நண்பன் பால்குடி திரும்பவும் கிளறிவிட்டார். எமது சமூகத்தில் கல்வி, கல்விப் பெறுபேறுகள் பற்றிய பார்வைமீதான என்னுடைய கோபங்களை 'பத்து வயசில...' என்கிற தன்னுடைய பதிவின் மூலம் மீண்டும் கிளறிவிட்டார். கொட்டித் தீர்க்கப் போகிறேன் இங்கே.
ஏற்கனவே ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வரைக்கும் பிள்ளை முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தை விட, தங்களின் சுயகௌரவம் பாதிக்கக் கூடாது என்கிற நோக்கில் எங்களைப் பிசைந்த கதைகளை நான் கூறியிருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எனக்கு பிரத்தியேக வகுப்புகள் நடந்தது பற்றியெல்லாம் கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கோபப்படுத்தும் பெற்றோருடைய மனோநிலைகளில் முதன்மையானது, தன்னுடைய பிள்ளையையும் இன்னொரு பிள்ளையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது. எனக்கு என்ன எல்லாம் நடந்தது என்று பாருங்கள்.
நான் முன்னைய பதிவொன்றில் சொன்னது மாதிரியே பதினோராம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக வருவேன். அப்போது Progress Report வரும்போதெல்லாம் என்னுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதைவிட பகீருடைய, அரவிந்தனுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதும், என்ன பாடத்தில் யாருக்குக் கூடிய மதிப்பெண் என்று ஞாபகம் வைத்துக் கொண்டதுமே அதிகம். மதிப்பெண்களைப் பார்த்தவுடன் முதலில் வரும் கேள்வி 'பகீருக்கு எத்தினை மாக்ஸ், தனஞ்சியனுக்கு எத்தினை மாக்ஸ்?' என்பதாகத்தான் இருக்கும். (அந்தக் காலத்தில ஏன் அடிக்கடி அவனுடைய மதிப்பெண்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று பகீருக்கு இப்ப விளங்கும்).
இதவிடக் கொடுமை தனியார் கலாசாலையில் நடக்கும் சோதனைகளில் 'தாட்சாயணிக்கு எத்தினை மாக்ஸ்?' என்று கேட்பதுதான். தாட்சாயிணி யார் என்று கேட்கிறீர்களா? இலங்கையில் இருந்து எழுத ஆரம்பித்த முதல் பெண் பதிவர் என்று சயந்தன் அடிக்கடி குறிப்பிடும் சாயினிதான். இதில் பெரிய தலையிடி என்ன என்றால், தாட்சாயிணியுடன் இப்பதான் இணையமூலமாக ஓரிரு வார்த்தைகள் பேசுகிறேன். அந்த நேரம் ‘பெண்கள்' ‘ஆண்கள்' பேசுவதுகூட இல்லை. யாராவது வகுப்பில் குழப்படி செய்தால் ‘ரீச்சர், பெண்கள் குழப்படி செய்யினம்' என்று பெயரைக் குறிப்பிடாமல்தான் முறைப்பாடு செய்வோம். இந்த நிலையில் எப்படி நான் தாட்சாயிணியின் மதிப்பெண்களைக் கேட்க முடியும். ‘அவளுக்கு உன்னைவிடக் கூடப் போல இருக்கு. அதுதான் ஒளிக்கிறாய்' என்று திட்டுவேற விழும். 'ஏன் நீங்களே அவவிட்ட கேளுங்கோவன்' என்று சொல்லி அடிவாங்கியும் இருக்கிறேன்.
இந்த ஒப்பீட்டுக் கணங்களில் சில மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். ஒருமுறை உயர்தரக் கணிதத்தில் எனக்கு 62 மதிப்பெண்கள். பால்குடி நூற்றுக்கு நூறு எடுத்துத் தொலைத்து விட்டார். 'அவனும் உன்னோடதானே படிக்கிறான். அவனெல்லோ பிள்ளை.. அவன் 100 எடுக்கிறான் எண்டால் நீயும் 100 எடுக்கத்தான் வேண்டும்' என்று ஒரே அர்ச்சனை. எனக்கு எத்தனை விதமாகச் சிந்தித்தும், எங்கள் இருவரது கிரகித்தல் திறண், நுண்ணறிவு போன்றன ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்ற அந்தப் பார்வையை ஜீரணிக்க முடியவில்லை. நான் என் பெற்றோரைப் பார்த்து ‘பால்குடி ஆறடி உயரத்தில் பனைமரம் போல் வளர்ந்திருக்கிறார். ஏன் என்னை நீங்கள் அப்படி வளரவைக்கவில்லை?' என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ, ‘அவன் 100 எடுக்கேக்கை, நீயும் 100 எடுத்தே ஆகவேண்டும்' என்ற கட்டாயப்படுத்தலும் அபத்தமே.
