
29/04/2009 ஆனந்த விகடன் இதழில் மதன் பதில்கள் பகுதியில் வெளியான ஒரு கேள்வியும் பதிலும் எனக்கு பிடித்திருந்தது.அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:
கேள்வி: ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?
பதில்: தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடியும் புள்ளியில் தத்துவம் தொடங்குகிறது. கடவுளை நம்புவது என்பது பகுத்தறிவான, "லாஜிக்"கான ஆதாரம் இல்லாத (மூட) நம்பிக்கை என்பது தத்துவவாதிகளின் பரவலான கருத்து.
ஒருமுறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார். "நான் தான் கடவுள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் அடிப்படையானவன்" என்றார். தத்துவவாதி, "ஓ.கே. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகின்றதா? அல்லது, அது நல்லது என்பதால் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார். கடவுள் "நான் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால்தான் ஒன்று நல்லதாகிறது!" என்று பதில் சொல்ல, "அப்படியென்றால் ஒரு குழந்தையை சித்திரவதை செய்து கொல்வது என்பது 'நல்லது தான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிடமுடியுமா?" என்றார் தத்துவவாதி. கடவுளுக்கு கோபம் வருகிறது. தத்துவவாதி தொடர்ந்து "அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?" என்கிறார். "நீ திருந்தமாட்டாய்!" என்று எரிச்சலோடு மறைந்துவிடுகிறார் கடவுள். (தத்துவமேதை பிளேட்டோ சொன்ன கதை)
நல்லது கெட்டது எது என்று பகுத்தறியத்தான் எமக்கு பகுத்தறிவு இருக்கிறது. பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தாதவர்கள், பயன்படுத்த மறுப்பவர்கள் போன்றோரை நெறிப்படுத்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகளே மதங்களும் கடவுள் நம்பிக்கையும். இந்த நம்பிக்கையே பகுத்தறிவை மறைக்கும் கருவியாயும், சிந்திக்கும் திறணையே மழுங்கடிக்கும் விஷமருந்தாயும் மாறியத்துதான் இன்றைக்கு கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கும், மோசடிகளுக்கும் காரணம். மதன் சொன்ன பதில் என்னை சிந்திக்க தூண்டியது. புதிதாக எனக்குள் முளைத்த கடவுள் மறுப்புக் கொள்கை சரியே என இன்னும் திடமாக நம்புகிறேன்.
2 comments:
கடவுள் மறுப்பு என்பது நமக்குள் முளைக்கவில்லை!
நாம் குழந்தையாக இருக்கும் போது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாது!
கடவுள் என்பது பெறோர்களால் நமக்கு விதைக்கப்பட்ட விஷச்செடி!
வளர்ந்தால் மதம், சாதி பெயரால் பல விஷச்செடிகளை ஒருவாக்குவோம்!
I like this post. Thank you.
Post a Comment