மேடை நாடகங்கள் சுவாரசியமானவை. பள்ளி நாட்களில் வாணிவிழா, பாடசாலை பரிசளிப்பு தினம் போன்ற நாட்களிலெல்லாம பல நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். நாட்டிய நாடகங்கள் கூட ஹாட்லி மேடையில் ஏறியிருக்கிறன. சத்தியசீலன் மாஸ்டரின் அசாத்திய துணிச்சல் காரணமாக இரண்டொரு ஆங்கில நாடகங்களில் நானும் நடித்திருக்கிறேன். அப்படி என் மனதில் இன்றைக்கும் பசுமையாக இருக்கும் சில நாடகங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் நாடகம் ஹாட்லியில் சேர்ந்த முதல் வருடத்தில் வந்த வாணிவிழாவில் (விஜயதசமி அன்று) அப்போதைய உயர்தர மாணவர்கள் போட்ட அம்பிகாபதி நாடகம். அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த ‘ஆசை' படத்து ‘ஷாக்கடிக்குது சோனா' பாடலைக் கிண்டல் செய்யும் ஒரு ஊர்ப்பெரிசு கம்பர் மகன் அம்பிகாபதிக்கும் குலோத்துங்க சோழன் மகள் அமராவதிக்குமான காதல் கதையை சொல்வதாக ஆரம்பித்து, பின்னர் குலோத்துங்கன் காலத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். கம்பராக நடித்த வாணிமுகுந்தன் அண்ணா பற்றி நாடக ஆர்வமுள்ள பையன்கள் உயர்வாகப் பேசினார்கள். அந்நாடகத்தில் எனக்குப் பிடித்தது, நாடகம் தொடங்க முன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தமது வசனம் ஒன்றைப் பேசவைத்து, பின்னணியில் ‘கம்பராக வாணிமுகுந்தன்' போன்ற அறிமுகங்களை அலுப்படிக்காமல் செய்திருந்தார்கள். இன்றைக்கு அந்த நாடகம் பற்றிய நினைவுகளை மீட்டும் போதும் ஒருவிதமான பிரமிப்பு இருந்தது. அந்த நாடகத்தில். நெறியாண்டவர்கள் யாரென்பது எனக்குத் தெரியவில்லை.
இரண்டாவது நாடகம் ஒரு புதுமையான நாட்டிய நாடகம். பத்மாசுரன் என்றொரு அசுரன் யார் தலையிலும் கைவைத்தல் அவர்கள் எரிய வேண்டும் என்ற வரத்தை சிவனிடம் பெற்று, வரத்தை அவரிலேயே பரிசோதிக்க முயல, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்துவந்து காப்பாற்றுவதாக ஒரு கதை உண்டு. அதிலே ஆல்பேர்ட் ஐன்ஸ்டீனின் E = mc2 என்ற Theory of Relativityஐ புகுத்தி அதகளம் பண்ணினார்கள் ஆசிரியர்கள் ராகவானந்தன் மற்றும் ரகுவரன் ஆகியோர். 'ஓம் நமசிவாய' என்ற பின்னணியோடு நாம் கண்ட சிவலோகத்தை ‘பஸ்மாசுரன்' என்ற அந்த நாடகத்தில் ‘ஈ சமன் எம். சீ. வர்க்கம்' என்ற சுலோகத்துடன் புதிதாகக் காட்டினார்கள். ‘என்னவரம் வேண்டும் கேள், பஸ்மாசுரா என்ன வரம் வேண்டும் கேள்' என்று சிவனாக வந்து ஆடிய விமலேஸ்வரா அண்ணா எங்களின் ஆதர்சம் ஆனார்.
