Saturday 21 November 2009

1999- விமர்சனம்

என்றைக்குத் தசாவதாரம் பார்த்து ஏமாற்றம் அடைந்தேனோ அன்றிலிருந்து திரையரங்குகளுக்குப் போய் தமிழ்ப் படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். 10 டொலர்களையும் இரண்டரை மணித்தியாலங்களையும் வீணடிப்பதாக ஒரு உறுத்தல் என்னுள் இருந்தபடியே இருக்கும். ஆனால், 1999 வூட்சைட் சினிமாவில் திரையிடப்படுகிறது என்றதும் போய்ப் பார்த்துவிட மனம் துடித்தது. காரணங்கள் பல. லெனின்.எம்.சிவம் உருவாக்கிய இந்தப் படம் வான்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானது ஒரு காரணம். கனடாவில் வெளியான சிறந்த 10 படங்களில் ஒன்றாக வாக்களித்துத் தெரியப்பட்டது இன்னொரு காரணம். நம்மவர் படைப்புகளில் நல்ல அங்கீகாரம் கிடைத்த முதல் படைப்பு (எனக்குத் தெரிந்தளவில்) என்பது அடுத்த காரணம். எனக்கு மட்டும் இன்னொரு விசேட காரணம் இருந்தது.

படத்தின் இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்தின் குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். உயர்தரக் கணிதத்தில் பெரிய பெறுபேறுகள் இல்லை என்றாலும்கூட ஆகக்குறைந்தது சித்தியடைவதற்காவது தோள்கொடுத்தவர் ராஜ் அவர்களின் அப்பா தில்லையம்பலம் ஆசிரியர். அவர்களின் குடும்பமும் எங்களின் குடும்பமும் பரஸ்பர அன்பைப் பரிமாறி வந்திருக்கிறது. ராஜ் சொல்வழி கேட்காமல் கோஷ்டிகளில் பாடித்திரிகிறார் என்று ஊரில் ஒரு குற்றச்சாட்டு கூட இருந்தது. ஆனால், ராஜ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படத்துக்கு இசையமைக்கும் அளவுக்குத் திறமைசாலி என்பது இன்ப அதிர்ச்சி. அவரது திறமைக்குக் குழப்படி என்பதாகப் பெயரிட்ட எங்கள் சமூகத்தின் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி.

ஆக, 1999 பார்க்க எனக்குக் கூடுதலாக ஒரு காரணமும் இருந்தது. இனிப் படம் பற்றிப் பார்ப்போமா?

கதைச் சுருக்கம்
1999 கனடாவில் வசிக்கும் மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. குமார் (திலிபன் சோமசேகரம்) ரொரன்ரோவின் ஈஸ்ட் சைட்டில் ஒரு குழுமத் தலைவன். பெற்றோரை இந்திய ராணுவத்திடம் கண்முன்னே பலி கொடுத்தவன். தம்பியையும் இழுத்துக்கொண்டு 18 வயதில் கனடா வந்தவன். அவனது தம்பி ஜீவனை (ஜெரோன் தனபாலசிங்கம்) அடித்த வெஸ்ட் சைட் குழுமத் தலைவன் 'மரநாய்' என்பவனைப் பகைத்துத் தானும் ஒரு குழுமத் தலைவனாக மாறியவன். குமாருக்கும், மரநாய்க்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்திருந்த 1999ம் வருடத்தின் பிற்பகுதியில் இந்த வன்முறைகளைவிட்டு ஒரு 'கஷ்டப்பட்ட பிள்ளை'யைத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழும் வாழ்க்கைக்கு ஏங்குபவன்.

அன்பு (சுதன் மகாலிங்கம்) தகப்பனுடன் வசித்து வருபவன். தகப்பன் சுந்தரத்துக்கு (அம்பலவாணர் கேதீஸ்வரன்) இரண்டு வேலைகள். ஒன்று முழுநேர உழைப்பு. மற்றது அன்புவுடன் சண்டை போடுவது. அன்புவும் சரியாகப் படிக்காமல் சுற்றிக்கொண்டிருப்பவன். அவன் குமாருடைய குழுவில் சேர்ந்து 5 வருடங்களாகியும், தகப்பனுக்கு இப்போதுதான் அரசல் புரசலாகத் தெரியவருகிறது. அன்பு அம்மாவை ஈழப் பிரச்சினைகளில் பறிகொடுத்தவன். குமார் அண்ணாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவன். அன்பு இந்தக் குழுமங்களைவிட்டு விலகி நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது அவனது தகப்பனின் ஆசை.

