Monday 4 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -02

குறில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

நெடில் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

சார்பெழுத்துகள்

உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன

உயிர்மெய் எழுத்து
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்து
'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை

மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை கானலாம.

ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும்.
இதுவே ஒற்றளபெடை ஆகும்.

வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம்.

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்)

நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடிசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே
ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

குற்றியலிகரம்

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

(குறுகிய ஓசையுடைய இகரம்)

நாடு + யாது -> நாடியாது

கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

ஐகாரக்குறுக்கம்.

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்

ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
வலையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

ஔவை

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

குறிப்பு:

ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

வரும் வண்டி
தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இவ்வாறு குறைந்தொலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

எ.கா.: முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்

மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)


இதுவரையில் நாம் பார்த்தவை அனைத்தும் எழுத்திலக்கணம் சார்ந்தவைகளாகும், இதனை முழுமையாக புரிந்துணர்ந்த பின்னர் நாம் சொல் இலக்கணம் பற்றிய புரிதலுக்கு செல்வோம்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?uid=20995841343&topic=10654

No comments: