Saturday 8 August 2009

கே.பி.- சில கேள்விகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட கே.பி என்கிற செல்வராசா பத்மநாதனை ஆசிய நாடு ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், அவரை இலங்கை அரசு கடத்தி விட்டதாக தமிழ் உணர்வாளர்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டு வளர்ந்த வரலாற்றை நான் படித்தே அறிந்திருக்கிறேன். ரத்தத்தல் எழுதப்பட்ட அந்த சரித்திரத்தின் வயதைவிட என் வயது குறைவு. இந்தப் பிரச்சினை பற்றி என்னுடைய வலைப்பதிவில் எழுதுவது தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்திவிடும் என்று என்னுள்ளே ஒரு குற்ற உணர்வு தடுத்ததால், இத்தனை காலமும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஆனால் இந்தத் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் கூத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவு இந்தப் பதிவு.

ஏலவே ஒரு பதிவில் சொன்னது போல, எனக்குத் தெரிந்த புலிகள் இயக்கத்தினர் கட்டுக்கோப்பானவர்கள். கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு நெறிப்படுத்தப் பட்டவர்கள். 1996ம் ஆண்டுக்கு முன் கல்லுக்குள் ஈரமாக அவர்களது பயிற்சி முகாம்களைச் சுற்றியிருந்த குடி மனைகளில் இருந்த பெரியவர்கள் அவர்களின் அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி. சின்னப் பிள்ளைகள் தம்பிகளும் தங்கைகளும். நான் இங்கே சொல்லிக் கொண்டிருப்பது அடிமட்ட சிப்பாய்கள் பற்றி. போரில் இத்தனை புலிகள் மாண்டார்கள் என்ற செய்திகள் பல தமிழ் மக்களின் உணர்வுகளைக் கீறிக் காயப்படுத்த 1996க்கு முன் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் நிலவிய அந்த இனம் புரியாத பாசம் காரணமாக இருந்திருக்கலாம். அதனால் விடுதலைப் புலிகளின் தோல்வியை எம்மால் சகித்துக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அதற்காக தமிழினம் சிந்திக்கும் திறணை இழந்து விடுவதா?


ஐயா, செல்வராசா பத்மநாதன், அல்லது குமரன் பத்மநாதன் என்கிற பெயரை சத்தியமாக சென்ற ஆண்டுதான் கேள்விப்பட்டேன். என் வயதொத்த அத்தனை பேரும் அப்போதுதான் கேள்விப்பட்டிருப்பார்கள். வரலாற்றில் ஊறியவர்களுக்குக் கூட அவரது பெயர் ஓரளவே பரிச்சயமாக இருந்தது. திடீரென தமிழீழ போராட்டக் களத்தில் கே.பி முன்னிலைப் படுத்தப்பட்டது போலவே ஒரு தோற்றம். களத்தில் அவர்கள் போராட, களமுனைக்கும் வெளியுலகத்துக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றத்தில் கே.பி. தான் முக்கிய பங்காற்றினார். புலிகளின் முக்கியஸ்தர்கள் பற்றிய செய்திகளை உலகிற்கு அறிவித்தார். ஆனால், சாட்சியில்லாத ஒரு ராத்திரியின்பின் கே.பி. யின் நடவடிக்கைகளில் இருந்த மர்மத்தை, தமிழ் உணர்வாளர்களின் நடவடிக்கைகளில் இருந்த மர்மம் மழுங்கடித்து விட்டது.
காட்சி-1
'பிரபாகரனைக் கொன்று விட்டோம். இதோ அவரது உடல்' என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த போது, இங்கே சாப்பிட மறந்து இருந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். தமிழ் இனமே சோகத்தில் இருக்க, ‘தலைவர் நலமாக இருக்கிறார்' என்றார் கே.பி. 'கே.பி.யே சொல்லிட்டார். இலங்கை அரசின் பொய் முகம் கிழிந்தது' என்று பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி, பதிவுலகம், ஏன் ஃபேஸ் புக்கில் கூட தமிழ் உணர்வாளர்கள் மக்களுக்கு ஆறுதல் சொல்லும் தொனியில் அறிக்கைகளை விட்டார்கள். அப்போ கே.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்குப் பொறுப்பானவர் எனப்பட்டார்.

