Wednesday 28 April 2010

பேரைக் கேட்டாலே...

ரஜினியின் சிவாஜியில் வரும் ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்கிற வசனத்தை நான் கிண்டலடிப்பதுண்டு. அதெப்படி பேரைக் கேட்டால் அதிர முடியும்? என்ன தூங்கிக்கொண்டிருப்பவன் காதுக்குள் ஒலிபெருக்கி வைத்தா சொல்வார்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. இந்த வசனத்தை எழுதினாரே என்று சுஜாதாவில் கொஞ்சம் கோபமும் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பேரைக் கேட்டால் அதிர்வது மட்டுமில்லை, ‘என்ரை அய்யோ’ என்று வாகனம் ஓட்டியபடியே வாய்விட்டுக் கத்துகிறேன். என்ன மூடிய வாகனத்துக்குள் கத்துவதால் என்னை யாரும் பைத்தியம் என்று நினைத்துவிட முடியாது. அந்தப் பெயர் King (தமிழ்ப்படுத்தவும்) இப்ராகிம்.

காலை வேளைகளில் வேலைக்குப் போகும்போது கனேடியப் பல்கலாசார வானொலி (CMR) கேட்டபடி போவதுண்டு. அடிக்கடி ஏதாவது சுவாரஷ்யமான தலைப்புகளில் நேயர்களை தொலைபேசச் சொல்லி உரையாடுவார்கள். ஏப்ரல் முட்டாள்கள் தினத்து அனுபவங்களைக் கேட்டு அதிலேயே ஏப்ரல் முட்டாள்களாக ஆக்கப்பட்ட (ஆக்கியவன் நானே) அறிவிப்பாளர்களும் உண்டு. இடையிடையே ‘இன்றைய பொருளாதார நெருக்கடி உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதித்திருக்கிறது?’ ‘தொழிற்சாலைகளில் நியாயமான சம்பளங்கள் வழங்கப்படுகின்றனவா?’ ‘மரண தண்டனை சரியா தவறா’ போன்ற சில தலைப்புகளில் வாய்ப்புமளித்து அவை தொடர்பான புள்ளிவிபரங்களையும் சொல்வார்கள். சில சமயங்களில் ‘ஏப்ரல் முட்டாள் அனுபவங்கள்’ ‘பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா?’ என்கிறமாதிரியான சுவாரஷ்யமான தலைப்புகளும் வருவதுண்டு. இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 20-30 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் பங்குபெறுபவர்களை ஓரளவுக்காவது கொடுத்த விஷயத்தை வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் மேற்சொன்ன King இப்ராகிம் ரணகளப்படுத்துகிறார். நான் காருக்குள் கத்துவதுமாதிரி ஒரு நாளைக்கு அறிவிப்பாளர்கள் கத்துவார்கள். King இன் அழைப்புகளைத் துண்டிக்க அவர்கள் படும்பாடு பெரும்பாடு.

ஒரு நிகழ்ச்சி. ‘உங்களுக்கு வருமான வரித் திணைக்களத்திலிருந்து மீள் கொடுப்பனவு (Refund) கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ இதுதான் அன்றைய வாதப்பொருள். அதாவது வருடாந்தத் தனிநபர் வருமான வரி அறிக்கையை அரசத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தால், அந்த வருடத்தில் வருமானத்தின் அடிப்படையில் நீங்கள் கூடுதலான வரியைச் செலுத்தியிருந்தால் அந்தளவு பணமும் மீளளிக்கப்படும். அப்படி மீளளிக்கப்படுகிற பணத்தை என்ன செய்வீர்கள் என்பதை சுருக்கமாகச் சொல்லுங்கள் என்பதுதான் கேள்வி. ‘வாகனக் கடனுக்குச் செலுத்துவேன், கடனட்டை நிலுவையைச் செலுத்துவேன், பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பேன், சேமிப்பேன்’ இப்படியான சுலபமான பதில்களுக்குரிய கேள்வி. அழைத்தார் King. காதால் ரத்தம் வழியுமளவுக்கு ‘நாங்கள் இதற்கு ஆறேழு மாதமாகத் திட்டமிடவேண்டும். எப்படிக் கூடுதலான வரியைப் பெறலாம் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் திட்டமிடவேண்டும்’ என்று ஆரம்பித்து காதால் ரத்தம் ஒழுக ஒழுக கதைத்தார் மனிதர். நல்லவேளை ‘யாருடைய உதவியோடு வருமான வரிப் பத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று நாங்கள் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே முடிவு செய்யவேண்டும். போன ஜென்மத்திலேயே என்ன திகதி இந்தப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்’ என்றெல்லாம் சொல்ல முன் அறிவிப்பாளர்கள் பெரும்பாடுபட்டு அழைப்பைத் துண்டித்தார்கள்.

