
எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது எனது நண்பன் தயாநிதி மூலமாக. அறிமுகம் என்றதும் நானும் சுஜாதாவும் ஏதோ நேரடியாகச் சந்தித்து உரையாடினோம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அவரது எழுத்துக்கள் அறிமுகமானது நண்பன் தயாநிதி மூலம். அந்த நாவலின் பெயர்கூட மறந்து விட்டது. கொஞ்சம் செக்ஸ் தூக்கலான நாவல். (அப்போ எனக்கு பதினாலு வயது). அதுக்காகவே வாசித்தேனா, தலைப்பு மறந்து விட்டது. கதை நாயகியின் பெயர் கல்பனா. அவள் சம்பந்தமாக ஒரு கொலை. (கணவனை என்று நினைக்கிறேன், ஆண்மையற்ற கணவன்). ட்ரைவரோடு கள்ள உறவு. அப்படி இப்படி என்று போகும். அதற்குப்பிறகு செக்ஸ் தூக்கலாக இருக்கும் என்ற நப்பாசையில் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ எல்லாம் படித்தேன். ஆனால் அதற்குப்பிறகு சுஜாதா என்னை வேறு விடயங்களுக்கு ஈர்க்க ஆரம்பித்தார்.
சுஜாதாவின் மேல் ஒரு மரியாதை முதன்முதலில் உருவானது எங்களது பள்ளிநூலகத்தில் தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புத்தகத்திலிருந்துதான். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புகழ் பெற்ற ஹாட்லிக்கல்லூரியில் படித்து வந்தேன். 6ம் வகுப்பு தொடக்கம் 11ம் வகுப்பு வரையில் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் எப்படியாவது வந்துவிடுவேன். (பகீதரனும் அரவிந்தனும் மற்ற இருவர். 11ம் வகுப்பு "டி" பிரிவில் இரண்டாம் தவணை மட்டுமே முதலாவதாய் வந்து ஒரே ஒரு முறை பகீரை முந்தினேன்). அப்போது ஏதோ ஒரு பொது அறிவுப்போட்டி, அதற்கு ஏதாவது தயார் செய்வோமே என்றுதான் நூலகம் சென்றேன். அங்கேதான் சுஜாதாவின் பிரமிக்கத்தக்க அடுத்த முகத்தை பார்த்தேன். அவரது "ஏன்?எதற்கு?எப்படி?" என்ற கேள்விபதில் தொகுப்புதான் என்னை ஈர்த்தது. அதன் பின் அவரைத் தேடித் தேடிப் படித்தேன். ஆனால் ஒரே மாற்றம், "இந்தாள் கதையில செக்ஸ் நல்லா இருக்கும்" என்ற எண்ணம் அடியோடு அழிந்து போயிற்று. சுஜாதா மூலம் தரமான இலக்கியங்கள், படைப்புகள், படைப்பாளிகள் பற்றி அறிந்து கொண்டேன்.
சுஜாதாவிடம் எனக்கு பிடித்தது அவரது நேர்மை. "நான் இப்படித்தான்" என ஆணித்தரமாகக் கூறினார். இந்திய சமூக அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அவர் வரவேற்றது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை. ஆனால் அதை அவர் தனது எந்த வாசகனிடமும் திணிக்க முயலவில்லை. தீவிர வைணவரான அவர் தனது எழுத்துக்களில் ஆங்காங்கே தூவிச்சென்ற பகுத்தறிவு விதைகளை இன்றைக்கும் தந்தை பெரியாரின் வாரிசுகளாகக் வேடம் கட்டிக்கொண்டு சுஜாதாவைத் திட்டித்தீர்க்கும் பலர் கூடச் செய்யவில்லை. ஒரு நடுநிலமையான நல்ல விமர்சகராயும், இளைஞர்களை ஊக்குவிப்பவராயும், நல்ல திறமையாளர்களை வெளிக்கொணர்பவராயும் (நா. முத்துக்குமார்)இருந்தார். நாசூக்காகப் பாராட்டுவது போல விமர்சிக்கும் திறமை இருந்தது அவரிடம். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் தனது எழுபதுகளில் எழுதிய கட்டுரைகள், கதைகள் கூட எங்கள் போன்ற இருபதுகளையும் ஈர்த்தன. நான் கனடா புறப்பட்டபோது எடுத்துவைத்துக்கொண்ட இரண்டே இரண்டு புத்தகங்கள் அவர்மீது எனக்கிருந்த மரியாதை, வெறி, ஆர்வம் ஏன் பாசம் எல்லாவற்றையும் சொல்லும். கற்றதும் பெற்றதும் பாகம் 1 மற்றும் 2 தான் அவை. (கனடாவில் வந்து அடுத்த இரண்டு பதிப்புகளைத் தேடாத நாளில்லை). எனக்கு ஒரு hotmail account உண்டு. அதை நான் பெரிதாகப் பாவிப்பதில்லை. இருந்தும் அதை கைவிடாமல் வைத்திருக்கிறேன். ஏன் தெரியுமா? அதில் சுஜாதா எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிலஞ்சல் இருக்கிறது. அது எனக்கு ஒரு பொக்கிஷம்.
3 comments:
சுஜாதாவை நான் அறிமுகப்படுத்திக்கொண்டது -உன்னால்
என்னை நான் கண்டுகொண்டேன் ..சுஜாதாவின் நாவல் ஒன்றில்
"வசந்தகால குற்றங்கள் "....பாத்திரத்தின் பெயர் நினைவில் இல்லை
அடிமையாகக் கூடாத சிலவற்றுக்கு அடிமையாகமுடியாத சராசரி
மனிதர்கள் போல வாழ முடியாது ...என்னால் .
என்னை தினமும் கொல்லும் நாவல் அது ..............
//என்னை தினமும் கொல்லும் நாவல் அது//
அதனால்தான் நண்பரே சுஜாதா காலம் கடந்து நிற்கிறார். அவரது புகழ் பிடிக்காத பலர் அவர் செக்ஸ் எழுதிவியாபாரம் பண்ணினார் என்று உளறுவது கொடுமை. (ஆனால் அவர்கள் மட்டும் செக்ஸை விளக்கி தொடர் எழுதுவார்கள்). சுஜாதா மனித உணர்வுகளை நிஜத்துக்கு மிக அருகே படம் பிடித்துக்காட்டியதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.
நண்பரின் முகத்தைக் காட்டலாமே??
அடாடா நண்பா நீயா அது....வா வா.
Post a Comment