அதன்பிறகு மனதில் நின்ற இன்னொரு நாடகம், 'சத்தியவான் சாவித்திரி'. இதில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' பாடல் புகழ்பெற்றது. ஆனால் ‘பூனையால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' என்றொரு பாட்டுக் கேட்டிருக்கிறீர்களா. சத்தியவான் சாவித்திரி காதலுக்கு சமாந்தரமாக சத்தியவானின் தோழன், சாவித்திரியின் தோழி ஆகியோரை வைத்து ஒரு காமெடி ட்ராக் ஓட்டியிருப்பார்கள். அதில் சத்தியவானின் தோழனாக வந்து பூனையிடம் சாவித்திரியின் தோழியைக் காப்பாற்றிய, நம்ம வகுப்புத் தோழன் செந்தூரனின் அண்ணா (பெயர் ராஜேந்திரபிரசாத்தோ என்னவோ, ஞாபகமில்லை, 'பனி' செந்தூரனின் அண்ணா என்றுதான் அறிமுகம்), சத்தியவானாக நடித்த வைகுந்தன் அண்ணாவைவிட புகழ் பெற்றார்.
அடுத்த நாடகம் எங்கள் வகுப்புத் தோழர்கள் போட்ட 'ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஏழாம் நாள் பூசை எங்கள் வகுப்பினுடையது. பூசை முடிந்ததும் ஆகக் குறைந்தது கலை நிகழ்ச்சியாவது வேண்டும். ஜனார்த்தனன் பாட்டு, யாரோ பேச்சு என்று நான்கு தேற்றினாலும் ஐந்தாவது நிகழ்ச்சி மாட்டவே இல்லை. பூசையில் சகலகலாவல்லி மாலை பாடும் நேரத்தில் அரவிந்தன், வாசு, தர்ஷன் கூட்டணி வாய்க்கு வந்த வசனம் எல்லாம் பேசித் தேற்றிய நாடகம்தான் ‘ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கறுப்புக் கண்ணாடி என்று டிபிகல் எம். ஜி. ஆர் போல மேடை ஏறி, ‘பூமி உருண்டை அல்ல, தட்டைதான்' என்பதற்கு ஆதாரம் எல்லாம் கூறி அதகளம் பண்ணினான் அரவிந்தன் (ஹாட்லியில் அரவிந்தனின் கடைசி மேடை அது). கூடவே சிறு நீர்ப்பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று அருணுக்கு வசனம் வேறு. அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் கட்சி அரசியல் மீண்டும் தலைதூக்கியது என்பதால் காலத்துக்கேற்ற நாடகமாக எல்லோரையும் கவர்ந்தது ‘ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'.
அடுத்த நாடகம் எங்கள் வகுப்புத் தோழர்கள் போட்ட 'ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஏழாம் நாள் பூசை எங்கள் வகுப்பினுடையது. பூசை முடிந்ததும் ஆகக் குறைந்தது கலை நிகழ்ச்சியாவது வேண்டும். ஜனார்த்தனன் பாட்டு, யாரோ பேச்சு என்று நான்கு தேற்றினாலும் ஐந்தாவது நிகழ்ச்சி மாட்டவே இல்லை. பூசையில் சகலகலாவல்லி மாலை பாடும் நேரத்தில் அரவிந்தன், வாசு, தர்ஷன் கூட்டணி வாய்க்கு வந்த வசனம் எல்லாம் பேசித் தேற்றிய நாடகம்தான் ‘ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கறுப்புக் கண்ணாடி என்று டிபிகல் எம். ஜி. ஆர் போல மேடை ஏறி, ‘பூமி உருண்டை அல்ல, தட்டைதான்' என்பதற்கு ஆதாரம் எல்லாம் கூறி அதகளம் பண்ணினான் அரவிந்தன் (ஹாட்லியில் அரவிந்தனின் கடைசி மேடை அது). கூடவே சிறு நீர்ப்பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று அருணுக்கு வசனம் வேறு. அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் கட்சி அரசியல் மீண்டும் தலைதூக்கியது என்பதால் காலத்துக்கேற்ற நாடகமாக எல்லோரையும் கவர்ந்தது ‘ஐயா எலெக்ஷன் கேட்கிறார்'.
