இது ஒன்றும் பெரிய ‘சீரியஸ்' பதிவு இல்லை. ஆனால் இது பற்றி நான் எழுதியே ஆகோணும். இல்லாட்டா, உவன் ஜெயன் எனக்குச் செய்யிற தொல்லைகள் அடங்காது பாருங்கோ.
ஜெயன் வந்து எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவன். நான் ‘பி' வகுப்பிலையும், ‘டி' வகுப்பிலையும் ஆறாம் வகுப்புத் தொடக்கம், 11ம் வகுப்பு வரை படிக்கேக்கை, இவன் ‘ஏ' வகுப்பில படிச்சவன். நித்துவும் ‘ஏ' வகுப்பு எண்டபடியால் ‘நண்பனின் நண்பன்' எனக்கும் நண்பன் என்ற கோட்பாட்டின்படிதான் எனக்கு இவனை முதலில தெரியும். 12ம் வகுப்புக்கு வந்த பிறகு, இவனும் நானும் 'ஏ' வகுப்பாப் போக, அதுக்குப் பிறகுதான் நெருங்கின நண்பர்களானோம். அப்ப இருந்தே உவன் என்னைப்போட்டு வதைக்கத் தொடங்கீட்டான். ஆள் ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம். அடிச்சும் கலைக்கேலாது. கதைக்க வெளிக்கிட்டான் எண்டால் விசர் பத்திக்கொண்டு வரும். இருந்தாலும் ஆள் என்னெண்டு எங்கட நட்பு வட்டத்துக்க(அதாவது நான், மகி, நித்து, நிதி, கப்பி) வந்தவன் எண்டு தெரியேல்லை. இவன்ர நல்ல மனம் காரணமாய் இருந்திருக்கலாம்.
இவனை நாங்கள் அடிக்காத நக்கல் இல்லை. இவன் ஒரு மோட்டர் சைக்கிள் வச்சிருந்தவன். அருமையான ஜப்பான் மொடல் மோட்டர் சைக்கிள். அது உற்பத்தி செய்யிறதையே ஜப்பான் காரன் நிப்பாட்டிக் கனகாலம். ஆனா, எல்லாரும் ஓட ஆசைப்படிற மோட்டர் சைக்கிள், Honda CG125. அதுவும் பெரிசா ஒருத்தரும் வச்சிருக்காத ஒரு இளம் நீலக் கலரில இவன்ர தகப்பன் ஓடித் திரிஞ்ச மோட்டர் சைக்கிள். அந்தாளை சைக்கிள்ள அனுப்பீட்டு இவன் அதிலை ஊர் சுத்துவான். சாட்டுக்கு ஒரு ஹெல்மெட் ஹாண்டில் பாரில தொங்கும். அவ்வளவுதான். ‘டுக்கு டுக்கு' எண்டு தூரத்தில கேக்கிற மோட்டர் சைக்கிள் சத்தத்தில நிதி சொல்லுவான், 'டே சாணம் வாறாண்டா' எண்டு. அப்பிடி நக்கலும் விக்கலுமா எங்கட நட்பு தொடர்ந்தது.
எங்கட பக்கம் இந்த லாண்ட் லைன் ஃபோன் வந்தாப்பிறகு இவன்ர அட்டகாசம் இன்னும் கூடிப்போச்சு. என்னெண்டா ஃபோன் இருக்கிற எல்லா வீட்டுக்கும் லைன் போட்டு ஆக்களைக் கடுப்படிக்கிறது இவன்ர முழுநேரத் தொழிலாப் போச்சு. ஒரு முறை எங்கட வீட்ட ஃபோன் எடுத்து குரலை மாத்திக் கதச்சு தொல்லைதந்தான். ஆரெண்டு கண்டுபிடிக்க முடியேல்லை, ஆனால் இவர்தான் ஆள் எண்டு எனக்கு ஒரு சந்தேகம். உடனே சின்னதாய் ஒரு ஜோக் அடித்தேன். ஆள் மாட்டுப்பட்டார். என்னெண்டு தெரியுமோ? ஆளின்ர என்ன மாறினாலும் சிரிப்பு மட்டும் மாறாது. ஆள் சிரிக்கேக்கை ‘அஹு அஹு அஹு' எண்டுதான் சிரிப்பர். நானடிச்ச ஜோக்குக்கும் ஆள் இப்பிடியே சிரிச்சு மாட்டிக்கொண்டார்.
