Friday 10 July 2009

வைகோ என்றொரு கடுப்பு

வைகோ அல்லது வை. கோபல்சாமி பற்றி நான் முதன் முதலாகக் கவனிக்க ஆரம்பித்தது 1993ல் அவர் தி.மு.க. விலிருந்து விலகி (விலக்கப்பட்டு) ம.தி.மு.க. ஆரம்பித்த போதுதான். ரொம்ப சின்னவயதுதான் எனக்கு, இருந்தும் கருணாநிதி, ஜெயலலிதா, கபில்தேவ், அஸாருதீன் போன்ற பெயர்களெல்லாம் அப்பா மூலமாகப் பரிச்சயமாகியிருந்தது. கருணாநிதியின் பேச்சுக்களை அப்போ ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பும் போதெல்லாம் கேட்டிருக்கிறேன், அப்பா பரிந்துரைத்ததால். அவரது தமிழ் நிஜமாயே என்னை அப்போ கட்டிப்போட்டிருந்தது. அந்த சின்ன வயதிலேயே ஜெயலலிதா என்றால் ரொம்பக் கெட்டவர் என்ற ஒரு விம்பமும் என் மனதில் விழுந்தது. கருணாநிதியை விட்டுப் பிரிந்த, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய வைகோவை எனக்கு அறவே பிடிக்கவில்லை. அந்த வெறுப்பே அவரைப்பற்றிய செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வைத்தது.

வைகோ மீதான அதீத வெறுப்பு அற்புதமான ஒரு விருப்பாக மாறக் காரணம், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் ஒருமுறை ஒலிபரப்பிய வைகோவின் பேச்சு ஒன்று. அப்பா கேட்டுக்கொண்டிருந்தார். அந்தப் தலைப்புக் கூடத் தெரியாது எனக்கு, இருந்தும் ஏதோ ஒன்று ஈர்த்தது. அழகு தமிழா? கம்பீரக் குரலா? இல்லை இரண்டுமா? தெரியவில்லை. ‘ஆரப்பா பேசுறது?' என்றேன். ‘வைகோ' என்றார் அப்பா. சண்டைக்காரனாக மட்டும் அதுவரை மனதில் நின்ற வைகோவின் புதுமுகம் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்துக்கள், மற்றும் அவரது போராட்ட உணர்வு அவரை மேலும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கச் சொன்னது. வெள்ளை வேட்டி சட்டை, கறுப்புத் துண்டு என்று கம்பீரமாக வைகோ நிற்கும் போஸ்களை விகடன், குமுதத்திலிருந்து வெட்டிச் சேர்க்குமளவுக்கு ஆதர்சமானார்.

வைகோவின் தூய்மையான விம்பத்தில் விழுந்த முதல் கறை அவர் முதன் முதலாக ஜெயலலிதாவுடன் சேர்ந்தபோது. ஊழலைக் கண்டித்து, வாரிசு அரசியலுக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டு வெளியேறிய போராளி வைகோ அரசியல் காரணங்கள் என்ற சப்பைக்கட்டு கட்டி ஊழல் ராணியின் தர்பார் புகுந்தது மிகவும் வருத்தம் தந்தது. பின் தன்மீது தானே சேறு பூசுவது போல் மீண்டும் கருணாநிதியோடு சேர்ந்தார். அப்படி சேர்ந்தது அவரை பொடா சட்டத்தில் ஜெயலலிதா அரசு 18 மாதம் (விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதெல்லாம் ஒரு கண் துடைப்புக் காரணம்) சிறைக்குள் தள்ளக் காரணமாயிருந்தது. கருணாநிதியும் வைகோவும் நெடுந்தொடர் இயக்குனர்களால்கூட சிந்திக்கமுடியாத செண்டிமெண்ட் காட்சிகளை அரசியல் மேடையில் அரங்கேற்றினார்கள். சரி, இப்போதாவது ஜெயலலிதாவைப் பற்றிப் புரிந்து கொண்டாரே என்று நிம்மதி கொண்டாலும், இந்த மீள் இணைப்பு ஏனோ சந்தோஷம் தரவில்லை எனக்கு.