கடைசி நாடகம், சத்தியசீலன் மாஸ்டரின் 'Cloning in 10 Minutes'. இரண்டு இரட்டையர்கள் சிக்கியதால் கங்கூலியின் பந்து பட்டு ஆண்மையிழந்த அமைச்சருக்கு இரண்டாவதாக ஒரு பிள்ளையை ஒரு Cloning Machine மூலமாக ஒரு பொறியியலாளரும், வைத்தியரும் உருவாக்கிக் கொடுப்பதாக அமைக்கப்பட்ட ஜாலியான நாடகம். தனஞ்சயன் டாக்டராகவும் நான் பொறியியலாளனாகவும் நடித்ததாக ஞாபகம். யார் எதுவாக நடித்தோம் என்பதை விட' அமைச்சருக்கு ஏன் இனிமேல் புத்திர பாக்கியம் கிட்டாது என்பதற்கான கதையை தனஞ்சயன் எனக்குச் சொல்வதாக அமைந்த காட்சியில், சத்தியன் மாஸ்டர் ஸ்கிரிப்டில் ‘No-Ball' என்ற வார்த்தையை வைத்துக் கதகளி ஆட, அதற்கு தனஞ்சயன் கொடுத்த காட்சி வடிவத்துக்கு முன் வரிசை ஆறாம் வகுப்புப் பையன்கள் தொடங்கி, பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், மற்றைய நலன் விரும்பிகள் என்று எல்லோருமே வெடித்துச் சிரித்தார்கள். இது எனக்கும் தனஞ்சயனுக்கும் ஹாட்லியில் கடைசிமேடை.
எந்தவிதமான அரங்க வடிவமைப்பு வசதிகளும் எங்களுக்கு இருக்கவில்லை. ஒப்பனை ஓரளவுக்கு நேர்த்தியாக வந்தாலே பெரிய விஷயம். இதையெல்லாம் தாண்டி, குறுகிய வசதிகளுடன்கூட நல்ல நாடகங்களைப் பள்ளிமேடைகளில் காணக்கூடியதாயிருந்தது. காரணம், என்னவித புதுமையையும் துணிந்து ஏற்றுக்கொண்ட மாணவர்களும், அப்படியான புதுமைளை ஊக்குவித்த நல்ல ஆசிரியர்களும் எங்கள் பள்ளிக்காலத்தில் எங்கள் கூடவே இருந்தார்கள். கூடவே ‘Oliver Twist' ஆகவும், ஆங்கிலத்தில் வசனம் பேசும் அரிச்சந்திரனாகவும் நடுவர்களையே கண்கலங்க வைக்கும் அபார திறமைசாலிகளும் இருந்தார்கள், அரை மணியில் நாடகம் தயார்செய்யும் அற்புதமான படைப்பாளிகளும் இருந்தார்கள். இன்றைக்கும் ஹாட்லி மேடையில் நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு ஆங்கில நாடகத்தில் இரு பாத்திரங்களை ஏற்று நடித்ததாக என் தம்பி சொன்னபோது சந்தோசமாக இருந்தது.
17 comments:
எங்கட காலத்திலை வாணி முகுந்தன் குறூப் சின்னப்பொடியள் அப்பவே அவங்கள் தான் நாடகம் எல்லாம் போடுகிறது. ரகுவரன் சேரின் நாடகங்கள் அனைத்தும் எங்களுக்குப் பிடிக்கம் அந்தக்காலத்தில் மிருகங்களை வைத்து ஒரு நாடகம் போட்டிருந்தார் பெயர் ஞாபகமில்லை, அந்த நாளில் கலக்கிய நாடகம் மெதடிஸ்ட் வட இந்து என பெண்கள் பாடசாலையிலும் அரங்கேற்றினார்கள். அவங்களுடன் நாங்களும் சும்மா போய் பார்த்தது. டொக்ட முருகானந்தனின் மகன் பாலசிங்கம் டீச்சரின் மகன் எனப் பலர் நடித்தார்கள்.
