Tuesday 9 June 2009

சென்சார் போர்டு


இந்திய சென்சார் போர்டில் சில காட்சிகளை நீக்குவதற்குச் சொல்லும் காரணங்கள் நியாயமாக இருப்பதில்லை என்பது பல இயக்குனர்களின் வாதம். சில காட்சிகளை நீக்கிவிட்டுக் காரணம் கேட்டால் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள், ரசனை இல்லாதவர்கள் எல்லம் சென்சார் போர்டில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொதுவாக சென்சார் போர்டில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்த சென்சார் போர்ட் மற்றும் சென்சார் நடைமுறை ஆகியவை ஒரு எழுத்தாளர், ஒரு இயக்குனர், ஒரு நடிகை ஆகியோரின் பார்வையில் எப்படி இருந்தது என்பதற்கு கீழே உள்ள உரையாடல் நல்ல ஒரு சான்று.

எழுத்தாளர்: சுஜாதா,
இயக்குனர்: 'உதிரிப் பூக்கள்' மகேந்திரன்,
நடிகை: லட்சுமி.
உரையாடலின் பின்னணி: சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை' முழுக்க முழுக்க சினிமா உலகைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதன் முதல் அத்தியாயத்தை நடிகை லட்சுமியிடமும், இயக்குனர் மகேந்திரனிடமும் கொடுத்து படிக்க வைத்தார்கள் விகடன் ஸ்தாபனத்தார். படித்த பிறகு மகேந்திரன், லட்சுமி மற்றும் சுஜாதா விகடன் ஆசிரியர் முன்னிலையில் அந்த முதல் அத்தியாயம் பற்றியும், இந்திய சினிமாவின் பல்வேறு விடயங்கள் பற்றியும் நிகழ்த்திய நீண்ட உரையாடலின் சில பகுதிகளைத்தான் உங்களுக்காகக் கீழே தொகுத்திருக்கிறேன். அந்த முழு உரையாடல் ‘விசா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘கனவுத் தொழிற்சாலை' நாவலில் முன் இணைப்பாகக் காணப்படுகிறது.

லட்சுமி: சென்சார் இருக்கணும்கிறீங்களா வேண்டாங்கிறீங்களா?

மகேந்திரன்: இருக்கணும்... ஆனா அதில யார் இருக்காங்கறதுதான் முக்கியம். இப்ப சமீபத்தில என்னோட 'உதிரிப்பூக்கள்' படத்தை சென்சார்ல பார்த்தாங்க. அது ஒரு நீட் பிக்சர். இருந்தும் அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட்தான் கொடுத்தாங்க. 'என்ன காரணம்'னு கேட்டேன். இதில வர்ற விஜயன் கேரக்டர் ரொம்ப சாடிஸ்டா இருக்கான். குழந்தைகள் பார்த்தா கெட்டு போயிடுவாங்கன்னு சொன்னாங்க. ‘அந்தக் கெட்டவன்தான் கடைசியிலே ஃபினிஷ் ஆயிடறானே..இப்படிப்பட்டவனா இருக்கக்கூடாதுன்னு இந்தக் கேரக்டர் மூலமா ஒரு பாடம் குழந்தைகளுக்கு கிடைக்குமே'ன்னு நான் சொன்னேன். 'இல்லே இல்லே'ங்கிறாங்க. 'நாளைக்கு நான் ராமாயணம் எடுப்பேன். ராவணன் மத்தவன் பெண்டாட்டியை கடத்திக்கிட்டு போறானே.. அதுக்கு ‘ஏ' சர்டிபிகேட் கொடுப்பீங்களா?'ன்னு கேட்டேன். ‘அது வந்து ... சென்சார்...சாடிஸ்ட்...' அப்படின்னு மழுப்பறாங்க. இவங்களோட என்ன பண்ணமுடியும்?

சுஜாதா: இப்ப நான் வெளிநாடு போயிருந்த போது Blue Film பார்த்தேன். அங்க இவ்வளவு சென்சார் கிடையாது. ஆனா அது மாதிரி படத்துக்கு கூட்டம் என்னன்னு கேட்கறீங்களா? பத்து பேர். சிகரெட் பிடிச்சுக்கிட்டு படத்தைக் கூட சரியா பார்க்கிறதில்லை. கூட்டமெல்லாம் வால்ட் டிஸ்னி படத்துக்குதான். இங்கே சென்சார்கிட்ட தப்பிச்சுட்டு வர்றதுதான் ரொம்ப வல்கரா இருக்கு . சில வசனங்களும்...சில பாடல்களும்.

லட்சுமி: அப்ப இந்தியாவிலே சென்சார் வேண்டாம்னு நினைக்கிறீங்களா?

சுஜாதா: இந்த மாதிரியான சென்சார்ஷிப் வேண்டாம்னுதான் நினைக்கிறேன்..

லட்சுமி: மேல்நாட்டு ரசிகத்தன்மைக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இங்கே சென்சார்ஷிப் கட்டாயம் வேணும்னுதான் நான் நினைக்கிறேன்.

