Friday, 24 July 2009

பீகார் கொடூரம்

பீகார் ஒரு கேடு கெட்ட மாநிலம் என்று பல செய்திகளில் படித்திருக்கிறேன். எந்தளவுக்குக் கேடுகெட்ட மாநிலம் என்பதை சமீபத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் பீகாரிகள். ஒரு இளம் பெண்ணை, பட்டப் பகலில், நடு ரோட்டில், நூற்றுக்கணக்கன பீகாரிகளுக்கு மத்தியில், போலீஸாருக்கு முன்னால் வைத்து, ஆடைகளைக் கிழித்து நிர்வாணமக்கி அற்புதச் செயல் புரிந்திருக்கிறது ஒரு கும்பல். அது பற்றிய செய்தி வீடியோ YouTubeல் இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம்பிடித்த செய்தியாளரை விடுங்கள், ஒரு கேடு கெட்ட நாய் வீடியோ காமராவைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் படம்பிடிக்க ஓடுகிறது.

இந்தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாகக் கூட்டிவந்த ராகேஷ்குமார் என்ற இளைஞன் தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் பெண்ணைக் கற்பழிக்க முயன்றதாயும், அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாயும், அவளைத் துரத்திப் பிடித்து, ஒரு ரிக்‌ஷாவில் ஏற்றி பட்னாவின் பரபரப்பான ஒரு வீதிக்குக் கொண்டுவந்து அவளை அடித்திருக்கிறார்கள். அந்த ரிக்‌ஷாவைப் பலர் துரத்தி வந்ததோடு சிலர் வீடியோ வேறு பிடித்தார்களாம். அரைமணி கழித்து வந்த போலீஸும் வேடிக்கை பார்த்தார்களாம். அப்ஸரா என்ற தியேட்டரைவிட்டு படம் முடிந்து வெளியே வந்த கூட்டத்துக்கு முன் வைத்து அவளை துகிலுரிந்திருக்கிறார்கள். அதை தியேட்டரிலிருந்து வந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களும் இணைந்து கொண்டார்களாம். ஒரு மணிநேரம் கழித்து போலீஸ் தலையிட்டு இந்தக் கேவலத்தை நிறுத்தினார்களாம்.

அதன் பின் போலீஸார் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினார்களாம். மேற்படி நான்கு இளைஞர்களும் அந்தப் பெண் ஒரு விபசாரி என்றும் அவள் தங்களை ‘அது'க்கு அழைத்ததால் கோபமுற்றே இவ்வாறு நடந்துகொண்டதாயும் கூறினார்களாம். இந்த விஷயம் பற்றி விசாரணை நடத்த பிகார் முதல்வர் நித்தீஷ் குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பல மகளிர் அமைப்புகள் கோஷம் போட ஆரம்பித்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயல்கின்றன. மீடியாக்கள், என் போன்ற பதிவர்கள் என்று எல்லோரும் கூவிக் கூவி இந்த வீடியோவை விற்கிறோம். அவ்வளவுதான்.

ஐயா, அந்தப் பெண் விபசாரியாகவே இருக்கட்டும். அவள் இவர்களை விபசாரத்துக்கு அழைத்ததாகவே இருக்கட்டும். அந்த விஷயம் இந்த நாலு பேருக்கும்தானே தெரியும். ஒரு பொது ஆள் பார்வையில் ஒரு பெண்ணை நாலு பேர் துன்புறுத்துவதாகத் தானே தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருமே, போலீஸ், மீடியா உட்பட யாருமே, அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லையே. அந்த நாலு இளைஞர்கள் மட்டுமா குற்றவாளிகள்? வேடிக்கை பார்த்த மற்றவர்கள்? இணைந்து கொண்ட மேலும் சிலர்? ஓடி ஓடி வீடியோ பிடிக்கும் அந்தக் கயவன்? பரபரப்புக்காக ‘லைவ்-கவெரேஜ்' செய்த மீடியா? போலீஸ்? எல்லாரும் குற்றவாளிகள் அல்லவா? ஒரு விபசாரியை இவ்வாறு மானபங்கப் படுத்தலாம் என்றால், நாளைக்கே ஒரு நல்ல பெண்ணையும் இதே போல் செய்து விபசாரிப்பட்டம் கட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இதெல்லாம் மீடியாவாலோ, அரசாலோ, அரச இயந்திரங்களாலோ, பொது நல அமைப்புக்களாலோ தீர்க்கப்படக்கூடிய விஷயமே அல்ல. மக்கள் விழிப்புணர்வு ரொம்பவே அவசியம். சாதாரண குடிமக்கள் போராடா வேண்டும். படங்களில் வருவது போல் மக்கள் போராட்டத்தை அவ்வளவு இலகுவில் அரச இயந்திரத்தால் அடக்கிவிட முடியாது. மலம் கலந்த தண்ணீர் பற்றி நம்முடைய பதிவர் ஒருவர் நிகழ்த்தும் தனிமனித போராட்டம் போல, மக்கள் இறங்கிப் போராட வேண்டும். மக்கள் போராட்டத்துக்கு அனேகமாக வெற்றி கிடைக்கும். சிலவேளை அது ‘தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படலாம். ஜே.வி.பி செய்தது உரிமைப் போர், விடுதலைப் புலிகள் செய்தது பயங்கரவாதம் என்று, ஜே.வி.பி. கலகம் செய்த காலத்தில் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகப் போராடிய மகிந்த ராஜபக்ஸே சொன்னது போல், மக்கள் போராட்டம் சிலவேளை வடிவம் மாற்றப்பட்டு பிழையான முத்திரை குத்தப்படலாம். அதற்காக ஒதுங்கிப் போகக்கூடாது.

இந்த வீடியோவையும் பாருங்கள். Dining With Terrorists என்ற இலங்கை இனப்பிரச்சினை பற்றிய வித்தியாசமான ஒரு கோணம். இந்த வீடியோவுக்கு என்னை பதிவர் சக்திவேலின் இந்தியாவைப் பார்த்து மிரண்டுபோன ராஜபக்சே என்ற பதிவு இட்டுச்சென்றது. நன்றி சக்திவேல்.

Dining With Terrorists Divided Island
Part-1 Part-2

3 comments:

கலையரசன் said...

இவனுங்கள என்ன பண்றதுனே தெரியல கீத்..
பாக்கும் போது ரத்தம் கொதிக்குது..
தூக்கு தண்டனையை ரத்து செஞ்சிருக்க வேண்டாமோ?

Unknown said...

இல்லை கலை... தூக்கு தண்டனை எல்லாம் ஓவர். மரணம் ஒரு தண்டனையே அல்ல. அதிகார பீடங்களில் தகுதியில்லாதவர்கள் அமர வைக்கப்படுவதும் ஊழலும்தான் ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகக் காரணமாக முடியும். அதேவேளை, பெண்களை மதிக்கின்ற மனநிலையை எப்படி ஆண்களிடம் கொண்டுவருவது என்பதுபற்றி எனக்குத் தெரியவேயில்லை

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்