Sunday 23 December 2012

பாலா சாஹேப்புக்கான அஞ்சலிகள்

 சமூக வலைத்தளங்களில் பால் தாக்கரேக்கு தமிழ்த் தேசியர் சிலர் வரைந்த அஞ்சலிக்குறிப்புகளை முன்வைத்து
__________________________________________________________________________________

86 வயதான பாலாசாஹேப் கேஷவ் தாக்கரே கடந்த நவம்பர் 17ம் திகதி மாரடைப்பால் இறந்து போனார். அவரது இறப்பை முன்னிட்டுப் பல தரப்புகளிட்மிருந்தும் பல வகையான வெளிப்பாடுகளைக் காணக்கூடியதாயிருந்தது. சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்பில் தமிழ்த்தேசியர் சிலர் வெளியிட்ட இரங்கற் குறிப்புகளை ஆய்ந்து பார்க்கவேண்டிய தேவை தமிழ்த்தேசியம் தொடர்பிலான அக்கறை உடையவர்களுக்கு இருக்கிறது.

தாக்கரே தன்னுடைய பொதுவாழ்வை ஒரு பத்திரிகைக் கேலிச்சித்திர வரைகலைஞராகவே தொடங்கினார். மராத்தி மொழி பேசும் மக்களின் மாநிலமாக மகாராஷ்டிரா உருவாவதற்காக முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரான கேஷவ் சீதாராம் தாக்கரே என்பாரின் மகனான பால் தாக்கரே, தனது பொது வாழ்க்கையின் ஆரம்பம் முதலே “மகாராஷ்டிரம் மராத்தியர்க்கே” என்கிற கொள்கையை உடையவராகவும், ஒன்றிணைந்த இந்தியா அல்லது இந்திய இறையாண்மை எனப்படுகிற வரையறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறவராயுமே இருந்தார். 1966 இல் இவர் “சிவ சேனா” அமைப்பைத் தொடங்கும்போது அமைப்பின் மூலமந்திரமாக இருந்தது “தென்னிந்திய, குஜராத்திய மற்றும் மார்வாடி வந்தேறிகளிடமிருந்து மராத்தியத்தைப் பாதுகாத்தல்” என்பதாகவே இருந்தது. அவரது எதிரிகள் பட்டியலில் இஸ்லாமியர்களையும் இணைத்ததன் மூலம் இந்துத்துவத்தின் கோரமுகத்துக்கான அடையாளமாக “சிவனின் சேனையை” மாற்றினார் என்றே சொல்லலாம். (இந்து மதம் என்கிற அடையாளத்துக்குள் தனித்தனி மதங்களாக இருந்த மற்ற மதங்கள் இணைக்கப்பட்டு, அவற்றின் நற்குணங்கள் நாறடிக்கப்பட்ட வரலாறு இந்தப் பத்திக்கு அவசியமில்லை. சிவசேனையை ஒரு இந்துத்துவப் பாசிச அமைப்பாக அடையாளப்படுத்துவதே இப்பத்தியின் பேசுபொருளுக்கு அமைவானது).

