நான் பிறந்தது இலங்கையில் வடக்கில் நவிண்டில் ஒரு குக்கிராமத்தில். பக்கத்தில் நெல்லியடி என்ற ஒரு சிறிய நகரம். என்னுடைய சிறுவயது முதலே எனக்கு என்ன கற்றுத்தரப்பட்டதோ இல்லையோ, கடவுள் பற்றிக் கற்றுத் தரப்பட்டது. என்னுடைய ஆரம்பக்கல்வியை நான் கரணவாய் தாமோதர வித்தியாசாலையில் கற்ற போது, அங்கே கூட கடவுளை முன்னிறுத்தும் ஒரு பழக்கம் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தின் முதல் வருடத்தில் அதிபராய் இருந்த வைத்திய நாதக் குருக்கள் தொடக்கம், அதே பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியரான ஆறுமுகம் வாத்தியார் வரை எல்லோருமே சைவப் பழங்கள். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு நாளும் கூட்டுப் பிரார்த்தனையோடுதான் தொடங்குவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. கூட்டுப்பிரார்த்தனையில் பாடும் பஞ்ச புராணத்தை வீட்டிலும் சாமி அறையில் பாடி வணங்கி, காலையில் வீபூதி பூசி சந்தனப் பொட்டு வைக்காமல் பள்ளிக்கூடம் போனதேயில்லை நான்.
எனக்கும் என் குடும்பத்துக்கும் இரண்டு குலதெய்வங்கள். அப்பா வழியாக மூத்த விநாயகரும், அம்மா வழியாக குலனைப் பிள்ளையாரும் குல தெய்வங்களானார்கள். மேலும் அப்பா வழியில் உச்சில் அம்மாள், முதலைக் குழி முருகன், தூதாவளைக் காளி, தில்லையம்பலப் பிள்ளையார் ஆகியோரும், அம்மா வழியாக குழவியடி அம்மன், பொலிகண்டி முருகன், சக்கலாவத்தை வைரவர், பூதராயர் பிள்ளையார் ஆகியோரும் அறிமுகமானார்கள். மேலே சொன்ன கோவில்களில் எல்லாம் அப்பா பகுதியால் அல்லது அம்மா பகுதியால் மகோற்சவ காலங்களில் எங்களுக்கு உரித்தான ஒரு பூசை நடப்பதுண்டு. அந்த நாட்களில் கட்டாயமாகக் கோவிலுக்குப் போவதுண்டு. அதிலும் குலனைப் பிள்ளையாரும், குழவியடி அம்மனும் எங்கள் அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனார்கள்.
திருவிழா தவிர்த்து பாடசாலை இல்லாத எல்லா வெள்ளிக்கிழமையும் நான் குலனைப் பிள்ளையாரிடமும், குழவியடி அம்மனிடமும் செல்வதுண்டு. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வெள்ளியும் போவார்கள். நன்றாகக் காசு கொடுத்து அர்ச்சனை செய்வார்கள் இரு கோவில்களிலுமே. மூத்தவிநாயகரிடம் திருவிழாக் காலங்களில் தவறாமல் போவோம். உச்சில் அம்மனிடம் ஒவ்வொரு மாசி மகத்துக்கும் போய் வந்துகொண்டிருந்தோம். நவராத்திரி, கந்தசஷ்டி, பொங்கள், தீபாவளி, வருடப்பிறப்பு, திருவெம்பாவை காலங்களில் குலனைப் பிள்ளையாரையும், குழவியடி அம்மனையும் விட்டுப் பிரிவதேயில்லை நான். அதுவும் திருவெம்பாவைக் காலங்களில் விடிய மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து வெளிக்கிட்டு குலனைப் பிள்ளையாருக்குப் போய், சங்கு, மணி, சேமக்கலம் சகிதமாக ஊரைக் கோவிலுக்கு அழைப்பதும், கோவிலில் என்னால் முடிந்த சின்னச் சின்ன சரியைத் தொண்டுகள் செய்வதும் எனக்கு மிகவும் சந்தோசம் தரும் விஷயமாக இருந்தது, பதினெட்டு வயது வரை.
