Sunday, 2 August 2009

நட்பூ!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பதிவுலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறை நண்பர்கள் தினமாகக் கொண்டாடுகிறார்களாம். நான் மட்டும் ஜனவரி 31, மார்ச் 31, ஏப்ரல் 3, ஏப்ரல் 23, ஏப்ரல் 24, ஆகஸ்ட் 11, நவம்பர் 30 உட்பட பல நாட்கள் நண்பர்கள் தினம் வரும். ஏனென்றால் அவை என் நண்பர்களின் பிறந்த நாட்கள். என்னைப் பொறுத்தவரை காதலர் தினம், நண்பர்கள் தினம் எல்லாம் பொதுப்படையான ஒரு கொண்டாட்ட நாட்களே. அவற்றை ஒவ்வொரு நாளும் கொண்டாட யாருக்கும் தடையில்லை. இருந்தும், நட்புக்கு ஒரு பொதுவான நாளாகச் சொல்லியிருக்கும் இந்த நாளில் என் நட்புகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.

சில நட்புகள் ரயில் சிநேகங்கள். அப்படிப்பட்ட ஒரு நட்பு பிரதீப்குமார் ஐங்கரதாசன் இருவருடையது. முதலாம் வகுப்பில் ஆரம்பித்த அந்த நட்பு நிலைத்தது வெறும் 5 வருஷங்களே. அதன் பின் சில காரணங்களால் கடைசிவரை முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை நானும் பிரதீப்குமாரும். ஐங்கரதாசன் எங்கே என்று தெரியவில்லை. அதே முதலாம் வகுப்பில் ஆரம்பித்த இன்னும் பல நட்புகள் இன்னும் பசுமையாய் இருக்கின்றன, மறுபடி ஃபேஸ் புக் மூலம் புதுப்பித்துக்கொண்ட தாட்சாயணியின் நட்பு உட்பட. ரொம்பச் சின்னவயதிலேயே நட்புகள் ஆரம்பித்தாலும் நட்புகள் பலம் பெறுவது பதின்ம வயதுகள் ஆரம்பிக்கும் பதின்ம வயதுகளில்தான்.

அந்த வயதுகளில் ‘டூ' விட்டுக்கொள்வது ஒரு ஃபேஷன் போல் இருந்தது. ஒரு முறை என்னுடன் ரியூசனில் படித்த 40 சொச்ச ஆண்பிள்ளைகள் அத்தனை பேரும் என்னுடன் டூ விட்டனர் (கோஷ்டி மோதல்.. முக்கால்வாசிப் பேர் டூ விட வைக்கப்பட்டனர்). ஆனால் மூன்றே மூன்று பேர் மட்டும் ‘அவன் பக்கம் தப்பில்லை' என்று டூ விட மறுத்து, இன்றுவரை நெஞ்சில் இருக்கிறார்கள். அவர்கள் நித்து, இளம்பரிதி, கண்ணதாசன். இளம்பரிதி தகவல் தொடர்பு சாதனங்களின் தொடர்பெல்லைக்கு அப்பால் போய்விட்டான். கண்ணன் இப்போ கனடாவில் ரொம்ப அருகிலேயே இருக்கிறான். நித்து லண்டனில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு. நித்துவிடம் கேட்க வேண்டும், ‘நித்து. உனக்கு டூ விடுதல் அல்லது கோபம் போடுதல் என்றால் என்னவென்று தெரியுமா?'. நித்துவின் நட்பு ஒரு வரம்.

ஆறாம் வகுப்பில் பாடசாலை மாறியபோது கிடைத்த நட்புகள் பல. மகி, அரவிந்தன், தயாநிதி,ஜெயன், வாசு,ரபிக்காந்த், தனஞ்செயன், பகீ, செந்தில், செந்தூர், ரஞ்சித், பப்பா என்கிற சிவச்செல்வன் போன்ற நட்புகளைச் சொல்லலாம். தனஞ்செயன், செந்தில் ஆகியோர் இன்றைக்கும் அழகான நட்பை, என்னை விடத் தம் நிலை உயர்ந்த பின்னும் பேணி வருகிறார்கள். அதுவும் கொழும்பில் நான் நரக வாழ்க்கை வாழ்ந்த போது செந்திலின் அம்மா கையால் சாப்பிட்ட சோறு மறக்காது, நான் சாகும்வரை. பகீ, ரஞ்சித் குடும்பப் பாரம் சுமக்க ஆரம்பித்திருப்பதால் தொடர்பு எல்லைக்கு அப்பால். பகீ இருந்திருந்துவிட்டு மெயில் அனுப்புவான். செந்தூர் என்னை மறந்திருப்பான் போலிருக்கிறது, இருந்தும் நான் அவனை மறக்கவில்லை. பப்பா என் தூரத்து உறவினன். அடிக்கடி சண்டை போட்டிருக்கிறோம். இப்போ லண்டனில் இருக்கிறான். நல்ல நட்பு இருக்கிறது.