வந்தி அண்ணா
ரகுவரன் சேர் இப்பவும் இருக்கிறார் ஹாட்லியில்... அவரது மேடைப்பணி இப்பவும் தொடர்கிறதாகக் கேள்விப்பட்டேன்
நல்ல நினைவுகள். மேலும் ஹாட்லிக் கல்லூரி நாடகங்கள் என்றால் விமலேஸ்வராவுக்கு முக்கிய இடமுண்டு.அவரைப் பற்றி ஒரு பதிவை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நான் நாடகங்களில் நடித்தது கிடையாது ஆகையால் நீதான் அதைப் பற்றி எழுத வேன்ன்டும். தொடர்ந்து பதிவுகள் போடுமளவுக்கு நேரம் அவ்வளவு கிடைக்கிறதா????? எனக்கெண்டா நேரம் இல்லை மச்சான்.
பனையூரான்...
வேலை செய்யும்போது, சாப்பிடும்போது, பயணத்தின் போது பதிவுகளை மண்டைக்குள் உருவாக்கிவிட்டு 15 நிமிடம் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தால் பதிவு போட்டு முடிந்துவிடும்...அவ்வளவுதான்
பழைய இனிய நினைவுகளை மீட்ட கிருத்திகனுக்கு நன்றிகள். வாந்தி அண்ணா சொன்னது போல மிருகங்களை வைத்து மேடையெற்றிய நாடகம் பல மேடைகளில் பாராட்டுப் பெற்றது. ஆடும் ஓநாயும் என்ற கதையை மையமாகக் கொண்டு நவீனமயமாக்கப்பட்டது அந்த நாடகம். (“...ஓநாயும் தாடி ஆடும்” தலைப்பு என்பதாக ஞாபகம்).
அரவிந்தனின் மேடைத் தோற்றம் இன்றும் என் கண்களில் நிற்கிறது. புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதை நினைத்து மனம் வருந்துகிறேன்.
கீத், உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மேடையேறிய அந்த ஆங்கில நாடகம் தான் நான் இதுநாள் வரை மேடையேறிய கடைசி நாடகமாகும்.(சீலன் ஆசிரியருடனான புகைப்படத்துக்கு நன்றி- இது பற்றி அவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்) இனி மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கவில்லை. நான் மேடையேறிய நாடகங்கள் பற்றியும் அவற்றை நெறியாழ்கை செய்தவர்கள் பற்றியும் பதிவிடுவேன். நாடகங்களும் என் வாழ்வை நெறிப்படுத்தியவை என்றால் சந்தேகமேயில்லை.
தனஞ்சி
அதுதான் உங்கள் கடைசி மேடை என்பது நம்பமுடியாமல் இருக்கிறது தனஞ்சி... சீலன் ஆசிரியருடனான புகைப்படம் உங்கள் மூஞ்சிப் புத்தகப் பக்கத்தில் சுட்டதுதான்.
நானும் என்னுடைய நாடக வாழ்க்கை ஹாட்லிக் கல்லூரியுடன் முடிவுக்கு வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை என்பதை விட, கிடைத்த சந்தர்ப்பங்களை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. (அந்த நாடகத் தலைப்பு “தப்பி வந்த தாடியாடு” என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்)
ஹாட்லியின் அரங்குகளில் புகழ்பெற்ற நாடங்கங்களை மீண்டும் நினைவூட்டி ஒருகணம் எம்மை கல்லூரிக்கு அழைத்தே சென்றுவிட்டீர்கள் கிருத்திகன்,
"ஐயா எலெக்ஷன் கேட்கிறார்" என்ற நாடகம் கல்லூரியின் மர நிழலின் கீழ் சிரித்தபடியே பார்த்த அனுபவமும்
அம்பிகாபதி அமராவதி அந்த வன்னியின் தொடக்கத்தில் பார்த்ததும் இன்றும் மனக்கண்ணில் நிற்கின்றன.