பெற்றோரின் அழுத்தம் பிள்ளைகளை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு அடுத்த உதாரணம் இங்கே. என்னுடைய வீட்டின் அழுத்தம் என்னுடைய தம்பியின் பாடசாலை வாழ்வுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்தது. ஆறாம் வகுப்பில் அவனைச் சேர்த்த நேரம் ‘எல்லாப் பாடத்துக்கும் கட்டாயம் 90க்கு மேல் எடுக்க வேண்டும்' என்று கட்டாயப் படுத்தப்பட்டு பயந்து பயந்து பரீட்சை எழுதியவனுக்கு, ஒரு பாடத்திலும் 60க்கு மேல் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அந்த மதிப்பெண்களை வீட்டில் காட்டினால் சிக்கல் என்றுவிட்டு பாடசாலைவிட்டு வரும் வழியில் பொடியன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடினான். அதாவது Progress Reportல் எல்லா மதிப்பெண்களையும் 90க்கு மேல் வருமாறு மாற்றிவிட்டான். மாற்றியதுதான் மாற்றினான் பின்வரும் விஷயங்களை அறவே மறந்துவிட்டான்.
- வகுப்பாசிரியர் உபயோகித்தது நீலநிற மை உள்ள பேனா. இவன் உபயோகித்தது கறுப்புநிற மை உள்ள பேனா. அதாவது 95 என்ற புள்ளியில் 9 கறுப்பு மையிலும், 5 நீல மையிலும் இருந்தது.
- சவர அலகால் சுரண்டிய அடையாளங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.
- எப்படி அதை மீண்டும் பாடசாலையில் கொடுப்பது, வகுப்பாசிரியரிடம் உண்மையான மதிப்பெண்கள் இருக்குமே என்பதையெல்லாம் மறந்துவிட்டான். உடனடியாக திட்டு மற்றும் அடியில் இருந்து தப்புவதே அவன் நோக்கமாக இருந்தது.
- கணித பாடத்துக்கு இவன் பெற்ற புள்ளிகள் 93 என்றும் அதிகூடிய புள்ளிகள் 77 என்றும் இருந்தன. கூட்டுத்தொகை 400 சொச்சம் இருந்தது. அவன் 'மாற்றிப் போட்ட' மதிப்பெண்களின்படி 600 சொச்சம் வந்தது.
வகுப்பாசிரியர் நாங்கள் பாடசாலையில் இருந்து விலகியபின் வந்தவர். அவரை எனக்குப் பெரிதாகத் தெரியாது. எங்கே வசிக்கிறார் என்றுகூடத் தெரியாது. நண்பன் செந்திலோடு சேர்ந்து வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் நடந்ததைச் சொல்ல, அவர் கைவிரித்துவிட்டார். அவரின் ஆலோசனைப்படி உப-அதிபர் புலிக்குட்டியின் குட்டியை சந்தித்து விஷயத்தைச் சொல்ல ‘சிவப்பு மை பரவியுள்ள கட்டாய விடுகைப் பத்திரம் தவிர வேறு வழி இல்லை' என்று கைவிரித்துவிட்டார். 11 வயதில் தம்பியின் வாழ்க்கை அழியப்போகிறது என்கிற தவிப்பு. செந்திலுக்குத் தெரியும் அந்த வலி, என்னோடு கூடவே அலைந்து பகிர்ந்துகொண்டான். அப்பாவிடம் இந்தமுறை நான் கெஞ்சினேன். பாடசாலை மட்டத்தில் அவருக்குச் செல்வாக்கு இருந்ததால் ஆகக் குறைந்தது, சாதாரண விடுகைப் பத்திரமாவது பெற்றுக் கொண்டு வேறு பாடசாலையில் சேர்ப்போம் என்று கெஞ்சினேன். அப்பா மாட்டேன் என்றுவிட்டார்.