இவனும் நானும் சேர்ந்து சன் சேரிட்ட கெமிஸ்ட்ரி படிச்சது ஒரு பெரிய கதை. அதை ஒரு காவியமா எழுதலாம். அதே மாதிரி கொழும்பில நான் இருக்கேக்க இவன் செய்த உதவிகளையும் உபத்திரவங்களையும் பற்றியும் கனக்க எழுதலாம். ஆனா, இந்தப் பதிவின்ர நோக்கம் அது இல்லைப் பாருங்கோ.
நான் இப்ப கனடால இருக்கிறன். இவன் லண்டனில இருக்கிறான். அடிக்கடி ஃபோன் போட்டு என்னை இப்பவும் ரென்சனாக்கிறதில இவனுக்கொரு சந்தோசம். தொல்லை கலந்த அன்புதானே ஆளின்ர ஸ்பெசல். போனமாசம் இங்க இருந்து சுவிஸ்சுக்கு எங்களோட படிச்ச ரபிக்காந்த் போனவன். அப்ப ஜெயன் லண்டனில இருந்து சுவிஸ் போய் ரபிக்காந்தைச் சந்திக்கிறதா ஏற்பாடு. ஒருநாள் கனடா நேரம் இரவு 10 மணிக்கு (லண்டனில விடியக்காலமை 3 மணி) எனக்கு ஜெயன் ஃபோன் அடிச்சான். 11 மணி ஆகி, 12 மணி ஆகி .. 12:30ம் ஆகீட்டுது. சனியன் ஃபோன் வைக்க மாட்டன் எண்டுது. சாடைமாடையா நேரம் ஆகீட்டுது எண்டு சொல்லியும் கேட்கேல்லை. 'மச்சான் நான் சுவிஸ்சில ரபிக்காந்தை சந்திக்கேக்கெ உனக்கு ஏதாவது சாமான் குடுத்து விடோணும். என்ன வேணும் சொல்லு?' எண்டு அரிக்கத் தொடங்கினான்.
'தொடங்கீட்டான்...' என்று திட்டியவாறே, ‘ஒண்டும் வேண்டாமடா மச்சான்' எண்டெல்லாம் சொல்லிப் பாத்தன். ம்ஹூம்... கடைசி வரைக்கும் ஃபோனை வைக்காமல் அறுக்கத் தொடங்கினான். எனக்கு உச்சீல ஏறீட்டுது. 'சனியனே, ஒரு ரெண்டு ஜட்டி வாங்கி அனுப்பு' என்று கோபமாகத் திட்ட அதே ‘அஹு அஹு அஹு' வுடன் ஃபோனை ஒருவாறாக வைத்தான். நேரம் விடிகால 12:45. நித்திரையாகிப் போனேன். அப்பிடியே இந்தத் தொல்லை, நான் எரிச்சலின் உச்சியில் சொன்ன வசனம் எல்லாம் மறந்தும் போச்சு. ரபிக்காந்த் கொஞ்ச நாளில தன்ர சுவிஸ் சுற்றுப் பயணத்துக்குப் போய், ஜெயனோட நிண்டு படம் எல்லாம் எடுத்து ஃபேஸ் புக்கில போட்டிருந்தான்.
சுற்றுப் பயணம் முடிந்து கனடா வந்த ரபிக்காந்த் ஒரு மெசெஜ் அனுப்பியிருந்தான், ‘ஜெயன் உனக்கு ஒரு பரிசு தந்தவன். வந்து வாங்கீட்டுப் போ' எண்டு. முதலில சத்தியமா எனக்கு விளங்கேல்லை... பிறகு யோசித்துப் பாக்கேக்கைதான் நான் எரிச்சலின் உச்சியில் சொன்ன வார்த்தையின் விபரீதம் உறைச்சுது. ஜெயன் Medium Umbro Underwear (3-Pack) குடுத்து விட்டிருந்தான்.....(தலைப்பை திரும்பவும் படியுங்கோ)
மேலை இருக்கிற படத்திலை வலப் பக்கம் கறுத்த மேலங்கியோட இருக்கிறது மினக்கெட்டு லண்டனில இருந்து கனடாக்கு அண்டர்வேர் வாங்கிக் குடுத்த மங்கி, பக்கத்தில இருக்கிறது அதை அங்கையிருந்து இங்கை வரை காவிக் கொண்டுவந்த மங்கி.