இது முழுக்க முழுக்க ஒரு ரசிகனாக நான் ரசித்த அற்புதமான இன்னிங்ஸ்கள் பற்றிய தொடர். இதன் முதல் பாகத்தில் சச்சினின் செஞ்சரியைப் பற்றி எழுதியிருந்தேன். இம்முறை எழுதுவது அடுத்த மாஸ்டர் லாரா அடித்த செஞ்சரி பற்றி. (முதல் பதிவை இங்கே காண்க)
ப்ரயன் லாரா- 153* (256 பந்துகள், 19 நான்குகள் ஒரு ஆறு) மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆஸ்திரேலியா மார்ச் 26, 27, 28, 29, 30 1999, கென்ஸிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்பேடாஸ்.
1980 களில் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 1994-95ல் மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி அணியிடம் சொந்த மண்ணில் எப்போது தோற்றதோ அப்போது தொடங்கிய கஷ்டகாலம் இன்றும் தொடர்கிறது. என்னதான் கெய்ல், சந்தர்போல், சர்வான் போன்றவர்கள் கொஞ்சமாவது நன்றாக ஆடினாலும், 80 களில் ஆடிய சூப்பர்ஸ்டார்களின் ஓய்வுக்குப் பின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பெருமையைக் காப்பாற்றியது மூவர். அவர்கள் வால்ஷ், அம்புறோஸ், மற்றும் ப்ரயன் சார்ள்ஸ் லாரா. 1999ல் லாரா கேப்டனாக ஆக்கப்பட்ட முதல் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்னாபிரிக்காவிடம் 5-0 என்ற கணக்கில் தோற்றிருந்தது. அடுத்து அவர்கள் எதிர்நோக்கியது ஆஸி அணியை.
ஆஸி அணியிலும் சில மாற்றங்கள் இருந்தன. மார்க் டெய்லர் ஓய்வு பெற ஸ்டீவ் வா தலைவராகியிருந்தார். ஆனால் மிகவும் பலம் வாய்ந்த டெஸ்ட் அணி அது. முதல் போட்டியில் மெக்ராத்தும், ஜிலெஸ்பியும் மேற்கிந்தியர்களைத் துவம்சம் செய்ய 312 ஓட்டங்களால் ஆஸி ஜெயித்தது. மேற்கிந்தியர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்றது வெறும் 51 ஓட்டங்கள். இரண்டாவது போட்டியில் லாரா அடித்த 213 ஓட்டங்களாலும், வால்ஷ் மற்றும் பெர்ரியின் அபார பந்து வீச்சாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதைவிடப் பெரிய அதிர்ச்சி அடுத்த டெஸ்ட் போட்டியில் காத்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணிக்கு அப்போது தெரியவில்லை.
ஸ்டீவன் வா ஒரு ரன்னில் தவறவிட்ட இரட்டை சதமும், பாண்டிங்கின் அற்புதமான சதமும் ஆஸ்திரேலியாவை 490 ஓட்டங்களைப் பெற உதவின. பதிலுக்கு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஷேர்வின் கம்பெல் 105 ரன் அடித்து 329 ஓட்டங்களைப் பெற உதவி செய்தார். 161 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலியர்கள் வால்ஷ், அம்புறோஸ் மற்றும் காலின்ஸின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் 146 ஓட்டங்களுக்கே சுருண்டது. வால்ஷ் 39 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்த 308 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினார்கள் மேற்கிந்தியர்கள். விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களுக்கு நகர்ந்தவர்களை மீண்டும் மெக்ராத்தும் ஜிலெஸ்பியும் படுத்தி எடுக்க 105 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகள் போயின. ஆஸ்திரேலியர்கள் வெற்றியைத் தம் வசமாக்கியதாய் மகிழ்ந்தார்கள், லாராவை இகழ்ந்தார்கள்.
அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திரம். ஆடம்ஸின் உதவியோடு 133 ரன்கள் சேர்த்தார் லாரா. மறுபடியும் மெக்ராத் உக்கிரமாகப் பந்து வீச விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. வெற்றிக்கு இன்னும் 60 ரன் தேவைப்பட்ட போது 8வது விக்கெட் வீழ்ந்தது. லாரா மனம் தளராமல் போராடினார். அற்புதமான விக்கெட் கீப்பரான ஹீலி கேட்ச் ஒன்றை விட்டதும் லாராவுக்கு சாதகமாக மாறியது. வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நெருக்கமான நிலை வரை துணை நின்ற அம்புறோஸ் ஆட்டமிழக்க, வால்ஷ் ஜிலெஸ்பியின் 4 பந்துகளை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். ஒருவாறு வால்ஷ் சமாளிக்க அடுத்த 7 பந்துகளுக்குள் வெற்றிக்கனியைக் கொய்தார் லாரா, ஆஃப் சைடில் அடித்த அற்புதமான நான்குடன். டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டு அதிக பட்ச ஸ்கோர்கள் (400*, 375), ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அதிக பட்ச ஸ்கோர் (501*) என்று எத்தனையோ சாதனைகள் லாராவிடம் இருந்தாலும், இந்த இன்னிங்ஸுக்கு நிகர் எதுவுமேயில்லை.
சில சுவாரஸ்ய தகவல்கள்
- இந்தப் போட்டியில் தோற்ற ஆஸி அடுத்த போட்டியை வென்று, தொடரை சமன் செய்து ஃப்ராங் வொரெல் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. அந்தப் போட்டியில் லாரா 82 பந்தில் ஒரு சதம் அடித்தார்.
- இந்தத் தொடரில் மெக்ராத் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய புகழ் பெற்ற பார்ட்னர் ஷேன் வார்ன், மேலே சொன்ன பிர்ட்ஜ் டவுண் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், அவரது கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக அணியிலிருந்து தூக்கப்பட்டார். அவ்வாறு தூக்கப்பட்ட வார்ன் இந்தத் தொடரை அடுத்து வந்த 1999 உலகக் கோப்பையில் செமி ஃபைனல் மற்றும் ஃபைனலில் ஆட்ட நாயகன்.
- ஜஸ்டின் லேங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் தம்முடைய இடங்களை நிலை நிறுத்திக் கொண்டது இந்தத் தொடரில்தான். தொடரின் ஆட்ட நாயகன், அதிலென்ன சந்தேகம், லாராதான்.
இந்தத் தொடரை இப்படியே தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அடுத்த பாகத்தில் உங்கள மகிழ்விக்க வரும் ஜாம்பவான், ஸ்டீவ் வா. லாராவின் அற்புத ஆட்டம் கீழே காணொளியாக:
No comments:
Post a Comment