கடைசியாக எனக்குக் கைகொடுத்தது, இன்றைக்கும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் என் பிரியத்துக்குரிய ஆசான் ஒருவர். பெயரைக் குறிப்பிடுவது எவ்வளவு சரியானது என்று தெரியவில்லை, பட்டப் பெயரைச் சொல்கிறேன். இவருக்கு கொஞ்சம் பெரிய தொப்பை என்பதால் நெய்வண்டி என்று நாங்கள் முதுகுக்குப் பின்னால் பயங்கரமாக நக்கல் அடித்திருக்கிறோம். அவரைக் கண்டாலே ‘அட்வைஸ் பண்ணப் போறாரடா' என்று ஓடி ஒளிந்திருக்கிறோம். அதெல்லாம் வலிக்க வலிக்க எனக்கு உறைக்கும்படி தம்பியை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டார். ஒரு புதிய Progress Report எடுத்து பழையது தொலைந்து விட்டதாகக் காரணம் காட்டி புதியதில் வகுப்பாசிரியரிடம் மதிப்பெண்களை வாங்கிப் பதிந்து, தம்பி செய்த தப்பை மூடி மறைத்துவிட்டார். உப அதிபர் தன் சுய பிரதாபங்களைப் பீற்றுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்ததால் தம்பி பற்றி விடுமுறையின் பின் பள்ளி திரும்பியபோது மறந்தேவிட்டார்.
அதன் பின் என் பெற்றோருடனும் அந்த ஆசான் பேசினார். இந்த விஷயத்தில் அந்த ஆசான் செய்தது நேர்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அது இரண்டு நன்மைகளைச் செய்தது:
- தம்பியின் பாடசாலை வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. இப்போது ஒழுங்காகப் படிக்கிறான்
- இப்போதெல்லாம் அவனுக்கு மதிப்பெண்கள் குறைந்தால் ஏன் குறைந்தது, எப்படி அடுத்த முறை கூட்ட முயற்சிக்கலாம் என்று நடைமுறை ரீதியாக அம்மா சிந்திக்கிறார். 90 எடுத்தால் மிச்சப் பத்து எங்கே, 70 எடுத்தால் ‘அவன் 100 எடுக்க நீ ஏன் 70 எடுத்தாய்' போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை
'இதே மதிப்பெண் மாற்றும் வேலையை கிருத்திகன் ஏ/எல் படிக்கும் போது செய்திருந்தால், அவனை நான் காப்பாற்றி இருக்கமாட்டேன். ஏனென்றால் நன்மை தீமை தெரிந்த வயதில் நீ அவ்வாறு செய்தால் அது தெரிந்தே செய்த பிழை. ஆனால், 11 வயதில் இந்தப் பிள்ளை உங்களின் நிர்ப்பந்தம் காரணமாகச் செய்த பிழை மன்னிக்கப்பட வேண்டியது. அவனுக்கு கட்டாய விடுகைப் பத்திரம் தருவது அவனைத் தவறான திசையில் திருப்பிவிடக் கூடும். அவ்வாறு சட்ட திட்டங்களுக்கமைய நடந்து தண்டிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது பின்விளைவுகளைப் பற்றிக்கூடச் சிந்திக்கும் மனப்பக்குவம் இல்லாத இந்தச் சின்னவன்தான். இனியும் இப்படி அவனை நெருக்காதீர்கள்' என்ற கருத்துப்பட அந்த ஆசான் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்தபடி இருக்கிறது.
ஆரியர், திராவிடர்.... தமிழன்,இந்திக்காரன்...இலங்கையன் இந்தியன் ஆகிய அரசியல்களைக் கடந்து சமீபகாலத்தில் வந்த படங்களில் (அதாவது அதிகம் நான் படம் பார்க்கத் தொடங்கியபின்) என் உள்ளத்துக்கு மிக அருகில் இருப்பது ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்'. அந்தப் படத்தில் உப-தலைப்பாக Every Child is Special என்று போடுவார்கள். நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாக் குழந்தைகளுமே அற்புதமானவை. ஆனால் இன்றைய சமூகத்தில் (தெற்காசிய சமூகங்களை முக்கியமாகக் கைகாட்டுவேன்) இருக்கிற சில ஆராய்ந்தறியானல் உள்வாங்கப்பட்ட கருத்துத் தோற்றங்களால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.
