Friday 31 July 2009

ஏனிந்த வேகம்?

தமிழக அரசியலில் கொஞ்சம் சூடான வாரம் இது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா தன் கட்சியிலிருந்து நடிகர் எஸ்.வி. சேகர், மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தூக்கியிருக்கிறார். எஸ்.வி. சேகர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய எண்ணியிருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் இணைந்தே விட்டார். இவர்கள் நீக்கப்பட்டதுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் செல்வி. ஜெயலலிதா கொஞ்சம் அவசரப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் உண்மையிலேயே ஒரு அற்புதமான Entertainment என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் இந்த கட்சி நீக்கம், கட்சித் தாவலில் சம்பந்தப்பட்ட இரு பகுதியினரும்.

ஜெயலலிதா தேர்தல் தவிர்ந்த மற்ற நேரங்களில் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் போன்ற தகவல்கள் கூட யாருக்கும் தெரிவதில்லை. தன் இருப்பை இப்படியான அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவோ, அல்லது கருணாநிதியைத் திட்டி அறிக்கைவிட்டோ காட்டிக்கொள்வது அவரது சமீபத்திய பாணி. அதிலும் அ.இ.அ.தி.மு.க. வில் இரண்டாம் நிலைத் தலைவர்களே இல்லை. தனித்த செல்வாக்குள்ள தலைவர்கள் கிட்டத்தட்ட இல்லை. அப்படி இரண்டாம் நிலைத் தலைவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் கூட அம்மாவை மீறி ஏதும் செய்யமுடியாது என்ற நிலையில், அ.இ.அ.தி.மு.க. வின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதுவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிம்ரன், செந்தில் போன்ற சில்லறைகளை பிரசாரக்களத்தில் அனுமதித்ததை விட ஜெயா ஒரு முட்டாள்தனம் செய்திருக்கமுடியாது. கிட்டத்தட்ட தமிழக வாக்காளப் பெருமக்களை மட்டம்தட்டும் செயல் அது.

ஜெயாவின் இந்த மேம்போக்கான, Publicity Stunt நிறைந்த அரசியல் முடிவுகள் தி.மு.க.வைப் பலப்படுத்துவதாயே அமைந்துள்ளது. ஒரேயொரு பலமான கட்சி இருந்தால் ஓரளவுக்காவது அரசாங்கத்தில் ஒரு நிலையான தன்மை இருக்கும். ஆனால், தி.மு.க. பலம் பெறுவது, யாருக்குமே நல்லதல்ல. ஒரேயொரு காரணம் அவர்களின் சமீபத்திய அரசியல் அணுகுமுறை. 2006தேர்தலுக்கு முன் சில நடிகர்களுக்கு கலைமாமணி கொடுத்து ஜெயலலிதா தன்பக்கம் இழுத்தது போல், கலைஞர் சிம்பு, ஜெயம் ரவி, ஜீவா என்று ஆரம்பித்து இன்றைக்கு நயன்தாராவுக்கு கலைமாமணி கொடுக்கும் அளவுக்கு வந்து நிற்கிறார். பிரியாணி கொடுத்து ஓட்டுப் போட வைக்கிறார். இலவச பண்டங்கள் கொடுத்து ஓட்டு வாங்குகிறார். பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறார். இதெல்லாம் ஆரோக்கியமான அரசியல் அல்லவே.

தி.மு.க.வில் கூட கலைஞர் குடும்பத்தை மீறிய தலைவர்கள் இல்லை. அதுவும் ‘அஞ்சாநெஞ்சன்' நிஜமாயே ஒரு ரவுடிபோல் செயற்படுகிறார். கனிமொழி கொஞ்சக் கவிதாயினிகளை அமைச்சர்களாக்குவதையே சிரமேற் கொண்டுள்ளார். துணைமுதல்வர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இந்த வயதில் கலைஞரால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? எனபது புரியாத புதிர். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பின் தன் கொள்கைகளை எல்லாம் துறந்துவிட்டார். ராமதாஸ் யார் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது என்ற கொள்கையோடு மட்டும் இருக்கிறார். வைகோ ஈழ அரசியலில் காட்டிய நேர்மையால் தன் அரசியல் வாழ்வைத் தொலைத்துவிட்டார். மற்றவர்கள் அரசியலில் இருக்கிறார்கள், அவ்வளவுதான். தமிழக அரசியலில் Seriousness குறைந்து Comedy அதிகமாகிவிட்டது.

இவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது எனக்கு மனதில் படும் கேள்விகள் இவைதான்.
  • ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றக் கட்சியைத் தாறுமாறாகத் தாக்கிப் பேசிவிட்டு, பின்னர் கட்சிதாவும்போது கொஞ்சம்கூட நீங்களெல்லாம் வெட்கப்படுவதில்லையா?
  • ஜெயலலிதாவையோ, கருணாநிதி குடும்பத்தையோ எதிர்த்து, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி அரசியலே செய்ய முடியாதா? எல்லோரும் ஒன்று சேர்ந்து அணிதிரண்டால் அது முடியாதா?
  • தமிழ் அகராதிகளில் கொள்கை என்ற சொல் இன்னமும் இருக்கிறதா?
  • பத்திரிகைகளிலும் இணையங்களிலும் இவ்வளவு திட்டு வாங்கியும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு பேட்டிதரவும், வாக்கு சேகரிக்கவும் எப்படி உங்களால் முடிகிறது? என்னுடன் யாராவது கடுமையாகப் பேசினால் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசவே ரொம்பத் தயங்குகிறேன்.
  • ஒரு கட்சிக்கான, ஒரு வேட்பாளருக்கன தேர்தல் செலவீனங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் ஏதும் இல்லையா? வரவுகளும்-செலவுகளும் தேர்தல் ஆணையத்தால் Audit செய்யப்படுவதில்லையா?
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கேள்வி: ஜெயா உங்களை நீக்கியது அவசர கதி முடிவென்றால், இவ்வளவு காலமும் யாரை எதிர்த்து அரசியல் செய்தீர்களோ அவர்களின் கூடாரத்தில் புகுந்துள்ள உங்கள் முடிவை என்னென்று சொல்வது?

6 comments:

butterfly Surya said...

ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் விடை கிடையாது.

ஆதங்க பதிவு.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. என்ற கவுண்டரின் வரிகளே நினைவுக்கு வருகிறது.

Unknown said...

வண்ணத்துப்பூச்சியார்... அட ஆமா.. கவுண்டர் உண்மையிலேயே ஒரு நல்ல விமர்சகர்... 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'... எந்தச் சந்தர்ப்பத்திலும் பொருந்தும் வரிகள்.... (அடங்கொக்க மக்கா, கவுண்டரை பற்றி கவிதையா பேசுது பார் கழுதை [என்னோட கருத்த கவுண்டர் வாசிச்சா இப்பிடிதான் இருக்கும் ரியாக்‌ஷன்)

Vels said...

கட்சி தலைவர்களுக்கே கொள்கை இல்லாத பொது, தொண்டனுக்கு எதற்கு ? சம்பாதிக்க வந்தா எந்த தியேட்டர்-ல நல்ல படம் ஓடுதோ அங்க பிளாக் டிக்கெட் விக்க வேண்டியதுதான்.

எல்லா சட்டங்களும் அரசியல்வாதிகளாலேயே இயற்றப்படுவதாலும், அவர்களுக்கு சாதகமான சட்டங்கள் மட்டுமே மன்றத்தில் முன் வைக்கப்படுவதாலுமே அவர்களை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.
அப்படியே அவர்கள் மீது வழக்கு போடப்பட்டாலும் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவிர வேறொன்றுமில்லை.
இதுவரை, அவர்களின் ஊழலுக்காக அவர்கள் சரியான தண்டனை பெற்றார்கள் என்று எந்த அரசியல்வாதியையும் காட்ட முடியாது. வீடியோ ஆதாரம் இருந்தாலும், அதெல்லாம் எடுபடாது.

வந்தியத்தேவன் said...

அதே அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா படத்தில்(சூரியன்) கவுண்டரை சிபிஐ அரெஸ்ட் செய்து விசாரிக்க அழைத்துச் செல்வார்கள். அங்கே கவுண்டர் உட்கார கதிரையை இழுக்க மேலதிகாரி கதிரையைத் தட்டுவிடுவார். உடனே கவுண்டன் அங்கேயுள்ள சுவரில் இருக்கும் காந்தியின் படத்தைப் பார்த்து விட்டு சத்தியசோதனை என்பார். சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகும். கவுண்டர் கவுண்டர் தாங்கோ.

அத்திரி said...

நல்லாத்தான் கேள்வி கேட்டிருக்கிய................பதில்தான் ஹிஹிஹி.........

Unknown said...

@வேல்ஸ்...உண்மைதான்..

@வந்தியத்தேவன் என்னோட சீரியஸ் பதிவு கவுண்டர் பக்கம் மாறுவதைக் கண்டிக்கிறேன்..lol..

@அத்திரி... சபாஷ் சரியான பதில்.. பொதுமக்கள்ல ஒருத்தனா பதில் போட்டிருக்கீங்க