அகிலன் (காண்டி கனா) ஒரு தீவிரமான மாணவன். வோட்டர்லூவில் படிக்கும் இவன் வார இறுதிகளில் தாத்தாவை (கே.எஸ்.பாலச்சந்திரன்) ஸ்கார்பரோ வந்து சந்திப்பதுண்டு. அதே வார இறுதிகளில் வன்னியில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பராமரிக்க வீடுவீடாகப் போய் நிதி திரட்டுவது இவன் வேலை. 2001ம் ஆண்டுக்கு முன் 200 பிள்ளைகளைத் தத்தெடுப்பது இவனது இலக்கு. இப்போது இவன் பொறுப்பில் 30 பிள்ளைகள். இவனும் பெற்றோரைப் போரிடம் பறிகொடுத்தவன்.

அன்புவும் அகிலனும் பாடசாலைக்காலத் தோழர்கள். இப்போது கொஞ்சம் விலகியிருக்கிறார்கள். இருவரும் பழகுவது தாமரையிலைத் தண்ணீராக. இவர்கள் இருவரும் ஒருதலையாக பாடசாலைக்கால ஏஞ்சல் கீதாவை (லக்ஷ்சி) காதலிக்கிறார்கள். அவளது பிறந்தநாளன்று காதலைச் சொல்ல இருவருமே திட்டமிட்டிருக்கிறார்கள். இருவருக்கும் மற்றவரும் கீதாவைக் காதலிப்பது தெரிந்திருக்கிறது. கீதா யாரை விரும்பினாலும் மற்றவர் ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

குமாருக்கு அவன் நினைத்த வாழ்வு கிடைத்ததா?
அன்பு திருந்தி தந்தையின் விருப்பப்படி வாழ்ந்தானா?
அகிலனது இலட்சியங்கள் நிறைவேறியதா?
அன்புவும் அகிலனும் கீதாவிடம் காதல் சொன்னார்களா? கீதா யாரை விரும்பினாள்?
இது போன்ற கேள்விகளுக்கு திரையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்கள்
கூடுதலாக எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஸ்ரார் அன்புவாக வரும் சுதன் மகாலிங்கம்தான். கொஞ்சம் குழப்படிகார, சாகசம் செய்ய விரும்புகிற, அன்பு நிறைந்த ஒரு துள்ளலான இளைஞனை கண்முன் காட்டியிருக்கிறார். அதுவும் அந்தக் குழும இளைஞர்களுக்கே உரித்தான நடை ஒன்று நடக்கிறார், கலக்கல். ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்த திலீபன் சோமசேகரத்தின் நடிப்பும் பரவாயில்லை. மூத்தவர்கள் அம்பலபாணர் கேதீஸ்வரன், கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள். அகிலனாக காண்டி கனாவின் நடிப்பு நிறைவில்லை. பல காட்சிகளில் உற்சாகமாக நடித்திருக்கலாம், தவறவிட்டுவிட்டார். லக்ஷ்சிக்கு அன்பு மற்றும் அகிலனுக்கான கனவுப் பாடல்கள் இரண்டில் வண்ண வண்ண உடைகளோடும் மயக்கும் கண்களோடும் ஓடுவதையும் அங்கும் இங்கும் நடப்பதையும் தவிர வேறெந்த வேலையும் இல்லை.

படக்குழுவினர்
லெனின். எம். சிவம் நல்லதொரு கதையை, பல பிரபல இயக்குனர்கள் பாவித்த பல்வேறு கோணங்களில் கதை சொல்லும் உத்தியைப் பாவித்து, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார். மூன்று கோணங்களை இணைப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சபேசன் ஜெயராஜசிங்கத்தின் ஒளிப்பதிவில் சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் (உ-ம்: குளோசப் காட்சிகளில் நடிகர்களின் முகங்களில் ஒரு பகுதி அடிக்கடி திரைக்கு வெளியே போகிறது) அவருக்குக் கொடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வைத்துத் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ராஜ் தில்லையம்பலத்தின் பாடல்களும், பின்னணி இசையும் திருப்பம்தர வல்லவை இல்லை என்றாலும் மிக நன்றாக இருந்தது. கார்த்திக் பாடும் 'ஓ மை ஏஞ்சல்' பாடலும், எஸ்.பி.பி.யின் ‘மொழியின்றி' பாடலும் கேட்க இனிமையாக இருந்தது. ரொரொன்ரோவின் அழகிய கடல், நதிக் கரைகளிலும், பூங்காக்களிலும் படம்பிடித்ததும் பரவாயில்லை.

