Wednesday 22 July 2009

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

சில படங்களைப் பார்த்தால் உறசாகம் பொங்கும். சில படங்களைப் பார்த்தால் கண்ணீர் திரளும். சிலபடங்கள் கவிதையாய் கிறங்கடிக்கும். சில படங்கள் கவலை மறந்து சிரிக்கவைக்கும். மிகச்சில படங்கள் ஏன்தான் பார்த்தோமோ என்று நினைக்க வைக்கும். அப்படி ஏன் பார்த்தோம் என்று நினைக்க வைக்கும் படங்களை இருவகைப் படுத்தலாம். ஒன்று விஜய், விஷால், சிம்பு வகையறாக்களின் படங்கள். இதுக்கெல்லாம் டிக்கட் எடுத்து, இரண்டரை மணிநேரம் செலவழித்தோமா என்று கடுப்பேத்தக்கூடிய படங்கள். மற்ற வகை, உண்மையாயே உள்ளத்தைப் பாதித்து ஒரு இனம்புரியாத பய உணர்வையோ, அருவருப்பையோ ஏற்படுத்தக் கூடியவை. அப்படிப்பட்ட இரண்டாவது வகைக்குள் அடங்கும் படம்தான் 1993ஆம் வருடம் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கி வெளியான Schindler's List.

இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாகியிருந்த காலப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற நாவலை மையமாக வைத்து ஸ்பீல்பெர்க் இயக்கிய படம்தான் இது. 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற இப்படமானது ஸ்பீல்பெர்க் இயக்கிய படங்களிலேயே அது உன்னதமானது என்று புகழப்படுவது. அடொல்ஃப் ஹிட்லரின் நாஸிகளின் ஆட்சிக்காலத்திலே ஹிட்லரின் ராணுவ அதிகாரிகள் போலந்து நாட்டிலிருந்த யூத இன மக்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளும், அந்தக் கொடுமைகளிலிருந்து கிட்டத்தட்ட 1200 யூதர்களை தன் தொழிலாளர்கள் என்று சொல்லிக் காப்பாற்றிய ஒஸ்கர் ஸிண்ட்லர் என்பவரது கதையும்தான் படத்தின் அடிநாதம். பலபேர் இப்படத்தைப் பார்த்திருப்பீர்கள், பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையை மறுபடி சொல்லி போரடிக்காமல், படம் என்னை ஏன் பாதித்தது என்று சொல்வது பரவாயில்லை என்பது என் எண்ணம்.

ஸிண்ட்லர் கதாபாத்திரம் உண்மையிலேயே என்னைப் பாதித்தது. Liam Neeson அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். அவரது யூத இன கணக்காய்வார் Itzak Stern ஆக ‘காந்தி' புகழ் Ben Kingsly. ஆரம்பத்தில் வர்த்தகத்தில் பெரியளவில் வெற்றி பெறாதவரான ஸிண்ட்லர் யூதர்களின் கறுப்புச் சந்தை முதலீடுகளை ஸ்டேர்ன் மூலம் பெறுகிறார். ராணுவ முதலீடுகளும் கிடைக்கின்றன. ஏழை யூதர்களை தன்னுடைய கம்பனியில் சேர்த்துக்கொள்கிறார், குறைந்த செலவில் உற்பத்தியைக் கூட்டுவதற்காக. ஸ்டேர்ன் சில யூதர்களை இப்படியாக இவரது கம்பனிக்குள் சேர்த்துக் காப்பாற்ற முயல்கிறார். ஸிண்ட்லரிடம் பணம் சேர்கிறது. ஸிண்ட்லர் நேரடியாகப் பார்க்கும் சில நாஸி படைகளின் கொடுமைகள், ஸ்டேர்னின் மேல் அவர் வைத்திருக்கும் வித்தியாசமான அன்பு எல்லாம் சேர்ந்து கடைசியில் ராணுவத்துக்கு லஞ்சம் கொடுத்து உற்பத்தி இல்லாத தொழிற்சாலையில் யூதர்களைக் காப்பாற்றும் அளவுக்கு இவருள்ளே மனமாற்றம் ஏற்படுகிறது. கடைசிக்காட்சியில் ‘இந்தக் காரை வித்து இன்னும் 10 பேரைக் காப்பாற்றியிருக்கலாமே, இந்த பேட்ஜ் ஒருவரைக் காப்பாற்றியிருக்குமே' என்று உடைந்து அழும்போது நம் கண்கள் பனிப்பதை தவிர்க்க முடியாது.

முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளைப் படத்தில் இரண்டே இரண்டு சம்பவங்களில் மட்டுமே நிறம் தென்படும். ஒன்று நாஸிப்படைகள் அட்டகாசம் செய்வதைத் தூரத்திலிருந்து பார்க்கும் ஸிண்ட்லர் ஒரு சிவப்பு கோட் போட்ட சிறுமியைக் காண்பார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சில பிணங்கள் எரிக்கப்படும்போது அதே சிறுமியின் பிணத்தை அதே சிவப்புக் கோட்டுடன் காண்பார். நாஸிகளின் அட்டகாசத்தைக் கண்டு ஸிண்ட்லருள் இருந்த வியாபாரியை மீறி மனிதம் வெளிப்பட ஆரம்பிப்பது இந்தக் காட்சிகளில்தான். அதே போல் யூதர்களை தன்னுடைய தொழிற்சாலையில் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பார் ஸிண்ட்லர். அவர்கள் பிரார்த்தனைக்காகக் கொளுத்தும் மெழுகுவர்த்தி மட்டும் நிறத்தில் இருக்கும். 'ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டும் குறியீடு அது' என்கிறார் இயக்குனர். இந்த இரண்டு காட்சிகளும் கவிதையாகச் செதுக்கப்பட்ட காட்சிகள்.

என்னை மோசமாகப் பாதித்த காட்சிகள் நாஸிப்படையின் அட்டகாசம் சம்பந்தமான காட்சிகள். ஒரு ஒற்றைக்கைக் கிழவரை 'நீ பனி வாரக் கூட லாயக்கில்லை' என்று சுட்டுக்கொல்வார்கள். ஒரு பொறியியல் தெரிந்த பெண் கட்டாய வேலைத்தலம் ஒன்றில் நடக்கும் கட்டிடப் பணியில் அஸ்திவாரம் பற்றிக் கருத்துச் சொன்ன ஒரே காரணத்துக்காக சுடப்படுவாள். நாஸிப் படை அதிகாரியான ஏமொன் கோத் (Amon Goth), தன்னுடைய காதலியுடன் உறவு கொண்டுவிட்டு ரிலாக்ஸ் செய்வதற்காக வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி தூரத்தில் வதைமுகாம்களில் வேலைசெய்யும் அப்பாவி யூதர்களைக் குரூரமாகச் சுட்டுக் கொல்வான். இதை எல்லாம் பார்க்கும் போது, மீண்டும் இப்படி ஒரு இனவதைக் காலம் வந்தால் என்னாகும் என்று நினைத்து நெஞ்சு பதறுவது உண்மையான உண்மை.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஒரு குளியலறையை, விஷ வாயு அறையாக அதனுள் நிர்வாணப்படுத்தப்பட்டு அடைக்கப்படும் பெண்கள் எண்ணிப் பயப்படுவார்கள். அந்தக் காட்சியை ஸ்பீல்பெர்க் தன்னுடைய படத்திலிருந்து அப்படியே உருவி விட்டதாக செக் நாட்டு இயக்குனர் Juraj Herz என்பவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 1983லிருந்தே ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை தயாரிக்க முயன்று, தன் முதிர்ச்சியின்மையக் காரணம் காட்டி, படத்தை இயக்க வேறு இயக்குனரைத் தேடி கடைசியாக 1993ல் (பத்து வருடம் கழித்து) இயக்கினார். அந்தவகையில் ஸ்பீல்பெர்க்குக்கு ஒரு ராயல் சல்யூட் போடலாம், காலம் கழித்தும் காவியமாய் ஒரு படம் தந்தற்கு.


பி.கு: படம் கொஞ்சம் நீளம். 3 மணித்தியாலம் 15 நிமிடம் ஓடும். படத்தை முழுமையாகப் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. என்னதான் இந்தப் படத்தின் Genre Dramaவாக இருந்தாலும், இனம்புரியாத படபடப்பு தோன்றுவதென்னவோ உண்மை.

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

இப்படத்தின் கடைசி காட்சியில் ( கலரில்தான் ) நிறைய மக்கள் இடுகாட்டில் அவருடைய சமாதிக்கு சென்று மலர்களை வைப்பார்கள்.

சிண்ட்லேர்-னால் காப்பாற்றப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரம் யூதர்களின் உண்மையான சந்ததியர்கள்தாம் அவர்கள்.

இத்தகவலை சொன்னது என்னுடன் பணிபுரியும் ஒரு ஜெர்மானியர் .


சுமாராக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜீ-ஸ்டுடியோ வில் விளம்பர இடைவேளை இன்றி ஓளி பரப்பப்பட்ட போது பார்த்தேன்.

Unknown said...

ஆம் யூர்கன்... அந்தக் காட்சி உண்மையானது. ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்ட யூதர்கள் ஷிண்ட்லர் யூதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். நீங்கள் சொன்னதுபோல் படத்தில் சில நிஜ ஷிண்ட்லர் யூதர்களும் அவர்களின் சந்ததியினரும் கடைசிக்காட்சியில் வந்து போகிறார்கள். படத்தில் உபயோகிக்கப்பட்ட பெயர்கள் உள்ள யூதர்களை இயக்குனர் பெயர்ப்பட்டி போட்டு அடையாளம் காட்டினார். 1993ல் இருந்த கணக்கின்படி‘ஷிண்டல்ர்' யூதர்கள் மற்றும் அவர்கள் சந்ததியினர் 6000 பேர் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே சமயம் போலந்தில் 4000க்குக் குறைவான யூதர்களே இருந்தார்கள். எல்லாம் ஸ்பீல்பெர்க் இறுதியில் சொல்லியிருந்தார். ஷிண்ட்லரின் உண்மையான மனைவிகூட கடைசிக்காட்சியில் வருகிறார்.

Anonymous said...

It is a classic Movie... Rooma Nalla Vimarsanam.... Nandri.. Innum Niraya per parthu comments pooda veednum..