Sunday, 26 July 2009

வில்லுப்பாட்டு

எங்களது அடுத்த தலைமுறைக்குத் தெரியாமலே போய்விடக்கூடிய நாட்டுப்புறக் கலைகள் ஏராளம். அவற்றில் வில்லிசை அல்லது வில்லுப்பாட்டும் ஒன்றாகும். ஒரு காலகட்டத்தில் எங்களூர் திருவிழாக்களில் கட்டாய இடம் பிடித்த இந்த வில்லுப்பாட்டு பற்றி எங்களது சந்ததியர்க்கு ‘முன்னொரு காலத்திலே' என்று ஆரம்பித்து கதை சொல்வது போல் சொல்லவேண்டிய ஒரு காலம் வெகு தொலைவில் இல்லை. வில்லுப்பாட்டு பற்றிய Technical அம்சங்களையும் வரலாறையும் எனக்குத் தெரிந்தளவில் சுருக்கமாகச் சொல்ல விளைகிறேன். அதேபோல் என் சிறுவயதில் என்னில் தாக்கமேற்படுத்திய வில்லிசைக் கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்.

எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் போர்க்களத்திலே வீரர்களை உற்சாகமூட்ட பயன்பட்ட ஒரு கலையாகவே இது ஆரம்பகாலத்தில் அறியப்பட்டது. 15ம் நூற்றாண்டில் ஒரு அரசவைப்புலவர் இதற்குரிய இலக்கண வடிவத்தைக் கொடுத்ததாக சிலரும், 1550ல் இதற்குரிய இலக்கணத்தை அருதக்குட்டி என்ற புலவர் நெறிப்படுத்தினார் என்று சிலரும் சொல்வார்கள். ஏழடி நீள் வில்லில் மணிகள் இணைக்கப்பட்ட நாண் பூட்டி வீசுகோல் என்கிற கம்பால் அடித்து இசைவாணர் பாட, கடம், உடுக்கை, ஜால்ரா மற்றும் கட்டை எனப்படும் தேக்காலான இசைக்கருவி ஆகியவை பக்க வாத்தியங்களாகப் பயன்பட வில்லிசை ஜோராக அரங்கேறும். பிற்பாடு ஆர்மோனியம், தபேலா போன்ற கருவிகளும் வில்லிசைக்குள் நுழைந்தன. (வில்லிசை பற்றிய ஒரு நல்ல ஆய்வுக்கட்டுரையிலிருந்து மேற்படி விஷயங்களை எடுத்தேன். அக்கட்டுரையை முழுமையாக இங்கே படியுங்கள்)

வில்லிசை தொடங்க முன்னர் சில சம்பிரதாயங்கள் உண்டு. முதலில் இறைவணக்கம், காப்புப்பாடல், குரு வணக்கம், அவைவணக்கம் என்று போய் பின்னர்தான் வில்லுப்பாட்டின் முக்கிய பகுதிக்குள் போவார்கள். நான் பார்த்த பெரும்பாலான வில்லிசைக் கலைஞர்கள், இறைவணக்கத்தின் பின் நேரடியாக ‘தந்தனத்தோமென்று சொல்லியே... வில்லினில் பாட..' என்று ஆரம்பித்து 'சபையிலுள்ள பெரியோரே தாய்மாரே..' என்று அவை வணக்கம் வைப்பார்கள். எங்களூரில் ‘அப்புமாரே ஆச்சிமாரே' ‘குஞ்சுகளே குருமன்களே' என்று பல விஷயங்கள் சேர்த்து Improvise பண்ணுவார்கள். அதுவும் ‘ஆமாம்' போடுவதற்கென்று இருப்பவர் அநேகமாக கமெடியனாக இருப்பார். மற்றவர்களும் காமெடியில் சளைத்தவர்கள் இல்லை.

என்னுடைய இளம்வயதிலே இரண்டு குழுக்கள் எங்கள் ஊரில் புகழ் பெற்றிருந்தார்கள். ஒன்று 'சின்னமணி' குழு. மற்றையது 'வானம்பாடி' யோகராசா குழு. சின்னமணி தலைமையிலான குழுவினுடைய 'சத்தியவான் சாவித்திரி' வில்லுப்பாட்டு ஒருமுறை பார்த்தேன். சின்னமணி சிலேடையில் புகுந்து விளையாடுவாராம். அந்த வயதில் எனக்கு சிலேடை பிடிபடாமல் போனதால் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்பதற்காகச் சிரித்து வைத்தேன். சத்தியவான் சாவித்திரி கூத்தில் வரும் ‘சிங்கத்தால் நானடைந்த பங்கம் தீர்த்ததாலே' என்ற பாடலை எனக்கு அறிமுகம் செய்தது சின்னமணி குழுதான். ஆனால் ஏனோ சின்னமணியை எங்களூர் பெரிசுகள் கொட்டக் கொட்ட முழித்திருந்து பார்க்க அரைவாசியிலேயே அப்பா மடியில் தூங்கிவிட்டதால் அவர்பற்றிய நினைவலைகள் என்னிடம் பெரியளவில் இல்லை.

