும்.
உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ.
செய்து - செய் + த் + உ.
கற்று - கல் + ற் + உ.
இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.

படிக்கிற (பையன்) - படி + கிறு + அ
மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ.
இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10951

1 comment:

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html