எங்கள் சமூகங்களில் பெற்றோர்-குழந்தைகள் இடைவெளி ஏன் வருகிறது தெரியுமா. 'என்னுடைய குழந்தை நான் பார்க்காததெல்லாம் பார்க்கவேண்டும்' என்று ஆசைப்படுகிறார்கள். அது ஒன்றும் நியாயமற்ற ஆசை என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய பிள்ளை என்னைவிட நன்றாக இருக்கவேண்டும் என்கிற தன்னலமற்ற பாசம் அது. இன்றைய குழந்தைகளின் பார்வையில் அது அத்தியாவசியமற்ற திணிப்பு. அதனால் குழந்தைகள் உங்களிடம் இருந்து விலகிப் போகிறார்கள். இவ்வளவு பாசம் காட்டியும் பயனில்லையே என்று உங்களைப் புலம்பவைக்கிறார்கள். ஆனால் 'என்னுடைய குழந்தை எதைப் பார்க்க விரும்புகிறதோ அதைப் பார்க்கட்டும்' என்று வாழ்ந்து பாருங்கள், அன்றில் பறவைகளாய் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒன்றி வாழலாம். மீண்டும் சொல்கிறேன்.... Every Child is very very very special.
ஆரியர், திராவிடர்.... தமிழன்,இந்திக்காரன்...இலங்கையன் இந்தியன் ஆகிய அரசியல்களைக் கடந்து சமீபகாலத்தில் வந்த படங்களில் (அதாவது அதிகம் நான் படம் பார்க்கத் தொடங்கியபின்) என் உள்ளத்துக்கு மிக அருகில் இருப்பது ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்'. அந்தப் படத்தில் உப-தலைப்பாக Every Child is Special என்று போடுவார்கள். நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாக் குழந்தைகளுமே அற்புதமானவை. ஆனால் இன்றைய சமூகத்தில் (தெற்காசிய சமூகங்களை முக்கியமாகக் கைகாட்டுவேன்) இருக்கிற சில ஆராய்ந்தறியானல் உள்வாங்கப்பட்ட கருத்துத் தோற்றங்களால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.
எங்கள் சமூகங்களில் பெற்றோர்-குழந்தைகள் இடைவெளி ஏன் வருகிறது தெரியுமா. 'என்னுடைய குழந்தை நான் பார்க்காததெல்லாம் பார்க்கவேண்டும்' என்று ஆசைப்படுகிறார்கள். அது ஒன்றும் நியாயமற்ற ஆசை என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய பிள்ளை என்னைவிட நன்றாக இருக்கவேண்டும் என்கிற தன்னலமற்ற பாசம் அது. இன்றைய குழந்தைகளின் பார்வையில் அது அத்தியாவசியமற்ற திணிப்பு. அதனால் குழந்தைகள் உங்களிடம் இருந்து விலகிப் போகிறார்கள். இவ்வளவு பாசம் காட்டியும் பயனில்லையே என்று உங்களைப் புலம்பவைக்கிறார்கள். ஆனால் 'என்னுடைய குழந்தை எதைப் பார்க்க விரும்புகிறதோ அதைப் பார்க்கட்டும்' என்று வாழ்ந்து பாருங்கள், அன்றில் பறவைகளாய் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒன்றி வாழலாம். மீண்டும் சொல்கிறேன்.... Every Child is very very very special.
29 comments:
எனக்கெல்லாம் பள்ளிக்கூட காலம் மறந்து போட்டுது
நெய்வண்டி, அவர் சமயம்தானே படிப்பிச்சவர்?
முக்கியமா மற்றவர்களோடு ஒப்பிடுதல் என்பது இன்னமும் இருக்கிற விசயமாகத்தான் தெரிகிறது இதுதான் தவிர்க்கப்பட வேண்டியது, எதையுமே திணிக்காமல் அவர்களுடைய போக்கிலேயே தேர்ந்தெடுத்து படிக்க விடுவது நல்லது...
எங்கடைசமுதாயத்தில் இது ஒரு பெரும்
சாபக்கேடுதான்.உங்கள் பதிவு பல பேரு
டைய கண்களைத்திறக்கும் என நம்பு
கிறேன்.
அருமையான பதிவு.
இப்போதான் இன்னொரு பதிவில் பின்னூட்டம் இதைப் பற்றி லேசாக் கோடிகாட்டி எழுதுனேன்,இப்படி.
சோறு போட்டு வளர்த்துத் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்த்து அதுகளைப் படி படின்னு வதைச்சு, ரேஸில் ஓடவிடுவதோட கடமை முடிஞ்சுருதுன்னு இருந்துறக்கூடாது. நல்ல பண்பாடுகளையும் சொல்லித்தரவேணும் தானே?
