Saturday 18 July 2009

மேடைப் பேச்சு


மேடையில் அல்லது கூட்டத்தில் பேசுவது பற்றி நினைத்தால் இன்றைக்கும் எனக்குக் கரப்பான் பூச்சி ஊர்வது போல் ஒரு உணர்வு தோன்றும். கனடாவில் எனக்குக் கற்பித்த ஆசிரியர் Tom Kauffmann மேடை/கூட்டங்களில் பேசுவதில் கில்லாடி. நான் கல்லூரியில் வேலை செய்யும்போது இவரது கருத்தரங்குகள் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வாறு பங்குபெற்ற கருத்தரங்குகள் தான் எனது கடைசி செமெஸ்டரில் Developing a Business Plan என்ற செயல்முறைப் பாடத்துக்கு அவரது வகுப்பைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. அவர் அடிக்கடி சொல்வார், ‘மனிதர்கள் இரண்டே இரண்டு விஷயங்களுக்குத் தான் மிகவும் பயப்படுகிறார்கள். ஒன்று மரணம். இன்னொன்று மேடை/கூட்டங்களில் பேசுவது (Death and Public Speaking). எல்லா மனிதர்களுக்கும் இந்த இரண்டும்தான் மிகப்பெரிய பயங்கள். நான் ஒன்றை வென்று விட்டேன். மற்றதை வெல்லவே முடியவில்லை'. உண்மையிலேயே பேச்சுத்திறண் Tom இடம் கொட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அவருடைய கருத்தரங்குகளுக்கு கூட்டம் ஜே ஜே என்று இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை மேடைப்பேச்சு என்பது ரொம்பவே படுத்தி எடுப்பது. என்னை முதன் முதல் மேடையேற்றியவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர் என்றால் நம்புவீர்களா? அவர் எனது பள்ளிக்காலத்தில் விஞ்ஞானம் கற்பித்த திரு. ந. விஜயகுமார் அவர்கள். வீ. கே. என்று அழைக்கப்படும் இவர்பற்றி ‘அந்த்ராக்ஸ்' என்ற பதிவில் ஏற்கனெவே குறிப்பிட்டுள்ளேன். இவர் ஒரு முறை ஒரு சின்ன Assignmentக்காக ‘பச்சை வீட்டு விளைவு' பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ரொம்பவே போரடித்ததால் நான் ‘ஆக்ஸிஜன், காபண்டை ஆக்சைடு' என்றெல்லாம் எழுதாமல், அவற்றின் குறியீடுகளையும் பயன்படுத்தாமல், சுத்தத் தமிழில் 'உயிர் வாயு, கரியமில வாயு' என்றெல்லாம் எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன் (அப்பா ஒவ்வொருநாளும் 7:30க்கு வயலும் வாழ்வும் கேட்டதன் பக்க விளைவு). விஞ்ஞானம் சரியாகவும், தமிழ் அழகாகவும் இருந்த கட்டுரை வீ.கே. க்கு ரொம்பவே பிடித்துப் போக, ‘செவ்வாய்க்கிழமைப் பொதுக் கூட்டத்தில் இதை நீ பேசுகிறாய்' என்று விட்டார்.

என்னதான் முயற்சி பண்ணியும் எழுதியதைப் பேச முயல்வது முட்டாள்தனம் என்ற முடிவை என்னால் மாற்ற முடியவில்லை. வீ.கே. அதெல்லாம் முடியாது நீ மேடை ஏறத்தான் வேண்டும் என்று விட்டார். கடைசியில் ஒரு Fileக்குள் எழுதிய கட்டுரையை வைத்து, மேடையில் இருந்த Standல் Fileஐ வைத்து, பேசுவது போல் Modulation எல்லாம் மாற்றி வாசித்து முடித்தேன். கீழே இறங்கி வந்தபோது ‘நல்லா இருந்தது' என்றார் வீ.கே. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அந்த ‘வாசிப்பு' முடிந்த பின்னர் எங்களின் ஆங்கில ஆசிரியர் சத்தியசீலன் என்னை தனது நாடகங்களில் மேடையேற்ற ஆரம்பித்துவிட்டார். அதன் பின் பள்ளிக் காலத்தில் பொங்கு தமிழ் நிகழ்வில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது மட்டுமே என்னுடைய இன்னொரு மேடைப் பேச்சாக இருந்தது. கனடா வந்த பின் பல Projectகளின் கடைசி Presentation கிட்டத்தட்ட ஒரு மேடைபேச்சு போல் Seminar Hallகளில் நடந்த போதும் PowerPoint உபயத்தில் தப்பித்துக் கொள்கிறேன்.