சில காலத்துக்குப் பின் நான் ஒரு கொள்கை ரீதியான அரசியல்வாதியே அல்ல. நானும் கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் வரும் அடுத்த மட்டமான தமிழ்நாட்டு அரசியல்வாதிதான் என்று வைகோ தெள்ளத் தெளிவாக அறிவித்தார், மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததன் மூலம். தேர்தல் ராஜதந்திரம் அது இது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், வைகோவின் செல்வாக்கு அடியோடு பறிபோனது. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் விழுந்தது. அரசியல் ரீதியாக எந்தக் கொள்கையும், தன்னை நம்பி ஓட்டுப்போடும் மக்களுக்கு எந்த விதமான நல்ல திட்டங்களும் இல்லாத வைகோ, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நேர்மையாக இருந்தார், அல்லது நேர்மையானவர் போல் காட்டிக்கொண்டார். அது ஈழ விடுதலை பற்றிய அவரது கருத்து. எப்போதும், எந்த அரசாங்கம் ஆண்டாலும், எந்த சட்டம் பாய்ந்தாலும் ஈழப்பிரச்சினை பற்றி உறுதியாகக் குரல்கொடுத்து வந்தார் வைகோ. அது உண்மையிலேயே உணர்வு காரணமாக, ஈழத்தமிழன் மீதான அன்பு காரணமான குரலாக தென்பட்டது. ஆனால் சமீபத்திய பாராளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணத்த்திலும் நாற்பது லோட் மண்ணை அள்ளிப்போட்டார் வைகோ.

தேர்தல் காலத்தில் ஈழப்போரும் ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தது. அதை வைகோ தனது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஈழத்தமிழர் பற்றிய கூட்டங்களில்கூட கருணாநிதியை வசைபாடுவதையும், ஜெயலலிதா புகழ் பாடுவதையும் தலையாய பணியாய்க் கொண்டார். ஈழப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டு மக்களிடமிருந்த நேர்மையானதும், அடிமனதிலிருந்து எழுந்ததுமான பாச உணர்வை தம் வாக்குகளாக மாற்ற கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் கருணாநிதி கூட்டணி, ஜெயலலிதா கூட்டணி, ராமதாசு என்று எல்லோருமே செய்த கேவலமான வேலையை வைகோவும் செய்தார். ஆனால் பாவம் இவரது சந்தர்ப்பவாதம் விலைபோகவில்லை. எங்களுக்கு எத்தனையோ விதத்தில் ஆதரவாக இருந்த வைகோ சமீபகாலங்களில் தான் கொள்கையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, மண்டைக்குள் மூளையே இல்லாத, பகுத்தறியும் தன்மை இல்லாத, உணர்ச்சி இல்லாத ஆறறிவில் ஓரறிவு கூட இல்லாத மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒற்றை நூலில் உயிரைக்கட்டி ஈழ மக்கள் முகாம்களில் அடைபட்டிருக்க இங்கே இருந்து கொண்டு இவர் விடும் அறிக்கைகள், இவர் கொடுக்கும் பேட்டிகள், இவரது பேச்சுக்கள் எல்லாமே இலங்கை அரசாங்கத்தைக் கடுப்பேத்துவதாகவே அமைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. சில விஷயங்களை சொல்லி நம்மை உணர்வாளனாகக் காட்டிக்கொள்வதை விட, சொல்லாமல் இருப்பது எவ்வளவோ நல்லது என்பதை யாராவது இவருக்குச் சொல்லவேண்டும். அது சரி, தமிழ் நாட்டில், தன் தொகுதியில் இருக்கும் தமிழனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாத இவரெல்லாம் கடல் கடந்து இருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியபோதே இவர் ஈழப்பிரச்சினையை தனது அரசியல் இருப்பைக் காட்டுவதற்காகவே பயன்படுத்துகிறார் என்பது, போராட்டம் தோற்க முன்னும் தெரியவில்லை, தோற்ற பின்னும் புரியவில்லை எம்மவர்க்கு. பாவம், வைகோவின் உணர்ச்சிப் பேட்டிகளை வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்படுகிறார்கள், தங்கள் ரத்த சொந்தங்களுக்கு தாங்களே ஆப்பு வைக்கிறோம் என்பது புரியாமல்.