இந்தியாவில் இந்து-முஸ்லீம் உறவுகளில் இருந்துவந்த நெருடலை பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து மிகப்பெரும் விரிசலாக்கிய பெருமை ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்கள் மற்றும் சிவசேனாவையே சாரும். அவ்வேளை தனது பத்திரிகையில் முஸ்லிம்களுக்கு வெளிப்படையான சவாலை விடுத்ததோடு மட்டுமல்லாமல் 1993 ல் மும்பை (அப்போதைய பம்பாய்) கலவரத்தின் போதான பல படுகொலைகளை தாக்கரேயும் அவரது குடும்பமும் முன்னின்று ஒருங்கிணைத்ததாக இந்திய நடுவண் அரசு அமைத்த “பம்பாய் (மும்பை) கலவரங்களுக்கான விசாரணைக் குழு” குறிப்பிட்டிருக்கிறது. அதே ஆண்டு பெப்ரவரி மாதம் தன்னுடைய மகன்கள் மற்றும் அமைப்பினரின் செய்கைக்காகத் தான் பெருமைப்படுவதாகவும், தாங்கள் மட்டும் இல்லையென்றால் முஸ்லிம்களை அடக்கியிருக்கமுடியாது எனவும் தாக்கரே கூறினார். அதாவது, இக்கலவரங்களுக்கெல்லாம் காரணகர்த்தாக்கள் முஸ்லிம்கள் என்பதான பொய்யை தாக்கரேயும், பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியமான தலைவர்களும் உரத்துக் கூறினார்கள். அந்தப் பொய்யை 1995 இல் வெளிவந்த “பம்பாய்” என்கிற மணிரத்னத்தின் பன்மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்து இந்தியாவின் வெகுசன ஊடகங்கள் திரும்பத் திரும்பச் சொல்லி, அதையே உண்மை என்பது போல் நிறுவினார்கள். 1992 டிசம்பர் 6 வரைக்கும் நெருடல்கள் இருந்தாலும் ஒன்றாக வாழ்ந்த சமூகங்களுக்கிடையே பெரும்பிளவை ஏற்படுத்திய சம்பவத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்தது இந்துக்கள் என்கிற உண்மையை தாக்கரேயின் வழியில் வெகுசன ஊடகங்களில் மறைத்தவர்களில் தமிழ் மக்களுக்கு நன்கே அறிமுகமான மணிரத்னம் மற்றும் கமலஹாசன் மிகமுக்கியமானர்

தாக்கரே முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, மராத்தியர் அல்லாத மற்றவர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்தார். தென்னிந்தியர், குஜராத்திகள், மார்வாடிகள் மற்றும் வட இந்தியர்கள் மீதும் தாக்கரே வெறுப்பை உமிழ்ந்தார். முக்கியமாக பீகாரிகளைக் குறித்து “ஒரு பீகாரி நூறு வியாதிகளுக்கு சமன்” என்ற அப்பட்டமான சாதிவெறுப்பை வெளிக்காட்டியவர் தாக்கரே. எதற்கெடுத்தாலும் கடையடைப்பு, வன்முறை, அடிதடி, கொலை என்பதாகவே பாதை வகுத்துக்கொண்ட தாக்கரே “செத்தும் கெடுத்தவர்” என்றால் மிகையாகாது. அவரது சாவை முன்னிட்டு மும்பையின் சிவசேனா கோரிய கடையடைப்பை சமூகவலைத்தளத்தில் கண்டித்த ஒரு பெண்ணும், அக்கண்டனத்துக்குத் தனது விருப்பைத் தெரிவித்த பெண்ணும் சிவசேனாவின் அழுத்தத்தின் காரணமாகக் காவற்துறைய்னரால் கைதுசெய்யப்பட்டனர்.

இப்படியான பால் தாக்கரேயை ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் பிரதிநிதிகளான இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியம் பேசக்கூடிய ஒரு சிலரும், அவர்களுக்குச் சார்பாக இந்தியாவில் தமிழ்த் தேசியம் பேசக்கூடிய இன்னும் சிலரும் என்ன காரணத்துக்காக ஆதரிக்கிறார்கள்? தாக்கரே ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார், “ விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராட்ட முறைகளுக்காக அவர்கள் குறித்துப் பெருமையடைகிறேன். அவர்கள் மீதான தடையை இந்திய நடுவண் அரசு நீக்கவேண்டும்”. இந்த ஒரே ஒரு பிரகடனத்துக்காக பால் தாக்கரேயை ஆதரித்து, அவரது மரணத்துக்கான அஞ்சலிகளை எம்மவர் செலுத்துவது குறித்து தமிழ்த் தேசியம் சரியான பாதையில் முன்னகர்த்தப்படவேண்டும் என்ற அக்கறையுள்ளோர் விசனம் கொள்வதில் வியப்பேதுமில்லை.

