Wednesday, 19 August 2009

நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009

இதுவரைக்கும் மனதில் பட்டவை என்ற தலைப்பிட்டு என்னை கொஞ்சமாவது தட்டிப் பார்த்த அரசியல், சமூக, ஆடுகளம் சம்பந்தமான செய்தித் தொகுப்பை இனிமேல் 'நான் பார்க்கும் உலகம்' என்கிற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன். நண்பர் கலை சொன்ன ‘சென்ற வார உலகம் வித் கீத்' என்ற தலைப்பும் பொருத்தமானது, இருந்தும் நான் இந்த வாரச் செய்திகளையும் தொகுப்பதால் வேறு தலைப்புத் தேடவேண்டியதாயிற்று. நான் பார்த்த உலகத்தில் நான் கண்ட, கேட்ட செய்திகளைத் தொகுப்பதால் நான் பார்க்கும் உலகம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். உலகத்தில் நாள்தோறும் நடக்கிற சம்பவங்களில் ஒரு துளியை மட்டுமே இங்கே தொகுக்கிறேன்.

அரசியல்-இலங்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்றும் இதற்கான கோரிக்கையை இந்தியா விரைவில் வெளியிடும் என்றும் சில செய்தி ஊடகங்கள் செய்தி தெரிவித்திருக்கிறன. ஏற்கனவே இலங்கை அரசால் 600 பயங்கரவாதக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பத்மநாதனை ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு இருக்கும் சம்பந்தத்தை காரணம் காட்டி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவார்கள் என்று அந்தச் செய்தி ஊடகம் ஊகம் தெரிவித்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கினார் என்பது பத்மநாதன் மீதான குற்றச்சாட்டாகும்.


வழமையாகவே பருவப் பெயர்ச்சி மழை என்பது சந்தோசம் தருகின்ற ஒன்று. ஆனால் இந்த முறை வவுனியாவில் பெய்திருக்கக் கூடிய கடும் மழையை நினைத்து சந்தோசப்படுவதா, துக்கப்படுவதா என்பது புரியவில்லை. வவுனியாவில் சமீபகாலமாக கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்து வந்தது. அகதிகளை இலங்கை அரசு அங்கே அடைத்து வைத்தபோது இன்னும் மோசமாக இந்தத் தட்டுப்பாடு மாறியது. தண்ணீர் இல்லாமல் சாகக் கிடந்த மக்களுக்கு வரப்பிரசாதம் போல் என்று மழையைத் துதிப்பதா அல்லது ஏற்கனவே கேவலமான சுகாதாரச் சூழலில், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு இன்னும் சுகாதாரச் சீரழிப்பாக வந்த மழையை நொந்து கொள்வதா என்று தெரியவில்லை. மழைக்காவது முற்றும் நனையாமல் அந்தச் சிறு கூடாரங்களுக்குள் ஒதுங்கலாம், ஆனால் சுகாதாரக் கேடான ஒரு பிரதேசத்தில் மழை காரணமாக அதிகரிக்கப் போகின்ற சுகாதாரக் கேட்டிலிருந்தும் அது காரணமாக வரப்போகும் நோய்களிலிருந்தும் எங்கே போய் ஒதுங்குவது?


இந்நிலையில் இந்த மோசமான நிலைக்கு ஐ. நா. சபைதான் காரணம் என்று இலங்கை அரசும். இலங்கை அரசுதான் காரணம் என்று மற்றக் கட்சிகளும் மாறி மாறிக் குற்றம் சாட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைப் பாருங்கள்:
இடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை- புதிய சிஹல உறுமய
அரசு முகாம் வாழ் மக்களின் அவலங்கள் தவிர வேறு பல விடயங்களையும் மறைக்கிறது- ஐக்கிய தேசியக் கட்சி
வன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு பால்சோறு வாங்கித்தின்ற சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள்- புதிய இடதுசாரி முன்னணி.
என்னத்தைச் சொல்ல? எப்படித் தான் இப்படியெல்லாம் வாய்கூசாமல் பேசுகிறார்களோ இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்?

அரசியல்-உலகம்

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் கட்சி விதிகளுக்கு எதிராகச் செயற்பட்டாஎ என்ற காரணத்துக்காக கட்சியை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்வந்த் சிங் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் சர்தார் வல்லபாய் பட்டீல் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானவை என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜ்வடேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்வானியின் தலைமை மீது ஜஸ்வந்த் சிங் மற்றும் வேறு சில பா.ஜ.க உறுப்பினர்கள் சமீபகாலமாகக் காட்டிவந்த வெளிப்படையான அதிருப்திக்குக் கிடைத்த பரிசாக (??!!) இதை அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.


நாளை (20.08.2009) நடைபெறவுள்ள உலகத்தமிழர் பிரகடனம் அரசின் மிரட்டலை மீறி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வை.கோ, இராமதாசு, தா. பாண்டியன், பாரதிராஜா போன்றோர் கலந்து உரையாற்றுவார்களாம். (திருமாவும் வருவாரா?) திருமாவின் பிறந்த நாள் சுவரொட்டிகளில் ஈழம் என்கிற வார்த்தையை போலிஸார் கிழித்திருக்கிறார்கள் அல்லது, கிழிக்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் பிரகடன மாநாடு நடந்தால் கைதுகள் நிகழலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குப் பங்கம் விளைவிக்கப் போவதாக தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். வியாழக் கிழமை நடைபெற உள்ள தேர்தலைப் புறக்கணிக்குமாறும், மீறி வாக்களித்தால் வாக்குச் சாவடிகள் தாக்கப்படும் என்றும் தலிபான்கள் எச்சரித்திருக்கிறார்கள். இவர்களின் இப்படியான நடவடிக்கைகளுக்கு காரணம் கற்பிப்பது முடியாத காரியமாகிவிட்டது. கரீபியன் தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களிடையே வாழும் அடாவடி இளைஞர்களை ‘தலிபான்' என்று அழைக்கும் அளவுக்கு இவர்களின் 'புகழ்' பரவியிருக்கிறது.


பொருளாதாரம்

பெற்றோலியப் பொருட்களின் விலை வீழ்ச்சி காரணமாகக் கனடாவின் வருடாந்திரப் பணவீக்கம் 0.9% ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2008 ஜூலையில் பெற்றோலின் விலைக்கும் 2009 ஜூலையில் பெற்றோல் விலைக்குமிடையே 28% வித்தியாசம் காணப்படுவதாகவும் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பணவீக்க வீழ்ச்சி கடந்த 56 ஆண்டுகள் காணாத சரித்திர வீழ்ச்சி என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதே வேளை கனடாவில் இருக்கும் உற்பத்திசார் தொழிற்சாலைகள் செலவைக் குறைக்கும் பொருட்டு குறைந்த சம்பளத்தில் தற்காலிக வேலையாட்களைப் பயன்படுத்துவதில் மும்முரம் காட்டுவதும், ஆகக் குறைந்தது 1 மாதத்துக்கு ஒரு வேலை தேடும் நிலையில் கனடாவில் புதிதாக வந்து சேர்ந்தவர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. (சொந்தக் கதை சோகக் கதை)


விளையாட்டு

இந்தவாரம் இரண்டு பேரைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஸிம்பாப்வேயின் சார்ள்ஸ் கொவென்றி. 12-வருட காலமாக நிலைத்த சயீத் அன்வரின் சாதனையைச் சமன் செய்த காரணத்துக்காக. அது பற்றிய என் பதிவு இங்கே. அடுத்தது ஆண்டி மர்ரே. பிரித்தானியாவின் டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரமான இவர் ஃபெடரர், நடால், ரொடிக் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோஜேர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரை வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபன் நெருங்கும் இந்த சமயத்தில் இது அவருக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கலாம். இந்த வெற்றி மூலம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் மர்ரே.


பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. முன்னணி வீரர்கள் பலரை இழந்த நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடட் ஞாயிற்றுக் கிழமை வெற்றியோடு இந்த வருடத்தை ஆரம்பித்தாலும் இன்று (19.8.2009) நடந்த பேர்ன்லியுடனான போட்டியில் தோற்றிருக்கிறது. கடந்த வருடம் இரண்டாம் இடம் பிடித்த லிவர்பூல் ஒரு தோல்வி, ஒரு வெற்றி இதுவரை. செல்ஸீ இரண்டு போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள். இந்த முறை மான்செஸ்டர் யுனைடட்டை நம்பமுடியுமா தெரியவில்லை. ஃபேர்கஸன் என்ன மாஜிக்கும் செய்யக் கூடியவர் என்பதால் மட்டும் மான்செஸ்டர் யுனைடட் மீது பணம் கட்ட முடியாது. எனது நம்பிக்கைகள் லிவர்பூல் அல்லது செல்ஸீ. இந்த வருடத்துக் கறுப்புக் குதிரையாக மான்செஸ்டர் சிட்டி அணி மாறலாம்.


சினிமா

பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இரு தமிழ் சினிமாக்களை இந்தவார இறுதியில் பார்த்தேன் (டி.வி.டி யில்தான்). ஒன்று அச்சமுண்டு அச்சமுண்டு, மற்றது காதல் கதை. பாதிவர்கள் வேலு. பிரபாகரனைத் திட்டியதில் தப்பே இல்லை. சினிமாவில் எதையும் சொல்லலாம். எப்படிச் சொல்வது என்பதுதான் பிரச்சினையே. சிக்கலான கரு ஒன்றைப் பற்றி அழகாகத் தமிழில் பேசிய படம் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்' மட்டும் என்பது என் அபிப்பிராயம். அச்சமுண்டு அச்சமுண்டுவில் இன்னும் கொஞ்சம் த்ரில் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். பல காட்சிகள் மிக இயல்பாக இருந்தாலும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. 100 நிமிட சினிமாவைப் பார்ப்பதற்குள் மூன்று முறை தூங்கிவிட்டேன், (அன்றைக்கு விடுமுறை). அந்தக் குட்டிப் பெண் அழகு


ஒரு அடப்பாவிகளா விஷயம்

130 மில்லியன் கடன் அட்டை எண்களைத் திருடிய ஆல்பேர்ட் கொன்சாலஸ் என்பவரை அமெரிக்கப் போலீசார் கைது செய்திருக்கிறார்களாம். கடன் அட்டைகளின் பாதுகாப்பைக் கூட்டுகிறேன் என்று புதிதாக ‘சிப்' கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? இங்கிருந்து இப்படியான கடனட்டைகளைக் கொண்டுபோய் ஐரோப்பாவில் பணமாக மாற்றி மீண்டும் இங்கே கொண்டுவரும் எங்களவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படியெல்லாம் வாழ்கிறார்கள். உழைத்து வாழ மட்டும் வாய்ப்புத் தருகிறார்களில்லை. திருடப்பட்ட கடனட்டை எண்களில் ஒன்று உங்களுடையதாய்க்கூட இருக்கலாம். என்னுடையதாய் இருக்க முடியாது... ஏனென்றால் என்னிடம்தான் கடனட்டை இல்லையே.. (அப்படியே இருந்தாலும்..................)

5 comments:

Anonymous said...

//இடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை-//

போர் நிறுத்தம் கேட்டு நடந்த போராட்டங்களைப்போலவே முகாம்களில் தமிழ் மக்களின் நிலைமையை முன்னிறுத்தி மீண்டும் உலக நாடுகளின் கவனத்தைக்கவர்ந்தால் ஏதாவது நடக்க கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

vasu balaji said...

மிக மிக அழகான தொகுப்பு. நேர்த்தியான ஓட்டம். பாராட்டுக்கள் கீத்.

கலையரசன் said...

சென்ற வார உலகம் ஜம்முன்னுதான் போயிருக்கு உனக்கு...
எல்லாமே நச்.. ப்ச்...

கார்ல்ஸ்பெர்க் said...

ப்ரெசென்ட் சார்..

Unknown said...

சின்ன அம்மிணி.. உலக நாடுகளும் அவங்களோட கவனமும்... ஏங்க ஒரு ஹைவேயை மறிச்சுக் கூடப் போராடிப் பாத்தாச்சு.. ஒண்ணுமே நடக்கலை. நாங்கள் கைவிடப்பட்ட இனம்..

வானம்பாடிகள்... நன்றி. ஆனா உங்க நறுக்ஸ் மாதிரி வருமா?

கலையரசன்..நன்றி தல..அதுசரி அதென்ன நச்.. ப்ச்?

கார்ள்ஸ்பெர்க்... வந்திருக்கியா. வீட்டுப் பாடம் எல்லாம் செய்திருக்கியா?