மகேந்திரன்: நான் சுஜாதா சொல்றதுதான் கரெக்டுன்னு நினைக்கிறேன்.

லட்சுமி: நீங்க சென்சார்ல கஷ்டப்பட்டதால அப்படி சொல்றீங்க.

மகேந்திரன்: நான் மட்டுமில்லை. இனிமே எல்லோரும் கஷ்டப்படப் போறோம்...

சுஜாதா: என் கதையிலே ஒருத்தன் நிச்சயம் கஷ்டப்படப் போறான் சென்சார்கிட்டே! அவன் தலைமயிரைப் பிடிச்சுக்கிட்டு ஓடப் போறான்.

மகேந்திரன்: அது மாதிரி நல்லா எழுதுங்க சார்..

சுஜாதா: சட்டத்தினாலே ஒழுக்க நெறிமுறையெல்லாம் கொண்டுவர முடியாது. மது விலக்கையே பாருங்களேன். இப்ப தமிழ் படங்கள்லே வர்ற சில காதல் காட்சிகள் Nude Filmகளை விட அதிக excitement கொடுக்கிறது....

லட்சுமி: நீங்க சொல்றது சரிதான். போன வருஷம் நடந்த Film Appreciation Courseலே ஒருத்தர் எழுந்து சென்சார் அதிகாரியைக் கேட்டார், ‘முத்தக் காட்சிகளை ஏன் அனுமதிக்கக் கூடாது'ன்னு. அதிகாரி அதற்குப் பதில் சொன்னார் 'பொண்டாட்டி ஊருக்குப் போறான்னா வெளிநாட்டுலே ரயில்வே ஸ்டேஷ்ன்லேயே அவன் அவளை கிஸ் பண்ணுறான். இங்கே அதுமாதிரி உண்டா? அதனால இங்கே அதைக் காட்ட முடியாது' ன்னு. அதுக்கு கேள்வி கேட்டவர் உடனே மடக்கினார். ‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா? அதைக் காட்டலியா?'ன்னு. இப்படிப்பட்ட விவாதத்திற்கு முடிவே கிடையாது. சென்சார் அதிகாரி சொன்னதும் நியாயமாப் படறது. மகேந்திரன் சொன்னதும் நியாயமாப் படறது.

சுஜாதா: சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. ஓரளவுக்கு நியாயமா இருக்கணும்னு சொல்றேன். எழுத்திலேயே பாருங்க. ‘பாலம்'னு ஒரு கதை எழுதினேன். ஓரளவுக்கு அதிலே ஒரு கொலையையே நியாயப்படுத்தினேன். அதைப் படிச்சுட்டு ஒருத்தர் 14 பக்கத்துக்கு மேலே ஒரு கடுதாசி எழுதிட்டு ‘ இப்ப உன்னையே எனக்கு கொல்லணும் போல இருக்கு..வரட்டுமா'ன்னு கேட்டிருந்தார். அதைப் பார்த்திட்டு நாம எழுதியதை எவ்வளவு பேர் படிக்கிறாங்க. அது எவ்வளவு பேரைப் பாதிக்கிறதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நாமே நமக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்க வேண்டியிருக்கு. அதே மாதிரி சினிமா எடுக்கிறவங்களும் கட்டுப்பாட்டோட எடுக்கணும்.

லட்சுமி: நான் அதைத்தான் சொல்ல வரேன். நமக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. நமக்கு யாராவது ஒருத்தர் ‘ செய்யாதே..... செய்யாதே'ன்னு சொல்லிண்டே இருக்கணும்.

மகேந்திரன்: நானும் இப்ப சென்சாரே வேண்டாம்னு சொல்லலே. விஷயம் தெரிஞ்சவங்க, இந்த மீடியத்தைப் புரிஞ்சவங்க பார்க்கணும். சினிமாவைப் பற்றி ஒண்ணுமே தெரியாத யாரோ வந்து கலெக்டர் ஆபீஸ் ஜாப் மாதிரி வந்து உட்கார்ந்துட்டுப்போனா எப்படி சார்?

லட்சுமி: சினிமாவை கம்ப்ளீட்டா தெரிஞ்சவங்க உட்கார்ந்தா எல்லாத்தையும் அனுமதிச்சுடுவாங்களே. வெளி ஆள் இருந்தாத்தான் எது வேணும் எது வேண்டாம் எந்தக்காட்சி தங்களைப் பாதிக்கிறதுன்னு சொல்ல முடியும்....

சுஜாதா: அவங்க அனுமதிக்கிற சீனும் நல்லா இல்லேன்னுதான் நான் சொல்ல வரேன். இரண்டுபேர் மூக்கை மூக்கை முகர்ந்து பார்க்கிறாங்க. அதுக்கப்புறம் காமிரா நேரே இரண்டு பூ கிட்டே போயிடுது. இப்ப இங்கதான் இமாஜினேஷன் அதிகமா போயிடுது. இது முத்தக் காட்சியைவிட மோசமா இருக்கு. நமக்கு சென்சார்ஷிப் வயலன்ஸுக்காகத்தான் வேணும். இப்ப சார்ள்ஸ் பிராஸ்னன் படத்தில் மிதி மிதினு மிதிப்பான். எலும்பு நெருங்கற சத்தம் கேட்கும். இதெல்லாம் நம்மாலே தாங்கிக்க முடியாது.

[உரையாடல் வேறு விடயங்களுக்கு மாறுகிறது]

இன்றைக்கும் கூட இந்திய சினிமா சென்சார் மாறவேயில்லை. இவர்கள் அனுமதிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள், இவர்கள் அனுமதிக்காத காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரியளவில் வேறுபடுவதில்லை என்பது இன்றைக்கும் படைப்பாளிகளின் முறையீடாக இருப்பது வருத்ததுக்குரியது.

11 comments:

Subankan said...

சில U/A பெற்ற படங்களின் காட்சிகள் A பெற்றவற்றைவிட மோசமாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, ஓரிடத்தில் திரையிட மறுக்கப்படும் படம் இன்னோரிடத்தில் அனுமதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவீடு வரும்வரை சிக்கல்தான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அருந்ததி ஏ படம் தெரியுமா தல....

பொம்மாயி பார்க்காத குழ்ந்தைகளே கிடையாது././.

இராகவன் நைஜிரியா said...

இதெற்க்கெல்லாம் ஒரு அளவீடு வைக்கவே முடியாதுங்க..

குறிப்பிட்ட காட்சி தேவையா, இல்லையா என்று மட்டும் பார்த்த்து, கதையுடன் இணைகின்றதா என்றுப் பார்த்தாலே, நன்றாக இருக்கும்.

Unknown said...

U/A, A பற்றிய சுபாங்கனின் கருத்துகளுக்கு உடன் படுகிறேன். ஆனால் இராகவன் சொன்னது போல குறிப்பிட்ட அளவீடு என்பது Almost Impossible. ஆனால் காட்சிகள் கதையுடன் இணைகிறதா என்று பார்த்து சென்சார் செய்ய ஆரம்பித்தால் விவேக்,வடிவேலு, கவுண்டமணி, செந்தில் நடித்த முக்கால்வாசி காமெடி சீன்களைத் தூக்கவேண்டிவருமே.அருந்ததி பற்றி சுரேஷ் சொன்னதும் உண்மை. மொத்தத்தில் சென்சார் ரேட்டிங்கை மதிக்காமல் வருகின்ற காசுக்காக தியேட்டர்கள் செயற்படும் பட்சத்தில் சென்சார் இருந்தென்ன, விட்டென்ன.

நசரேயன் said...

அடுத்த படம் எடுக்கும் போது சொல்லுங்க, நானும் நிறையை கதை வச்சி இருக்கேன்

Unknown said...

உங்க கதைங்க படமாகும் போது சொல்லுங்க நசரேயன்.. உங்க ஆபீஸ்பாயா வந்துடறேன். (கந்தசாமியை மறக்க முடியலங்க)

வால்பையன் said...

ஆனந்தவிகடன் பொக்கிஷத்தில் வந்ததுன்னு நினைக்கிறேன்!

அவ்வளவும் டைப் பண்ணிங்களா!
கீழே ஒரு நன்றி போட்டுடுங்க!

सुREஷ் कुMAர் said...

//
சுஜாதா: இப்ப நான் வெளிநாடு போயிருந்த போது Blue Film பார்த்தேன்.
//
சுஜாதாதாதாதா..??
என்னா தலை இதெல்லாம்..?

सुREஷ் कुMAர் said...

//
‘பப்ளிக் பார்க்கிலே ஓடி ஆடி டூயட் பாடறது மட்டும் இந்தியாவில நடக்கிறதா? அதைக் காட்டலியா?'ன்னு. இப்படிப்பட்ட விவாதத்திற்கு முடிவே கிடையாது. சென்சார் அதிகாரி சொன்னதும் நியாயமாப் படறது. மகேந்திரன் சொன்னதும் நியாயமாப் படறது.
//
இதுவும் சரி தான்..

அப்படி பார்த்தா, இப்போ நம்ம சினிமால வர்ற 90% மேட்டர் இயல்பானது இல்லை தான்..
அப்போ என்ன தான் பண்ண..?

Anonymous said...

good

Unknown said...

ரொம்ப அதிராதீங்க சுரேஷ் குமார். பேட்டியில் அவர் பேசியது அதுதான். இந்த ஒளிவுமறைவில்லாத தன்மைகூட அவருக்கு எதிரான விமர்சனங்களில் ஒன்று.

வால்பையன்: இது ஆனந்தவிகடன் பொக்கிஷத்தில் வந்ததா இல்லையா தெரியாது. ஆனால் நான் இதை வாசித்தது விசா பதிப்பகம் வெளியிட்ட ‘கனவுத் தொழிற்சாலை' நாவலின் முன்னிணைப்பாக. அதைப் பதிவிலேயே சொல்லியிருந்தேன். அதனால்தான் 'நன்றி' போடவில்லை.