நிறைகள்
நல்ல கதை. நல்லதொரு செய்தியையும் சொல்ல விளைந்திருக்கிறார் லெனின். எம். சிவம். எம்மவர் நிஜவாழ்க்கையில் கண்ட சில சம்பவங்களை ஞாபகப்படுத்திச் செல்கிறார்கள். திரைக்கதை உத்தி நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த ‘மரநாய்' என்கிற எதிர்க் குழுமத் தலைவனைக் காட்டாமலே அவன் சம்பந்தமான ஒரு பயத்தை வரவைத்திருப்பது சிறப்பு. வசனங்களில் சரிவிகிதத்தில் இயல்பான நகைச்சுவையும் (என்ன எம்மவர்கள் சிரிக்கிறார்களில்லை. விவேக், வடிவேலுவைப் பார்த்து இயல்பான நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டார்களோ? கமலின் மும்பை எக்ஸ்பிரசிலும் தியேட்டரில் சிரிப்புக் குறைவாகவே இருந்தது) நுணுக்கமான சமூக உணர்வையும் காட்டியிருக்கிறார் லெனின். மேலே சொன்னது போலவே சுதனின் நடிப்புக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ்.

குறைகள்
மூன்று முக்கிய பாத்திரங்களில் ஒரு பாத்திரம் கடைசியில் இறந்து போவதாகக் காண்பித்திருக்கிறார்கள். அதற்கான காரணம் திரைக்கதையில் பெரிய பொத்தல். ‘என்னைக் கொல்ல வந்தவன் மாறி அவனைக் கொண்டுட்டான்' என்று இன்னொரு பாத்திரம் பேசும் வசனம் ‘அடையாளப் பிழையால்' நடந்த கொலை என்பதாகக் காட்டுகிறது. அடையாளப் பிழையால் அந்தக் கொலை நடக்க வாய்ப்பில்லை. ‘என்னைக் கொல்ல வந்தவன் நானில்லாத ஆத்திரத்தில அதில நிண்ட அவனைக் கொலை செய்துபோட்டுப் போட்டான்' என்று வசனத்தை மாற்றியிருந்தால் கொஞ்சம் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

அதே போல் கதாநாயகிக்குப் பாடல்கள் மட்டுமே. ஒரு வசனம், ஏன் சிரிக்கின்ற மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. இந்தியப் படங்களிலாவது கதாநாயகிக்கு சும்மாவாவது இரண்டு வசனம் வைப்பார்கள், இங்கே அதுவும் இல்லை. கதையைச் செதுக்கிச் செதுக்கி எடுக்கும் அளவுக்கு எம்மிடம் வளங்கள் இல்லாமல் போனதுகூட இந்தக் குறைக்குக் காரணமாக இருக்கலாம். தலை முடியை வளர்த்து, கிட்டத்தட்ட முகத்தை மறைத்தபடி இருக்கும் அந்தப் பாத்திரம் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா' பாத்திரம் ஒன்றையும், மிஷ்கினின் ‘அஞ்சாதே' மொட்டையையும் பாதிபாதியாக ஞாபகப்படுத்துகிறார்கள். அதையும் தவிர்த்திருக்கலாம்.

என் கருத்து
கிடைத்த குறைந்த வளங்களை வைத்துக்கொண்டு எடுத்த இந்தப் படத்துக்கே சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அப்படியானால் எம்மவர்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு வழங்கினால லெனின். எம். சிவம் போன்ற இளம் படைப்பாளிகளிடம் இருந்து இன்னும் நல்ல படைப்புகள், உலகத்தரத்தில் கிடைக்கும்.

தசாவதாரத்துக்கு செலவளித்த 10 ரூபா மற்றும் 3 மணித்தியாலங்களைவிட இது எவ்வளவோ மேல்.

பின்னிணைப்புகள்
ஓ மை ஏஞ்சல் பாடல்... (ரசித்த சில இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள். Locations அழகாயிருக்கின்றன. பாடல் லெனின் அவருடைய youtube ல் இணைத்தது. இணைப்புத் தந்தது facebookல் காண்டி)


1 comment:

Anonymous said...

1999 திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்
http://www.youtube.com/watch?v=Sn8s0mYUlIU