இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. முதல் விஷயம் சமூக வலையமைப்பான facebook ல் அடிக்கடி நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சபாவில் நிகழ்கிற அரங்கேற்றம் தொடங்கி நல்லூர்க்கந்தன் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் நீ வருவாயா? வரமாட்டாயா? வருவாய் அல்லது வராமல் விடுவாயா? என்று கேள்விகேட்டுக் கொல்கிறார்கள். நான் இருக்கிற நிலையில் இப்போது பனை வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது. கொஞ்சமாவது இயல்பறிவைப் பாவித்து இப்படியான அழைப்புக்களை அனுப்பித் தொல்லை கொடுக்காமல் இருக்கலாம். அதைவிடக் கொடுமை இது தொடர்பாக அதே முகப்புப் பக்கத்தில் நடக்கிற விவாதங்கள். ஈழத்துக் கோவில்களில் எங்கேயய்யா சமத்துவமும் சமதர்மமும், சகோதரத்துவமும் கட்டிக்காக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள் திருவிழா ‘ஒவ்வொரு பகுதியினர்’ உபயம் ஏற்று நடாத்தப்படும் என்பதின் பின்னால் இருக்கக்கூடிய தரக்குறைவான அரசியல் தெரியவில்லை. கோவில்களுக்குள் நுழைவதற்கான ‘விதிமுறைகள்’ பற்றி எதுவுமே தெரியவில்லை. உடனே கோவிலுக்கு இன்னமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டு நுழைய வேண்டாம் என்று வந்த சட்டத்தை ஏன் கண்டிக்கிறாய் என்று சண்டைக்கு வராதீர்கள். நான் பேசுவது ‘இந்தக் கோவிலுக்குள் இன்னார்தான் நுழையலாம்’ என்று இருக்கிற விதிமுறைகளைப்பற்றி. எல்லாவற்றையும் விட கோவில் என்றதும் கோபம் வர இன்னொரு காரணமும் உண்டு.கோவிலுக்குச் செய்கிறேன் என்று செய்யப்படுகிற ஆடம்பரங்களின் மீதான விசனத்துக்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் நானும் சமயபாட மிரட்டல்களுக்குப் பயந்து கோவில் குளம் என்றெல்லாம் திரிந்தமையே.
என்னுடைய அம்மாவழியால் எங்களுக்கு நெருக்கமாக இருந்த கோவில் நவிண்டில் குலனையம்பதிப் பிள்ளையார். அங்கேயும் கோவிலுக்குள் மூன்று சாதிக்கு மட்டும் அனுமதி இருந்தது. ஏனையவர்களை வெளிப்பிரகாரத்தோடு நிறுத்திவைத்து ஆதிக்கசாதிதான் கோலோச்சியது. அந்தக் கோவில் ஒரு முறை புனருத்தாரணம் செய்த போது (ஏனையவர்கள் தேவைப்பட்டார்கள், ஏனென்றால் கோவிலுக்கு மண் சுமந்தாலே அது ஆதிக்க சாதிக்கு மயிர் இழந்ததுக்கு சமம்) அதுவரை காவி மட்டுமே அடித்திருந்த கோவிற் சுவர்களுக்கு நிறங்கள் பூச முடிவுசெய்யப்பட்ட போது ஆலய மகாசபைத் தலைவராக இருந்த ‘ஆர்ட்டிஸ்ட்’ சுப்ரமணியம் வாத்தியார் குறுக்கே நின்று தடுத்தார். ‘வண்ணம் அடித்தால் உனக்கு பிள்ளையார் தெரிவாரா வண்ணம் தெரியுமா?’ என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது. கோவில்கள் ஆடம்பரமயமாதலுக்கு எதிரான விதை அவர்மூலம் விழுந்தது என்பது உண்மை. கோவில்களின் அவசியம் பற்றி இப்போது மனதில் வருகிற கேள்விகளுக்குக்கூட அந்த விதைதான் காரணமாயிருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. மேலும் பறைவேன் என்கிற இணையத்தளத்தில் ‘யாழ். போதனா வைத்திய சாலையும், தலை குனியவேண்டிய தர்மவான்களும்’ என்கிற தலைப்பில் திவ்வியரஞ்சினியன் எழுதிய ஒரு கட்டுரை, நோர்வேக் கோவிலில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு’ என்று எங்கள் வீரவான்கள் நிகழ்த்திக் காட்டிய வேடிக்கைகள் கனடாவில் நடக்கிற ஒரு கோவில் காணி வாங்குதலுக்கான நிதி சேகரிப்பு பற்றிய விளம்பரங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறபோது ஆயாசமாக இருக்கிறது.