காட்சி-2
சில நாட்களின் பின் ‘பிரபாகரன் மே-18 நடந்த போரில் வீரச்சாவு எய்திவிட்டார்' என்ற வசனம் அடங்கலாக கே.பி. யின் அடுத்த அறிக்கை வெளியானது. 'ஐயகோ, கே.பி. என்ற கடத்தல்காரன் இலங்கை அரசிடமும், இந்திய உளவு அமைப்பான ‘ரா' விடமும் விலை போய்விட்டான். மக்களே, அவனது அறிக்கையை நம்பாதீர்கள்' என்று கே.பி. யின் முதல் அறிக்கையின்போது அவரைப் புகழ்ந்த, அதை ஆதாரமாக வைத்து மக்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அறிக்கை விட்ட அத்தனை தமிழின உணர்வாளர்களும் கரணம் அடித்தார்கள். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானிப்பவராய் நீங்கள் இருந்தால் இந்த so called தமிழ் உணர்வாளர்களை உங்களால் அடையாளம் காணமுடியும். இந்த இரண்டாவது காட்சி முடிந்தபோது கே.பி. ஒரு துரோகி.

காட்சி-3
புலிகளின் முத்திரை பொறித்த ஒரு அறிக்கை வெளிவருகிறது. இனிமேல் கே.பி. தான் எம் தலைவர் என்று சொல்கிறது அந்த அறிக்கை. கே.பி. யும் அதை உறுதி செய்கிறார் ஒரு பேட்டியில். சென்ற காட்சியில் அவரைத் துரோகி என்றவர்களுக்கு மூஞ்சியில் கரிதானே? இல்லவே இல்லை. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மாதிரி கே.பி.யை கொண்டாடினார்கள். இப்போது அவர் கைது செய்யப்பட்ட போது இந்தத் தமிழ் உணர்வாளர்கள் ஊடகத்தில் அதைக் கைது என்று சொல்லாமல் கடத்தல் என்று சொல்கிறார்கள் (இத்தனைக்கும் கே.பி. மீது இண்டர்போலின் பிடியாணை இருக்கிறது).

இப்போ இந்த அற்புதமான தமிழ் உணர்வாளர்களிடம் என்னுடைய கேள்வி இதுதான். இன்றைய நிலைப்பாட்டின் படி, கிட்டத்தட்ட தேசியத் தலைவருக்கு நிகராக கே.பி.யைப் புகழ்கிறீர்கள். அதனால் அந்தத் தலைவன் கொச்சைப்படுத்தப் படுகிறான் என்ற உணர்வே இல்லாமல். நாளைக்கே உங்களுடைய நம்பிக்கைகள், புரிதல்களுக்கு ஒவ்வாமல் கே.பி. யிடமிருந்து ஒரு அறிக்கை வந்தால் மறுபடியும் கே.பி. உங்கள் பார்வையில் ஒரு துரோகி. சரிதானே? அப்படி என்றால் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்ன? கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கனவின் நிலைப்பாடு என்ன. தேசியத் தலைவர் தனக்குப் பிறகான தலைமையை வளர்த்தெடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர்மீது இருந்தது. அப்போது அதை முட்டாள்தனம் என்று ஒதுக்கினோம். இப்போது நொடிக்கொருமுறை 'தமிழ் உணர்வு' மாறும் கேவலத்தைப் பார்க்கும்போது, அது உண்மைதான் என்று நெஞ்சில் ஒரு வலி காட்டிக் கொடுக்கிறது.

என்னுடைய நிலைப்பாடு இதுதான். என்னுடன் இந்த விஷயம் பற்றி வாய்வழியாக உரையாடியவர்களுக்கு இதை நான் எப்போதோ சொல்லியிருக்கிறேன். அதையே இங்கேயும் சொல்கிறேன். கே.பி. தான் எங்கள் அடுத்த தலைவர் என்று கை காட்ட ஒரே ஒருவருக்குத் தான் உரிமை உண்டு. அவரைப் பற்றிய பல விஷயங்களே புரியாத புதிராகிவிட்டன. அப்படி புதிராக முன் அவர் யாரையும் எங்கள் அடுத்த தலைவராகக் கை காட்டவில்லை. ஆகவே, கே.பி என்கிற, குமரன் பத்மநாதன் என்கிற செல்வராசா பத்மநாதனைப் பற்றி எனக்கு எந்தவிதமான அபிப்பிராயமும் இல்லை. பச்சோந்திகள் போல் நிறம் மாறும் ‘தமிழ் உணர்வாளர்கள்' சொல்வதால் மட்டும் அவர் தலைவனாக ஆகிவிட முடியாது.

டிஸ்கி: இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. நிச்சயமாகப் பலரைக் காயப்படுத்தும். நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை. இந்தப் பதிவால் காயப்படுபவர்களில் ஒருவராவது சிந்தித்தால் போதும்.

பி.கு: நான் ஒன்றும் பெரிய அரசியல் விமர்சகன் அல்ல. மிகச் சாதாரணமான ஒரு பதிவன், ஒரு குடிமகன். இந்தச் சாதாரணமானவனின் குமுறல்தான் இது. So called தமிழ் உணர்வாளர்கள் இப்போது என்மீது பாய்வார்கள். அது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஒரு நிலைப்பாட்டில் நிலையாக இருக்கமுடியாத இவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

22 comments:

vasu balaji said...

சரியான கருத்து கீத்.

அருண்மொழிவர்மன் said...

நியாயமான கேள்விகள். இந்த தமிழ் உணர்வாளார்கள் என்ற பெயரில் சிலர் அடிக்கும் கூத்தால்தான் இத்தனை பின்னடைவும் என்று நான் நினைக்கின்றேன்.
கேபி கைதானபோது, அதைக் கடத்தல் என்றும் சதி என்று சொல்லப்பட்டபோது ஏன் இவர்கள் எப்படி என்றுதான் தொன்றியது.

Bibiliobibuli said...

கீத்,

உங்கள் கருத்துகளோடு நான் உடன்படுகிறேன். நானும் ஓர் பொதுசனம் தான். எனக்கு பொதுப்புத்தி மட்டுமே உண்டு. தேசிய தலைவருக்கு பிறகு யார் யாரோ வருகிறார்கள் ஏதேதோ சொல்கிறார்கள், செய்கிறார்கள். எல்லாமே குழம்பிய குட்டையாகத்தானிருக்கிறது. இதில் எங்களைப்போன்றவர்கள், பொதுசனம், அப்பாவி மீன்களாய் மாட்டிக்கொண்டோம். காலம் பதில் சொல்லும். பொறுத்திருந்து பார்ப்போம். வேறென்ன செய்ய முடியும்.

நன்றி

ரதி

Anonymous said...

தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட என்ற அடைமொழியின் பின்னாலுள்ள கோமாளித்தனத்தை உங்களைப் போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மற்றவர்கள் எழுதுவதையும் உங்களைப் போன்றவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை.

கே.பியைப் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படவில்லையென்றால் ஈழப்போராட்டத்துக்கும் உங்களுக்குமான உறவு அவ்வளவுதான். அதைவைத்துக்கொண்டு இவ்வளவு துள்ளுவது 'ரொம்ப ரொம்ப ஓவர்' தான்.
ஈழப்போராட்டம் வெறுமனே உங்கள் பக்கத்து முகாமலிருந்த போராளிகள் மட்டும் நடத்தப்பட்டதன்று. அல்லது உங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்துதான் தொடங்கப்பட்டதுமன்று.

முதலில் கே.பியை யார்யார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் பார்த்தாலே சாயம் வெளுத்துவிடும். அவர்கள் சொல்வதில் ஒன்றுகூட உருப்படியான காரணமன்று. இதற்கெல்லாம் மினக்கெட்டு கட்டுரை எழுதுவதே வீண்தான்.

