Monday 24 October 2011

அடேலின் கைக்குட்டை-விமர்சனம் மற்றும் விசனம்

தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) 20 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தேடகம் மற்றும் தவநி கலையாற்றுக் குழு வழங்கிய அரங்கின் குரல் நிகழ்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (22-23/10/2011) அன்று Toronto Yorkwoods Library Theater அரங்கில் நடைபெற்றது. சனிக்கிழமை அமர்வுக்குச் சென்று வசந்தா டானியலின் நெறியாள்கையில் உருவான “உயிர்ப்பு” என்கிற நாட்டிய நாடகத்தையும், பா.அ.ஜயகரனின் நெறியாள்கையில் உருவான “அடேலின் கைக்குட்டை” என்கிற நாடகத்தையும் பார்க்கிற வாய்ப்புக் கிட்டியது.

“அடேலின் கைக்குட்டை”-விமர்சனம்

“அடேலின் கைக்குட்டை” என்கிற பெயரில் ஜூன் - ஓகஸ்ற் 2009 காலம் இதழிம் பா.அ.ஜயகரன் எழுதிய சிறுகதையின் நாடகவடிவத்தை பா.அ.ஜயகரன் மேடையேற்றியிருக்கிறார். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் வந்த அந்தக் கதை போரின்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியதாக அமைந்திருந்ததும், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தத்தைத் தொடர்ந்த காலங்களில் எழுதப்பட்டதும் இக்கதையின் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்தன என்றே கூறலாம். விமர்சகர்/நண்பர் அருண்மொழிவர்மன் மூலம் கிடைத்த அறிமுகத்தூடாக காலம் இதழில் இக்கதையை ஏலவே வாசிக்கிற வாய்ப்பும் கிட்டியிருந்தது. கதையைக் கிட்டத்தட்ட அப்படியே அரங்கேற்றியிருந்தார்கள், (மூலச் சிறுகதையில் அடேலோடு சேர்ந்து ஆறு பெண்கள் ஆறு கைக்குட்டைகள், நாடகவடிவத்தில் அடேலதும், எலனோரதும் பெயர் பொறித்த ஒரே கைக்குட்டை) . நாடக அரங்கில் தரப்பட்ட கையேடு ஒன்றில் “அடேலின் கைக்குட்டை”க்கான அறிமுகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

போர்களின் போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை இவ் நாடகம் வெளிக்கொணர்கிறது. இதன் கதை மையம் 1940 களின் ஜாவா, இந்தோனீசியா. 1941-42 காலப்பகுதியில் ஜப்பான் டச்சுக்காரர்களிடமிருந்து ஜாவாவைக் கைப்பற்றுகிறது. இதன் பிற்பாடு ஜப்பானியர்களால் டச்சு, ஜாவா பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை இவ் நாடகம் பேசுகிறது.

தற்போது கனடாவில் வசிக்கும் வயோதிபப் பெண் அடேலின் நினைவின் கோர்வையாக கதை சொல்லப்படுகின்றது. அடேலும் ஏனைய பெண்களும் பாலியல் தேவைகளுக்காய் பலாத்காரமாக ஜப்பானிய முகாம்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களைப் பராமரிக்க டச்சு-ஜாவா கலப்புப் பெண்ணான எலனோர் கொண்டுவரப்படுகிறாள். டச்சுக்காரரின் பாலியல் பலாத்காரத்தால் பரம்பரை பரம்பரையாக பாலியல் தொழில் செய்யும் பின்னணி கொண்டவள் எலனோர். ஆண்களின் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இவ்விரு பெண்களின் மனப்போராட்டமாக இவ் நாடகம் நகர்கிறது.

பாதிக்கப்பட்ட இப்பெண்கள் நீதி கேட்டு இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய அரசோ இக்கொடுமைகளை மறைத்தும், மறுத்தும் வருகிறது. போர்களின் போது பெண்களின்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டி ஒலிக்கும் குரல்களில் ஒன்றாய் இவ் நாடகமும் ஓங்கி நிற்கும்