*----*----*----*
பெற்றோர்-பிள்ளை உறவுச்சிக்கல்கள் பற்றிய இரண்டு சம்பவக் கோர்வைகள்
சம்பவக்கோர்வை-1
மயூரன் வெளிநாட்டுக்குப் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். என்ன வகையிலாவது வெளிநாடு போய்விடவேண்டும் என்கிற முனைப்பும், குடும்பச் சூழலும் அவனுக்கு. அந்த நேரம் அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ஒரு சம்பந்தம் வருகிறது. தன் பதின்மங்களில் கனடா போய் வளர்கிற ஒரு பெண்ணுக்கு அந்தப் பெண்ணின் பெற்றவர்கள் மணமகன் தேடுவதாக அந்த நண்பர் சொல்கிறார். சாத்திரமும் எல்லாப் பொருத்தமும் இருப்பதாகச் சொல்ல, மயூரனை இலங்கையில் வைத்து சங்கரி மணமுடிக்கிறாள். கனேடியக் குடிவரவு முறைகட்கு உட்பட்டு மயூரன் கனடாவுக்கு வருகிற எல்லா ஏற்பாடுகளையும் சங்கரி செய்து முடிக்கிறாள். மயூரனும் வந்து சேர்ந்து வேலைக்குப் போய்வந்து கொண்டிருக்கிறான். ஒருநாள் வேலையால் வீடுவந்தவனை ஒரு கடிதம் வரவேற்கிறது. சங்கரிதான் கடிதம் எழுதியிருக்கிறாள். தான் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய பெற்றோர் ‘மருந்து குடிப்போம்’ என்று மிரட்டிய காரணத்தால் மயூரனை மணம் முடித்ததாகவும், அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவன் கனடா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும், இனிமேலும் மனதில் ஒருவனோடும் நிஜத்தில் மயூரனோடும் வாழ்கிற அருவருப்பான வாழ்க்கையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதன் காரணமாக மயூரனை விட்டுத் தான் விலகிச் செல்வதாகவும் கடிதம் சொல்கிறது. மயூரன் இப்போதும் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார், இரவு நேரத் தண்ணீர் விருந்துகளில் சங்கரியின் நடத்தையை விமர்சித்தபடி.
சம்பவக்கோர்வை-2
நர்மதாவின் தாயின் சகோதரிகள் கனடாவில் இருக்கிறார்கள். ‘குடும்பக் குத்துவிளக்கு’ என்கிற ஆண்சிங்கங்களின் வரையறைக்குள் அடங்கக்கூடிய பெண். நர்மதா திருமண வயதெய்தியதும் கனடாவில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் இனிதே நிறைவேறுகிறது. மயூரன் -சங்கரி போலவே கனடா மாப்பிள்ளை ரூபனும் நர்மதாவைக் கனடா வரவைக்கிறான். கனடாவில் வந்து இறங்கிய நர்மதாவை நேராக நர்மதாவின் சித்தி வீட்டில் விட்டுவிட்டு ரூபன் போய்விடுகிறான். ’அவருக்கு உன்னைப் பிடிக்கேலையாம். அவரிட அப்பா அம்மா சொல்லினபடியால் உன்னைக் கட்டினவராம்’ என்று சித்தி கனவுகளை உடைக்கிறாள். மூன்று மாதமாக அழுதபடி ஆங்கிலம் படிக்கிறாள் நர்மதா.
