Friday 8 May 2009

எளிமையாகத் தமிழ் இலக்கணம் -05

ஒலி வேறுபாடும் பொருள் வேறுபாடும்

(1) ர, ற


அரம், மரம் - இவற்றிலுள்ள ரகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயைத் தடவுதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது என அறியலாம்.

வரம், கரி, கரை, குரவர் - இவற்றை உச்சரித்துப் பாருங்கள். அறம், மறம் - இவற்றில் வந்துள்ள றகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் ற பிறக்கின்றமையை அறியலாம். இவ்வாறு இவை (ர- ற) பிறக்கும் முயற்சியில் வேறுபடுதலால்தான் உச்சரிப்பிலும் இவை வேறுபடுகின்றன. இவை உச்சரிப்பில் வேறுபடுதல் போலவே பொருளிலும் வேறுபடும்.

ர ற
அரம் - ஒரு கருவி அறம் - தருமம்
மரம் மறம் - வீரம்
இரை - உணவு இறை - தலைமை, வரி
கரி - யானை கறி - பதார்த்தம்
கரை - அணை கறை - அழுக்கு
திரை - அலை திறை - கப்பம்
பரவை - கடல் பறவை - பட்சி
மாரி - மழை மாறி - வேறுபட்டு
விரல் - ஓர் உறுப்பு விறல் - வலிமை, திறமை


இவ்வாறு இவை உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இரண்டையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது. (2) ந,ன, ண நகம், நண்டு - இவற்றில் வந்துள்ள நகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. கந்தன், பந்தம் என்று இதனையடுத்துப் பெரும்பாலும் `த' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் இந்நகரம் தகரத்தை அடுத்திருத்தலாலும் இது தந்நகரம் எனப்படும்.

கன்று, நன்று - இவற்றில் வந்துள்ள னகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயை மிகப் பொருந்துதலால் இவ்வெழுத்துப் பிறக்கின்றது. மன்று, சென்று என இதனையடுத்துப் பெரும்பாலும் `ற' வருதலாலும், மெய்யெழுத்துக்களின் இறுதியில் றகரத்தை அடுத்து இந்த னகரம் இருத்தலாலும் இது றன்னகரம் எனப்படும். பணம், மணல் - இவற்றில் வந்துள்ள ணகரத்தை உச்சரியுங்கள். நாவின் நுனி மேல்வாய் நுனியைச் சேர்தலால் இந்த ண பிறக்கின்றது. நண்டு, வண்டு, கண்டம் எனப் பெரும்பாலும் இதனையடுத்து டகரம் வருதலாலும், மெய்யெழுத்துக்களின் வரிசையில் டகரத்தை அடுத்து இந்த ணகரம் அமைந்திருத்தலாலும் இது டண்ணகரம் எனப்படும். இவை மூன்றும் இங்ஙனம் பிறக்கும் முயற்சியில் வேறுபடுவதால், உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும்.

(2) ந ன ண
நான் - பேசுவேன் நாண் - கயிறு
ஆன் - பசு ஆண் - ஆடவன்
ஆனை - யானை ஆணை - கட்டளை
கனி - பழம் கணி - சோதிடம்
பனி - குளிர்ச்சி பணி - வணங்கு

இவை இவ்வாறு உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடுதலை அறியாமல் பலர் இம்மூன்றையும் ஒன்று போலவே பிழைபட உச்சரிக்கின்றனர். இப்பிழையை நீங்கள் செய்யலாகாது.

(3) ல, ள, ழ

கலம், பலம் - இவற்றில் உள்ள லகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துதலால் ல பிறக்கின்றது. குளம், குள்ளன் - இவற்றில் உள்ள ளகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் ஓரம் மேல்வாயைத் தடித்துத் தடவுதலால் ள பிறக்கின்றது. பழம், மழை - இவற்றில் உள்ள ழகரத்தை உச்சரித்துப் பாருங்கள். நாவின் நுனி மேல்வாயைச் சிறிது அழுத்தமாகத் தடவுதலால் ழ பிறக்கின்றது. இவை மூன்றும் உச்சரிப்பில் வேறுபடுகின்றன அல்லவா? அவ்வாறே அவை பொருளிலும் வேறுபடுதலைக் காண்க:

ல ள ழ

அலை - அலைதல் அளை - வளை அழை - கூப்பிடு
கலை - ஆடை களை - நீக்கு, களைப்பு கழை - கரும்பு, மூங்கில்
காலி - ஒன்றும் இல்லாதது காளி - ஒரு பெண் தெய்வம் காழி - ஓர் ஊர்
(சீர்காழி)
தலை - உறுப்பு தளை - கட்டு தழை - செழி
வலி - வலிமை, நோதல் வளி - காற்றுழூ வழி - பாதை
விலை - விற்பனை விளை - பயிராக்கு விழை - விரும்பு

(4) க்ஷ, ட்ச

பக்ஷம், மீனாக்ஷி, அக்ஷய பாத்திரம் - இவற்றில் வந்துள்ள க்ஷ என்னும் எழுத்து வடமொழி எழுத்து. இதற்குப் பதிலாக ஏறத்தாழ இதே உச்சரிப்பையுடைய ட்ச என்னும் இரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி பட்சம், மீனாட்சி, அட்சய பாத்திரம் என்பனபோல் எழுதுதல் தமிழர் வழக்கம். இவற்றுள் பட்சம், அட்சய பாத்திரம் என்பனவற்றைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவதில் தவறில்லை. ஏனெனில் இவற்றின் பொருள் வேறுபடவில்லை. மீனாக்ஷி என்பதற்கு மீன்போன்ற கண்ணையுடையவள் என்பது பொருள்: இதைத் தமிழில் மீனாட்சி என எழுதினால் மீன் + ஆட்சி எனப் பிரியும். அக்ஷி என்னும் வட சொல்லுக்குக் `கண்ணையுடையவள்' என்பது பொருள்; ஆட்சி என்னும் சொல் ஊராட்சி, நகராட்சி என்பது போலக் காணப்படுகிறது. மீனாக்ஷி என்னும் வட சொல் தொடருக்குரிய பொருள், மீனாட்சி என்னும் தமிழ்த் தொடரில் பெறப்படவில்லை என்பது அறியற்பாலது. ஆதலால் பொருள் கெடாத வகையில் வட எழுத்துக்குச் சமமான தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துதல் பொருத்தமாகும். பொருள் கெடவருமாயின், அங்கு வட எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. காட்சி - இது காண் + சி என்ற பிரிக்கப்படும். இது தமிழ்ச்சொல். இதனைப் பலர் காக்ஷி எனத் தவறாக எழுதுகின்றனர். திரைப்பட விளம்பரங்களில் இத்தவற்றைப் பெரும்பாலும் காணலாம். இத்தகைய தவறுகள் வராமல் பார்த்துக் கொள்வதும் உங்கள் கடமையாகும்.

நன்றி: ஜனார்த்தனன் கந்தையா
http://www.facebook.com/topic.php?topic=10718&uid=20995841343

1 comment:

தமிழ் said...

நன்றி நண்பரே

அன்புடன்
திகழ்