யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா மாநகர சபைக்குமான தேர்தல் வருகிற மாதம் 8ம் திகதி நடைபெறப் போகிறது. கடைசியாக யாழ்ப்பணத்தில் 1998லும் வவுனியாவில் 1994லும் உள்ளூராட்சித் தேர்தலகள் நடைபெற்றன. மறுபடியும் இப்போது ஒரு ரத்த ஆறு தந்த குளிர்ச்சியில் நடக்கப்போகும் இந்தத் தேர்தல் நியாயமாக ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமே. இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். வேறு பிரதேச அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிப்பது பற்றியும் கண்டனம் எழுப்பியிருக்கிறார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது, எனக்கும் உலகத்தைப் பற்றிய புரிந்துணர்வு வந்த காலத்தில், எம் மக்கள் சந்தித்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வாக்களிப்பு நிகழ்த்தப்பட்ட விதத்துடன் ஒப்பிட்டு, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயலாம்.
இந்த விஷயத்தைப் பற்றி நேர்மையாகச் சொல்வதானால், அந்தத் தேர்தல்களில் எள்ளளவும் நேர்மை இருக்கவில்லை என்பதே உண்மை. 'நான் 15 வோட் போட்டனான்', 'அட போடா, நான் 40க்கு மேல போட்டனான்' என்ற ரீதியிலான உரையாடல்கள் நண்பர்கள் வட்டத்தில் சகஜமாக நிகழ்ந்தது. ஒரு பாடசாலையில் வாக்களிப்பு நிலையம் இருந்தால் அதிலிருந்து கொஞ்ச தூரத்தில் தேசிப்புளியுடன் கையிலிடப்பட்ட அடையாள மையை அழிக்க நண்பர்கள் காத்திருப்பார்கள். ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இன்னொருவர் பேரில் ஒருவன் ஓட்டுப் போடப் போனபோது, அடையாளத்தை உறுதிப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தது ஆசிரியையான அவனது தாய். மகனைக் காட்டிக் கொடுத்தால் போலீஸ்சிடம் சிக்கி நாராகிப் போய்விடுவான் என்பதால் அந்தத் தாய் அவனது திருட்டுத் தனத்தை அங்கீகரித்தார் என்பது உண்மை.
தேர்தல் நாளில் ஓடியோடி ஓட்டுப் போட்டவர்களில் பலர் நல்ல வேளை காசுக்காகச் செய்யவில்லை அந்த ஈனச் செயலை. செய்ததுக்குரிய காரணம் நியாயமாக இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை. அப்பாவோடு போய் என் வாக்கை மட்டும் போடுவது மட்டுமே சரியென்று எனக்குப் பட்டது. ஆனால் எனக்கும், என்னொத்த வயதினருக்கும் வாக்களிக்கும் உரிமைக்கான சான்றிதழ் அப்போது கிடைத்திருக்கவில்லை. இருந்தும், என் தோழர்கள் பலர் வாக்களித்தார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதும் வாக்களிப்பு நிலையங்களிற்கு வரும் எல்லாப் பாதைகளிலும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி ஆதரவளிக்கப்பட்ட கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டதால் மகிந்த ராஜபக்சே அதிபரானது அனைவரும் அறிந்ததே. (ஆனால், ரணில் செய்த துரோகத்துக்கு அந்தப் புறக்கணிப்பு தேவையான ஒன்றென்பது என் கருத்து).
ஆனால், இப்போது நடக்கவிருக்கிற மாநகராட்சித் தேர்தல் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் கருத்துகள் எந்த வகையில் நேர்மையானவை எனபது எனக்குத் தெரியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றம் நுழைந்த பெருமக்கள் அனைவரும் ஒன்றை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். நேர்மையான ஒரு தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆகும் யோக்கியதை உங்கள் யாருக்கும் கிடையாது. ஒரு மாணவனாக இருந்த போது, கசிப்புக்கடைகளை மூட முயன்று, 'முதலில் நீ பியர் அடிக்கிற கடையை மூடு அதுக்குப் பிறகு கசிப்புக் காய்ச்சிறதை நிப்பாட்டிறதப் பற்றி கதைப்பம்' என்று ஒரு கசிப்பு முதலாளி அடித்துக் கலைக்க, பியரை விட முடியாமல் கொள்கையை விட்ட அற்புதமான ஒருவர் எங்களின் பிரதிநிதி. இவரெல்லாம் நேர்மையான தேர்தலில் ஜெயிப்பாராம். என்ன ஒரு தன் நம்பிக்கை பாருங்கள் (முக்கால்வாசிப் பேருக்கு இவர் தேர்தலில் நின்ற போது இவரை யாரென்றே தெரியாது).
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல. நீங்கள் எங்கள் பிரதிநிதிகளின் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமே. அதைத் தவிர, நேர்மையான தேர்தலில் ஜெயிக்குமளவுக்கு நீங்கள் யாழ்ப்பாணம், வவுனியா மக்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை என்பது உண்மை. அதைவிடப் பெரிய உண்மை, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் உங்களுக்காக இந்த முறை வாக்களிப்பதிலுள்ள அபாயங்களிலிருந்து எங்களையும், உங்களையும் காப்பாற்ற எங்கள் பிரதிநிதிகள் இன்றைக்கு இல்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக் குடியரசில்கூட நேர்மையான ஒரு தேர்தலுக்கு இனிமேல் வாய்ப்பில்லை.
2 comments:
கீத் என்ன நடந்தது தீடிரென்று அரசியலிற்கை குதிக்கிறீர்கள்.
என்ன செய்ய வந்தி அண்ணா... வெளிநாட்டில் பிச்சை புகுந்துவிட்டு இலங்கை அரசியல் பேசக்கூடாது என்றிருந்தேன்... கொஞ்சம் உணர்ச்சி என்னையும் மீறி வந்துவிட்டது... அடக்கி வைக்க முடியவில்லை... கொட்டிவிட்டேன்
Post a Comment