இந்தச் சோடிகள் என்ன பிழை விட்டார்கள்? எதற்காக அவர்களின் வாழ்க்கை இப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சங்கரியாவது பரவாயில்லை, தன் மனதுக்குச் சரியென்று பட்டதைச் செய்திருக்கிறாள், சமூகத்தின் விச நாக்குகள் அவளின் நடத்தைக்குத் தரக்கூடிய சான்றிதழ் பற்றிய கவலைகள் இல்லாமல். அந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள். நர்மதாவின் கதி என்ன? சாதாரண தமிழ்க் குடும்பத்தில் ஆண்களுக்குச் சேவை செய்ய மட்டும் சொல்லி வளர்க்கப்பட்ட, குடும்பவாழ்க்கை பற்றிய கனவுகளோடு விமானம் ஏறிய அந்தப் பிள்ளையின் நிலமை என்ன? ‘ஸ்பொன்சர் பண்ணிக் கனடாவில விட்டாச்சுத்தானே?’ என்று கேட்கிற ரூபனுக்கு என்ன பதில் சொல்வது. ரூபனைச் சமாதானப்படுத்தி நர்மதாவுக்கு ‘வாழ்வு’ பெற்றுத்தர நர்மதா குடும்பமும், ரூபன் குடும்பமும் முனைகிறார்கள். அது வெற்றிபெறக்கூடாது என்பதே என் விருப்பம். நிச்சயமாக அவர்களின் மணவாழ்க்கை நல்லபடியாக அமையவே அமையாது என்பதுதான் உண்மை.
பிள்ளைகள் மீதான அக்கறை என்கிற பெயரில் பெற்றோர்கள் செய்கிற இந்த அட்டகாசங்களை என்னென்று சொல்வது? சின்னவயதில் இருந்து எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்த அப்பா அம்மா இதில் மட்டுமா தீமை செய்வார்கள் என்று வாதிடலாம். ஆனால் மேற்படி இரண்டு சம்பவங்களிலும் ‘இந்தக் கலியாணம் நடக்காவிட்டால் மருந்து குடித்துச் சாவோம்’ என்று சொன்ன அதே பெற்றோர்கள், கலியாணம் குலைந்த பின்னரும் குத்துக்கல்லாட்டம் உயிரோடுதான் இருக்கிறார்கள். இப்படிப் பிள்ளைகளுக்குப் பிடிக்காத வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து ‘பெற்ற கடனை’ ஏன் நிறைவேற்ற வேண்டும்? இதை உண்மையான அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தன்னுடையதும் தன்னுடைய குடும்பத்தின் சுயலாபம் கருதி சங்கரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், சீதனம் எல்லாம் வாங்கி, நாக்கைத் தொங்கவிட்டபடி கலியாணம் கட்டிய மயூரன் ‘உவள் வேசைக்கு நல்ல பாடம் படிப்பிக்காட்டி பார்’ என்று நண்பர்களிடையே நாக்கில் நரம்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறான். நர்மதாவுக்கு ரூபனை வசைபாடுதற்குரிய சொற்களையே நாங்கள் உருவாக்கி வைக்கவில்லை. இதைத்தான் ‘கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கை என்று வெள்ளைக்காரன் எங்களைப் பார்த்து அதிசயிக்கிறான்’ என்று பீற்றிக்கொள்கிறோம். குலம், கோத்திரம், அந்தப் பொருத்தம், இந்தப் பொருத்தம், ஏன் யோனிப் பொருத்தம் எல்லாம் பார்த்துத் திருமணம் செய்கிற சமூகம், இற்றைவரை மனப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைத்ததில்லை என்பதுதான் உண்மை. அதுவும் கணவனைப் பிரிந்து வாழ்கிற பெண்கள் மீது அவர்களின் நடத்தையைக் கேவலமாக்கி வைக்கப்படக்கூடிய அவதூறுகள் காரணமாக ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’ என்று வாழ்கிற சகோதரிகள் எத்தனை பேர். ’என சகோதரி அனுபவிக்கிற துன்பத்தை நாளைக்கு இன்னொருவன் சகோதரிக்கு நான் கொடுக்ககூடாது’ என்பதை நித்திரைக்கு முன்னரும், நித்திரைக்குப் பின்னரும் சொல்லிக்கொள்கிறேன். எனக்குள் ‘ஒளித்திருந்திற’ குரங்கு ‘ஒழிந்து’ போகாமல், ஒரு பெண்ணின் கண் பார்த்துப் பேசமுடியாமல் இருக்கிறது.