பா.அ.ஜயகரனின் முத்திரை நன்றாகவே பதிந்திருந்த இந்த நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை ஆற்றியிருந்தனர். ரொறன்ரோ நகரின் நவீன நாடகங்களின் அறிந்த முகங்களான சத்யா தில்லைநாதன், தர்ஷன் சிவகுருநாதன் போன்றவர்களின் பங்களிப்பு இருந்த நாடகத்தில் நடிகர்களின் பக்கம் பலமாகவே இருக்கும் என்பது ஐயமில்லை. அடேலாக நடித்த சத்யா தில்லைநாதனும் எலனோராக நடித்த அதீதாவும்தான் நாடகத்தின் தூண்கள். நாடகத்தில் அதிக காட்சிகளில் தோன்றிய ஆண் நடிகர்களின் முக்கிய வேலை வன்புணர்வதாகவே இருந்தபோதிலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் தேவையானளவு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். டச்சுப் பாதிரியாக நடித்த முத்துகிருஷ்ணனின் பங்கும் நிறைவாகவே இருந்தது. இருந்தபோதும் சத்யா தில்லைநாதன் மற்றும் அதீதா ஆகியவர்களின் முன்னால் மற்றவர்களின் நடிப்பு ‘சூரியனை விளக்கடித்துத் தேடுவது’ போன்றிருந்தது. நாடகத்தின் மிகப்பெரிய பலம் “போர்ச்சூழல்களிலெல்லாம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கேள்வியெழுப்பல்” என்கிற மைய நோக்கமே.

நாடகத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு காட்சிகள் இருக்கின்றன. ஒன்று, ‘புதிய பெண்கள்’ வேண்டுமென்பதால் மீண்டும் முகாமுக்கே திருப்பி அனுப்பப்படும் அடேல் (Use and Throw policy) அவர்களின் தேவாலயப் பாதிரியைச் சந்தித்து பாவமன்னிப்புக் கேட்கிறார். பாதிரியும் பாவமன்னிப்பு வழங்குகிறார். பின்னர் அடேல் தான் கன்னியாஸ்திரி ஆவதற்கு பாதிரியிடன் அனுமதி கேட்க, பாதிரி சொல்வார் “நீ கன்னியாஸ்திரி ஆவதில் ஆண்டவருக்கு விருப்பம் இல்லை போலிருக்கிறது” என்று. நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்ட மதங்கள் மீதான அருமையான நக்கல் இந்தக் காட்சி. இன்னொரு காட்சியில் எலனோர் நிலத்தைச் சுத்தம் செய்வாள். அவள் சுத்தம் செய்கிற இடங்கள் கொஞ்ச நேரத்துக்கு கறுப்பாக மாறும். இது தற்செயலாக அரங்கின் ஒளி அமைப்பின் காரணமாக ஏற்பட்டதா, அல்லது நெறியாள்கையாளரான பா.அ.ஜயகரன் தெரிந்தே செய்த காட்சியமைப்பா தெரியவில்லை. சுத்தம்-கறுப்பு என்கிற இணை அமைந்த அந்தக் காட்சி நெறியாள்கையாளரால் தெரிந்தே அமைக்கப்பட்டிருக்குமாயின், நெறியாள்கை செய்த ப.அ.ஜயகரன் பாராட்டுக்குரியவரே.

நாடகத்தில் முரண்பாடான சில விடயங்களும் இருந்தன. நாடகத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும், வன்முறைக் காட்சிகளும்’ இருப்பதால் சிறுபிள்ளைகளை அரங்கின் கீழேயுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதே போலவே வன்முறைக்காட்சிகள் நிறைய இருந்தன. ‘வேசி’ எனும் சொல் அடிக்கடி கையாளப்பட்டது. ஒரு தம்பதி நாடகத்தின் நடுவே வெளியேறினார்கள். வேறு சிலபேர் முகம் சுழித்தார்கள். பொதுமேடைகளில் இதை சிலர் ஏற்றுக்கொள்வது அவர்களைப் பொறுத்தவரை கடினமே. ஆனால் முக்கிய பிரச்சினை இதுவல்ல. கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த ஒரு நாடகத்தில், குழந்தைகளை அரங்கை விட்டு அப்புறப்படுத்துமாறு வேண்டுகோளோடு ஆரம்பித்த நாடகத்தில், நான்கு குழந்தைகள் நடித்திருந்தார்கள் என்பதுதான் பிரச்சினை. மேலும், அடேலை ஜப்பானிய கேணல் ஒருவர், சிப்பாய் ஒருவர், வைத்தியர் ஒருவர் வன்புணர்வதான காட்சிகள் இருந்தன. திரைமறைவுக்கு அடேலை அவர்கள் இழுத்துச் செல்வதும், அங்கிருந்தான குரல்களின் மூலமாக பார்வையாளருக்கு என்ன நடக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதும் மேற்படி காட்சிகளில் ஒன்றிரண்டைக் குறைத்திருக்கலாம் என்பது நாடகத்தின் பின்னர் தனியாகப் பேசிய நண்பர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

