ஒரு மாநிலத்தின் கட்டுக்கோப்பான போலீஸ் படை. அதேபோல் கட்டுக்கோப்பான ஒரு மாஃபியா கூட்டம். போலீஸ் மாஃபியா கூட்டத்துக்குள் தங்கள் உளவாளி ஒருவனை அனுப்புகிறார்கள். அதேவேளை மாஃபியா கூட்டத்தலைவன் தான் சிறுவயதில் இருந்தே தயார் பண்ணிய ஒருவனை அந்த மாநிலப் போலீஸின் கூடாரத்துக்குள் அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் இரு பகுதி ஆட்களுக்கும் தங்களுள் ஒரு எட்டப்பன் ஊடுருவியிருப்பது தெரியவருகிறது. பிறகென்ன இருவரின் உண்மையான அடையாளங்களை வெளிக்கொண்டுவர இரு பகுதியும் நடத்தும் போராட்டம்தான் ‘த டிபார்டட்' படத்தின் கதை.
அமெரிக்காவின் Massachusetts மாநிலத்தில் உள்ள ஒரு Irish மாஃபியாக் கூட்டத்தின் தலைவன் ஃபிராங் காஸ்டல்லோ (Frank Costello), இளவயதிலேயே கொலில் சுல்லிவன் (Colin Sullivan) என்ற சிறுவனை மாஃபியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். பெற்றோரை இழந்த அந்தச் சிறுவனைக் கல்விகற்கவைத்து அந்த மாநிலப் போலீஸ் படையில் சேர்த்துவிடுகிறார், தன்னுடைய உளவாளியாக இருக்கும்படி. அவன் ஒரு Detective ஆக பதவி உயர்த்தப்படும் அதேநாள் வில்லியம் காஸ்டிகன் (William Costigan) என்ற இளைஞன் போலீஸ் வேலை தேடி வருகிறான். போலீஸ் அகடமியைக் கூட சரியாக முடிக்காத, மாஃபியாவுடன் இரகசிய தொடர்புகளைக் கொண்ட ஒரு குடும்பத்து இளைஞனான இவனை போலீஸில் சேர்க்க முடியாது என சர்ஜன் டிக்னிம் (Sergeant Dignim) அவமானப்படுத்துவது போல் பேசினாலும், அவரும் கேப்டன் குயினினும்(Captain Queenan) இந்த இளைஞனை காஸ்டல்லோ குழுவுக்கு உளவாளியாக அனுப்புகின்றார்கள். இரு உளவாளிகளும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கின்றனர்.
காஸ்டல்லோவின் ரகசிய மாஃபியா வேலைத்திட்டங்கள் பற்றி போலீஸ்சுக்கு தெரிய வருகிறது. போலீஸின் திட்டங்கள் காஸ்டல்லோவுக்கு தெரிய வருகிறது. ஆக, இரு முகாமகளிலும் எதிரி உளவாளி இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இதற்கிடையில் காஸ்டிகனும், சுல்லிவானும் ஒரே பெண்ணோடு கிட்டத்தட்ட பட்டும் படாம்லும் உறவில்வேறு இருக்கிறார்கள். இரு முகாம்களிலும் பதட்டம் அதிகரிக்கிறது. கேப்டன் குயினின்தான் காஸ்டல்லோவின் உளவாளி என்பதாக சுல்லிவான் போலீஸிடம் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில் காஸ்டல்லோ ஆட்களால் குயினின் கொல்லப்படுகிறார். சார்ஜன் டிக்னிம் போலீஸிலிருந்து கட்டாய லீவு கொடுத்து அனுப்பப்படுகிறார். காஸ்டிகன் போலீஸ் உளவாளி என்று தெரிந்த இருவரையுமே தன் வழியிலிருந்து நீக்கிவிடும் காஸ்டல்லோவின் உளவாளியான் சார்ஜன் சுல்லிவன், காஸ்டிகணை காஸ்டல்லோவுக்கு அடையாளம் காட்டினானா? இல்லை காஸ்டிகன் இவனை அடையாளம் காட்டினானா? என்பதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
காஸ்டிகனாக லியனார்டோ டிகேப்ரியோ (Leonardo DiCaprio), கொலின் சுல்லிவானாக மேட் டேமன் (Matt Damon), ஃப்ராங் காஸ்டல்லோவாக ஜேக் நிக்கல்சன் (Jack Nicholson), கேப்டன் குயினினாக மார்டின் ஷீன் (Martin Sheen), சர்ஜன் டிக்னிம்மாக மார்க் வால்பர்க் (Mark Wahlberg) ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்தை புகழ்பெற்ற ஹாலிவூட் இயக்குனர் மார்டின் ஸ்கொர்செசி (Martin Scorsese) இயக்கி 2006ம் ஆண்டு வெளியான இப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தழுவல் திரைக்கதை (Adopted) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது. சிறந்த துணைநடிகர் விருதுக்கு மார்க் வால்பர்க் பரிந்துரைக்கப்பட்டார். அதே வருடம் வெளியான Blood Diamond படத்திற்காக, இப்படத்தில் நடித்த டிகேப்ரியோ சிறந்த நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தார். இருந்தும் The Last King of Scotland என்ற படத்தில் இடி அமீனாக நடித்த Forest Whitaker இடம் தோற்றார்.