13 comments:

Anonymous said...

Unmai

செந்தில் said...

ur scarcely accurate

Suresh Kumar said...

இவர் கொடுக்கும் பேட்டிகள், இவரது பேச்சுக்கள் எல்லாமே இலங்கை அரசாங்கத்தைக் கடுப்பேத்துவதாகவே அமைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.//////////////

எப்படி கருணாநிதி சொல்லுற மாதிரி சொல்லுறீங்க கேவலமா இல்லை . ஆறு கோடி தமிழர்கள் இருந்தும் நமது கையாலாகாத தனத்தை பற்றி கவலை படுங்கள் . ஒரு லட்சம் தமிழர்களின் சாவுகள் ஏற்பட முதல் காரணம் ராஜபக்சேயை விட கருணாநிதி தான் .

அங்கெ விடுதலை புலிகள் போராடியது ஏதோ வன்முறையல்ல தங்களின் உரிமைக்காக உரிமைக்காக போராடிய விடுதலை புலிகளை அளித்து அந்த மக்களை அகதி முகாம்களில் அடைத்து இவ்வளவிற்கும் துரோகிகளாகிய நாம் காரணமாகி இப்போது மகிந்தாவின் காலில் விழ வேண்டும் அவர்களை கடுப்பேத்தகூடாது என்று எப்படி அழகாக சொல்லுகிறீர்கள் .

மேலும் இதையும் படியுங்கள் http://www.puthinam.com/full.php?2b24OQ04a33y8A1e4d4ZPnacb0ae5CW24d3WUpE2e0dF3OpPce04hYiV0cc4uj7Bde

வைகோவை பற்றி சொல்லவேண்டுமென்றால் அவர் தங்கள் குழைந்தை பெற பில்லைகளுக்க்ககவோ இன்றுவரை கட்சி நடத்தவுமில்லை பிள்ளைகளின் பதவிக்கும் தன பதவிக்கும்காக தமிழர்களின் கொலைக்கு கருணாநிதியை போல் காரணமாகவும் இல்லை .

உங்கள் ரசனை எப்படி இருக்கிறது இதனால் தான் சுயநல வாதிகள் தமிழக அரசியலில் கூடி விட்டனர் . வைகோவை இகழ்ந்து பேசுவதால் உங்களையே நீங்கள் இகழ்ந்து பேசுகிறீர்கள் .

baleno said...

முழு உண்மையை அப்படியே கூறியிருக்கிறீர்கள்.

Unknown said...

சுரேஷ்குமார்.... மகிந்தவின் காலில் விழச்சொல்லி நான் சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கும் வைகோ சொன்னார் ‘வவுனியா ஆயுதக்கிடங்கை புலிகள்தான் எரித்தார்கள்' என்று. அடுத்த நாள் முகாம்களிலிருந்த 20க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள். ஆயுதக்கிடங்கை புலிகள் எரித்ததாக இருந்தாலும்கூட அதை வெளியே சொல்லி முள்வேலிக்குள் இருக்கும் எங்கள் மக்களை ஆபத்துக்குள்ளாக்குவதற்குப் பெயர் என்ன சுரேஷ்குமார்? இதைவிட முக்கியம் நான் ஒன்றும் தமிழக ஆள் இல்லை. இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். என் உறவுகளும் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் அங்கே அல்லல் படும்போது கேவலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள வைகோ செய்யும் கேலிக்கூத்துக்களை வீரம் என்றோ, விவேகம் என்றோ கொண்டாட நான் ஒன்றும் மதியிழந்து போய்விடவில்லை. இன்றைய சூழ்நிலையில் வீரவசனம் முக்கியமில்லை. புலிகள் மீண்டும் தளைத்தோங்கவே முடியாமல் போகுமளவுக்கு விளைவுகளை வைகோ போன்றவர்களின் முட்டாள்தனமான பேச்சுக்கள் உண்டாக்கும் என்பதை மறக்கவேண்டாம். இந்தியாவில் இருக்கும் வைகோ மற்றும் நீங்கள், கனடாவில் இருக்கும் நான் பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது என்று என்னவேண்டுமானாலும் இலங்கைத் தமிழர்களைப்பற்றி இந்தக் கணத்தில் பேசிவிடக் கூடாது. நேர்மையாக உண்மையிலேயே மக்கள் நலத்துக்காக நாட்டை ஆளும் அரசாங்கம் இலங்கையில் இருந்தால்கூட பரவாயில்லை. இப்படியான உணர்ச்சிப்பேட்டிகளைக் கேட்டால் உடனே தமிழர்களைத் துன்புறுத்துமாறு உத்தரவிடும் ஒரு கேவலமான, அரக்க குணம் கொண்ட ராஜபக்ச தலைமையின் கீழ் இலங்கை இன்றைக்கு இருக்கிறது என்பதை என்றைக்கும் மறக்கக் கூடாது, அது வைகோவாயினும் சரி நம்மவர்களாயினும் சரி.

