Monday 11 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -06

சொல் இலக்கணம்

ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.

(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.

(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

1. திணை

உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.

எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.

மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.

2. பால்
பால் - பிரிவு:

கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.
கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.
அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.

பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.
பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.
இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.

3. எண்

எண் - பொருள்களின் எண்ணிக்கை.
ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.

4. இடம்

நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,

நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.
நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.
ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.
இம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3)
படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.
(1) நான் - தன்மையிடம்.
(2) நீ - முன்னிலையிடம்.
(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.

நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர்
என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.

5. வேற்றுமை

கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும்.

முதல் வேற்றுமை.
கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.

இரண்டாம் வேற்றுமை
கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.

மூன்றாம் வேற்றுமை
கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

நான்காம் வேற்றுமை
கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.

ஐந்தாம் வேற்றுமை
கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.

ஆறாம் வேற்றுமை
இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.

ஏழாம் வேற்றுமை
பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.

எட்டாம் வேற்றுமை
பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா! - மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக! - பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.

6. ஆகு பெயர்

மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.

அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.

ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.

7.தொழிற் பெயர்

வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்
சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்
என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,
வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,
வந்து, போய், நின்று, செய்து எனவும்,
வந்த, போன, நின்ற, செய்த எனவும்,
வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்

இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.

தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை
முதலியன.

செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.
`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10757&uid=20995841343

No comments: