இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.
- இலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.
- நேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.
- புல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.
- Blogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்
- அதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
- லோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.
- தமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)
- இலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)
- புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
- ழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.
- பல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.
- எங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
- யாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.
- விழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.
சந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.
தனிப்பட்ட சந்தோஷங்கள்
தனிப்பட்ட சந்தோஷங்கள்
- பள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.
- ஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.
- எங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.
- இந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.
ஒரு தனிப்பட்ட துக்கம்
- எங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.
ஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
பதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்
பதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்
54 comments:
60 பேர் இல்லை நண்பரே 80 பேர். நானும் அந்நிகழ்வில் பங்குகொண்டேன்.
உங்கள் ஆவர்வத்திற்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி நண்பரே
சந்திப்பு சிறப்பாக நடந்தறிந்து மகிழ்ச்சி.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிவர் சந்திப்பில் சில முன்னோடியான நிகழ்வுகள் இடம்பெற்றதை பாராட்டாமல் இருக்கமுடியாது.
பூச்சரத்தில் உங்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
கிருத்திகன்,
சந்திப்பில் நடந்தவற்றை மிக நுணுக்கமாக அவதானித்திருக்கிறீர்கள். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
நானும் எனது பதிவில் முழுமையான ஒலி வடிவத்தினை இணைத்துள்ளேன். பாருங்கள். முடிந்தால் எனது பதிவையும் உங்களுது பதிவில் சுட்டியாக இணைத்துவிடுங்கள். வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html
பிரியமுடன்,
கௌபாய்மது
கிருத்திகன்,
நீங்கள் மீள ஒருமுறை நேரடி ஒளிபரப்புத் தளத்திற்குச் சென்று சாட்டிங்க் வரலாற்றை நகலெடுக்க முடியுமா என முயன்று பாருங்கள்.
நன்றி,
மதுவதனன் மௌ.
இத்தனை வேகமா. பகிர்தலுக்கு நன்றி கிருத்திகன்
colvin....
ஊரோடியோடு உரையாடிக்கொண்டிருந்த போது அவர் தந்த எண்ணிக்கை 60... வந்தியண்ணாவும் 80 என்றுதான் சொல்லியிருக்கிறார்... பதிவர் சந்திப்புகளுக்கு முப்பதே அலை கடல்...
மஞ்சூர் ராசா, நன்றி
என்ன கொடும சார்... நன்றி
அப்பாடா... கடைசியாக ஒரு இலங்கைத் திரட்டியில் என் பதிவை இணைத்துவிட்டேன்... நன்றி பூச்சரம் நிர்வாகம்
மது...
ஒலிவடிவத்துக்கு நன்றி... இது உங்களின் கன்னி முயற்சி என்று கேள்விப்பட்டேன்.. சரியான வசதிகள் கிடைத்தால் இன்னும் அற்புதமாகத் தொழிற்பட்டிருப்பீர்கள்... இது வலைஉலகில் நல்ல ஒரு முன்னுதாரணம்... அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இணைய உரையாடல் வரலாற்றைப் பிரதியெடுக்க முடியவில்லை
பாலா... நன்றிகளும் வாழ்த்துக்களும் விழா அமைப்பாளர்களுக்குச் சேர்வேண்டியவை
கீத் இறுதி வரை நேரடி நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்ததை நானும் கவனித்தேன். நித்திரையை மறந்து எங்களோடு இணைந்திருந்து உற்சாகமளித்த உங்களைப் போன்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றி கிருத்திகன்,
சாட்டிங்க் வரலாற்றை தொலைத்தது மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
சுவாரசியமாக இருந்தது அது..
பால்குடி... நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்... ஓடி ஓடி உபசரித்துக்கொண்டிருந்தீர்கள்..