வெறுமே புத்திமதி சொல்லி வருவதை விட இந்த ஆசிரியர் செய்து காட்டிய பாடம் வாழ்க்கை முழுதும் நினைவிருக்கும். ஆசிரியரே இப்படி என சிலர் கருதலாம். அவருக்குத் தெரியும் பாத்திரமறிந்து பிச்சையிட என்பது என் கருத்து. அருமை கிருத்திகன்.
கத்திமேல் நடப்பது போல் ஒரு பதிவு..
நீங்கள் சொல்ல வந்ததை சரியா சொல்லிவிட்டாய் கீத்!
இதுபோல் இடுகை இப்பதிவுலகதிற்க்கு அவசியம் வேண்டும்..
அதுசரி.. தினமும் இடுகையிட நேரம் கிடைக்கிறதா?
இதுபோல் பதிவுலக்கிலேயே உழன்றுகொண்டிருந்தால்,
மற்ற இன்னம்பிற வேலைகளிளும், துறைசார்ந்த படிப்புகளிளும் கவனம் செல்லாது!
பார்த்து சூதானமா இரு தம்பி!!
தமிழன் கறுப்பி..
அவர் தமிழ், சமூகக்கல்வி, புவியியல் எல்லாம் படிப்பிச்சவர்... (உங்களைச் சரியா அடையாளம் காண முடியேல்லை.. ஏதாவது clue தாங்கோவன்)
///முக்கியமா மற்றவர்களோடு ஒப்பிடுதல் என்பது இன்னமும் இருக்கிற விசயமாகத்தான் தெரிகிறது இதுதான் தவிர்க்கப்பட வேண்டியது, எதையுமே திணிக்காமல் அவர்களுடைய போக்கிலேயே தேர்ந்தெடுத்து படிக்க விடுவது நல்லது..///
உண்மை
தேவேஷ்..
இது சாபக்கேடு என்று சொல்லித் தப்பிவிடவும் முடியாது... பெற்றோரின் மேல் பழிபோட்டு ஒதுங்கிவிடவும் முடியாது... கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகவேண்டும்... இப்போது இந்தப் பிள்ளைவதை இன்னும் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது.. நண்பர் பால்குடியின் பதிவையும் வாசியுங்கள்
துளசிகோபால்..
ரேசில் ஓட வைக்கிறோம் என்கிற பேரில் இயந்திரங்களை அல்லவா உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
பாலா..
நிச்சயமாக... என் தம்பி இரண்டாம் முறை இதே தவறு செய்தாலோ அல்லது ஒரு 12ம் வகுப்பு மாணவன் செய்தாலோ கட்டாயம் அவரே விடுகைப் பத்திரம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்... நீங்கள் சொன்னதுபோல பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட்டார், போடுகிறார் போடுவார்
கலை..
பாராட்டுக்கு நன்றிகள் கலை..
பதிவுலகில் உழல்வதைவிட வெளியுலகில்தான் உழல்கிறேன்..
காலை எழுந்து பின்னூட்டங்களை வாசித்து பதில் போடுவேன்... அதன் பின் எங்கள் நேரம் 9 மணி தொடங்கி மாலைவரை வேலை (சமீபகாலமாக வேலை தேடும் வேலை... 8 மாதங்களுக்கு முன் கல்லூரி).. இரவில் 9 மணிதொடக்கம், 11 மணிவரை கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை Draft or Schedule செய்துவிடுவேன். பின்னர் ஆணி புடிங்கும்போது இடையில் கிடைக்கும் நேரங்களில் திரட்டிகளில் இணைப்பேன்... ஒரு நாளைக்குள் இருக்கக்கூடிய 24 மணிநேரம் எனக்கு மிக அதிகமாகவே படுகிறது.
தமிழன் கறுப்பி வடமராட்சி என்பது தெரியும் அவரும் நம்ம கல்லூரியா?
கீத் கலக்கலான பதிவு, சிறுவர்களை படிக்கச் சொல்லி வற்புத்தினால் அது அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்கு. இப்படி சீரியசான பதிவுகளுக்கு எல்லாம் மறுவாசிப்பு செய்துதான் பின்னூட்டம் இடவேண்டும்.