கடவுள்தான் எல்லாம், கடவுளில்லாமல் எதுவுமே அசையாது என்ற மாதிரியான ஒரு வளர்ப்பில் வேறூ சில விஷயங்களை நான் கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்று நான் உணர்ந்து கொண்டது அந்த வயதில்தான். அதுவும் குலனைப் பிள்ளையாரில் மக்கள் மனம் ஒருமித்து சாமி கும்பிட வேண்டும் என்கிற காரணத்துக்காக ஆலய தர்மகத்தா மற்றும் நிர்வாக சபை ஒரு காலமும் காவி நிறத்தைத் தவிர வேறு நிறத்தில் வண்ணம் பூச ஒப்புக் கொண்டதில்லை. இப்படியாக பக்தி மார்க்கத்தை எனக்கு ஊட்டி வளர்த்த அதே சமூகம், அந்த பக்தி நெறியிலிருந்து என்னைத் துரத்துவதற்குமான ஒரு செயலைச் செய்து கொண்டிருந்ததை அந்த வருடத்தில் நடந்த ஒரு நவராத்திரி எனக்குப் பொட்டில் அடித்துச் சொல்லிக் காட்டியது.
கூடுதலாக ஒவ்வொரு மாலையிலும் நான் ஒரு மைதானத்துக்கு விளையாடப் போவது வழக்கம். விளையாடி முடிய எப்போதுமே மாலை ஆகிவிடும். அந்த இடத்திலிருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஒன்று நாச்சியார் கோவில் இன்னொன்று வைரவர் கோவில். இரண்டிலுமே நாங்கள் என்றைக்கும் கும்பிடுவதில்லை. காரணம் இரண்டு கோவிலின் பேருக்கு முன்னாலும் ஊரின் பெயரை விட சாதியின் பெயரே குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அந்தக் கோவில்களைக் கடக்கும் போது வழமையாவே நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் செல்வேன். காரணம், கடவுள் பற்றிய பயம் என்று பிற்காலங்களில் உணர்ந்து கொண்டேன். அன்றைக்கும் அப்படித் தொட்டுக் கும்பிட்ட போது, கடலைச் சுண்டல், அவல் போன்றவற்றோடு சேர்த்த ஒரு பிரசாதப் பையை நீட்டினார் ஒருவர். எனக்கு அதை வாங்கிக் கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. என்னுடைய எளிய மனதுக்கு அது சாமிப் பிரசாதம். என்ன, உடனேயே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.
அம்மாவும், பெரியம்மாவும், மாமியும் சன்னதம் ஆடினார்கள். 'ஏன் அதுகளிட்ட பிரசாதம் வாங்கினனி, கொப்பருக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே?' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா? எனக்குப் பிரசாதம் தந்த அன்பர் ஒரு இளம் வயதினர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கள் வீடு தேடி அடுத்த நாள் காலை வந்து, அப்பாவிடம் 'ஐயா, தம்பி உங்கட மகன் எண்டு தெரியாமல் ஒருத்தன் பிரசாதம் குடுத்திட்டான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா ஒரு சட்டத்தரணி என்பதால் எல்லா சமூகங்களோடும் பழகுபவர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் புரிந்துணர்வு உள்ளவர். அதற்காக முற்று முழுதாக சாதீய அடையாளங்களையும் திமிரையும் துறந்தவர் அல்ல. அவர் அந்த நண்பரிடம் ‘பரவாயில்ல, சாமிப் பிரசாதத்தை வாங்கிறதில என்ன இருக்கு' என்று சொல்லி அந்த நபரை அனுப்பினார். அந்தப் பிரசாதம் வாங்கிய பிரச்சினை பற்றி என்னையோ, நாய்க்குப் போட்ட மாமியிடமோ எதுவும் கேட்கவில்லை. சம்பந்தப் பட்ட எல்லோரையும் பொறுத்த வரை அந்தப் பிரசாதப் பிரச்சினை அன்றோடு சுமுகமாக முடிந்தது.