நான் சிறுவயதில் எங்களூர் கோயிலில் பத்து நாள் திருவிழாவிலும் நிகழ்த்தப்படும் சமய சொற்பொழிவுகளை ரசித்துக் கேட்டத்துண்டு. பின்னர் ‘கோஷ்டி' என்ற பெயரில் சினிமா பாடல்கள் பாடப்பட்டன, அத்துடன் சொற்பொழிவுகள் வழக்கொழிந்து போய்விட்டன. அதன் பின் முக்கால்வாசி மேடைப் பேச்சுகள் பாடசாலைக் காலங்களில் கேட்டவைதான். எங்கள் சமய ஆசான்கள் மற்றும் சொற்பொழிவாளர்களான நவம் சேர், கண்ணன் சேர் போன்றோரது பேச்சுக்கள் நன்றாக இருக்கும். அதே போல் கணிதம் கற்பிக்கும் அம்பாள் பக்தரான மரியதாஸ் மாஸ்டரின் பேச்சுக்களும் ஈர்க்கும் (ஒரு முறை கணிதத்தில் இருக்கும் மூடிய உருவங்களைப் பற்றிப் பேசவைத்து மார்க் வேறு போட்டார் மரி). மற்ற ஆசான்களும் பரவாயில்லை. பள்ளிக் காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தது பலரது எதிர்ப்புக்களின் மத்தியில் அதிபராக இருந்து, சொந்தக் கருத்தை வெளியே சொன்னதற்காக அடிவாங்கிய அதிபர் ஸ்ரீபதி அவர்களின் மேடைப்பேச்சுக்கள். 'அன்பான மாணவர்களே, ஆசிரியர்களே' என்று ஆரம்பித்து இயல்பான நடையில் ‘நாய் தான் வாலை ஆட்டலாமே ஒழிய, வால் நாயை ஆட்டமுடியாது' போன்ற எள்ளலுடன் பேசுவார். அவரது கொள்கைகள் சில சிலருக்குப் பிடிக்காமல் போனாலும் நல்ல ஒரு நிர்வாகி அவர்.

மேடைப்பேச்சை எல்லோருமே Masterபண்ணி விடுவதில்லை. எழுத்தாளர் சுஜாதா கூட அடிக்கடி அதில் தான் கொஞ்சம் Weak என்பதை சொல்லியிருக்கிறார். அவரும் அடிக்கடி எழுதிவைத்துப் பேசுபவர்தான். ஒரு மூறை கிண்டி பெண்கள் பாலிடெக்னிக்கில் கம்ப்யூட்டர் பற்றிப் பேச அழைத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் இரண்டு வகை மெமரிகள் உள்ளன, தற்காலிகம், நிரந்தரம். நமக்கு இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது நினைவிலிருக்கும் (தற்காலிக மெமரி). மார்ச் இருபதாம் தேதி காலை என்ன சாப்பிட்டோம் என்பது நினைவிலிருக்காது (நிரந்தர மெமரி). இப்படி இலகுவாக கம்ப்யூட்டர் பற்றி விளக்குவோம் என்று விட்டு சுஜாதா முன்வரிசையில் இருந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார், ‘உன் பெயர் என்னமா?'. அவள் நாணம், தயக்கம், பக்கத்து இருக்கைப் பெண்ணின் ‘சொல்லுடி' ஆகியவற்றின் பின் 'கலைச் செல்வி' என்றாளாம். இவர் ‘இன்று காலை என்ன சாப்பிட்டாய்?'. அவள் ‘மோர் சாதம்'. இவர் ‘மார்ச் 20 காலை என்ன சாப்பிட்டாய்'. அவள் தயங்காமல் ‘அதே தான், எங்க வீட்டில எப்பவுமே காலையில மோர்சாதம்தான்'. சுஜாதாவின் சொற்பொழிவு அங்கேயே தடம்புரண்டது. இதை அவரே ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். அவரது பாணி பெரும்பாலும் எழுதிவைத்து வாசிப்பது. அவரது எழுத்து வாசிக்க சுவையாயிருக்கும், ஆனால் நாங்களெல்லாம் அதே முறையைப் பின்பற்ற முன் கல், கூழ்முட்டை, அழுகினதக்காளி ஏதாவது பேச்சைக் கேட்பவர்களுக்குக் கிடைக்குமா, கிடைக்காதா என்பதை உறுதிசெய்துகொள்வது உசிதம்.


தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் பல நல்ல பேச்சாளர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோரின் பேச்சுக்களை விளங்கியதோ இல்லையோ மக்கள் ரசித்தார்கள். ஜனரஞ்சகமாகவும், உணர்வு பூர்வமாகவும் மக்களைக் கவரக்கூடிய இன்னொருவர் வைகோ. சமயப் பேச்சாளர்களில் வாரியார் அவர்கள் சொற்பொழிவுகளின் மத்தியில் நகைச்சுவையைத் தூவி புதிய பாதை ஏற்படுத்தினார் (பலர் வாரியார் பாணியை ஈயடிச்சான் காப்பி அடித்துத் தோற்றார்கள். வாரியாரின் இயல்பான நகைச்சுவை அவர்களிடம் வரவில்லை). சில சமயப் பேச்சாளர்கள் ‘பாலும் அதுவும் இதுவும் கலந்து' 'பாற்கடலை நக்க வந்த பூனை' என்றெல்லாம் கடுப்படிப்பார்கள். எங்கள் பாடசாலையிலும் வாசு போன்றவர்கள் இப்படித்தான் கொல்லுவார்கள். சாலமன் பாப்பையா பட்டிமன்றப் பாணியையே மாற்றினார். அவர் வழியில் லியோனியும். இப்படியாக மேடைகளில் பேசுவதை ஒரு கலையாக மாற்றி அதில் முக்குளித்தவர்களைப் பார்க்கும்போது இன்றைக்கும் எனக்கு ஒரு பிரமிப்பு ஏற்படும். ஆனால் அந்த ரிஸ்க்கையெல்லாம் எடுக்க நான் தயாராயில்லை. எழுதுவது ஓரளவுக்கு நல்லா வருகிறபடியால் அதையே தொடரலாம என்று நினைக்கிறேன். யாராவது என் எழுத்துக்களை திட்ட நினைத்தாலும் முகத்துக்கு நேரே திட்ட முடியாது. திட்டின் வீரியம் குறைந்து விடுவது எழுதுவதில் உள்ள சௌகரியம்

5 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

யாரும் தொடாத ஒரு துறையைப் பற்றி நன்றாக எழுதியிருக்கீங்க.

Unknown said...

யாரும் தொடாத துறை அல்ல செந்தில்வேலன்.. பெரும்பாலானவர்கள் தொடத் தயங்கும் துறை

Muruganandan M.K. said...

சுவார்ஸமான பதிவு. உங்கள் பதிவில் வந்தவர்களில் பலர் எனது நண்பர்களும் கூட என்பதால் மேலும் இனித்தது.

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

Nirmalkumar Muthukumaran said...

Athu ennagga, blog padikiravannga ellorum blog vechurukanuma enna ... ugga post comment sarriya padala ... etho sabam kodukura mathiri irruku.

- Nirmal