இப்படத்தின் இயக்குனர் ஹாலிவூட்டில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். Taxi Driver, Raging Bull, Good Fellas, Cape Fear, The Aviator போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர். பல்முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் வெல்ல முடியாமல் போனவர். கடைசியாக இந்தப் படம் மூலம் தன்னுடைய 65ம் வயதில், சினிமாவில் நுழைந்த 37வருடங்களின் பின் விருதை வென்றெடுத்தார். இந்தப் படம் உண்மையில் ஒரு ஹாங்காங் படத்தின் ரீ-மேக். 2002ல் Andrew Lau இயக்கிய Infernal Affairs என்ற படத்தின் ரீ-மேக் இது. விருது பெற்ற போது ‘அந்த அற்புதமான ஆசிய சினிமாவுக்கு' நன்றி என்று பெருந்தன்மையோடு கூறினார் ஸ்கொர்செசி. டி கெப்ரியோவின் வித்தியாசமான முகங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் வந்த ஒரு அழகான த்ரில்லர் படம் ‘த டிபார்டட்'.
இதுபோன்ற படங்களை எந்த மொழியிலும் ரீ-மேக் செய்யலாம். மோசமான சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் இவற்றைத் தவிர்த்து சிறுசிறு மாற்றங்களோடு தமிழில் எடுத்தால்கூட அற்புதமாக ஓடும். என்ன, சில சில கேரக்டர்களை இயக்குனரின் விருப்பப்படி செய்யக்கூடிய, ஆனால் தனக்கென்று தனித்துவமான ஒரு நடிப்புத் திறண் கொண்ட இரு இளம் நடிகர்கள் தேவை. ஒரு குணசித்திர ஜாம்பவான் தேவை (இரு முறை ஆஸ்கர் வென்ற ஜேக் நிக்கல்சன் இப்படத்தில் வில்லன்) இப்போ இரண்டு ஹீரோ படங்களிலும் நடிக்கும் துணிவு சூர்யாவிடம் மட்டுமே இருக்கிறது. அதேவேளை இயக்குனர் சொல்வதைச் செய்யும் நல்ல பழக்கமும் அவரிடம் மட்டுமே இருக்கிறது. எனவே இந்தக் கதை இப்போதைக்கு தமிழ் சினிமாவில் வராது. மற்ற இந்திய மொழிகளில் இதே படத்தை நேர்த்தியாக எடுக்குமளவுக்கு டெக்னீஷியன்கள் இல்லை என்பது என் கருத்து.
2 comments:
’தி டிபார்டட்’ ஒன்றும் மார்டின் ஸ்கார்ஸிசின் சிறந்த ப்டைப்பு அல்ல. 'Kundun' மற்றும் ‘Gangs of New York'ஐ அவரின் மிகச் சிறந்த படைப்பாகக் கூறுவேன். என்ன கொடுமை என்றால் இந்த இரு படங்களும், அவரின் அண்டர் ரேட்டட் திரைப்படங்களாக அமைந்து விட்டது. தயவு செய்து உங்கள் பக்கத்தில் உள்ள ரேடியோவை தூக்கி விடுங்கள். இதனால் உங்கள் பக்கமும் தரவிறக்கமாக தாமதம் ஆகிறது. அதோடு எனது உலாவியும் க்ராஷ் ஆகிறது.
பிரசன்னா... நானும் இப்படத்தை அவரின் சிறந்த படைப்பாகச் சொல்லவில்லை... Gangs of Newyork ஐ அவரது சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கமுடியாது.. Goodfellas, Taxi Driver, Raging Bull இதெல்லாம் Gangs of Newyork ஐ விட நல்ல படங்கள்... ஆனால் The Departed க்கு கொடுத்ததை விட அவரது முந்தைய படங்களில் ஏதாவது ஒன்றுக்கு கொடுத்திருக்கலாம்... நீங்கள் சொன்னது போல் Kundunக்குக் கொடுத்திருந்தால்கூட சிறப்பாக இருந்திருக்கும்....
Radioவை தூக்கிவிட்டேன்
Post a Comment