7 comments:
முதல் செய்தி பற்றி - இது தமிழகத்திலும் பல கோவில்களில் இன்றும் தொடர்ந்து வருகிறது. சாதீயக் கட்டுகளிலுருந்து விடுதலை கிட்டும் வரை உண்மையான விடுதலை இல்லை என்று சொல்லி 1947, ஆகஸ்டு 15ஐ கருப்பு தினமாகக் கொண்டாடினார் பெரியார்.
அவர் போல ஆயிரம் பேர் வந்தாலும் இந்த நிலை மாறாது போல.
மற்றபடி, ரோச்சஸ்டர் நியூயார்க்கில் உள்ள யாழ்ப்பாணத்துக்காரரின் கோவிலுக்கு வந்ததுண்டா கிருத்திகன்?
இரண்டாவது சம்பவம் - கனடா போன்ற நாட்டுக்கு வந்த பின்னும் ஏன் தான் இந்தப் பெற்றோர் இப்படி படுத்துகிறார்களோ தெரியவில்லை. இப்படி இருந்தால் சாதிக்கட்டுகளை அறுத்தெரிய முடியாது.
புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று மணம் முடிப்பதன் பின்னிருக்கக் கூடிய காரணங்கள் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன. தவிர இப்படியான் திருமணங்களில் அதிகம் குடும்பங்களில் யாராவது ஒருவர் அதிகம் பாதிப்புக்கு உட்படவே செய்கின்றார்.
முன்னர் ஒரு பதிவில் எழுதினேன் http://tinypaste.com/b69310
ஆனால் இது போன்றவற்றை இன்றும் நித்தமும் கேட்டபடியே உள்ளேன்
முகிலன்...
நயகாராப் பக்கமே வந்ததுக்கு இரண்டுமுறைதான் வந்திருக்கிறேன். இதுக்குள்ள ரொச்சஸ்டர் வேறயா???
அங்கேயும் இதே பிரச்சினைகள் இருக்கிறனவா முகிலன்??
///அவர் போல ஆயிரம் பேர் வந்தாலும் இந்த நிலை மாறாது போல.
///
அவர் ஒருவர் தந்த ஆரம்பமே போதும், வீரமணியைத் திராவிடர் கழகத் தலைமைக்குப் பரிந்துரைக்காமல் விட்டிருந்தால்.
///புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்போர் தாயகம் சென்று மணம் முடிப்பதன் பின்னிருக்கக் கூடிய காரணங்கள் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன///
பின்னிருப்பதாகக் கட்டமைக்கப்படுகிற காரணங்கள் என்று வரவேண்டும் அருண்மொழிவர்மரே... (செகண்ட் ஹாண்ட் போன்ற காரணங்களைச் சொல்கிறீர்களா அல்லது வேறேதுமா?)
மணம் முடிப்பவர்களை விட பெற்றோர்கள் தானே இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்றுதான் படித்தேன்.
முதலாவது தொல்லை பெருந்தொல்லை.
நீங்கள் சொன்னது போல //கொஞ்சமாவது இயல்பறிவைப் பாவித்து இப்படியான அழைப்புக்களை அனுப்பித் தொல்லை கொடுக்காமல் இருக்கலாம். // இயல்பறிவு இல்லாத பிரச்சினை.
அடுத்த கனடா... :(
என்ன செய்யிறது.
அண்ணாந்து பாத்துப் பாத்து அழிச்சுக் கொள்ளுறம் இப்பிடித்தான்.
பெற்றார் பழக்கி பழக்கி இப்ப இங்க தங்களத் தாங்களே பலியாடுகள் ஆக்கிக் கொள்ளீனம்.
கட்டினா வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் எண்ட அளவுக்கும் வந்திற்றுது....
பட்டுத்தான் திருந்தோணும். :(
தேவையான பதிவு.
///கட்டினா வெளிநாட்டு மாப்பிளையத்தான் கட்டுவன் எண்ட அளவுக்கும் வந்திற்றுது...///
அதுவும் கரும்புதின்னக் கைக்கூலியும் குடுத்துக் கட்டிவைக்கினம் கனககோபி... முட்டாள்தனம்.
நான் கட்டினால் கனடாவிலதான் கட்டுறது கிருத்திகன்.
:)
Post a Comment