பா.அ.ஜயகரனின் “அடேலின் கைக்குட்டை”  நாடகத்தின் கருப்பொருள் மிகவும் முக்கியமானது, அதுவும் இன்றைய காலகட்டத்தில். அவ்வகையில் கனேடிய தமிழ் மேடைநாடகச் சூழலில் இந்த நாடகத்துக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

“அடேலின் கைக்குட்டை”-விசனம்

நாடகம் மற்றும் சிறுகதையின் கருப்பொருளில் ஒத்துப்போனாலும், கதைக் களனான ஜாவாத் தீவு மற்றும் ஜப்பானிய-டச்சு யுத்தகாலத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. காரணம், நான் பிறந்த நாட்டில் என்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் மீது இந்த வன்முறை இன்றைக்கும் பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்பு வன்புணர்வு செய்தார்கள், இன்றைக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துமாறு வற்புறுத்துகை செய்கிறார்கள். இப்படியிருக்கையில், ஓரளவாவது கருத்துச் சுதந்திரம் இருக்கிற கனேடியமண்ணில் தனது படைப்புக்களை வெளியில் கொண்டுவரும் ஒவ்வொரு படைப்பாளியும் அங்கீகரிக்கப்பட்ட அடக்குமுறையான அரச வன்முறைக்கு எதிராக உரத்துக் குரலெழுப்பவேண்டும். அதுவும் தனது கொள்கைகள் தொடர்பில் நேர்மையாகச் செயற்படுபவர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும், விமர்சகர்களாலும் ஒருங்கே நோக்கப்படுக் ப.அ.ஜயகரன் தான் எழுதிய சிறுகதையை நாடகமாக்கும்போதாவது கதைக் களனை மாற்றியிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். அல்லது ஆகக்குறைந்தது மண்டபத்தில் தந்த துண்டுபிரசுரத்தில் இற்றைவரை ஜாவாப் பெண்கள் மீதான வன்முறைகளை ஜப்பான் அரசு மறைத்தும் மறுத்தும் வருவதாகச் சொன்ன பா.அ.ஜயகரன், தேடகம், தவநி கலையாற்றுக் குழு இவர்கள் யாருக்கும் அந்தத் துண்டுப்பிரசுரத்திலாவது இலங்கை அரசைக் கண்டிக்கிற எண்ணம் இல்லாமலிருந்தது வருத்தத்துக்குரியது. பக்கத்து வீட்டு நிலவரம் தெரிகிறது, பக்கத்து ஊர் நிலவரம் தெரிகிறது, பக்கத்து நாட்டு நிலவரம் தெரிகிறது, ஏன் பக்கத்துக் கிரகத்து நிலவரம்கூடத் தெரிகிறது. ஆனால், வீட்டு முற்றம் எங்கள் கண்களுக்குத் தெரிவதேயில்லை. சிலவேளை சி.கா. செந்தில்வேல் போன்ற பொய்யுரைஞர்கள் யாராவது ‘புலிகளும் இப்படிப் பாலியல் வதை முகாம்கள் வைத்திருந்தார்கள்’ என்று புழுகியிருந்தால் இந்த நாடகத்தின் களம் இலங்கைத் தீவாக இருந்திருக்குமோ? வேறுபாடுகளை மறவுங்கள் என்று நான் கேட்கவில்லை. பழைய தவறுகளைத் திருத்தவேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால், மாற்றரசியல் என்றால் தனியே புலித்தூற்றல் மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட வன்முறையான அரசாங்க வன்முறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் சார்பாகவும் குரலை உயர்த்தவேண்டிய கடமை எமக்கிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது வெறுமே ஒரு நாடக உத்தி, நாம் எம் பெண்களின் துயரையும் சேர்த்தே சொன்னோம் என்கிற கண் துடைப்பெல்லாம் வேண்டாம். இலங்கைத் தீவில் பிறந்த ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கலைஞனுக்கான அடிப்படை நேர்மையிலிருந்து பா.அ.ஜயகரன் கொஞ்சம் வழுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பிற்சேர்க்கை: சி.க.செந்தில்வேலை ‘பொய்யுரைஞர்’ என்று விளித்தது மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பாவித்த பிழையான சொல்லாடல் என்பதாக நண்பர் ஒருவரின் சுட்டிக்காட்டலின் உணர்கிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் விடுத்த கருத்தைத் திரும்ப வாங்குவதும் மறைப்பதும் இலகு, ஆனால் நேர்மையில்லை என்பதை உணர்ந்திருப்பதால் பதிவில் மாற்றம் செய்யவில்லை

நவம்பர் 30, 2011

3 comments:

P A Jayakaran said...

ஜப்பானியர்களின் கொடுமைகள் ஒரு புறம். மற்றயது அந்தக் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாது 40 ஆண்டுகளுக்கு மேலாக மனதுக்குள்ளேயே வைத்திருந்த கொடுமை இன்னுமொரு புறம். பின்னயதுக்கு யார் பொறுப்பு. அதுதான் “அடேலின் கைக்குட்டை” நாடகத்தின் பின்னரான அரசியல். இந்தக் கொடுமைகளை வெளியில் சொல்லக்கூடிய பண்பு நிலைக்கு எமது சமூகம் தயாரா..? சமூக அரசியல் பண்பை மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்கிறது அல்லவா. எமக்கு நேரந்த கொடுமைகளை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உரிய முறையில் ஆவணப்படுத்தப்படவேண்டிய தேவையூள்ளது. எமது பெண்களுக்கு எதிராக இலங்கைஇ இந்திய அரசுகளினால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை நாம் உரியமுறையில் வெளிக்கொணரவேண்டும்.

அதற்கு முன்னுதாரமாக ஜப்பானிய கொடுமைகளுக்குட்படுத்தப்பட்ட பெண்கள் உள்ளார்கள். அவர்களது ரொரன்டோ அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அவர்களுக்கு அழைப்பு கொடுத்தேன். அத்தோடு அவர்கள் செயற்பாடுகள் குறித்து காட்சிப்படுத்துமாறும் கேட்டிருந்தேன். எமது இரு நாட்களும் அவர்களுக்கு ஒத்து வரவில்லை. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அதைச் செய்யலாம். அவர்களின் செயற்பாடுகள் எமக்கு வழிகாட்டும் என நான் எண்ணுகிறேன்.

நாடகத்தில் டச்சுப்பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை தமக்கு நிகழ்ந்த கொடுமைகளாக பலர் உணர்திருக்கிறார்கள். அந்த உணர்வூ நிலை பண்பு நிலையாக மாற்றப்படவேண்டும். அதற்கான களத்தை இவ் நாடகம் திறந்துவிடும் என நான் எதிர்பார்க்கின்றேன். சிறுவர்கள் நடித்திருந்தார்கள். அவர்களது காட்சி தொடக்கத்திலும் முடிவிலிலும் தான் இருந்தது. அதற்கேற்வாறுதான் பயிற்சியூம் அளிக்கப்பட்டது. மேடையிலும் அவர்கள் காட்சி முடிந்த பின்னர் சிறுவர் பராமரிப்பு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மீண்டும் அவர்கள் காட்சியின் போது அழைத்து வரப்பட்டார்கள்.

உங்கள் விசனம் எனக்குப் புரிகிறது. அதே விசனம்தான் எனக்கும். வன்முறையின் வடிவம் ஒன்றுதான். எனவே நாடகத்தை எங்கும் பொருத்திப்பார்க்க முடியூம்.

எலனோர்: நாங்கள் என்ன தவறு செய்தனாங்கள் வெட்கப்படுவதற்கு?
நாங்கள் என்ன தவறு செய்தனாங்கள் அவமானப்படுவதற்கு?
நாங்கள் என்ன தவறு செய்தனாங்கள் எங்கட வாழ்வை அழிக்கிறதுக்கு?

இதை சமூக அரசியல் பண்பாக மாற்ற முடியூமாயின். அவர்கள் அனுபவிக்கும் இரண்டாவது கொடுமையிலிருந்து அவர்களை மீற்க முடியூம் என்று நான் கருதுகிறேன். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

Unknown said...

உங்களது விளக்கத்துக்கு நன்றி ஜயகரன். முக்கியமாக குழந்தைகளைப் பாவித்த விதம் தொடர்பில் விளக்கமளித்ததுக்கு இன்னுமொரு நன்றி.

///உங்கள் விசனம் எனக்குப் புரிகிறது. அதே விசனம்தான் எனக்கும். வன்முறையின் வடிவம் ஒன்றுதான். எனவே நாடகத்தை எங்கும் பொருத்திப்பார்க்க முடியூம். //

ஓரளவுக்கு ஒத்துப்போக முடிகிறது