சாட்டிங் வரலாறு தொலைந்தது எனக்குப் பெரிய குறையாகப் படவில்லை
இந்தியன் என்னும் பெயரில் சேட்டில் வந்தவர் அங்கு வந்திருந்த பெண்பதிவர்கள் பற்றி ரசக்குறைவாகப் பேச, கானா பிரபாவும் மாயவரத்தானும் கோபபட்டனர். டோண்டு என்ற பெயரில் வந்த நான் அவ்வாறு ரசக்குறைவாஅக பேசியது நிஜமாகவே ஒரு இந்தியராக இருக்குமோ என்ற சம்சயத்தில் அவர் சார்பில் மன்னிப்பு கேட்டு கொண்டேன்.
உடனே அவர் dondu fan என்று பெயரை மாற்றிக் கொண்டார். அவர் போன்றவர்கள் எனக்கு விசிறியாக இருப்பது எனக்கு பிடிக்காததை கூறியவுடன் Cho Rasikan என அவதாரம் மாறினார். சோவுக்கு இது நிச்சயம் ரசிக்காது என்று நான் குறிப்பிட்டேன். உடனே இன்னொரு பெயருக்கு மாறினார். ஆளைவிடுங்கள் என அமைதி காத்தேன்.
அவரைத் தவிர மற்ற எல்லோருமே சேட்டிங்கில் தன்மையாகவே பேசினர்.
நல்ல சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீத் பதிவுக்கு நன்றிகள் நிறைய வேலைகள் இருப்பதால் உங்களுக்கு விரிவான பின்னூட்டம் பின்னர் இடுகின்றேன் வந்தவர்களின் எண்ணிக்கை 80க்கும் 90க்கும் இடையில் இப்போதுதான் எண்ணிக்கை எடுக்கின்றேன் எடுத்தபின்னர் விபரம் தருகின்றேன்.
டோண்டு ஐயா... அந்த ‘Indian' செய்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்... நீங்கள் அங்கே வரமுன்னர் அவர் ஈழத்தமிழர் சம்பந்தமான இன்னொரு விசயத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருந்தார்..கானாபிரபா கோபமடைந்தது அதனால்தான் என்று நினைக்கிறேன்... சினேகிதியைப் பார்த்து அவர் கேட்ட ஒரு கேள்வி கொச்சைப்படுத்தலின் உச்சம். நீங்கள் நன்றாக அவருக்கு மூக்குடைத்தீர்கள்.. அதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
ஆறுதலா வாங்கோ வந்தியண்ணா
இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு பகிர்தலுக்கு நன்றி :)
பதிவர் சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே இணைய அரட்டைகளைப்பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. அவை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறுதலாக - சுவாரசியமாக பார்வையிடலாம் என்று இருந்து விட்டோம். இப்போது எங்களுக்கு கையறு நிலை.
யாராவது அதனை சேமித்து வைத்திருந்தால தந்துதவுங்களேன்
நீங்களும் ஒளிபரப்பின் பயனர் என்பதை அறிந்ததில் பெருமகிழ்ச்சி... உங்கள் பதிவுக்கு ந்னறிகள் பல...
முதல் சந்திப்பே அசத்தல், எதிர் பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதொடு நல்ல பல விடயங்களும் பேசப்பட்டு இருக்கின்றன, ஏற்பாடு செய்த நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
கன்னி முயற்சியல்லவா, நிச்சயம் சரித்திரம் படைக்கும்!
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. புலத்தில் உள்ளவர்களது நோக்கு எப்படியிருந்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான பதிவாக அமைகின்றது. நன்றி.. நன்றி நன்றி..
வேந்தன்... வருகைக்கு நன்றி
ஆதிரை... எனக்குத் தெரிந்து அது ஒரு குறையே இல்லை
புல்லட்... உங்களது பெயர் பற்றிய சர்ச்சையை நீங்கள் எடுத்துக்கொண்ட விதத்தை ரசித்தேன்
சந்த்ரு.. உண்மை நண்பா
ஈழவன்...100% உண்மை
சுபானு.. நன்றி
நல்லதோ கெட்டதோ எதுவாகினும், மற்றவர்களின் பார்வையை எடை போட வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது கீத்.
ஒன்று செய்யுங்களேன்... இணைய அரட்டையில் பேசப்பட்ட விடயங்களை உங்களால் தொகுத்து தர முடியுமென எண்ணுகின்றேன். ஆரம்பம் முதல் இறுதிவரை இணைந்திருந்தீர்கள். உங்கள் நேரம் ஒத்துழைத்தால் மட்டும்...
எல்லோருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அப்புறம்
// (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)
//
தமிழ் எழுத்துக்கள் இருக்கிற விசைப்பலகை எதற்கு?!!!
தமிழ்99 பயன்படுத்துங்கள். NHM உங்கள் கணிணியில் நிறுவுங்கள். இரண்டு மூன்று நாட்கள் தமிழ்99 முறையில் தட்டச்சினீர்கள் என்றால் தானாக கைக்குப் பழக்கம் வந்துவிடும்.
ஊர்சுற்றி... முயன்று பார்க்கிறேன்.. விரைவில் பழகிக் கொள்கிறேன்.
ஆதிரை...
சனிக்கிழமை காலமை 5 மணிக்கு எழும்பினதுக்கு இன்னும் நித்திரை கொள்ளேல்ல...நாளைக்கும் வெள்ளென் எழும்போணும்.. பாப்பம் இண்டைக்கு இரவைக்கு அல்லது நாளைக்கு என் நினைவிலிருந்து தொகுத்துத் தருகிறேன்..கானா பிரபா, வசந்தன், சயந்தன் ஆகியோர் இது பற்றி ஏதாவது பதிவிட்டால் பார்க்கவும். முக்கியமான விடயங்களை அவர்கள் தான் வாதித்தார்கள்.
சயந்தன் ஆகியோர் இது பற்றி ஏதாவது பதிவிட்டால் பார்க்கவும். முக்கியமான விடயங்களை அவர்கள் தான் வாதித்தார்கள்.// ஏனிப்பிடி பொய் சொல்லுறியள்..? யாராவது தயவு செய்து அங்கு வந்த பெண்களை வீடியோவில் பேசச்சொல்லுங்கள் என்று நான் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது முக்கியமான விடயமா..? :).. யாராவது என் வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கலாம் :)
அது முக்கியமான விசயம்தானே சயந்தன்
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததற்கு வாழ்த்துக்கள்.
சந்திப்பு,ஒன்றுகூடல்,மாநாடு நிறைவாக அமைந்திருந்தது!
வாழ்த்துகள்!
தொடருங்கள்!
நீங்கள் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் முழுதாக பார்த்தது மட்டுமன்றி உங்கள் கருத்துக்களையும் தெரிவித்தமை சந்தோசமாக உள்ளது. நன்றிகள்.
நன்றி கீத்.. அருமையான வர்ணனை & தொகுப்பு..
ஆனால் உங்கள் பதிவு வாசித்த பின் கோபம் தான் வந்தது..
பின்னே, நான் பதிவு போட கொஞ்சம் தாமதமான காரணத்தால் இப்படி புள்ளி விபரமா நீங்கள் போட்டால் நான் என்னத்தை இனி போடுறது?
உங்களோட இன்னொரு சண்டையும் இருக்கு (விருது பற்றி).. பிறகு அந்தப் பதிவுக்கு வாறன்.. ;)
அப்பாடா... நல்லபடியாக நடந்து முடிந்தது!
வாழ்த்துக்கள் கீத்...
நல்ல விசயம் தான் ,
எழுதுர ஆக்களிண்ட எண்ணிக்கைய விட எழுதுர விசயம் தான் முக்கியம் இல்லயோ !!! 80 பேர் எழுதின நம்மள மாதிரி வாசிகிற ஆக்கள் பாடு திண்டாட்டம் தான்.
நீக்கள் ஓரு உதவி செய்யிறிங்கள ? நீக்கள் வாசித ஆக்களின்ர பதிவுகளை மாதத்துக்கு ஒருக்க பதிவ பொடுங்க நம்க்கு சுவம் ;)
வாழ்த்துக்கள் நானும் சந்திப்பு பற்றி எழுதியிருக்கிறேன், வந்து தங்கள் கருத்தை சொல்லிட்டு போங்கள்
நன்றி சின்ன அம்மிணி மற்றும் அத்திவெட்டி ஜோதிபாரதி
சதீஷ்... எங்கட பொடியள் கூடேக்க நாங்களும் அங்க இருக்கோணும் எண்ட ஒரு ஆசைதான்... அடுத்தமுறை Skype, Google, Yahoo Chat எண்டு ஏதாவது முறையில குரலும் குடுப்பம்..
லோஷன் அண்ணா... இந்தக் கொமெண்ட் போட்டா கனபேர் அடிக்க வருவினம்..ஆனா போடத்தான் வேணும்..'லோஷன் அண்ணாண்ட வட போச்சே'....
விருது ‘நான் பெற்ற இ(து)ன்பம் எல்லோரும் பெறுக' என்ற நல்ல நோக்கத்தோட குடுத்தது... சண்டைக்கு வந்தா அப்பாட்ட சொல்லி அடிவாங்கித்தருவன்...
உண்மைதான் கலை... சிறப்பாக முடிந்தது.. இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான சர்ச்சைகள் நிகழ்ந்திருந்தால்கூட இருந்திருந்தால்கூட பரவாயில்லை என்பது என் எண்ணம்
சபா... செய்கிறேன்
யோ வாய்ஸ்... நிச்சயம் வாறன்
//இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமான சர்ச்சைகள் நிகழ்ந்திருந்தால்கூட இருந்திருந்தால்கூட பரவாயில்லை என்பது என் எண்ணம்
சர்ச்சைக்குரிய விடயங்கள் விவாதிப்பதற்கு கைவசம் இருந்தன. ஆனால், நேரம் போதவில்லையே...
இன்றோ அல்லது நாளையோ பதிவர்களுக்காக ஒரு Google Group உருவாக்குகிறோம். அதன் வழி பயன்தரு விவாதங்களை எடுத்துச் செல்வோம்.
அட நாங்களும் தான் நேரடி ஒலி, ஒளி பரப்பை பாத்திருந்தம் ஆக்கும் இங்கிருந்து ...
யாரோ யாரையோ ரொம்ப miss பண்ணுறம் என்று சொல்லிட்டு இருந்தாங்கள்...
ஜெயா... ஏனிந்த விளையாட்டு.. நான் தான் சொன்னேன்.. நண்பன் பால்குடியை miss பண்ணுவதாக..lol
தட்டச்சுவது பற்றிய கருத்துகளை உள்ளடக்கிய இந்த இடுகையை பாருங்கள்..
http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html
phonetic முறையை விட்டுவிடுங்கள்.
தமிழ்99 -யே பயன்படுத்துங்கள்! :)
பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா..
இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??...
80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???
பெண்கள் சார்பாக எழுதிய அன்பானவருக்கு..
என்னுடைய பதிவில் இல்லாத வரிகளைக்கூறி என்னைத் திட்டுவது என்ன நியாயம். யாருடைய பதிவில் மேற்படி வரிகள் உள்ளனவோ அவர்களைத் திட்டுங்கள்
கீத் உந்த பெண்கள் சார்பாக என எழுதுகிறவர் தான் சந்திப்புக்கு வாறன் எண்டுட்டு வராத ஒருவர், நேரடி ஒளிபரப்பில் பெண்களைக் கிண்டல் செய்தவர் உவர்தான். ஆளை எல்லாம் கணக்கில் எடுக்காதீர்கள்.
சரி சரி வந்தியண்ணா
அடுத்த பதிவர் சந்திப்புக்கு நாங்களுமிருப்போம்..
Post a Comment