Monday 10 August 2009

மனதில் பட்டவை- வாரம்: ஓகஸ்ட் 9-15, 2009

அரசியல்-இலங்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கைக் கட்சி ஒன்று ஜெயித்திருக்கிறது, டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சியால். ஆனால் சோகம் என்ன வென்றால், 100,417 வாக்காளர்கள் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்களே வாக்களித்திருக்கிறார்கள். வவுனியாவில் கொஞ்சம் பரவாயில்லை, 50% பேர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளின் அடிப்படையில் எப்படிப் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கலாம்? யாருடைய தவறு? ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்த மக்களது தவறா? நம்பிக்கை இழக்க வைத்த தலைவர்களின் தவறா? இல்லை நாடுவிட்டு ஓடிவிட்ட என் மாதிரிப் பேடிகளின் தவறா?

ஒவ்வொரு தலைவரும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். யார் நேர்மையாகக் கருத்துச் சொல்லி இருக்கிறார், யார் புலம்புகிறார் என்றெல்லாம் என்னால் முடிவுசெய்ய முடியாது. எனக்கென்னவோ எல்லோருமே நன்றாகப் புளுகுகிறார்கள் என்றுதான் படுகிறது. ஒரு தேர்தலில் வெறும் 20% வாக்காளர்கள்தான் (அதில் பல முறைகேடான வாக்குகளும் உள்ளடக்கம்) வாக்களித்திருக்கிறார்கள் என்பது ஐக்கிய இலங்கை ஜனநாயாகத்தை நோக்கிப் போகவில்லை என்றுதான் காட்டுகிறது. அதற்காக முன்னைய தேர்தல்களில் அமோகமாக வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது மட்டும் ஜனநாயகம் உயர்ந்து நின்றது என்றும் மனச்சாட்சிக்கு விரோதமாகப் புளுகவும் மனம் ஒப்பவில்லை. கருத்துச் சுதந்திரமும் தனிமனித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட ஒரு தேசத்திலிருந்து நான் புலம்புவது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். தயவுசெய்து சண்டைக்கு வராதீர்கள்.

அரசியல்- உலகம்

வட அமெரிக்கக் கண்ட நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு தனது ஒன்பதாவது நாளில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. கனேடியப் பிரதம மந்திரி ஸ்டீஃபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, மெக்சிக்க ஜனாதிபதி ஃபெலிப்பே கால்டரோன் ஆகியோர் முத்தரப்புக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களது கலந்துரையாடல்களில் பொருளாதாரம், H1N1 வைரஸ், சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு, போதைப் பொருள் எதிர்ப்பு ஆகியவை முக்கிய இடம் பெறும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏதாவது ஒரு நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்காமலும், அதற்கு வட அமெரிக்காவின் மற்ற இரு தலைவர்களும் தலையசைக்காமலும் எதை வேண்டுமானாலும் கலந்துரையாடட்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கந்தகாருக்குத் திருப்பி அனுப்பபாட்டது. சீனாவின் ஸின்ஜியாங் என்ற மாநிலத்திலுள்ள உரும்கி என்ற நகரிலுள்ள விமானத் தளத்தில் இறங்க வேண்டிய விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சுறுத்தல் வந்த காரணத்தால் விமானம் கந்தகாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த விமானம் அல்-கெய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ இன்னுமொரு 9/11 வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம். (உயரமான கட்டடங்களில் வேலை கேட்டுப் போகும்போது வயிற்றைக் கலக்குகிறது. நல்ல வேளை, யாரும் உயரமான கட்டடங்களிலோ, உயரமில்லாத கட்டடங்களிலோ எனக்கு வேலை தரவில்லை, இன்றுவரை)

பொருளாதாரம்

கனடாவில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் பிரபலமான இரு நிறுவனங்கள் கேபிள் தொலைக்காட்சிக் கட்டனங்கள் வருகிற நாட்களில் உயரலாம் என்று எச்சரித்திருக்கின்றன. பெல் கனடா மற்றும் ரோஜேர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கனேடிய தொலைகாட்சி, வானொலி மற்றும் தொலைத் தொடர்பாளர்கள் ஆணையம் அறிவித்துள்ள புதிய சட்டதிட்டங்களுக்கமைய சேவைகளை வழங்குவதற்கு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து இன்னும் 1.5% கட்டணம் கூடுதலாக அறவிடவேண்டியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே இந்தத் துறைகளில் நன்றாகக் கால்பதித்த நிறுவனங்கள் இவை என்பதால் புதியவர்கல் சந்தைக்குள் வருவது மிகவும் கடினமாகிப் போய்விட்டது. அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பாவனையாளர்களும் இவர்களின் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சமீபகாலமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளம்பரம் செய்து வந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதிரி அறிக்கை விட்டது காலத்தின் கட்டாயம் இல்லையில்லை பொருளாதாரத்தின் கட்டாயம்.


விளையாட்டு

ஆஷஸ் தொடர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகவும் அற்புதமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித் தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. ஓவலில் நடைபெறும் இறுதிப் போட்டியை சம்நிலையில் முடித்தாலே அவர்கள் ஆஷஸ் தொடரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் ஃபிளிண்டோஃப் நான்காவது போட்டியில் காயம் காரணமாக ஒதுக்கப் பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. விளையாட ஃபிளிண்டோஃப் தயாராக இருந்த போதும், அணித்தலைவர் ஸ்ரோஸ் மற்றும் அணி நிர்வாகம் அவரது உடல் நிலை முழுமையாகத் தேறவில்லை என்று சொல்லி நிறுத்தி வைத்ததாக ஃபிளிண்டோஃபின் முகவர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் நான் ஸ்ரோஸின் பக்கமே. என்னைப் பொறுத்தவரை ஃபிளிண்டோஃப் இந்த ஆஷஸ் தொடருக்கே தெரிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்பதை ஆஷஸ் முடிந்ததும் நான் எழுதவிருக்கும் ‘ஆஷஸ் 2009-ஒரு பார்வை' தொடரில் சொல்கிறேன்.

ஒரு வருத்தம்

பதிவுலக சர்ச்சை ஒன்றில் நானும் அகப்பட்டுப் போனேன். என்னுடைய மொழிநடையால் வந்த சிக்கல் அது. என் பக்கமும் தப்பு இருப்பதால், என் மொழிநடை யாரையாவது பாதித்திருந்தால் மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே போல் ஒரு வேண்டுகோளையும் இங்கே வைக்க வேண்டியுள்ளது. சொந்த இடங்களைவிட்டுப் பிரிந்து வாழும் பதிவர்களோ, படைப்பாளிகளோ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருந்த காலத்தில் இருந்த மாதிரி சூழ்நிலை இப்போதும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. சூழ்நிலைகளும் பழக்க வழக்கங்களும் இப்போது வெகு விரைவாக மாறுகின்றன. யாழ்ப்பாணத்தில் ராஜா டாக்கீஸ் என்ற பெயரும் வழங்கி வருகிறது, சைக்கிள்களின் கைப்பிடிக்குள் ‘பிரிதிப்பை' என்று அழைக்கப்படும் ஆணுறைகளும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன. அந்த சமூகத்தின் சமீபத்திய எச்சங்களான என்போன்றோரிடம் ‘சுயம்' இல்லாமலிருக்க நாங்கள் மட்டுமே காரணமல்ல. அதை மூத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சந்தோஷம்

இதேவேளை வருகின்ற இருபத்து மூன்றாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பதிவர்கள் சந்திப்பு சந்தோஷமாகவும், ஆரோக்கியமான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் நடந்து முடியவேண்டும் என்பது என்னுடைய பேராசை. பதிவுலகம் மூலம் அறிமுகமான இனிய நண்பர்களும், பதிவுலகில் நான் புக முன்னமே எனக்கு அறிமுகமான நண்பர்களும், அண்ணன்களும் அந்தச் சந்திப்பை இனிதே நடத்திவைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. இது பற்றிய மேலதிக தகவல்களை வந்தியண்ணா, ஆதிரை மற்றும் சுபானு ஆகியோரின் வலைப் பூக்களில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் வாசியுங்கள்

ஃபேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? (நான் அப்படித்தான் என்பது வேறு கதை) அதுவும் திருமணமானவராயோ, அல்லது காதலன்/காதலி உள்ளவராயோ இருந்தால் இதை வாசியுங்கள். உங்கள் உறவில் (கணவன்- மனைவி, காதலன-காதலி) விரிசல் விழுவதற்கு ஃபேஸ் புக்கும் ஒரு காரணமாகலாமாம். குவெல்ப் பல்கலைக்கழக (University of Guelph) மாணவர்கள் நிகழ்த்திய ஆய்வறிக்கையின் படி எவ்வளவு அதிகநேரம் ஃபேஸ் புக்கில் இருக்கும் இப்படியான ஜோடிகளுக்கிடையே பொறாமையும் சந்தேகமும் அதிகரித்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக ஒருவரது ஃபேஸ் புக் Wallல் 'நேற்றிரவு உன்னுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது' என்பது போன்ற ஒரு சின்ன தகவல் பரிமாற்றமே பூதாகரமான பிரச்சினையாக வடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்திருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 308 மாணவ, மாணவிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவே இது. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருக்கிறது. பார்க்கும் கண்களிலும், பகுத்தறியும் அறிவிலும் இருக்கிறது சூட்சுமம் என்பது என் கருத்து.

2 comments:

கலையரசன் said...

சென்ற வார உலகம் வித் கீத்!
என்று தலைப்பு வச்சிருக்கலாம்.
எல்லாம் கலந்து அருமையான தொகுப்பு!!

Unknown said...

அந்தத் தலைப்பும் பொருந்தியிருக்கும் கலை.. எனக்கு அந்தளவுக்கு யோசிக்க முடியவில்லை