ரபிக்காந்தும் கனடாவில் இருக்கிறான். பாடசாலைக் காலங்களிலிருந்தே தொடரும் நட்பாயினும், 'உடுக்கை இழந்தவன் கை போல' செய்த உதவி என் வாழ்நாளில் மறக்காது. வாசு என்னைக் கடுப்படித்தே நண்பனானவன். இவன் பற்றிய ஒரு பதிவு ஏலவே என் வலையில் உண்டு. இவனது குடும்பமும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய நட்புப் பாராட்டி வருவது மேலதிக தகவல். தயாநிதி ரொம்பவே ஸ்பெஷலான ஒரு நட்பு. வையா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் இவனோடு அரை மணிநேரம் பேசிப்பாருங்கள், உங்கள் மனம் எவ்வளவு கனமாயிருந்தாலும் பஞ்சாய் இளகிவிடும். இவன் கிண்டல் பண்ணாத வாத்தியே இல்லை. முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு இவன் அடிக்கும் ரகளையில் சிரித்து மாட்டிக்கொள்வது நாங்கள்தான்.

ஜெயனின் நட்பும் வித்தியாசமானது. அவனோடு நெருங்கும் வாய்ப்பு நித்து மூலமே வந்தது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கு எதிராக நான் பேசும் ஒரு சந்தர்ப்பம் வந்தது, ஒரு சின்ன தேர்தல் சம்பந்தமான கூட்டத்தில். கூட்டம் முடிந்ததும் இருவரும் பேசிக் கொள்ளாமல் போய்விட்டோம். அன்று மாலையே வீட்டுக்கு வந்தான், ‘நீ மற்றவங்களை மாதிரி முதுகில் குத்தாம முகத்தில தானே குத்தினாய்' என்ற வசனத்தோடு. அன்றிலிருந்து இன்று வரை நெருக்கமான நட்பு தொடர்கிறது. என்னுடைய குடும்பத்தை விட்டு முதல் முதலாகக் கொழும்பு வந்தபோது ஒரு சகோதரன்போல் என்னைப் பார்த்துக்கொண்டவன் ஜெயன்.

அரவிந்தன் ஆளே கொஞ்சம் வித்தியாசமானவன். அவனும் நானும் எட்டாம் வகுப்பில் ‘டூ' விட்டுக்கொண்டோம். 11ம் வகுப்புவரை பேசிக்கொள்ளவே இல்லை. 11ம் வகுப்பு முடிந்த பின் கொஞ்சக்காலம் அவன் ஊரைவிட்டுப் போன பின்னர்தான் ஊடல் முடிந்து தொலைபேசி மூலம் ஒன்றானோம். அதன் பிறகு 2004 இலும் சின்னதாக ஒரு ஊடல் வந்தது. ஆனால் மொத்தமாகப் பிரிய நாங்கள் அப்போது குழந்தைகள் இல்லை. அரவிந்தனிடம் நான் ஒன்றே ஒன்று கேட்கவேண்டும், ‘எட்டாம் வகுப்பில் நானும் நீயும் பேசுவதை நிறுத்தினோமே? ஏன்? எதற்காக? எவ்வளவு யோசித்தும் எனக்குக் காரணம் தெரியவில்லை. நீயாவது சொல்லேன்!'

அரவிந்தன் போலவே ஊடலும் கூடலும் சேர்ந்த நட்பு மகியுடையது. அதே எட்டாம் வகுப்பில், வகுப்பு லீடராகக் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டபோது மகி அழுதான் (நான் காண மகி அழுத ஒரே ஒரு சந்தர்ப்பம், அன்றைக்குக் கேட்காததை இன்றைக்குக் கேட்கிறேன், ஸாரிடா மச்சி). அதை நான் கிண்டல் செய்ய, நட்பில் பிளவு விழுந்தது. ஒரு வருடம் கழித்து ஒரு ஆசிரியர் புண்ணியத்தில் இணைந்து ஒரு வருடக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்த எங்களைப் பார்த்து பகீ சொன்னான், ‘என்னடா நீங்கள், காதலர்கள் போலப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று. அதற்குப் பின்னரும் எத்தனையோ தரம் சண்டை போட்டிருப்போம், ஆனால் அடுத்த நாளே மறுபடி கூடியிருப்போம். சமீபத்திலும் சின்னதாய் ஒரு கீறல்.. ஆனால் பிரியவே மாட்டோம்.

பள்ளிப்பருவத்தில் நான் கொண்டாடிய இன்னொரு நட்பு, கபிலனுடையது. எத்தனை மதியங்கள் அவனுடைய குழுமையான வீட்டில் இருந்திருப்போம். அவனதும் என்னதுமான எத்தனை ரகசியங்களைப் பகிர்ந்திருப்போம். எத்தனை சண்டை போட்டிருப்போம். என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளை போல நடத்திய அவன் அம்மா, சித்தி, தம்பி குலம், தங்கைகள் யாரையும் மறக்க முடியாது. இப்போது அவன் ஏனோ என்னை மட்டுமல்ல, எல்லா நண்பர்களையும் தவிர்க்கிறான். காரணமும் ஓரளவுக்கு எனக்குத் தெரியும். அந்தச் சப்பைக் காரணத்துக்காக நீ ஓடி ஒளிய அவசியமேயில்லை, ஏனென்றால், இன்றைக்கும் நாங்கள் நண்பர்கள்.

அதே போல் மாதக்கணக்கில் என்முகத்தை அசிங்கப் படுத்திய பாலுண்ணியை, ஒரு டாக்டர் போல் நான் அலற அலற ரத்தம் பாயப் பாய பிடுங்கி எறிந்த கஜன், இன்றைக்கு எஞ்சினியர் (மருத்துவ முறைகள், ஆயில்மெண்டுகளால் முடியாதை 10 செக்கனில் முடித்தான்). மேலும் எத்தனையோ ரயில் சினேகங்கள் இருக்கின்றன. அவை முழுமையான நட்பாக விரைவில் மாறும். முகம் தெரிந்த, தெரியாத பதிவர்கள் பலரிடம் நல்ல நட்பு துளிர்த்திருக்கிறது. அந்த நட்புகளைக் கட்டாயம் கொண்டாடுவேன். அதுபோல் ஃபேஸ் புக்கில் செழியன் என்றொரு நல்ல நண்பன் வாய்த்திருக்கிறான். ஃபேஸ்புக் மூலம் கிடைத்த உருப்படியான நண்பன் என்றால் அவன் மட்டும்தான்.

அந்த வயதின் முட்டாள்தனங்களால் இழந்த நட்புகள் சில. குமரன், விஜயதீபன் போன்றோரைச் சொல்லலாம். அவர்களை இழக்க என் முன்கோபமே முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். நிச்சயமாக அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரே சுவையுடைய நட்போ, சண்டை வராத நட்போ நிலைத்திருக்காது என்பது என்கருத்து. மகி, நிதியுடனான என் நட்பிலேயே பல வண்ணங்கள். மூவரும் இந்தியக் கிரிக்கட் அணியின் தீவிர ரசிகர்கள், ஆனால் எனக்கு சச்சினும், மகிக்கு சவ்ரவும், நிதிக்கு ட்ராவிட்டும் ஆதர்ஷம். 2003 ஆசியக் கோப்பையில் இலங்கையிடம் இந்தியா தோற்ற போது, கிட்டத்தட்ட 8 மணிநேரம் மகிவீட்டு வாசலில் துக்கம் அனுஷ்டித்தோம். கபிலனுக்கு விஜய் பிடிக்கும். மகிக்கு அஜித் பிடிக்கும். நித்துவுக்கு சூர்யா பிடிக்கும். எனக்கு இந்த எல்லோரையும் பிடிக்கும், அதாவது, இந்த எல்லா நண்பர்களையும் பிடிக்கும்.....

பி.கு: படங்களில் பெயர்குறிப்பிட்ட நண்பர்களில் முக்கல்வாசிப் பேர் இருக்கிறார்கள். வெள்ளை உடையோடு இருக்கும் நண்பர்கள் மத்தியில் ஒரு குரங்குக் குட்டி இருக்கே, அதுவும் உன் நண்பனா என்று கேட்காதீர்கள். அது எங்க வீட்டுக் குரங்குக்குட்டி. என்னிலும் எட்டு வயது சின்னது. (என்னா ஃபேமிலி பிளானிங்).