அதே போல் இன்னொருநாள். ‘வீட்டுக் கடன் பற்றிய சட்டங்களில் புதிதாக அரசாங்கம் கொண்டுவந்த இறுக்கமான நடைமுறைகளால் வீடு வாங்குவது தொடர்பான உங்கள் திட்டங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா?’ என்கிற தொனியில் உரையாடல் நடந்தது. மீண்டும் வந்தார் மன்னாதி மன்னர். ‘முதலில் நாங்கள் எங்களுடைய மக்கள் கூடி வாழ்கிற இடங்களாகவும், வர்த்தக நிலையங்கள் உள்ள இடங்களாகவும் பார்த்து வீடு வாங்கவேண்டும். அப்படி இல்லாமல் வீடு வாங்கினால் அதை விற்க முடியாது. இப்படியாகத் திட்டமிட்டே வீடு வாங்கியதால்தான் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்’ என்று ஆரம்பித்தார். கேள்வி வீட்டுக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக உங்களது வீடு வாங்கும் திட்டத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதே. ‘ஒரு இரண்டு மாதம் தள்ளிப் போட்டிருக்கிறோம், சட்டம் அமலுக்கு வர முன்னரே கடனைப் பெற்றுக்கொள்வது நல்லது’ போன்ற பதில்கள் இருக்கத்தக்கதாக எங்கே எப்படி என்ன மாதிரி வீடு வாங்கவேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளைச் சொல்கிற மனிதனை என்ன செய்யமுடியும்?

இது தனியே ஒரு King இப்ராகிம் பற்றிய பதிவு அல்ல. எமது சமூகத்தில் எத்தனையோ King இப்ராகிம்கள் இருக்கிறார்கள். ஒரு முறை இதே வானொலியில் ‘இலங்கைத் தேர்தல் நிலவரம்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு King வந்து ‘இந்த நிகழ்ச்சி இப்போது தேவையான நிகழ்ச்சி. இதை ஒழுங்கு செய்த வானொலி நிறுவன இயக்குனருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அறிவிப்பாளர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் ஆய்வாளருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துத் தெரிவித்த நேயர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வானொலி கண்டுபிடித்த மார்க்கோனிக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நன்றியுரையாற்றத் தொடங்க அறிவிப்பாளர் ஓரளவுக்குச் சமாளித்து பேசவந்த விஷயத்தைப் பேசவைத்தார். இது நம்மவரிடையே இருக்ககூடிய பிரச்சினைகளில் முக்கியமானதொன்று.

காத்திரமான நிகழ்ச்சிகளை இலத்திரனியல் ஊடகங்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை நானே எழுப்பியிருக்கிறேன். ஆனால் அவர்களிலும் முழுமையாகத் தவறில்லை. உணர்ச்சிப் பிழம்புகளும், உயர்வு நவிற்சிகளும் (மைக் செட் காரரோடு சேர்த்து பதினொரு பேர்- சுஜாதா) மட்டுமே நிரம்பிய ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள் பயனுள்ள விடயங்களைப் பேசவைத்து ஒரு நிகழ்ச்சி செய்வதைவிட பேசாமல் தொலைக் காட்சி நாடகங்களையும் படங்களையும் போட்டு மக்களைத் தாக்காட்டிவிடலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததில் தவறில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. ‘உன்வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு என்ன வழி?’ என்று கேட்டால் ‘எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கிப் போய் வருகிற 133 பஸ் வண்டியில் ஏறி வடக்கே ஐந்து கிலோமீற்றர் போய் அங்குள்ள தரிப்பில் இறங்கி, ரோட்டைக் கடந்து மற்றப் பக்கம் வந்து மீண்டும் பஸ் பிடித்து நீங்கள் முதலில் ஏறிய தரிப்பில் இறங்கி எங்கள் வீட்டுக்கு சரியாக 10 மீற்றர் குறுக்கே நடந்தால் எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு வரும்’ என்று சொல்கிற King இப்ராகிம்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.

பி.கு: CMR நேயர்கள் யாராவது இதை வாசித்து உங்களுக்கும் Kingஐத் தெரியும் பட்சத்தில் அவருக்குச் சொல்லுங்கள், இனிமேலும் இப்படி விசரடிக்க வேண்டாம் என்று.

2 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கவேண்டிய பதிவுதான் . என்ன செய்வது ஏவளவு சொன்னாலும் மீண்டும் மீண்டும் தொடர்கிறது . நமது கடமையை செய்து வைப்போம் .
பகிர்வுக்கு நன்றி !

Bibiliobibuli said...

கிருத்திகன்,

நீங்கள் சொல்கிற ஆள் புதன்கிழமையில் "நந்தவனத்தில்" கவிதையும் சொல்கிறவரோ? எனக்கு அவரை தெரியாது. எனக்கென்னவோ ஒட்டுமொத்தமா நந்தவனம் நிகழ்ச்சியையே நிறுத்தினால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது அது. தவிர, King என்கிற தனிமனிதர் பற்றிய பதிவு தேவையா? என்னமோ போங்கோ!

நீங்கள் CMR ஒலிபரப்பாளர்களை கலாய்க்கிறதை ஒருநாளும் நான் கேட்டதில்லை. என்ன பெயரில் வானலையில் வந்து கலாய்க்கிறநீங்கள்?

நிறைகள், குறைகள் இருந்தாலும் எனக்கு cmr நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பிடிக்கும். குவியம், the focus, is the best.