தாக்கரேயின் “மண்ணின் மைந்தர்” கோசத்துக்கும், தமிழ்த் தேசியர்கள் முன்வைக்கும் “தனி நாடு” என்ற கோரிக்கைக்குமான நுணுக்கமான வித்தியாசங்களைப் பெரும்பான்மைத் தமிழ்த் தேசியர்கள் கவனத்தில் கொள்ளாமலிருப்பது பெருந்துயரம் எனலாம். இந்த நுணுக்கமான பார்வையின்மை தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்தும் ஒரு சவலைப் பிள்ளையாக வைத்திருக்கிறது. இலங்கை வாழ் தமிழர்களின் “தனி ஈழம்” என்கிற கோரிக்கை தாக்கரேயின் “மண்ணின் மைந்தர்கள்” கோரிக்கைக்குச் சமாந்தரமானதல்ல. ஈழத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது சிங்கள அரசியல்வாதிகளின் இனவாதப் போக்கு மற்றும் ஒடுக்குமுறைக்கெதிரான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையாக எழுந்தது என்பதை நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும். “இலங்கை வாழ் தமிழர்களுக்கு தென்னிந்தியாவில் இருக்கிற தமிழ் பேசும் பெருங்கூட்டத்தோடான தொடர்பிருப்பதால் இந்தியர்கள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக் காரணிகளாகிவிடுவர்” என்றும், “சிங்களர்க்கான மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் கல்வியுரிமை” என்கிற கோசங்களை முன்வைத்து சிங்கள இனவாத சக்திகள் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசியவாதம் இன்றைக்குப் பல்வேறு தரப்புகளால் “பிற்போக்கானது” என முத்திரை குத்தப்படுவதற்கு இப்படியான நுணுக்கமான பார்வைகள் இல்லாதிருப்பதும், புறக்கணிக்கப்படுவதுமே காரணங்களாகும். இல்லாத “பூச்சாண்டி” ஒன்றைக் காட்டி இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஊட்டி சிங்கள அரசியல்வாதிகள் குளிர்காய்ந்ததுக்கும் சிவசேனாவின் “மண்ணின் மைந்தர்கள்’ கோசத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதை உணரவேண்டியது அவசியம். இதேவேளை கிட்டத்தட்ட இதே போன்ற பிரசாரம் (இல்லாத பூச்சாண்டி) தமிழ்த்தேசியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது என மனோரஞ்சன் போன்ற தம்மைச் சாதீயத்துக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவருவதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும். அதாவது, பெரும்பான்மைச் சிங்களர்களால் தமிழர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படவில்லையாம், தலித் மக்களின் எழுச்சியை அடக்க வெள்ளாளர்கள் இந்த இன முரண்பாடுகளை வளர்த்தார்களாம். இது மனோரஞ்சனின் அரிய கண்டுபிடிப்பு.

இலங்கைச் சிங்கள அரசியல்வாதிகள் செய்ததைத்தான் சிவசேனாவும் செய்தது. மகாராஷ்டிராவில் இல்லாத பிரச்சினை ஒன்றை இருப்பதாகக் காட்டி நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தார்கள் தாக்கரே முதலானவர்கள். முக்கியமாக மராத்திய மக்களின் வளங்கள் மற்றும் மராத்தியர்களின் உழைப்பைச் சுரண்டிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளிகள் மீதும், மகாராஷ்டிரப் பண்பாடுகளைக் குழிதோண்டிப் புதைப்பதில் முன்னின்ற திரைப்பட முதலாளிகள் மீதும் சிவசேனா மிதமான போக்கையே கடைப்பிடித்தது. அவர்களுக்கெதிராக அறிக்கைகளைப் பிரசுரித்தார்கள், சில வேளைகளில் “பொலிவூட்” படங்களுக்கெதிராகக் கலகம் செய்தார்கள். ஆனாலும், சிவசேனாவால் நேரடியாகத் தாக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களும் பஞ்சம் பிழைக்கவந்த ஏழைக் கூலிகளுமே. தென்னிந்தியர்கள் மற்றும் பிகாரிகள் மீதே இவர்கள் மோசமான வன்முறைகளைப் பிரயோகித்தார்கள். அதிலும், பிகாரித் தலித்துக்கள் மீது பெரும் கவனம் செலுத்தினார்கள் சிவசேனா அமைப்பினர், காரணம், எல்லாவிதமான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, திருப்பி அடிக்காத குழுமமாக அந்த மக்கள் இருந்தமையே ஆகும். பெரும்பான்மை ஒன்றைச் சிறுபான்மையாகவும், சிறுபான்மை ஒன்றை பூதாகரமான அச்சுறுத்தும் பெரும்பான்மையாகவும் சித்தரித்து, அச்சிறுபான்மை மீதான எல்லாவகையான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளையும் பிரயோகித்ததில் சிவசேனாவுக்கும், சிங்கள அரசியல்வாதிகட்கும் எந்த வித்தியாசமுமே இல்லை. 