வானம்பாடி பற்றிய நினைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. காரணம், வானம்பாடி யோகராசாவும், என்னுடைய தந்தையும் வகுப்புத் தோழர்கள். முதன்முதலாக வானம்பாடி குழு எங்கள் கோயிலுக்கு வந்தபோது யோகராசா அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பா மடியில் இருந்த எனக்கு கச்சான் வாங்கித்தந்தார். அதற்காகவே விழித்திருந்து பார்த்தேன். 'பிள்ளையார் சுழிபோட்டு, நீ நல்லதை தொடங்கிவிடு' என்று கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிப்பார். 'அடுத்ததாக புரட்சிப்பாடல்கள்' என்று அறிவித்து மூன்று தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடுவார். ‘எல்லொருக்கும் நல்ல காலமுண்டு' போன்ற இரண்டு சினிமாப் பாடல்களையும் பாடுவார். அதன் பின் ‘தந்தனத் தோமென்று சொல்லியே' என்று ஆரம்பித்து வில்லிசைப்பார். கச்சான் வாங்கித்தந்ததால் அவரது ‘வள்ளி திருமணம்' முழுமையாகப் பார்த்தேன்.

சின்னமணி குழுவுக்கும், வானம்பாடி குழுவுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. சின்னமணி சிலேடை நயத்தால் சுவைகூட்டுவார். யோகராசாவின் குரல் வளம் ஈர்க்கும். சின்னமணியின் பின்புலம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் யோகராசா ஒரு ஆசிரியராக இருந்தவர் என்பது என் ஞாபகம். அதனால் கொஞ்சம் சைவமாக இருக்கும் அவரது வில்லுப்பாட்டுகள். கொஞ்ச காலத்தின் பின் கோவில்களில் கோஷ்டி கானம் என்று சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட ஆரம்பித்த பின் யோகராசா, சின்னமணி எல்லோரையும் மறந்துவிட்டேன். ஆனால் யோகராசா மறுபடி எங்கள் முன் வந்தார், அவரது மகன் ரூபத்தில். தாய் எட்டடி குட்டி பதினாறடி என்பது போலவே பதின்ம வயதுகளிலேயே பாடசாலை மேடைகளில் தன் நண்பர்களோடு சேர்ந்து வில்லிசைத்தபோது பலரும் சொன்னார்கள், ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்று. ஆனால் துரதிர்ஷ்டம் அவர்களின் திறமைகளுக்கு பாடசாலை மேடைகளைத்தவிர வேறு களங்கள் கிடைக்கவில்லை.

எங்கள் பாடசாலைக் காலத்திலேயே வானம்பாடி யோகராசா இயற்கையெய்தி விட்டார். சின்னமணி பற்றிய தகவல்கள் எனக்குப் பெரியளவில் தெரியாது. வில்லுப்பாட்டு சீண்டப்படாத கலையாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. இன்றைக்கு அமீரகத்திலே வசிக்கும் யோகராசாவின் புதல்வனுக்கு இனி அந்த உன்னதக் கலைக்குரிய மேடைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. சமீபத்தில் கூட உங்கள் சிறுவயதுகளில் உங்களது பொழுதுபோக்கு என்ன என்று அக்கா மகன் கேட்க விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போ எதேச்சையாக வில்லுப்பாட்டு கேள்விப்பட்டிருக்கிறாயா என்று கேட்டபோது, கேள்விப்பட்டிருக்கிறேன் என்றான். 'அட, உனக்கு என்ன தெரியும் வில்லுப்பாட்டு பற்றி, சொல்லு பார்ப்போம்!' என்றேன், ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன். ‘ராமா ராமா ராமா ராமா, ராமன்கிட்ட வில்லக் கேட்டேன்' என்று காதில் ஈயம் உருக்கி ஊற்றினான். உக்கிரமான ஒரு மகிழ்ச்சியில் இருந்து பிறந்த இந்தக் கலை, மக்கி மண்ணோடு மண்ணாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

13 comments:

வந்தியத்தேவன் said...

நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசைக்குழுவும் நல்ல பிரபலம்.

பால்குடி said...

சின்னமணி வில்லிசையை 2002ம் (சரியாக நினைவிலில்லை) ஆண்டளவில் பார்த்தேன். அவரின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய முகபாவனையும் தமிழ் துள்ளி விளையாடும் சிலேடைகளும்... அருமை...
வானம்பாடி குடும்பத்தினர் குரல் வளத்தினால் எம்மைக் கவர்ந்தவர்கள். தொடர்ந்தும் அவருடைய புதல்வர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மேடையேறி வில்லிசைக் கலையை காக்க வேண்டும் என்று அன்பு கலந்த சிறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
வந்தியண்ணா சொன்னது போல ஸ்ரீதேவி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Unknown said...

எங்கட கோயில் மகாசபை தலைவருக்கு ஸ்ரீதேவி என்ற பெயர் பிடிக்கவில்லையோ என்னவோ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தி அண்ணா மற்றும் பால்குடி

jeya said...

வில்லிசை என்றால் என்ன என்று கேற்கும் காலத்தில் இருக்கோம்!!!!
சிந்திக்க வேண்டிய விடயம்

கரவைக்குரல் said...

வில்லிசை பற்றிய ஒரு சிறந்த பதிவைத்தந்த கீத் உங்களுக்கு நன்றிகள்
பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வரும் இந்தக்கலை இப்போது மிகவும் அரிதாக காணப்படுவது வருத்தமளிக்கும் விடயம் தான்.இருந்தாலும் அதற்கு தொடர்ந்தும் வாழ்வு இருக்கிறது என்பதும் உண்மை.
"சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மேடையேறி வில்லிசைக் கலையை காக்க வேண்டும் என்று அன்பு கலந்த சிறு வேண்டுகோள் விடுக்கிறேன்" இது அன்பர் பால் குடியின் கருத்து.
உங்கள் வாழ்த்துக்களால் வாழும் இந்த வில்லிசைக்கலை.

"தாய் எட்டடி குட்டி பதினாறடி" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்று எல்லாம் சொல்லிமளவுக்கு ஒன்றுமில்லை என்னிடம்.
என்னையும் பதிவில் கலந்தமைக்கு நன்றி கீத்

வானம்பாடி

Unknown said...

///"தாய் எட்டடி குட்டி பதினாறடி" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்று எல்லாம் சொல்லிமளவுக்கு ஒன்றுமில்லை என்னிடம்/// இதற்குப் பெயர்தான் தன்னடக்கமோ.... 16 17 வயதில் ஒரு தொழில் நேர்த்தியோடு (Professionalism) வில்லிசை நிகழ்த்துவது சாதாரண விஷயமில்லை... அதை நீங்கள் செய்தீர்கள்.. சுந்தரேஷ் ஐயா உட்பட்ட உங்கள் குழுவோடு

நிலாமதி said...

தமிழரின் பண்பாடுகள் கலை... கலாச்சாரம் என்பன பாடல்கள் வழியாகவே முற்காலத்தில் வந்தன. கதையை கேட்பவர் சலித்துபோகாமலிருக்க கூட இருப்பவர் ஆமா போட்டு ...உற்சாகப்படுத்தி கதை சொல்பவரை தூண்டும் இந்தக்கலை அழி ந்து போகாமல்காக்க பட வேண்டும். வில்லுபாடின் பெருமையை சொன்ன கீத் ......உங்களுக்கு நன்றி . மீண்டும் என் தாயக நினைவை தூண்டிய உங்கள் பதிவு அருமை.

Unknown said...

நன்றி நிலாமதி அக்கா..

ரூபன் தேவேந்திரன் said...

யோகராசா மாஸ்டரின் வில்லிசை நான் பார்த்தில்லை. ஒரு வேளை ஞாபகம் வைத்திருக்க முடியாத சின்ன வயதுகளில் அதை பார்த்திருக்கலாம். ஆனால் அண்ணா அந்த வில்லிசை பாடல்களை வீட்டில் பாடிக் கொண்டிருப்பான். கேட்டால் யோகராசா மாஸ்டரின் வில்லிசை குழுவின் பாடலென்பான். ஆனால் தினேஸ்சும் வில்லுப்பாட்டு செய்யுது எண்டு நான் 3 வருசத்திற்கு முன்னால் தான் கேள்விப்பட்டன். நல்ல கால நேரம் வரும் போது அவர் மீண்டும் அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோசலன்

Anonymous said...

put the link of "villupaaddu" songs from movies
"thooral ninnu pochu" and "hitler umanath"

rooto said...

sinna mani is from my village!! atchuvelly!!! now i dont hav time to give e whole detail abt him!! but will come back to u tomorrow!!!

Unknown said...

கட்டாயம் செய்யுங்க rooto