25 comments:

கலையரசன் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கீத்!!

Unknown said...

உனக்கும் (ஹஹ்ஹா.. உரிமை நாங்களாவே எடுத்துக்குவோமல) அதே வாழ்த்துக்கள் கலை!!

துபாய் ராஜா said...

என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றிங்க ராஜா

பால்குடி said...

கீத்துக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள். இன்றைக்கும் எம்முடைய நட்பை நினைவு கூறி எம்மைப் பெருமைப் படுத்தியதற்கும் அருமையான இனிய நினைவுகளை மீட்டதற்கும் நன்றிகள். படங்களுக்கு நன்றி.
//அதுவும் நான் கொழும்பில் நரக வாழ்க்கை வாழ்ந்த போது செந்திலின் அம்மா கையால சாப்பிட்ட சோறு மறக்காது.
இன்றைக்கும் நமக்கு அதுதானே வரப்பிரசாதம்.

அருண்சங்கர் said...

nice keeth..............

Unknown said...

பால்குடி... செந்திலின் அம்மா வற்புறுத்தி சாப்பிட வைப்பார்கள்.. மறக்கமுடியாது..

நன்றி அருண்

கரவைக்குரல் said...

இங்கு குறிப்பிடவர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்கள் தான் கீத்,
என்னால் அறியப்பட்டவர்கள், அவர்களைப்பற்றிய உங்கள் பதிவு அவர்களுடன் நான் உரையாடியதும் அவர்களின் உரையாடல்களும் மீண்டும் நினைவூட்டுவதோடு மகிழ்ச்சியையும் தருகிறது
இன்னும் வரட்டும் கீத்

Unknown said...

நம் நட்பின் இனிய நினைவுகளை அசைபோடவைத்த உன் பதிவுக்காக நன்றி நண்பனே!
........ நிதி.

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் கீத் அப்படியே இணையத்தில் கிடைத்த நண்பர்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்

நிலாமதி said...

நட்பை இவ்வளவு தூரம் பேணிக்காக்கும் உங்க பண்பு அபாரம். இவ்வளவு படங்களையும் இதயத்திலும் கையிலும் வைத்திருக்கும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். பாராடுக்கள். உங்களுக்கும் எனது நட்பு தின வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி

Unknown said...

கீத்....
என்ன ஒரே கலக்கு கலக்கு என்று கலக்குறீங்க போங்க.
உங்கட ENGLISH LITERATURE CLASS பற்றின BLOGGING பற்றி பகீ கதைச்சு கொண்டு இருந்ததவன்டா...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!

கார்த்தி said...

Happy friendship Day!!!

Anonymous said...

அதுபோல் ஃபேஸ் புக்கில் செழியன் என்றொரு நல்ல நண்பன் வாய்த்திருக்கிறான். ஃபேஸ்புக் மூலம் கிடைத்த உருப்படியான நண்பன் என்றால் அவன் மட்டும்தான்.
அப்ப நாங்கள் எல்லாம்
கொஞ்சம் வலிக்கிறது...

Anonymous said...

அடேய்...
எனக்கும் அவ்வளவாக நினைவில்லைடா...
ஆனால் எதோ பேனா சம்பந்தமாக வந்த கோபம் நானும் நீயும் சண்டை பிடிக்காமலே கதைப்பதில்லை... எனது நினைவு சரியானால் நாம் இருவரும் கதைக்காமல் விட்டது வகுப்பில் யாருக்கும் முதலில் தெரிந்திருக்கவில்லை.. எனினும் அது சிறிது சிறிதாக கசிந்திருந்தது....
ம்ம்
அது என்னடா நான் ஒரு வித்தியாசமானவன்?

அரவிந்தன்.இ

Unknown said...

நன்றி கரவைக்குரல்... நேரமுள்ள போதெல்லாம் வரும்

வாடா நிதி...(அய் தப்பிச்சுட்டேன்.. கடிக்கலை.. வாழ்த்திட்டு போய்ட்டான்)

வந்தியண்ணா... போடுவம் போடுவம்...விரையில்

நன்றி நிலாமதி அக்கா

நன்றி சுகுண்... நல்லா இருக்கியா?

நன்றி கார்த்தி..