தமிழ்த் தேசியர்களான நாங்களும் இதே மாதிரியான ஒரு நிலைப்பாட்டை 1990 களில் முஸ்லிம்களை இரண்டு மணிநேரத்தில் வெளியேறச் சொன்னதன் மூலம் எடுத்திருந்தோம். அது ஒரு பிழையான அரசியல் முடிவு என்பதைப் பிற்காலத்தில் தமிழ்த் தேசியத் தலைமை ஒப்புக்கொண்டதை இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். “எங்கள் தலைமை அப்படி மானம் கெட்டுப் போகவில்லை” என்று தமிழ்த் தேசியர்களும் “உங்கள் தலைமை அவ்வளவு விரிந்த மனம் கொண்டதல்ல” என முஸ்லிம்களும் இன்றைக்கும் அடிபட்டுக்கொண்டிருந்தாலும் உண்மை என்பது என்றாவது தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கையுண்டு. ஒரு பிழையான அரசியல் நிலைப்பாடு எனத் தமிழ்த் தேசியத் தலைமை ஒப்புக்க்கொண்டது போன்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட பால் தாக்கரேயைத் தமிழ்த் தேசியர் ஆதரிப்பதென்பது தமிழ் தேசியத்துக்கான சாவுமணி என்பதை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் அரசியலில் மும்முரமாகச் செயற்பட்டு வரும் நாம் தமிழர் அமைப்பும் பால் தாக்கரே வழியிற் செல்வதுக்கான அத்தனை பிரயத்தனங்களையும் செய்துவருகிறது. தாக்கரேயின் “மண்ணின் மைந்தர் கொள்கைக்காக” அவரை ஆதரிப்பதாக அந்த அமைப்பின் இணையப் பாசறைப் பொறுப்பாளர் பாக்கியராசன் சேதுராமலிங்கம் தாக்கரேக்கான அஞ்சலியில் குறிப்பிடுகிறார். இது தமிழர் தேசியத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான அதிசிறந்த முன்னெடுப்பு என்பதைத் தமிழ்த் தேசியர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தம்மிடையே புரையோடியுள்ள இவ்வாறான கசடுகளைக் களைந்துகொள்ளாதவரையில் தமிழின் முன்னணி முற்போக்கர்கள் “சிங்கள இனவாதத்தைவிடத் தமிழ்த் தேசியவாதம் மோசமானது” என நிறுவி அடக்குமுறையாளர்களுக்குப் பிடியெடுத்துக் கொடுப்பர். ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் எங்கள் கண்முன்னரேயே குழிதோண்டிப் புதைக்கப்படும்.

*_____*

பி.கு: இவ்வரைபானது நவம்பர் 30, 2012 அன்று செயற்பாட்டாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பத்திரிகைக்காக எழுதப்பட்டது. அவர் பத்திரிகை தொடங்கும் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால் (?) டிசம்பர் 23, 2012 அன்று திருத்தப்பட்டது


No comments: