Friday, 28 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1

வடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

தீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).

தீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்று, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)

இனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா?, தன்யாவா?... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.

முதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.

இரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

14 comments:

சயந்தன் said...

நல்லது கீத்..
வரும் ஒக்டோபர் 3 சனிக்கிழமையும் கரையைத்தேடும் கட்டுமரங்கள் வடலி வெளியீடான நாவல் வெளியீட்டு விழா நடை பெற இருக்கிறது. (வை ரி வைத்திலிங்கம் பார்த்திருக்கிறீர்களா.. கே. எஸ் பாலச்சந்திரனது நாவல்)

மற்றய பகுதியையும் எழுதுங்கள்.

Unknown said...

அநேகமாக சனிக்கிழமைகளில் நான் சும்மாதான் இருப்பேன். (இப்போது மற்ற நாட்களிலும் சும்மா இருப்பது துரதிர்ஷ்டம்). அதனால் ஒக்டோபர் 3ம் கட்டாயம் போவேன் சயந்தன்.

பால்குடி said...

கீத், ரபிக்காந்துக்கு அவனுடைய பட்டப் பெயர் வைக்கப்பட்டதுக்கே இது போன்றவைதான் காரணம். அவனுடைய ஆரம்பப் பாடசாலையிலேயே இப்பட்டமளிப்பு நிகழ்ந்துவிட்டது.

Unknown said...

பால்குடி... ஆள் இன்னும் மாறேல்லை...

மெலிஞ்சிமுத்தன் said...

கிருத்திகன் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நிகழ்வும் அரோக்கியமானதாகவே அமைந்திருந்தது.நல்ல பதிவு.
மரம் தெரிகிறதா?
கொப்பு தெரிகிறதா?
பறவைதெரிகிறதா?
ஆயினும் கட்டைவிரல் கவனம்.

Unknown said...

வணக்கம் மெலிஞ்சிமுத்தன் அண்ணா, பாராட்டுகளுக்கு நன்றி. ஆனாலும் அந்த மரம், கொப்பு, பறவை சுட்டுவது விளங்கவில்லை என் சிற்றறிவுக்கு

சினேகிதி said...

அது நீர்தானா :) சந்தேகமாத்தானிருந்தது ஆனால் அவசரமான அலுவல் இருந்ததால் கடைசிவரை இருந்து உரையாட முடியவில்லை.

கவிதை வாசிச்சு நிகழ்வை ஆரம்பித்து வைத்தது சத்யா. ஜெயகுமாரி அக்கா மற்றும் கெளசல்யாக்காவுடன் உரை வழங்கியவர் தான்யாக்கா :)

ச said...

\\மரம் தெரிகிறதா?
கொப்பு தெரிகிறதா?
பறவைதெரிகிறதா?
ஆயினும் கட்டைவிரல் கவனம்.\\

என்னத்துக்கு உம்மை ஏகலைவன் என்டு சொல்றார் ஆனால் என்னத்துக்கு என்டு தெரியேல்ல.

Unknown said...

சினேகிதி....
ஓமோம்.. நான்தான் அது
அதில நீங்கள் எது எண்டு தெரியேல்ல பாருங்கோ.... சரியா அடையாளம் சொன்னால் கண்டு பிடிக்கலாம்

Unknown said...

ச..
உண்மைதான்... அண்ணை சொல்லுறது ஏன் எண்டு விளங்கேல்லை.. திரும்ப வந்து சொன்னார் எண்டால் புண்ணியமாய்ப் போகும்

மெலிஞ்சிமுத்தன் said...

கிருத்திகன்
உங்களைப் போன்றவர்கள் ஒரு பற்றோடு எழுத்தை கையிலெடுப்பது
என்னளவில் உற்சாகமானது.மெய்சொல்லப் புறப்பட்ட சகோதரன் இலக்கிய அரசியலில் தன்னைத் தொலைத்துவிடக் கூடாதென்பதே
எனது எண்ணம்.இசங்களுக்குள்
தேங்கிவிடாதீர்கள.வீண் புகழ்ச்சிகளோடு இலக்கிய வியாபாரிகள்
உங்களை அணுகும்போது அவதானமாக இருங்கள்.

Unknown said...

அதைத்தான் சொல்ல வந்தீர்களா மெலிஞ்சிமுத்தன் அண்ணா... அந்த அரசியலுக்குள் எல்லாம் நான் தொலைய மாட்டேன் என்று நம்புகிறேன்.. நான் எழுதுவது என் மன அழுத்தத்துக்கு ஒரு வடிகால் தேட... அன்றைக்கு உங்களுடனான உரையாடல் துண்டிக்கப்பட்டு விட்டது... கனேடியப் படைப்பளிகள் சங்கம், கலையின் நோக்கம் என்ன? போன்ற விடயங்களில் உங்களோடு கொஞ்சம் உரையாட வேண்டி இருக்கிறது.

மெலிஞ்சிமுத்தன் said...

கிருத்திகன்
அப்படியொரு சங்கத்துடன் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.
ஆனால் இலக்கியக் கலந்துரையாடல்களுக்கான ஒரு தளம்
உருவாக வேண்டும் என்பதில் ஆசை
கொண்டு அதற்கான முயற்சிகட்கு
ஆதரவாய் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன்.
இப்போது தனிமையில் இருந்து எந்தாய் வயசுக்கு
வந்தபோது நான் எங்கே இருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Unknown said...

///இப்போது தனிமையில் இருந்து எந்தாய் வயசுக்கு
வந்தபோது நான் எங்கே இருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்./// அடிசக்கை...

இல்லை அந்த சங்கம் பற்றி ஏன் கேட்டனான் எண்டால்.. அவை சமீபத்தில விட்ட ஒரு அறிக்கையைக் கிழிக்கோணும் எண்டு நினைச்சனான்.. அவையள பற்றிக் கொஞ்சம் தகவல் தேவைப்பட்டது அதுதான்