எமது சமூகத்தில் இருக்கின்ற பல உண்மைகளை கூறும் பதிவு... சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்...!
ம்ம் இவ்வளவு விடயம் இருக்கிறதா கிருத்தி,?
திணித்தல்களும் உறுத்தல்களும் பிள்ளையை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் என்பதை பெற்றோர்கள் நினைக்கத்தவறுகிறார்கள்,
ஆனால் அவர்கள் அப்படி வேணுமென்றே செய்வதுமில்லை என்பதும் உண்மைதான்,
இருந்தாலும் உங்களுக்கு பேருதவி செய்த ஆசிரியரும் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் தான் என்பதும் அவருக்கு புரிந்த விடயம் ஏன் மற்ற பெற்றோர்களுக்கும் புரியவில்லை?
”நெய்வண்டி” என்று நீங்கள் குறிப்பிட்டவர் எங்கள் அந்த வாத்தியார் தானே...........
இவர் சாதாரணதரம் எடுத்த பின் தரும் புத்திமதிகள்,
அப்படியான புத்திமதிகளுக்கு நாங்க தவம் இருக்கவேண்டும் என்ன கிருத்திக்?
அருமையான பதிவு உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் வரிகள். பாராடுக்கள் அனுபவம் போல ஆசான் ாருமில்லை. கோர்வையாக எடுத்து சொல்லும் விதம் மிக அழகு. பாராடுக்கள். வாழ்க வளர்க. நட்புடன் நிலாமதி அக்கா .
கீத், உன்னுடைய தம்பியின் இச்சம்பவம் பற்றி செந்தில் முன்பே எனக்குச் சொல்லியிருக்கிறான். அறியாத வயதில் பெற்றோரின் நெருக்குதல் காரணமாகவே அவன் இதனைச் செய்திருந்தான். அவன் தண்டிக்கப்பட்ட (வழிகாட்டப்பட்ட) விதம் மிகச் சரியானது. இச்சம்பவம் பற்றிய என்னுடைய பார்வையும் காலப் போக்கில் பதிவாக எதிர்பார்க்கலாம்.
வந்தி அண்ணா...
படிப்பின் அவசியத்தைச் சொல்லி படிக்கத் தூண்டுவது பிழையில்லை.. ஆனால் பயங்கரமாகப் படிப்பைத் திணித்து பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறோமோ என்ற பயம் இருக்கிறது..
தமிழன் கறுப்பி என்ற ஆளைத் தெரியுது ஆனாத் தெரியேல்லை :))
பாராட்டுகளுக்கு நன்றி நிமல்
கரவைக்குரல் அண்ணா..
பெற்றோர்கள் பிள்ளைகளின் மீதுள்ள அக்கறை மற்றும் சமூக அழுத்தம் காரணமாகவே இப்படிச் செய்கிறார்கள்.. இந்தத் திணிப்புக்கான காரணங்கள் சிலவற்றைப் பால்குடி அப்பட்டமாக அலசியிருக்கிறார், அவரையும் வாசித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
நெய்வண்டி என்று சொல்வது தலைமயிரைப் (சைட் கட்) பிடித்து இழுத்து துன்பம் தரும் அந்த வாத்தியாரைத்தான்... அறிவுரைகள் அந்த வயதில் விசரடிக்கும்... அவைகளைக் கேட்காவிட்டால் பின்னொருகாலத்தில் விசர்பிடிக்கும்
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நிலாமதி அக்கா
உண்மைதான் பால்குடி..
அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்த வித்தியாசமான தண்டனை அவனையும் பெற்றவர்களையும் மாற்றிவிட்டது... இப்போதும் அடிக்கடி விசாரிக்கிறாராம் அந்த வாத்தியார், என்னையும் அவனையும் :))
அருமையான பதிவு. சரியான விஷயத்தை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். ஞாநி
தலை மயிரை பிடித்து மேலே மேலே இழுத்து சிறிதாக தண்டிப்பவர் தான் அந்த வாத்தியார்,
அதைத்தான் அந்த வாத்தியாரின் அறிவுரைக்கு தவம் இருக்க வேண்டும் என்று சொன்னேன் ராசா
நன்றி ஞாநி.. வருகைக்கும் பாராட்டுக்கும். கடைசியாக மூத்தவர் ஒருவர் என்னுடைய கருத்துக்கள் தெளிவாக இருப்பதாகச் சொல்லியது மகிழ்ச்சியாக இருக்கிறது
அவரேதான கரவைக்குரல் அண்ணா
நல்ல பதிவு கிருத்திகன். 98 எடுத்தால் கூட மிச்சம் 2 எங்க என்று கேட்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மற்றது தங்களின் நிறைவேறாத ஆசையைத்தான் குழந்தைகளின் திணிக்கப்பார்க்கிறார்கள் என்றதும் உண்மை. அதுவும் குழந்தைகளுக்கு எல்லாவிதமா கலைகளையும் கற்றுக்கொடுக்கோணும் என்று எப்பவும் பறந்து கொண்டிருக்கிற பெற்றோர் தாங்களே சொல்லுவினம் என்னால அதெல்லாம் செய்ய முடியேல்ல இப்ப என்ர பிள்ளை 7 வயசிலயே அரங்கேற்றம் செய்தால் எனக்குப் பெருமைதானே என்று.
