Friday, 9 October 2009

தமிழ் சினிமா-பத்திரிகையாளர்கள்-கற்பு

புவனேஸ்வரியைக் கைது செய்தது பெரிய பகிடியாகப் போய்விட்டது போல் இருக்கிறது. கேடுகெட்ட இரு துறையைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். எத்தனையோ பிரச்சினைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு காணமுடியாத தலைவர் ஒருவர் வேக வேகமாகப் பிரச்சினைகளை முடித்து வைக்கிறார். தமிழக அரசியல் அரங்கில் சமீபத்திய இந்தப் பரபரப்பு பற்றிய என்னுடைய கண்ணோட்டம் இங்கே.

சினிமாத் துறை

சினிமாத் துறையில் இருக்கும் ஆண்கள்/பெண்களின் நடத்தை பற்றி விமர்சிக்க எனக்கு ஒன்றும் அருகதை இல்லை. ஏனென்றால் இவர்கள் யாருமே எனக்கு தனி மனிதனாக அல்லது மனுஷியாக அறிமுகம் இல்லாதவர்கள். இருந்தும் இவர்கள் மீது சில குற்றச்சாட்டுகள் உண்டு.

என்னதான் நாங்கள் எல்லாம் புனிதர்கள் என்பதாக இவர்கள் வேஷம் போட்டாலும் யாரும் நம்பப்போவதில்லை. இதே புனிதர்கள் தமிழ் நாட்டுப் பெண்களின் கற்பு பற்றிக் குஷ்பு சொன்னபோது குஷ்புவின் பக்கம் நின்றார்கள். இப்போது பக்கம் மாறி நிற்கிறார்கள். உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் குன்றிமணிகள், எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் குப்பைகளா? குஷ்பு சொன்ன கருத்து சரி பிழை என்ற வாதத்துக்கு நான் வரவில்லை. அவர் சொன்ன விஷயம் இன்றைய மத்தியதர, உயர் மட்டக் குடும்பங்களில் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சராசரி தமிழ்ப் பெண்ணின் மனம் பாடுபட்டிருக்கும்தானே? உயர்தர வர்க்கங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் அப்படியான அத்து மீறல்களை வைத்துத் தமிழ் நாட்டுப் பெண்கள் எல்லோரையும் எப்படி மதிப்பிடலாம் குஷ்பு? ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அப்பா அம்மா காட்டியவனுக்குக் கழுத்தை நீட்டிய பொன்னம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்? அப்போது என்ன செய்தார்கள் இந்தப் புனிதர்கள்? கண்டித்த தங்கர் பச்சானைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்.

இந்தப் பெரிய மனிதர்கள் திடீரென நடிகைகளைப் பத்தினித் தெய்வங்களாகக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது. இவர்களில் எவனாவது ஒரு நடிகைக்கு நல்ல மாதிரி ஒரு வேஷம் கொடுத்திருப்பானா. 15 வயதில் நடிக்க வந்துவிட்டாராம் ஸ்ரீப்ரியா. அப்போதே அவரின் அப்பா வயதுள்ள நடிகருக்கு ஜோடியாகப் போட்டு, அவரது மார்பை zoom பண்ணிப் படம் பிடித்து இவர்கள் போட்டுவைத்த விதைதான் இன்றைக்கு சர்வசாதாரணமாக அவரை விபசாரி என்று ஒருவன் கூறும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது ஸ்ரீப்ரியாவுக்குப் புரியவில்லையா அல்லது புரியாதமாதிரி நடிக்கிறார்களா? சிறு பிள்ளை படம் நடிப்பது தவறு, இல்லை என்ற வாதம் வேண்டாம், அதே சிறு பிள்ளையைப் பாலியல் ரீதியாகச் சித்தரித்த இந்தப் பெரிய மனிதர்களை விட, செய்தி போட்ட பத்திரிகைக்காரன் ஒன்றும் கெட்டவனில்லை. பேத்தி வயதுப் பெண்களோடு சோடி கட்டும் பல ஈனப் பிறவிகள் இருந்த சபையில் ஸ்ரீப்ரியா பாவித்த வார்த்தை அந்தப் பத்திரிகையாளனை மட்டுமல்ல, அந்த ஈனப் பிறவிகளையும்தான் சுடும். (இங்கே நான் சொல்லும் ஈனப் பிறவிகள் என்ற வார்த்தைக்கு யாருமே விதிவிலக்கு அல்ல, ஸ்ரீப்ரியாவின் ஆரம்பகாலக் கதாநாயகன் தொடக்கம், கோபப்பட்ட கதாநாயகன் வரை).

திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் யாரும் அறியாததல்ல. 'நாங்கள் அவளுங்களை என்னவும் செய்யலாம், நீங்கள் கண்டுக்கப்பிடாது' என்கிற மாதிரித்தான் கூச்சல் போடுகிறார்கள் இவர்கள். இதெல்லாத்தையும் விடக் கேவலம், இதைவிட எத்தனையோ பெரிய பிரச்சினைகளில் எல்லாம் இவ்வளவு வேகமாக இந்த மகான்கள் செயற்படவில்லை. தன் இனத்துக்காக முழங்கி சிறைக்குப் போன சீமானை இந்த மகான்கள் கண்டுகொள்ளவில்லை. பாரதிராசாவின் அலுவலகம் தாக்கப்பட்டது பிரச்சினையாகக் கொள்ளப்படவில்லை. அதைவிடுங்கள், உங்கள் உள்வீட்டில் இருந்துதானே வந்தாள அந்தப் பெண் புவனேஸ்வரி, அவளைப் பற்றிய கதை ஏதும் இல்லை. உங்கள் வீட்டுப் பெண்கள் என்றதும் கொதித்துப் போய் வந்து கத்துகிறீர்கள். ஸ்ரீப்ரியா, மஞ்சுளா, சீதா, நளினி, ஷகீலா என்று எல்லார் போலவும் அவளும் பெண்ணே. அவள் உட்பட அத்தனைத் திரைத்துறைப் பெண்கள் மீதும் விழுந்த இந்தப் பழிக்கும், அவள் போலவே தடுமாறிப்போன அத்தனை பெண்களின் நிலைக்கும், முழுப் பொறுப்பு நீங்கள்தான் உத்தமராசாக்களே.

பல காலம் இந்தியாவில் இருந்துவிட்டு ஊர் வந்த எங்கள் நண்பன் ஒருவன் சொன்னான். ‘அடப் போடா அவளுங்களை எல்லாம் யார் மதிக்கிறானுவ. வந்தாலே தேவடியான்னுட்டு போய்ட்டு இருப்போம்' என்று சொன்னான். அந்தத் தேவடியா பட்டம் அவர்களுக்குக் கிடைக்க முழுக்க முழுக்கக் காரணம், இந்த சினிமா உத்தமர்களே. இந்தக் கூத்தை எல்லாம் பார்த்து எனக்கு கொஞ்சம் சுடுகிறது. இந்த மகா கேவலர்களின் சித்தரிப்புகளைக் காசு கொடுத்துப் பார்த்து இன்றுவரை அவர்களை ஊக்கப்படுத்திய நாங்களும் ஒரு வகையில் குற்றவாளிகள்தான். தெரிந்தோ தெரியாமலோ அப்படி வக்கிரமாக அந்தப் பெண்களை நாங்களும்தான் ரசித்திருக்கிறோம்....சீ த்தூ.... (எனக்கு நானே துப்பிக் கொள்கிறேன்)

பத்திரிகைகள்

பத்திரிகா தர்மம் என்று ஒன்று இன்றைக்கு இல்லவே இல்லை. இந்தப் பிரச்சினை வர முன்னரே எனக்குப் பத்திரிகைகள் மீதான வெறுப்பு உச்சத்தை அடைந்திருந்தது. அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளையும் பட்டியலிடுவோம்.