baleno said...

இலங்கை தமிழர்களுக்கு இறப்பை ஏற்படுத்தி அப்பாவி தமிழர்களின் உயிர்களைக் குடித்தும்,தமிழர்களை அங்கவீனர்களாக்கியும் இறுதியில் முட்கம்பி வேலிக்கு பின்னால் கொண்டுவந்து நிறுத்தியதிற்க்கு முழு காரணம் பிரபாகரனும், புலிகளுமே.
புலிகளை தீவிரமாக ஆதரித்தோர் தங்களது செயல்கள் இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இருந்தது என்பதை இனியாவது உணர வேண்டும்.

Unknown said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனானி, செந்தில் மற்றும் baleno

கிருஷ்ணா said...

வைகோவிடம் நான் ரசித்ததெல்லாம் அவருடைய மொழி ஆளுமை பேச்சாற்றல் என்பவற்றோடு, சேராத இடமெல்லாம் சேர்ந்தாலும் தன்னுடைய ஈழப்போராட்டம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பதில் அரசியலுக்காக அவர் சமரசம் செய்துகொள்ளாததும்தான். அவருடைய அரசியல் வீழ்ச்சிக்கான காரணம் ஈழப்போராட்டம் பற்றி அதிகம் பேசிய அளவுக்கு தன்னுடைய தொகுதி மக்களைப்பற்றிச் சிந்திக்காதது மட்டுந்தான் என்று நம்புகிறேன்.

உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதென்பது வைகோவுடைய இயல்பு, எங்களுக்குத் தேவையான வரையில் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடிவிட்டு இப்போது பழம் புளிக்கிறது என்று திட்டுவது எங்களுடைய தவறேயன்றி வைகோவுடையது அல்ல. வேண்டுமானால் அவருக்கு அரசியல் சாணக்கியமும் நடைமுறை உலகப் போக்கும் தெரியவில்லை என்று சொல்லலாம்.

ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட விபத்து குறித்து வைகோ பேசிய பேச்சுக்கும் வவுனியாவில் தமிழ் இளைஞர்கள் காணாமற் போனதற்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை நண்பரே...

Anonymous said...

Please don't Lie.

Alex Mathew said...

First you tell your stand on eelam or tamils now. who can speak about tamils ? or who can not need to speak? when rajapakse will release all tamils from camp or jail ? you pls suggest in which way tamil nadu politicians need to talk about tamils in eelam ? because now the situation in tamil nadu , only vaiko and nedumaran speaking about eelam tamils.

We dont need to tell anything about karunanithi as whole world knows his interest on eelam tamils. Central and cong. govt's stand all knows very well.

only few available in tamilnadu for supporting eelam tamils , as per your stand that few too not fit...

in eelam .. mathaiyah,karuna,anandha nayagi and duklus too tamils... what about you ? pls you be very truthfull when you coming to blog writing.

upto my view, vaiko loses many more rather than gaining in eelam issue on his political career.

EELAM ISSUE IS STILL BREAKING STONE TO HIS POLITICAL CAREER IN TAMIL NADU. PEOPLE LIKE YOU NOT LIKE VAIKO'S STAND ON EELAM.

REALLY WE PEOPLE WONDERING WHY STILL VAIKO NEED TO TALK for EELAM TAMILS ? better he can give up that issue.

I am not belongs to any party but my straight view is , vaiko spoiled his political career because of eelam issue only.. better he can give up that too. peoples like this blogger better knows how to speak and how to manage eelam issue.

Alex Mathew.

Anonymous said...

Good article. Instead of attacking directly (anybody VaiKo etc), if you would have given different heading like What EElam Tamils expect from Indian politicians?, it would be better. Now your article looks more like D.M.K leader's recent statement "Don't make Rajabakshae angry?". I am not sure, I am right or not, because you live there and your first hand experience would be better than my knowledge through blogs and media.

Anonymous said...

Good article. Instead of attacking directly (anybody VaiKo etc), if you would have given different heading like What EElam Tamils expect from Indian politicians?, it would be better. Now your article looks more like D.M.K leader's recent statement "Don't make Rajabakshae angry?". I am not sure, I am right or not, because you live there and your first hand experience would be better than my knowledge through blogs and media.

Anonymous said...

தமிழர் ஒற்றுமை சக்தியை போரின் பொது குலைத்த பெருமை வைகோவுக்கும் , நெடுமாறனுக்கும் உண்டு. இவர்கள் இருவரும் போரின் போது ஜெயின் வாயை பார்த்து அறிக்கை விட்டு இருந்தனர். கலைஞரும் அப்பட்டமான அரசியல்வாதியே. இவர்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு ஆப்பு வைத்துவிட்டு வெறும் உணர்ச்சி பேச்சு, வெட்டி பேச்சு பேசி விட்டு ஜெவிடம் பணத்தை கறந்து விட்டு போய் விடுவர். அவர் பார்த்து கொண்டு ஆட்சியை இவர்கள் விருப்பப்படி தூக்கி தருவாரா? இப்போதெல்லாம் யார் நல்லவர் என்பதல்ல பிரச்சினை. யார் சற்று குறைவாக அநியாயம் செய்வார் என்பதே. அதனால் அவர் தன் பங்குக்கு காங்கிரஸ் சொன்ன படியெல்லாம் ஆடி புலிகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. வைகோவால் இதுவரை வெறும் உணர்ச்சி பேச்சு தவிர எதாவது உருப்படியாக நடந்ததுண்டா? இவரால் எதாவது செய்ய முடியுமா. செயல்,முடிவு செய்து பொறுப்பு ஏற்கும் போது தெரியும் அதன் வலி. ஈழ மக்களின் உயிர் பிரச்சினையிலும் கேவலமாக பொறுப்பற்று நடந்தார் இந்த சும்மா வெட்டி உணர்ச்சி பேச்சு பேசி காசு பார்க்கும் வைகோ.

தமிழர் நலன் என்பது பற்றி சற்றும் அக்கறை இல்லாதவர் வைகோ. சேது திட்டம் பற்றி ஜெ எதிர்க்கிறார் என்பதால் இன்று வரை வாய் திறக்கவில்லை. என்ன கேவல வாழ்க்கை. இல்லாவிட்டால் அதை கொண்டு வந்ததே நான் என்று வாய் சவடால் பேசுவர்.

தமிழரின் ஒற்றுமை இல்லா குணத்தால் ஈழ மக்கள் நாடிழக்க வேண்டியதாகிவிட்டது.
அதேபோல் இங்குள்ள தமிழர் ஒற்றுமை இன்மையால் , இங்குள்ள தமிழர் நல வாழ்வும் பரி போகும் அபாயம் உள்ளது. எல்லா தமிழர் உரிமை பிரச்சினையிலும் எல்லா அரசியல் கட்சியும் ஓரணியில் இருந்தால், தமிழர் நன்றாக இருக்க முடியும்.