அதுசரி நெய்வண்டி ஆசிரியரின் தலைமை ஆசிரியர் இதை வாசிக்க மாட்டாரோ?
குழந்தைகள் தொடர்பா நான் எழுதியவை சில. நேரம் கிடைக்கும்போது வாசியும்.
http://snegethyj.blogspot.com/2008/09/blog-post_24.html
http://snegethyj.blogspot.com/2005/07/blog-post_112130194335716770.html
http://snegethyj.blogspot.com/2008/01/blog-post_19.html
http://snegethyj.blogspot.com/2008/01/blog-post_295.html
http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_18.html
http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_01.html
சினேகிதி
///98 எடுத்தால் கூட மிச்சம் 2 எங்க என்று கேட்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்///
98 என்ன 99.99 எடுத்தால்கூட 100 ஏன் எடுக்கேல்லை எண்டும் கேப்பினம். அவையளின்ர பள்ளிக்கூடக் கால வண்டவாளங்கள் எங்களுக்குத் தெரியாதுதானே எண்ட தைரியம்தான்.
கலைகளைக் கற்பிப்பது பற்றி....
இஞ்ச மருமகனை மிருதங்கம் படிப்பிக்கினம். பாவம் பொடி மிருதங்கம் அடிச்சிட்டு வரேக்க இப்ப மயங்கிறன் எண்டமாதிரி வரும். அதுவும் எக்ஸாம் காலம் எண்டால் கேக்கவே வேண்டாம். சிலவேளை வகுப்புக்கு நான்தான் கூட்டிக் கொண்டு போறது.. வகுப்பில இருந்து வீட்ட வரும்வரை பாவம் புலம்பித் தள்ளும்.. என்ன செய்யிறது.. அக்காவோட சண்டை பிடிச்சும் பாத்தாச்சு.. அத்தான் அவனை மிருதங்க வித்துவான் ஆக்கிறது எண்டு கங்கணம் கட்டியே நிக்கிறார்.. (இதில முக்கால்வாசிப்பேர் கச்சேரியள்ள போய் இருந்து எல்லாரும் தட்டுகினம் எண்டு கைதட்டிர சங்கீத சிகாமணியள்).. அதுவும் உந்த 7 வயது அரங்கேற்றம் ஜுனியர் அரங்கேற்றம், சீனியர் அரங்கேற்றம் எண்டல்லாம் கனக்க இங்க இருக்கு.. உதுகளைக் கேட்ட எனக்கு மண்டேக்க பத்திக் கொண்டு வரும்..
///அதுசரி நெய்வண்டி ஆசிரியரின் தலைமை ஆசிரியர் இதை வாசிக்க மாட்டாரோ?///
வாசிச்சா மட்டும் என்ன செய்யேலும்? அந்தச் சம்பவம் நடந்த காலத்தில் அதிபரா இருந்தவர் இப்ப ஓய்வு பெற்று விட்டார்.இப்ப இருக்கிற அதிபர் நெய்வண்டி வாத்தியார் இப்படிச் செய்தது என்று அறிந்தால் பாராட்டு விழாவே எடுப்பார். அவ்வளவு Practical Approach அவருடையது
னல்ல பதிவு கீத் நான் நீண்ட நாட்களாக் உனது வலையை பார்க்கவில்லை முடியாத சூழ்னிலை இனி பார்க்கிரேன்
நல்ல பதிவு அண்ணா. உங்கள் கருத்தை மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும், உருக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு அண்ணா. உங்கள் கருத்தை மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும், உருக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment