Saturday, 19 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 13-19 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
இந்தச் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ‘இலங்கையில் என்னுடைய கட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. இருந்தபோதும் சுதந்திரமாகக் கருத்து வெளியிட்டால் எனது உயிருக்கே உத்தரவாதமில்லை' என்று தெரிவித்திருப்பது யார் தெரியுமா? ராஜபக்ச சகோதரர்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் கோலோச்சிய பண்டாரநாயக்க குடும்பத்தின் தூண்களில் ஒருவரும், முன்னைநாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கதான். நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாகவும், பண்டாரநாயக்க குடுமப்த்தின் வாரிசாகவும் கம்பீரமாக நடைபோட்ட அவரே இப்படிச் சொல்லும்போது, இலங்கையில் வாழக்கூடிய சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சாதாரணப் பிரஜைகளின் நிலமையை நினைத்தும் பார்க்க முடியவில்லை.


இதேவேளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பொதுச் செயலர் லின் பொஸ்கோ அவர்கள் பாதுகாப்பு பற்றிய இலங்கையின் கவலைகள் புரிந்து கொள்ளப்படக் கூடியதாய் இருப்பினும், அகதிகள் மீளக் குடியமர்த்தப்படுவது அத்தியாவசியமானது என்று கூறியிருக்கிறார். அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து இந்தக் கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களை மீளக் குடியமர்த்துவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியல்- புகுந்தகம்
லிபரல் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போட்ட நகைச்சுவை நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான ஆளும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு எதிராக லிபரல் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 224-74 என்கிற வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. லிபரல் கட்சியோடு இணைந்து கூட்டணி அமைத்து அரசபதவி ஏறும் ஆசையில் இருந்த தேசிய ஜனநாயகக் கட்சியும், ப்ளொக் கியூபெக் கட்சியும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.


நாட்டின் பொருளாதார நிலைமை முதலான காரணங்களை இவர்கள் அடுக்கினாலும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அவதானித்து வந்த யாவரும் ‘கூட்டணி அரசு என்ற பேச்சுக்கு இடமில்லை' என்று லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் சென்ற வாரம் (பார்க்க: நான் பார்க்கும் உலகம், சென்ற வாரப் பதிப்பு) சொல்லியிருக்காவிட்டால், சிலவேளை கனேடிய மக்கள் இன்னொரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நிலமை ஏற்பட்டிருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் மாண்ட பொருளாதாரம் மீண்டு வரும்போது இன்னொரு தேர்தல் வராமல் தடுக்கப்பட்டிருப்பது சராசரிப் பிரஜை ஒருவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசியல்-உலகம்
காஷ்மீர் மாநிலத்தின் சீன எல்லையில் இந்தியா மேலும் இராணுவத்தைக் குவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறது. இம்மாநிலத்தின் லடாக் பகுதியில் சீனா ஊடுருவி இருப்பதாக வந்த செய்திகளை அடுத்தும், இந்திய திபெத்திய எல்லைப்படை வீரர்களை நோக்கி சீன இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை அடுத்தும் இந்தியா இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. இதேவேளை கச்ச தீவுக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் இல. கணேசன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆஃப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் 54.6% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் சென்ற புதன்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா 27.8% வாக்குகள் பெற்றார். செலுத்தப்பட்ட 55 இலட்சம் வாக்குகளில், 15 இலட்சம் வாக்குகள் மோசடி வாக்குகள் என ஐரோப்பியத் தேர்தல் அவதானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வணிகம்-பொருளாதாரம்



கனடாவின் இருபெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா மற்றும் ரெலஸ் ஆகியன அவர்களின் Land Line வாடிக்கையாளர்களிடம் அதிகமாக வசூலித்த கிட்டத்தட்ட 300 மில்லியன் கனேடிய டொலர்களை திருப்பிச் செலுத்துமாறு கனேகிய உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒரு உத்தரவு காரணமாக சில பிரதேசங்களில் இந்த நிறுவனங்கள் போட்டியாளர்களை சந்தைக்குள் ஊக்குவிக்கும் பொருட்டு வழமையான சேவைக் கட்டணங்களைவிடக் கூடிய கட்டணங்களை வசூலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால்தான் கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இவை கூடிய விரைவில் திருப்பி வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

விளையாட்டு


அமெரிக்க ஓபன் ரென்னிஸ் கோப்பை ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் இரு பிரிவிலும் பிரமிக்கத்தக்க இரு வெற்றிகள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபெடரர், நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை வீழ்த்தி ஆர்ஜென்ரீனாவின் 20 வயதான ஜுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மற்றும் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டேர்ஸ் ஆகியோர் பட்டம் வென்றிருக்கிறார்கள். டெல் பொட்ரோவுக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம். இறுதியாட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார். அரையிறுதியில் நடாலை வீழ்த்தினார். இருவரையும் ஒரே கிராண்ட் ஸ்லாமில் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். வீனஸ், செரீனா சகோதரிகளையும், இறுதியாட்டத்தில் அழகுப் பெண் கரோலின் வொஸ்னியாக்கியையும் வீழ்த்திய கிம் கிளைஸ்டர்ஸ் பின்வரும் மேலதிகப் பெருமைகளைப் பெற்றார்.
  • வீனஸ் செரீனாவை ஒரே கிராண்ட் ஸ்லாமில் இரண்டாவது முறை வீழ்த்தினார்.
  • அமெரிக்க ஓபன் ரென்னிஸ் போட்டிகளை வென்ற முதல் Wild Card இவர்.
  • 1980க்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் வென்ற முதல் அம்மா இவர். (இது பற்றித் தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)

கொம்பாக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. இறுதியாட்டத்தில் அற்புதமான சதம் அடித்தார் சச்சின். இதுபற்றிய என்னுடைய பதிவை இங்கே படியுங்கள். இதே வேளை இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் நடந்து முடிந்த ஆறையும் அவுஸ்திரேலியா வென்றிருக்கிறது. ஐந்தாவது போட்டியில் ரிக்கி பொண்டிங் அருமையான சதம் அடித்தார், 109 பந்துகளில் 126. 50-50 கிரிக்கெட் போட்டிகள் விரைவில் வரவேற்பை இழந்து விடலாம் என்ற பயத்தை மூன்று பேர் போக்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக 98 அடித்த சனத் ஜயசூரிய, சச்சின் மற்றும் பொண்டிங். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான் (உபயம்: மகி)


சினிமா


சென்ற 10ம் திகதி தொடக்கம் ரொரன்ரோ சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ரொரன்ரோ நகர மத்தியில் உள்ள 13 திரைகளில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஹொங்கொங், இஸ்ரேல், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, ஜமேக்கா போன்ற நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்பட்டன. இந்த முறை ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அதாவது இஸ்ரேலியப் படங்களுக்கு மட்டுமே இவ்வருட விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பல மேற்குலக நட்சத்திரங்கள் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அடப்பாவிகளா விஷயம்
சென்ற வியாழக்கிழமை தமிழ் வன் தொலைக்காட்சியில் ஒரு படம் போட்டார்கள். தமிழ்ப்படுத்தப்பட்ட மலையாளப் படம். அந்த மோகன் லால் முகமூடி எல்லாம் போட்டு ஆடுவாரே, கதகளியோ என்னவோ, அது ஆடும் கலைஞன் ஒருவனின் காதல் பற்றிய படம். அதில் ராஜன் பி. தேவன் பேசுவதாய் ஒரு வசனம் வரும். அவருடைய மகள் அந்தக் கூத்தாடியைக் காதலிப்பது தவறு என்று தன் மனைவியை மகளிடம் சொல்லுமாறு ராஜன் பி. தேவன் பணிக்கும் போது சொல்லும் வசனம் அது. பல நேரடித் தமிழ்ப் படங்கள் மற்றும் தமிழ்ப் படுத்தப்பட்ட படங்களில் அடிக்கடி கேட்ட வசனம் என்றாலும் நேற்று அதைக் கேட்டபோது உறுத்தியது. வசனம் இதுதான்,
‘இந்த உலகத்தில தாய் சொல்லைத் தட்டாத ஒருத்தரும் இல்லை'. (அதாவது எல்லோருமே தாய் சொல்லைத் தட்டுபவர்கள்தான் என்றுதானே பொருள்படுகறது இந்த வசனம்)
இந்த வசனம் சரியா? இதே பொருள்பட பல படங்களில் இந்த வசனம் வருகிறது. தாய் சொல்லைக் கேட்காதவர்கள் ஒருத்தரும் இல்லை என்று வர வேண்டிய இடத்தில் கொஞ்சம் நல்ல சொல்லைப் போடுகிறோம் என்று மொத்த அர்த்தத்தையே கெடுக்கிறார்கள் அல்லவா?

1 comment:

Thevesh said...

திறமையான தொகுப்புக்கு பல சபாஷ்
போடலாம்.தொடர்ந்து எழுதுங்கள்.