ஆனால் எனக்குள் புயல் வீச ஆரம்பித்தது. எங்கள் சமூக அமைப்பில் அவ்வாறு எனக்குப் பிரசாதம் தந்த சாதியை விட உயர்ந்தவர்களாக எங்கள் சாதி கருதப்பட்டது. ஆக, அந்தச் சாதிக் கோவில்களில் எங்களவர்கள் போய்க் கும்பிட மாட்டார்களாம். அவர்களின் சாமியிடம் படைத்த பிரசாதத்தை வாங்கி உண்பது தப்பாம். நன்றாக அறிவுறுத்தினர் மாமியும் பெரியம்மாவும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எனக்குள் எழுந்த கேள்விகள் இவைதான்.
- எனக்குத் தெரிந்து வைரவர் என்பது ஒரு கடவுள் வடிவம். அப்படி ஒரே ஒருவர்தான் இருக்கிறார். எங்கள் சாதி வழிபடும் சக்கலாவத்தையில் இருப்பவரும் அதே வைரவர்தான். அந்த நண்பர்கள் வழிபடும் கோவிலில் இருப்பவரும் வைரவர்தான். வைரவர்தான் சிறப்பானவர், அவர்தான் மனிதர்களை விட மேலானவர் என்றால், நீங்கள் சாதியைக் கடந்து அவருக்கு யார் கோவில் கட்டினாலும் அனைவருக்கும் வழிபடும் உரிமை இருக்கிறதா இல்லையா?
- இல்லை, சாதிதான் வைரவரின் சிறப்பைத் தீர்மானிக்கிறது. உயர் சாதிக்காரனின் கோவிலுக்குள் கீழ் சாதிக்காரன் வந்தால் கோவிலுக்கு அசிங்கமென்றும், கீழ் சாதிக்காரனின் கோவிலுக்குள் உயர் சாதிக்காரன் போனால் உயர் சாதிக்காரனுக்கு கௌரவக் குறைச்சல் என்றும் சொல்கிறீர்களானால், கடவுளின் சிறப்பைத் தீர்மானிக்கும் மனிதன் உயர்ந்தவன் ஆகிறான் இல்லையா? ஆக கடவுள் மனிதனிலும் கீழானவன், அவனிடம் நான் பயப்படத் தேவையில்லை எனபதுதானே அர்த்தமாகிறது?
15 comments:
உங்க அனுபவத்தையும் எண்ணங்களையும் அருமையா சொல்லியிருக்கீங்க. சாதிகள் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டு வருதுன்னுதான் நினைக்கறேன்.
இலங்கையில் வாழ் மக்களிடயே அதுக்கும் வடபகுதியில் வாழ் மக்களிடயே சாதீயம் ..........மிக மிகவே ஆட்சி செய்தது .அந்த பிஞ்சு மனதில் பதிந்த பதிவு இன்று வரை உங்களை விட்டு போகாமல் எழுத வைத்தது. மேடையிலும் , கூ ட்டங்களிலும் பேசுவார்கள். ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லியாடா .......உன்மதமா? என்
மதமா ?ஆண்டவன் எந்த மதம் . இது மதம் பிடித்தவர்களின் விளையாட்டு ..இன்று உங்களை எழுத வைத்தது . மனங்களை நெறிப்படுத்துவது தான் மதம் . இன்று தமிழர் படும் பாடுக்கு சாதீய திமிரும் ஒரு காரணம். .
Good one. If you practice humanity, what is the need for "அந்தச் சக்தியைக் கண்டடைவது". Why you bother about so called God? Don't care about GOD. Love others like yourself. Try to make your surroundings peaceful.
நன்றி சின்ன அம்மிணி..
உண்மைதான் நிலாமதி அக்கா..
அனானி.. கடவுள் உண்டா இல்லையா என்பது என் வாதமல்ல.. எங்கள் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது.. அதுதான் என் வாதம்.. அந்தச் சக்தியை விஞ்ஞானமும் ஆன்மீகமும் தங்களுக்குத் தெரிந்த பெயரில் அழைக்கிறார்கள்.. நான் பெயர் சொல்லாமல் ‘சக்தி' என்று மட்டும் சொல்கிறேன்... நீங்கள் சொன்னது போல் அடுத்தவர் மீது அன்பு காட்ட நான் சொன்ன அந்த சக்தி பற்றிய தேடல் தானாகவே அடங்கிவிடும் என்பது உண்மை
உங்கடை மூத்த விநாயகர் கோவில் ஏன் இதுவரை அனைத்துமக்களுக்குமாக திறக்கப்படவில்லை? ஒருகாலத்தில் ஐயரும் சுவாமி காவ நாலு பேரும் மட்டும் உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனைய அனைவரும் வெளியில் தான். அதேபோல் தான் உச்சில் அம்மன், குலனைப் பிள்ளையார் என கரவெட்டி ஆதிக்க வெள்ளாளர்களின் கோயில்கள் ஒன்றும் இதுவரை அனைவருக்குமாக திறக்கப்படவில்லை.
அனானி... எங்கட மூத்தவிநாயகர், உச்சில் அம்மன், குலனை மட்டுமில்லை.. யாழ்ப்பாணத்தில முக்கால்வாசி சாதிவேளாளக் கோயில் எல்லாத்திலயும் இதே நிலைதான்... அதுக்கு என்ன காரணம் எண்டு ஒருதரும் சொல்லுகினம் இல்லை.. இதுக்குள்ள பெரிய பகிடி கோயிலில திருத்த வேலையையும் இதே சாதிவேளாளர் உள்ள போய்ச் செய்யலாம்தானே??? அதுக்கு மட்டும் ஓமெண்ட மாட்டாங்கள்..
கீத் மிகவும் துணிவாக உங்கள் கருத்துகளை முன் வைக்கிறீர்கள். நீங்கள் விளையாடும் மைதானம் கொலின்ஸ் மைதானம் தானே. அப்போ எள்ளங்குளம் பக்கம் எல்லாம் அதகளம் பண்ணியிருப்பீர்கள்.
அதே கொலின்ஸ்தான் வந்தி அண்ணா.. எள்ளங்குளப் பக்கம் பெரிசாப் போறதில்ல.. ஆனா பக்கத்தில திருவாதணி எண்ட ஊரிலை அடிக்கடி காம்ப் போடுவம்..
//Kiruthikan Kumarasamy said...
ஆனா பக்கத்தில திருவாதணி எண்ட ஊரிலை அடிக்கடி காம்ப் போடுவம்//
திருவாதணி எவடைத்தை? இண்டைக்குத் தான் இந்தப் பெயர் கேள்விப்படுகிறேன்.
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் கீத்!!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html
மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளேயும் மதம் சம்பந்தமாக எழுந்த கேள்விகளை இங்கே எழுதி வைத்திருக்கிறேன்.
மதம் சம்பந்தமான ஒரு சின்ன ஆறுதலான விசயத்தை இங்கே சொல்லியிருக்கிறேன். :)
முடிந்தால் பாருங்கள்.
மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள்ளேயும் மதம் சம்பந்தமாக நிறைய கேள்விகள் உண்டு. அவற்றை இங்கே சொல்லியிருக்கிறேன்.
மேலும் மதம் சம்பந்தமான ஒரு சிறு ஆறுதலையும் இங்கே சொல்லியிருக்கிறேன்.
முடிந்தால் பாருங்கள்.
வந்தி\அண்ணா
திருவாதணி எள்ளங்குளத்துக்கு பக்கத்துப் பிரதேசம்.. உடுப்பிட்டி யூனியனடியில இருந்து எள்ளங்குளம் போற வழியில இருக்கிற இடம் அது
முடிந்ததை செய்கிறேன் கலையரசன். இந்த விஷயம் பற்றி மெயிலுகிறேன்..
இரண்டையும் வாசித்தேன் கலை
பின்னுட்ட விவாதங்கள் அறியும் பொருட்டு!
புரியவில்லை வால் பையன்
Post a Comment