அதுசரி, யார் வந்து கைகாட்ட வேண்டுமென்கிறீர்கள்? தலைவன் கைகாட்டியதையே விளங்கிக் கொள்ளத் தெரியாத மொன்னைகள்தான் தாம் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பதாகப் பசப்பித்திரிந்தார்கள். தலைவனுக்கு வீரவணக்கம் செலுத்தக்கூட விடாத பதர்கள் இவர்கள்.

வெறும் தகவல் தொடர்புக்கு மட்டுமென்றால் ஏன் கே.பியை விடவேண்டும்? இதுவரை வன்னியிலிருந்து சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்த யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாமே?
கே.பியை தலைமைச்செயலராக 'போராளிகள்' ஏற்றுக்கொண்டார்கள். வேறு யார் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

வலைப்பதிவில் இன்னொரு பரதேசி, சில படையணிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த இந்தப் படையணிகள் கே.பியை ஏற்றுக்கொள்ளவில்லையென்று எழுதியது. அங்கே குறிப்பிடப்பட்ட எந்தப் படையணியிலும் கே.பியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இல்லவே இல்லை. ஏனென்றால் அவர்கள் தேசியத் தலைவனையும் அவனது கட்டளைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள்.

Unknown said...

புரிந்து கொண்டதுக்கு நன்றிகள் வானம்பாடிகள்.. நீங்க புரிந்து கொள்வீர்கள் என்பது எதிர்பார்த்தது தான்.

Unknown said...

உண்மைதான் அருண்மொழி... அந்த கூத்தாடிகளை நான் பெயர் சொல்லி இனம் காட்டியிருக்க வேண்டும்

Unknown said...

ரதி... நீங்கள் சொன்ன பொதுப் புத்தியிலிருந்துதான் என் பதிவு வெளிவந்தது... சரியான சொல் வராமல் தவித்தேன்,.நன்றி

Unknown said...

அனானி... புரியாமல் பேசாதீர்கள்.. எனக்கு அறிவு தெரிந்த காலங்களில் கே.பியைப் பற்றி நான் எதுவுமே கேள்விப்பட்டதில்லை. பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. எனக்கு அவ்வளவுக்கு வயதில்லை என்று. அப்படிப்பட்ட எனக்கு அவர் புதிதாகத்தான் தெரிந்தார்... அவரைப் பற்றிய சில குறிப்புகளை நான் சில வயது முதிர்ந்தவர்களிடமும் கேட்டு அறிந்திருக்கிறேன்.. அவற்றை எல்லாம் பொதுவில் பேச நான் முட்டாளில்லை...

நான் கைகாட்டச் சொல்லிக் கேட்பது வெறும் கைப் பொம்மைகளை அல்ல. களமாடிய அந்த மறவன் கை காட்டியிருக்க வேண்டும். சூழ எதிரிகள் இருந்த களத்திலிருந்து எல்லாச் செய்திகளையும் உயிரிருக்கும் வரை வெளியே சொன்ன ‘அவர்கள்', இறுதிவரை களமாடி நாங்கள் மாண்டால் கே.பி. யை தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகியிருக்கும். இந்தத் தர்க்கம் கூடப் புரியவில்லையா உங்களுக்கு..அதனால்தான் ‘தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட' என்றேன்..தேசியத் தலைவன் கைகாட்டியிருந்தால் நானும் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டிருப்பேன்... நம்பிக்கையாக இருங்கள் என்று சொன்ன அவன் இவரை ஏற்கும் படி சொல்லவே இல்லையே... என் வீட்டுக்குப் பக்கத்து முகாம் போராளிகள் மட்டும்தான் போராடினார்கள் என்று நான் சொல்லவேயில்லையே...