உங்கள் பதிவுகள் காலம் கடந்து வந்த பழைய சுவாரஷியமானவைகளை தொகுத்து வருகின்றன
வாழ்த்துக்கள் இன்னும் வரட்டும்
அன்புடன் கரவைகுரல்
நன்றி கரவைக்குரல் அண்ணா
பால்குடி தப்பி வந்த தாடியாடு தான் அந்த நாடகம். அருமையான நாடகம் ரகுவரன் சேர் சில நாடகங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன்
Nice post and the follow up conversation.
You are in my favorite list now.
கருத்துக்கு நன்றி நாடோடிப் பையன்... பின்னூட்டம் இட்ட அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதான் உரையாடல் அழகாக வெளிவந்திருக்கிறது... முக்கியமாக கரவைக்குரல் பாடசாலைக் காலங்களிலேயே தன் தந்தை வழிச் சொத்தான வில்லுப்பாட்டுக் கலையில் கலக்கியவர்...பால்குடியுடன் நானும் மேடையேறியிருக்கிறேன்.. அவர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடலில் நிச்சயம் ஒரு நேர்த்தி இருக்கும்
அருமையான பதிவு கிருத்தி, வாழ்த்துகள். பல பழைய நினைவுகள் மனத்திரையில் படமாக ஓடியது. நான் ஹாட்லியில் படித்தபோது போன ஒவ்வொரு கலைவிழா, பரிசளிப்புவிழா, ஒளிவிழா நாடகங்கள், வில்லுப் பாட்டுக்கள், பட்டிமன்றங்கள் எனது மனதிலும் இன்றும் பசுமையாக நிலைத்து நிற்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தவை பட்டிமன்றங்கள் தான். நான் படித்த காலத்தில் வாணிமுகுந்தன் அண்ணா, பிரதீபன் அண்ணா, ஜனார்த்தனன் அண்ணா (பெயர் சரி என நினைக்கிறேன். கண்ணாடி போட்ட கொஞ்சம் உடம்பானவர் - 98/commerce) இந்தக் கூட்டணி நவம் சேரை நடுவராப் போட்டு போடும் பட்டிமன்றங்கள் மாணவர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தன. நானும் சீலன் சேர், ரகுவரன் சேர், ஆறுமுகம் டீச்சர் போன்றவர்களின் நெறியாள்கையில் நடிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நானும் எனது அனுபவங்களை இன்னொரு பதிவில் இடுகிறேன்.
நல்லது தும்பளையான்...உங்க உண்மையான அடையாளம் தெரிய மாட்டேங்கிறது...கண்டுபிடிக்கிறேன்
விமலேஷ்வரா அண்ணா நடித்த அருளானந்தம் சேரின்(தர்சனின் அப்பா) நெறியாள்கையில் ‘சரவணை;’ என்ற நகைச்சுவைப் பாத்திரம் என்னை கவர்ந்தது. னானும் ஒரு சில நாடகங்களில் மேடையேறி இருந்திருக்கிறேன் எனும் போது சிறிது சந்தோசம் தான்
சரவணையை நினைவு படுத்திய டவுட்டுக் கணேசனுக்கு நன்றிகள். பனையூரான் சொன்னது போல விமலேஷ்வரா அண்ணாவுக்கு ஹாட்லி மேடைகளில் தனியிடம் உண்டு.
(டவுட்டுக் கணேஷன் நீர் பலே கில்லாடியப்பா... எம்மோடு படித்தது மட்டுமில்லாமல் - உம்முடைய பெயரை நசூக்காக பின்னூட்டத்தில் போட்டிருக்கிறீர்.)
எனக்கு தம்பு அண்ணாவின் பிடித்த பாத்திரம் பத்மாசூரன். மிக அழகாக நடித்திருந்தார். அவருடைய நகைச்சுவை நாடகங்களும் சிறப்பானவை.
Post a Comment