Tuesday 2 June 2009

மெல்லத் தமிழ் இனிச் சாகும்


சமீபத்தில் என் அக்கா வீட்டின் நிலவறையை ஒதுக்கும் போது ஒரு பாரதியார் கவிதைப்புத்தகம் ஒன்று கிடைத்தது. கொஞ்சநாள் வேறு வேலை எதுவும் இல்லையா, எடுத்து வாசித்தேன். ஒரு கவிதை என்னை ஈர்த்தது. இன்றைக்குத் தமிழ் வளர்க்கப் பாடுபடும் அத்தனை தமிழ் குடிதாங்கிகள், தமிழன்னையின் மானம் காப்போர், மேடைகளில் புலம்பும் வாய்ச்சொல் வீரர் எல்லாரும் பயன்படுத்தும் அந்த புகழ்பெற்ற வாசகம் அடங்கிய கவிதை இதுதான்.

ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். (1)

மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். (2)

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல
காற்றையும் வான் வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். (4)

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். (5)

கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்

காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்

என்னென்ன வோபெயருண்டு - பின்னர்

யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர். (6)


தந்தை அருள்வலி யாலும் - முன்பு

சான்ற புலவர் தவவலி யாலும்

இந்தக் கணமட்டும் காலன் - என்னை

ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான் (7)


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி

ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)


'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)


சொல்லவும் கூடுவதில்லை - அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும்
- அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)


என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)


தந்தை அருள் வலியாலும் - இன்று

சார்ந்த புலவர் தவ வலியாலும்

இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்

ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)


அடப் பாவிகளா...சற்றே கூர்ந்து கவனியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்றா பாடினான் அவன்? 48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக (பாரதி செத்தது செப்டெம்பர் 11, 1921) மானபங்கப்படுத்தி வருகிறோம். அவன் சொன்ன கருத்தைத் திரித்து உண்மையிலேயே தமிழைக் கொன்று வருகிறோம். பாரதியாவது தமிழ் சாகும் என்று புலம்புவதாவது என்ற சந்தேகத்தைத் தீர்த்த அந்தப் புத்தகத்தை வெளியிட்ட வானதி பதிப்பகத்துக்கு நன்றிகள் கோடி. ஆகவே மக்களே “ 'மெல்லத்தமிழ் இனி சாகும்' என மகாகவி பாடினானே... அது போல தமிழ் அழிகிறதே” அப்பிடி இப்பிடி எவனாவது ஆரம்பிச்சா.... கல்லெடுத்து அடிங்க.. சரியா

12 comments:

சங்கே முழங்கு said...

தமிழன் சாகும்போது தமிழ் சாகாதா? அய்யோ! கல்லெடுக்காதீர், உமக்கு காலம் பதில் சொல்லும்.

Unknown said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

விக்னேஷ்வரி said...

முக்கியமான பதிவு. தகவலுக்கு நன்றி.

Unknown said...

ஹா ஹா.. @சங்கே முழங்கு.... ஈழத்தில் நாங்கள் செத்தால் என்ன?? ஆறரைக் கோடிக்குமேல் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் ‘தன்மான'த் தமிழர்கள்..

vasu balaji said...

நல்ல இடுகை. நன்றி.

நசரேயன் said...

தமிழ் வாழ்க..தமிழ் வாழ்க..

Anonymous said...

@Keith Kumarasamy

//ஈழத்தில் நாங்கள் செத்தால் என்ன??//

என்னது,ஈழம் கனடாவுலயா இருக்கு?

Sathik Ali said...

86 வருடங்களாக ஒர் கவிதையை புரிந்து கொள்ளாமல் ஒரு வரியை மட்டும் உதாரணம் காட்டி கவிஞனின் கருத்தை திரித்து விட்டார்களே தமிழ் அறிவாளிகள்.இவர்களை தான் அந்த பேதை என்று பாரதி சொன்னது.மிக நல்ல பதிவு.

Unknown said...

அனானி நண்பருக்கு.... ஈழம் கனடாவில் இல்லை. ஆனாக், அகதியாய் வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும். உங்களுக்கு வேண்டுமானால் இப்போதைக்கு என்னை மட்டம் தட்டிவிட்ட மகிழ்ச்சி.. ஆனால் எங்களுக்கு அது வாழ்நாள் வலி

@சாதிக் அலி: உண்மைதான் நண்பரே... வரவுக்கு நன்றி

தீப்பெட்டி said...

//தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்றா பாடினான் அவன்? 48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக (பாரதி செத்தது செப்டெம்பர் 11, 1921) மானபங்கப்படுத்தி வருகிறோம்//

இந்த முழுப்பாடல் தமிழறிந்த மக்கள் அறிந்ததே..
//மெல்லத் தமிழினிச் சாகும்//
இந்த வரியை பயன்படுத்தும் இடமும், நோக்கமும் வேறு.

சிலர் இந்த வரியை மட்டும் கேட்டு தவறான இடத்தில் தவறான கருத்தை உறுதிப் பிரயோகப்படுத்தி இருக்கலாம்.

Unknown said...

தீப்பெட்டி
மேற்படி வரி பெரும்பாலான இடங்களில் தவறான அர்த்தத்திலேயே பயன்படுகிறது என்பது உண்மை. முழுப்பாடலையும் அறிந்த நீங்கள் சொன்ன ‘தமிழறிந்த மக்கள்' மிகச் சிலரே என்பது வருத்தத்துக்குரிய உண்மை. (ஆனால் நீங்கள் தமிழறிந்தவர் என்பது மட்டும் தெளிவாகிறது).. அந்த வருத்தத்தில்தான் எழுதினேன்.இந்த வரியை பலர் திரிக்கப்பட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்துகிறார்கள் என்ற கசப்பான உண்மையை நீங்கள் மறுக்க முடியாது.

யாத்ரீகன் said...

புரியலீங்களே :-(