நான் சொல்லவந்தது இதுதான்.. உங்கள் போன்ற So Called தமிழ் உணர்வாளர்கள்தான் முதலில் கே.பி. எங்கள் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவர் என்றீர்கள்... அவர் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற போது அவரை நம்பச் சொன்னீர்கள்.. அதே கே.பி. தலைவர் வீரமரணம் அடைந்தார் என்று சொன்னபோது துரோகி என்றீர்கள்... இப்போது அவர்தான் தலைவர் என்கிறீர்கள்.. எப்படி அய்யா? எப்படி? பொதுப் புத்தி உள்ள, கொஞ்சமாவது யோசிக்கத் தெரிந்த எவனுமே காறித் துப்புவான்..

Unknown said...

பின்னூட்டம் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்ட அனானிக்கு..
பிரசுரிக்கவில்லை நண்பரே.. நீங்கள் சொன்ன ‘நீயும்.. நானும்' கருத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். முதலில் கோபம் வந்தது.. ஆனால் அது நீங்கள் சொன்ன உண்மை என்னைச் சுட்டதால் வந்த கோபம் என்று புரிந்து கொண்டேன்.. அதே போல் நான் சொல்ல வந்த விஷயத்தையும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்...

பாரதி.சு said...

வணக்கம் கீத்,
வன்மையாகக் கண்டிக்கிறேன்...ஆமா போடும் எங்களுக்கு கேள்விகள் தோன்றுவதே தப்பு. அதிலும் பதிவேற்றுவது துரோக.......அல்லவா??

கேள்வி கேட்டால்....
விசுவாசம்/ நம்பிக்கை இல்லை என்பார்கள்.

பதிலளிக்குமாறு வற்புறுத்தினால்...
இதெல்லாம் "போராட்ட நேரத்தில்" ரகசியம்..புரிந்துகொள்ளுங்கள்..சொல்லக்கூடாதென்பார்கள்.

இப்படியான ஒரு சமுதாயத்திற்கு...எப்படியான எதிர்காலம் அமையும் என்பதற்கு நாங்கள் எடுத்துக்காட்டு.

சாந்தி நேசக்கரம் said...

//So called தமிழ் உணர்வாளர்கள் இப்போது என்மீது பாய்வார்கள்.//

உணர்வாளர்களால் தான் புலிகள் அழிந்தார்கள் என குமுதம் பேட்டியில் அருட்தந்தை யெகத் கஸ்பர் அவர்கள் தெரிவித்திருந்தார். அதை மெய்ப்பிப்பது போல உணர்வாளர்கள் சூடும் துரோக முத்திரைகளும் எல்லோரையும் துரோகியனெ விரல் நீட்டுவதும் நின்றால் தான் தமிழினம் உருப்படும்.

சாந்தி

Unknown said...

பாரதி... புரிகிறது.. விளக்கமாக பதிலை இங்கே சொல்ல விரும்பவில்லை... அது சரி நானும் நீங்களும் ஒரே ஊரில்தான் இருக்கிறோம் இப்போது... சரிதானே? ஸ்கார்புரோ தானே நீங்க..

முல்லை மண் சாந்தி..உங்கள் கருத்தும் புரிகிறது

Anonymous said...

Hello
first of all I would like to clearone thing.KP is one among the top leaders of ltte next only to
prabha and pottu.
you told that prabha didnt point out any leaders after him.
still praba's death is not clear.
I think you are aware that praba's death is not officially announced by a death certificate.they showed lot of photos in tv and proclaimed that a dna test confirmed his death but they are not ready to issue death certificate to close the laxman kadirkamars murder case and rajiv murder case.
so my assumption is that praba and pottu may be alive and keeping low profile and planning for their next attack. if he announces that he is alive then all the intelligence agencies will direct all their resources to arrest him.
you know if he uses a phone he will get caught in few minutes by interpol.this you can see form the arrest of kp who so far maintained low profile and escaped from interpol now he get caught when he became active.
self annointed kp ,could be a treachery orchestrated by intelligence agencies to break the international network of ltte and break the funding for the struggle.
you know that eelam tamil diaspora contributes only for the name of praba.so all countries want the funds to be stopped for the struggle. thats why they publicise prabas death in all media but not officially announcing the death.
on the contrary ,it could be praba's ploy to project kp with lot of hype around trans eelam govt and he himself preparing silently for the next war.
we don't know which view is correct.
only kp knows this.
time only can clear these doubts
but if the second view is correct,kp's arrest could be a setback to ltte
anyway nice post
thanks

Unknown said...

அனானி.. ஒரு தேர்ந்த ஆய்வாக எழுதியிருக்கிறீர்கள்... நான் அந்த ஆய்வுகளுக்குள் வர விரும்வில்லை.. ஆனால் நீங்கள் சொன்னதும் ஒரு சாத்தியமே..

Nanthini said...

கே.பியைப் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படவில்லையென்றால் இந்த முகவரிக்கு சென்று அவரை பற்றி தெரிந்து கொள்ளவும்...
http://tamilseithekal.blogspot.com/2009/08/blog-post_1134.html
படித்து விட்டு பின்னுட்டம் போடவும் நன்றி

Unknown said...

படித்தேன் செல்வராணி... இதுவரை அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டதை விடக் கூடுதலான தகவல் எதுவுமே இல்லை.. இணைப்புக்கு நன்றி

Anonymous said...

ஐயா ராசா,

தலைவர் கைகாட்டாமல் வேறுயார் காட்டியது? அதைப் புரிந்துகொள்ள முடியாமலுள்ளீர்கள் என்பதைத்தான் நானும் சொன்னேன்.

பிரபாகரன் இன்னும் இருக்கிறார் என்ற தொனிப்படத்தான் நீங்கள் கதைக்கிறீர்கள் போலுள்ளது. அப்படியானால் நீங்களே சாடிக்கொண்டிருக்கும் கும்பலில்தான் நீங்களுமுள்ளீர்கள் என்பதையாவது விளங்கிக் கொள்ளுங்கள். இங்கே பின்னூட்டமிட்டிருக்கும் சாந்தி, கூட்டாளி சாத்திரி எல்லோரும் உங்கள் பார்வையில் முதற்கண் துரோகிகள்.

இல்லை, பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்றுதான் நீங்கள் கருதினால், இப்படியோர் இடுகையே எழுதியிருக்கத் தேவையில்லை. இவ்வருடத் தொடக்கத்தில், பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளராக அவரைத் தலைவர் நியமித்தபோதே செய்தி சொல்லப்பட்டுவிட்டது. இவர்தான் இனிமேல் கொண்டு நடத்துவார் என்ற அறிவிப்பை வெளியிடவேண்டிய தேவை தலைமைக்கு இருக்கவில்லை என்பதுதான் என் கருத்து.

------------------------
அடுத்த தலைமை யார் என்ற செய்தி புலிகள் இயக்கத்தில் எக்காலத்திலும் சொல்லப்பட்டதில்லை. ஒருவேளை தலைவருக்கு ஏதாவது நடந்திருந்தால் போராளிகள் தொடர்ந்தும் செயற்பட்டிருப்பார்கள். தலைவர் எமக்கு ஒருவரையும் கைகாட்டவில்லை, அவர்வந்து சொன்னாத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று லூசுத்தனமாக யாரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள். இயல்பாகவே பொட்டம்மானை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருப்பார்கள். இவ்வளவுக்கும் மாத்தையாவின் பிரச்சனையின் பின்னர் பிரதித் தலைவர் என்ற பொறுப்போ அல்லது இரண்டாம் நிலையென்ற பேச்சோ இயக்கத்தில் இருந்ததேயில்லை.
--------------------------
அடுத்தது, தலைவரின் வீரச்சாவு தொடர்பானது. அவர் ஏதோ எல்லாருக்கும் டாட்டா காட்டி இறுதிப் பிரியாவிடை வசனம்பேசிச் சாவதாக ஓர் அசல் தமிழ்த்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் போன்று அவரது சாவு நிகழ்ந்திருக்குமென்ற மனப்பான்மையோடு தான் சிலரின் 'ஆய்'வுகள் அமைகின்றன. யதார்த்தம் வேறானது.

இறுதிநாட்களில் என்ன நடந்ததென்ற தகவல்கள் எவையும் முழுமையாக இல்லை. இறுதிநாளில், இறுதிநேரத்தில்தான் தலைவர் கொல்லப்பட்டார் என்பதுகூட உறுதியில்லை. எல்லாம் கைமீறிய நிலையை உணரமுன்னமேகூட எதுவும் நடந்திருக்கலாம். சூசையண்ணை இறுதியாகக் கதைத்த ஒலிவடிவம் வெளியிடப்பட்டது. அவர் அவ்வொலிச் செவ்வியை வழங்கும்போதே தலைவர் இல்லையென்பதே அவ்வொலிப்பதிவைக் கேட்டபோது என்னைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட உள்ளுணர்வு.

அல்லது தான் காட்டுக்குள்ளாவது தப்பிப் போய்ச் செயற்படுவேன் என்று தலைவர் இறுதிவரை நம்பிக்கொண்டிருந்திருக்கலாம். ஆகவேதான் 'மக்களுக்கான' செய்தியேதையும் தனது குரலிற் சொல்லாமலிருந்திருக்கலாம்.

இந்தநிலையில், அவர் ஒண்டும் சொல்லிப்போட்டுப் போகேல எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறித்தனம் மட்டுமன்று, கயமைத்தனமும் கூட. ஈழமுரசில் இப்படித்தான் 'சொல்லாமல் போகார் எம் தலைவர்' என்று ஒரு லூசுத்தனமான கட்டுரை வெளியாகியுள்ளது. இவர்களெல்லாம் இவ்வளவுகாலம் என்னத்தைத்தான் போராடினார்களோ தெரியவில்லை.
----------------------------

'உங்களைப் போன்ற' என்று என்னையும் சேர்த்து நீர் கருத்துச் சொல்லியிருக்கிறீர். நானெங்கே கே.பியைத் துரோகி என்றேன்? சரி, கே.பியைத் துரோகி என்று சொன்ன யார் இப்போது அவரைத் தலைவர் என்று சொல்கிறார்கள்? அப்படி யாராவது சொன்னால் உமது கேள்வி அவர்களுக்கானதேயன்றி எனக்கானதன்று.
-----------------
பிரபலமாக இருப்பது தொடர்பாக:
கே.பியாவது உங்களைப் போல பலரை விடுத்து பிரபலமாக இருந்தார். எதிரியிடமும் உலகிடமும் பல்லாண்டுகளாக அவர் பிரபலம்தான்.

ஆனால் கேணல் ரமணனைப் பற்றி அவரது இறுதிக்காலத்துக்கு முன்னர் என்ன அறிந்தீர்கள்? கருணா பிளவின்பின்னர்தான் அவரது பெயரே வெளியே வந்தது.

கேணல் சாள்ஸைப் பற்றி அவரது சாவுக்கு முதல்நாட்கூட என்ன தெரிந்திருந்தீர்கள்? பேரையாவது கேள்விப்பட்டிருந்தீர்களா?

ஆக, பொதுவில் தெரிவதுதான் செயற்பாட்டின் பெறுமதியைக் குறிக்கும் அளவுகோல் அன்று!!!

-----------------------
அம்மா சாந்தி, பொதுவிலே தமிழின உணர்வாளர்கள் என்று சொல்லி மட்டையடிக்கக் கூடாது. அப்படிக் காட்டிக் கொண்டு செயற்படுபவர்களைக் குறிக்கும்வண்ணம் வேறேதும் சொல்லைப் பயன்படுத்துவதே சிறப்பு. கஸ்பாரிலே மரியாதை இருந்தாலும் நக்கீரனோடு சேர்ந்த குணமோ என்னவோ அவரும் பலநேரங்களில் அவரே குறிப்பிடும் 'தமிழின உணர்வாளர்'கள் மாதிரியே நடந்து கொள்கிறார். அவரது தொடரில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களைச் சொல்லிச் செல்கிறார்.

-------------------------
அருண்மொழிவர்மன்,

இதைச் சதி, கடத்தல் என்ற சொற்கள் மூலம் குறிப்பிடுவதில் என்ன தவறு காண்கிறீர்கள்?
மலேசியக் காவற்றுறை பிடித்திருந்தால் அது கைது. இப்போது நடந்ததை எச்சொற்களால் விளக்குவீர்கள்?

Anonymous said...

பாரதி சு.

பல்லுப் பிடுங்கப்பட்டாலும் இன்னமும் புலிதான் உங்களுக்கான தலைமை என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் அவர்கள்தான் வழிநடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கும் நீங்கள், அவர்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பதும் நியாயமே.

அதற்கான நியாயத்தை வழங்கப்போய் இன்று புலிகள் இயக்கம் அடைந்த பின்னடைவையும் நாங்கள் கருத்திற்கொள்ள வேண்டும். 'ஒளிஞ்சிருக்க மனுசன்', 'நிழல் மனிதன்', 'அனாமதேயப் பேர்வழி' என்றும், இப்படிப்பட்டவரை நம்பி எப்படிப் போவது என்றும் கே.பி மேல் வைக்கப்பட்ட அவதூறுகளை எதிர்கொள்ளவே அவர் வெளிப்படையாகச் செயற்படத் தொடங்கியதும், ஊடகங்களில் தலைகாட்ட முற்பட்டதும், அடிமட்ட விடயங்களிற்கூட தானே தலையிட்டுச் செயற்படத் தொடங்கியதும்-

அவையே அவரது கடத்தல்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்ததையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கே.பி யின் கடத்தலுக்கு தமிழ்ச்சமூகமே முக்கிய காரணமென்பதை மறுக்க முடியாது. இன்றும்கூட புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தங்கியிருந்து சுதந்திரமாகச் செயற்பட ஓரிடம்கூட உலகில் இல்லையென்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். புலிகள் என்ற அமைப்பு இருந்ததையே ஒரு கெட்ட கனவாக மறந்துவிடுவதையே உலகம் விரும்புகிறது.

-அதே அனாமதேயம்தான்.

Unknown said...

புரிந்து கொள்கிறேன் அனானி... ஆனால் எனக்கென்று ஒரு கருத்து இருக்கிறதல்லவா... அது கே.பி. என்ற நிழல் மனிதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. அவ்வளவுதான் சொல்ல முடிகிறது.. அந்த so called தமிழ் உணர்வாளர்களுக்குள் உங்களையும் உள்ளடக்கியது தப்புத்தான்.. அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.. வேறு வகையில் உங்களைக் காயப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.. உங்கள் தரப்பு நியாயங்களை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.. என் பக்க நியாயங்கள் பதிவில்.. அவ்வளவுதான்

Sanaa said...

Already India told 2 Sri Lankan government tht if u arrest pirabha or if u find out his dead body u should give him or give his body 2 Indian government due 2 murder of former PM.But they didn't get his body so far.i have an doubt tht whatz going on.if u dnt knw plz dnt open ur mouth.

I also hv heard abt KP b4 1 year.Is it our fault????????
No.......never. It isn't our fault.
if we wanna become as famous we should sacrifice our life 2 entire event or moment.

Anonymous said...

"கேபி கைதானபோது, அதைக் கடத்தல் என்றும் சதி என்று சொல்லப்பட்டபோது ஏன் இவர்கள் எப்படி என்றுதான் தொன்றியது."

இங்கே கைது என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்? "கைது" என்னும் பதமானது சட்ட ரீதியானது. அது கைது என்றால் , யார் கைது செய்தனர் ? எங்கே கைது செய்தனர்? ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சென்று , அந்த நாட்டுக்கே தெரியாது செய்வது கைதா? கடத்தலா?

அண்ணன் அருண்மொழிவர்மன் அவர்களே , எவ்வாறு கோதபாய மாதிரியே பேசுகின்றீர்கள்?

Anonymous said...

Global teaching a good lesson to tamils.So I have rights to react like globe as a true tamil.

Every action have a reaction