இந்தக் கிசு கிசுவைப் படியுங்கள் தமிழ் நாட்டுப் பத்திரிகை ஒன்றிலிருந்து தின முரசு எடுத்துப் போட்ட செய்தி இது. ‘அறையைப் பூட்டிக் கொண்டு வாரிசு நடிகரும் மஜ்னுவின் காதலியும் டிஸ்கசன் செய்தார்கள். உதடுகள் சந்தித்து உரையாடிக் கொண்டன. மஜ்னுவின் காதலியின் கைகள் வாரிசு நடிகரின் அடர்ந்த மார்பின் ரோமங்களை ஆராய்ச்சி செய்தன. அதற்கிடையில் இவர்களுக்குப் 'பால'மான அந்த இயக்குனர் சிவபூசைக் கரடி மாதிரி வந்து காரியத்தைக் கெடுத்தார்'. யாரென்று குழம்ப வேண்டாம். சூர்யா, லைலா, பாலா. நந்தா சமயத்தில் வந்த கிசு கிசு இது. சூர்யாவும் லைலாவும் அப்படியே இருந்தார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், கைகள் ரோமங்களை ஆராய்வதெல்லாம் எழுதியவனுக்கு எப்படித் தெரியும். அவர்கள் செய்யும்போது நீ என்ன விளக்கா பிடித்தாய்? (ஆனால் இதையெல்லாம் அந்த வயதில் வாங்கிப் படிக்கும்போது சுவையாக இருந்தது)

இதைவிட மோசமாக என்னைக் காயப்படுத்தியது, இவர்கள் செய்த பிண வியாபாரம். அதிலும் மிகக் கேவலமாக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று படம் ஒன்றைப்போட்டு எங்களின் சனங்களின் அவலத்தைக் காசாக்கியபோது, வாங்கி அடுக்கி வைத்திருந்த சில இந்தியப் பத்திரிகைகளைத் தொடவே மனமில்லாமல் போய்விட்டது. இன்றைக்கும் தொடாமல் வைத்திருக்கிற பத்திரிகைகள் அதிகம். கொடுத்த காசைக் குப்பையில் எறிய மனம் வரவில்லை எனக்கு. (என்ன இப்போதெல்லாம் அந்தக் காசை மிச்சம் பிடித்து எம்மவர் வெளியிடும் புத்தகங்களை வாங்கக்கூடியதாய் இருக்கிறது).

இதே சினிமா நடிக, நடிகைகளை உயர்த்திவிட்டதும் இவர்கள்தான். சினிமாப் பேட்டி இல்லாமல் எந்தப் பத்திரிகையும் வந்ததில்லை. சீர்திருத்தவாதிகளின் பார்வையில் பச்சைப் பார்ப்பானும், எழுத்து விபாசாரியுமான சுஜாதா, அறிவியலுக்கு, உலக நடப்புக்கு, பொருளாதாரத்துக்கு இடம் கொடுங்கள் என்று கத்திக் கத்திப் பார்த்து ஓய்ந்து செத்தும் போய்விட்டார். இன்றைக்கு சினிமாவையும், கேடு கெட்ட அரசியலையும் நம்பியே பத்திரிகைகள் வருகின்றன என்பதே உண்மை. அறிவியலுக்கு ஒரு பக்கம் ஒதுக்க முடியாத பத்திரிகைகள் ‘தமிழனுக்கு அறிவியலில் நோபல் பரிசு' என்று பீற்றுகின்றன. (எனக்குத் தேசியம் இல்லை என்று சொல்லி மூஞ்சையில் சாணி அப்பிவிட்டார் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்). எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் வெட்கம் இல்லாமல்?

இப்படியாக சண்டை போட்டுக் கொள்கிற இரு பக்கமும் நியாயமில்லை. இரு தரப்புமே ஒருவரை நம்பி மற்றவர் என்று இருப்பவர்கள். இன்றைக்குச் சண்டை போட்டுவிட்டு ‘இது வரை யாரும் சொல்லாத கதையை எடுக்கிறோம்' என்று ஒரு நடிகரின் பேட்டியை எடுத்து இவர்கள் வெளியிடுவார்கள். நாளைக்கே இரு தரப்பும் சேர்ந்து கலைஞருக்கு விழா எடுப்பார்கள். இதையே சாட்டாக வைத்து சரத்குமார் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தாலும் இணைவார். தொலைக்காட்சி என்று ஒரு ஊடகம் இருப்பதாகவே தெரியவில்லை இந்த விசயத்தில்... என்னவோ, இன்றைக்கொரு பூனைக்கண் புவனேஸ்வரி, நாளைக்கொரு நாய்வால் நாகம்மை என்று தமிழக அரசியல் சூடாகத்தான் நடக்கிறது..... உப்புச்சப்பிலாத விஷயங்களுக்காக.....