வாங்க அனானி... நீங்க யாருன்னு தெரியலையே... செழியனை எனக்குக் காட்டியது ஃபேஸ்புக் தான்... உங்களை முதல்லயே எனக்கு தெரிந்திருக்கலாம்

Unknown said...

அடப்பாவி அரவிந்தா... அப்ப நீயும் நானும் ஏன் கதைக்காம விட்டோம் எண்டு ரண்டு பேருக்கும் தெரியேல்லை... என்ன மாயமோ...

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

டவுட்டுக்கணேஷன் said...

னன்றி கீத் இப்படியான் படங்கள் , பழைய நட்புக்களின் அலசல்களூக்கு. எமது பழைய படங்கள் இருந்தால் அனுப்பி வைக்கவும்

Unknown said...

அந்த விளையாட்டுப் போட்டியன்று எடுத்த கொஞ்சப் படங்கள் இருக்கு... மற்ற படி கொஞ்சப் படத்த பிளம்ஸ் ஸ்கேன் பண்ணுறன் எண்டு சொல்லி நாசமாக்கீட்டான்

Jeya-S said...

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிவை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது ..எனவே எனது பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...உங்கள் பாடசாலை நண்பர்களை பற்றி நீங்கள் எழுதும் போது எனக்கும் என்னுடைய கடந்த காலங்கள் வாட்டுகிறது ..பெண்கள் தான் அதிகம் டூ விடுவார்கள் (எல்லாம் அனுபவம்) ஆனால் நீங்களுமா ??

Unknown said...

Jeya-S Said...
///நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிவை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது ..எனவே எனது பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...உங்கள் பாடசாலை நண்பர்களை பற்றி நீங்கள் எழுதும் போது எனக்கும் என்னுடைய கடந்த காலங்கள் வாட்டுகிறது ..பெண்கள் தான் அதிகம் டூ விடுவார்கள் (எல்லாம் அனுபவம்) ஆனால் நீங்களுமா ??///

ஹஹ்ஹா... டூ விடுவதில் ஆண்கள் பெண்கள் வித்தியாசம் இல்லாமல் சமத்துவமும் சமதர்மமும் நிலவியிருக்கிறது நம்மிடம்..அது சரி ஜெயா (அக்கா சொன்னா அடிக்க வருவியள்).. அந்த ‘அங்கிரி அங்கிரி' என்று சொல்லி அழைப்பது, தற்செயலாகத் தொட்டுவிட்டால் தொட்ட இடங்களை ‘உஃப் உஃப்' என்று ஊதுவது இதெல்லாம பெண்களும் செய்தீர்களா?

Jeya-S said...

உண்மையாக இதை முதலிலே சொல்லணும் எண்டு நினைத்தான் ஆனாலும் பின்னூட்டம் நீண்டு விடும் எண்டு விட்டு விட்டேன் ... என்னங்க இப்பிடி கேட்டுவிடிங்க கிட்ட அங்கிரி நிண்டாலே போதும் தள்ளி போய் விடுவோம் தற்செயலாக நாங்கள் அணிந்திருக்கும் ஆடையில் தொட்டு விட்டால் போதும் ஊதி விடுவதோடு நிற்காமல் அந்த உடையை வீடு போய் சேர்ந்த உடன் தோய்த்து விடுவோம் ..ஹஹ்ஹா.....கையில் பட்டால் என்னமோ அன்று தான் கையை கிளீன் பண்ணுறமாதிரி கிளீன் பண்ணி விடுவோம் இன்னும் எவளவோ பண்ணியிருப்போம் அங்கிரிக்கு..(உங்களுக்கு சொல்லிய தெரியனும் haha) சொன்னால் விடிந்திடும்.. எல்லாம் மறக்க முடியாத சுவாரிசியங்கள்....

Jeya-S said...

அக்கா என்று சொன்னதை இப்ப தான் பார்த்தன் உங்கமேல் வழக்கு போடலாம் என்று இருக்கேன் தயாராக இருங்கள் எந்நேரமும் ...lolz

Unknown said...

ஜெயா..
இந்த டூ விடுவதும் அங்கிரியைத் தொட்டால் ஊதுவது எண்டதெல்லாம் இப்ப நினைச்சுப் பாக்கேக்க சிரிப்பு வர வைக்கிறது உண்மை... அது ஒரு காலம்..ஹும்..

அக்கா எண்டு சொன்னதுக்கு வழக்குப் போடப் போறீங்களா... போடுங்க போடுங்க.. நாங்கள் பாக்காத வழக்கா? lol