Thursday, 3 September 2009

நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 30- செப்ரெம்பர் 05, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
பிறந்தகம்
இலங்கை இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்வதாக வெளியான காணொளிச் சர்ச்சை காயப்படுத்தும் திசைகளில் நீள்கிறது. இப்போது அந்தக் காணொளியின் நம்பகத் தன்மை பற்றிக் கேள்விகள் எழுகின்றன. புலிகளால் தயாரிக்கப்பட்ட காணொளி அதுவாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்தக் காணொளி தொடர்பில் பிலிப் அலிஸ்டன் என்ற ஐ.நா. அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிற கருத்துகள் எனக்குப் பிடித்திருக்கிறது. அதாவது, அந்தக் காணொளி சார்பில் பக்கச்சார்பற்ற ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அலிஸ்டனின் கூற்றாகும். இந்தக் காணொளி பற்றிய இலங்கை அரசின் செய்திகளை நம்பமுடியாது என்றும், அனைத்துலக விசாரணைதான் இது தொடர்பில் வெளிச்சம் தரும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படியான விசாரணைகளை இலங்கை அரசு அனுமதிக்குமா? மேற்படி விசாரணைகள் நடத்துவதில் ஐ.நா. உறுதியாக இருக்கிறதா அல்லது கண்து டைப்புக்காக அறிக்கை விடுகிறதா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக விளையாட்டு விழாக்களை நடாத்தி முடித்திருக்கிறார்கள் இராணுவத்தினர். வடமராட்சியில் நடந்த் ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் சுற்றுப் போட்டிகளில் 82 அணிகள் பங்குபற்றி இருக்கின்றன. 2005ல் AGA Division போட்டிகளில்கூட இவ்வளவு அணிகள் இருந்தனவா தெரியவில்லை. நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணியும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியும் இறுதிப்போட்டியில் மோதினார்களாம். கடைசிநாள் பாட்டுக் கோஷ்டி எல்லாம் நடத்திக் கொண்டாடினார்களாம். தம்பி இது பற்றி ஆர்வமாக தொலைபேசியில் விவரித்த போது ஆர்வமாக என்னால் கேட்கமுடியவில்லை. அங்கிருப்பவர்களின் நினைவுகளிலிருந்து விரைவில் ‘எல்லாத்தையும்' அழித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுப் போட்டிகளும் குதூகலங்களும் ‘இனிமேல் நாங்கள்தான்' என்பது பற்றிய இன்னொரு ஞாபகப்படுத்தலாகவும் இருக்கலாம்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் , உட்கட்டமைப்பு புனரமைக்கப்பட்டு திரும்பவும் மக்களைக் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த மாவட்ட நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பான அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் கூறியிருக்கிறார். இந்தளவு அழிவு இல்லை என்றாலும் யாழ்ப்பாணம் வாழ் மக்களுக்கு ‘மீள் குடியேற்றம்' என்றால் என்னவென்று தெரியும். அதுவும் இன்னொரு வகைச் சிறைவைப்பு. உதாரணத்துக்கு, உங்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கு அனுமதி தருகிறோம் என்று உடல் சோதனை என்கிற பெயரில் இராணுவவீரன் உங்கள் விரையைப் பிடித்து நசுக்க, ‘ஐயோ விடுங்கோ சேர்' என்று கூனிக் குறுகிக் கூச்சப்படும் அற்புதமான சுதந்திரம் இந்த மீளக் குடியமர்வின்பின் வன்னி மக்களுக்குக் கிடைக்கும். வாழ்க ஜனநாயகம்.


புகுந்தகம்
கனடாவில் கடந்த நான்கு வருடங்களுக்குள் நடக்கப்போகும் நான்காவது பொதுத் தேர்தலைச் சந்திக்கவேண்டிய நிலமைக்கு கனேடிய மக்கள் தள்ளப்பட இருக்கிறார்கள் போல் இருக்கிறது. அடுத்ததாக எப்போது பாராளுமன்றம் கூடுகிறதோ அப்போதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஹார்ப்பர் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தயாராகிவிட்டார்கள் எதிர்க்கட்சியினர். தன் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் 2008ல் அரசைக் கலைத்து மறு தேர்தல் நடத்தி வெறும் 19 ஆசனங்களை அதிகம் பெற்றதைத் தவிர வேறெதையும் சாதிக்கவில்லை ஹார்ப்பர். (மொத்தம் 308 ஆசனங்களின் 143 மட்டும் இவர்களுக்கு). மற்றவர்கள் அதைவிடக் கேவலம். இதில் பிரிவினை கோரும் ப்ளொக் கியூபெக் கட்சியுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்கப் போகிறார்களாம். மட்டுமட்டாகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பியிருக்க வேண்டிய கனடாவை அரசைக் கலைத்துக் கவிழ்த்தார் ஹார்ப்பர். இப்போது மட்டுமட்டாக மீளும் தறுவாயில் இவர்கள் கிளம்பி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.


புகுந்தகத்தின் அடுத்த பரபரப்பு ஒன்ராரியோவின் முன்னாள் அரசு முதன்மை ஆதரவுரைஞரான (Attorney General) மைக்கல் ப்ரையன் ஒரு சைக்கிளோட்டியை தனது காரால் மோதியது பற்றிய பிரச்சினை. ஒன்ராரியோவின் வருங்கால பிரதம அமைச்சராக வரக்கூடிய தகுதி பெற்றவர் என்று வர்ணிக்கப்பட்ட ப்ரையன் ஒரு சைக்கிளோட்டியோடு நடந்த சின்னத் தகராறில் சட்டத்தை மதிக்கத் தவறியதாயும், அதனால் நிகழ்ந்த விபத்தில் சைக்கிளோட்டி மரணம் அடையக் காரணமாக இருந்தார் என்பதாயும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 33 வயதான டார்சி ஷெப்பேர்ட் என்ற சைக்கிள் தூதஞ்சல் பணியாளருக்கும் 43 வயதான ப்ரையனுக்கும் சின்ன இழுபறி நிலவியதாயும், ப்ரையனை ஷெப்பேர்ட் இறுக்கிப் பிடித்துக்கொண்டதாயும், ப்ரையன் தன்னை அவரிடமிருந்து விடுவிக்க காரை வேகமாக ஓட்டியதாயும், இதனால்தான் ஷெப்பேர்ட் இறந்தார் என்றும் சொல்கிறார்கள், ஷெப்பேர்ட் குடித்திருந்ததும், அவரது முன்னாள் காதலி வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் முன்பு காவலர்களால் வெளியேற்றப்பட்டதும் உபரியான தகவல்கள்.


இதேவேளை ஒன்ராரியோ மாநிலச் சட்டத்தரணிகள் யாரும் இந்த வழக்கில் அரச சார்பில் வாதாடப் போவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து ரிச்சாட் பெக் என்பவர் அரச சார்பில் வாதாட இருக்கிறார். தான் குற்றமற்றவன் என்று ப்ரையன் சொல்கிறார். சைக்கிளோட்டிகள் நகரமத்தியில் போராட்டம் செய்கிறார்கள். காவலர்கள் சைக்கிள் ஓட்டிகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதேவேளை ரொரன்ரோ நகர மத்தியில் இன்னொரு விஷயமும் நடந்தது, கடைசியில் சொல்கிறேன்.

உலகம்
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியும் உட்பட ஐந்து பேர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி ஐந்து பேருமே இறந்திருக்கிறார்கள். முதலில் அவர் பயணித்த உலங்கு வானூர்தியைக் காணவில்லை என்றும் பிறகு அவர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தின் பின்னாலான அரசியல், சதிகள் பற்றி எல்லாம் விட்டு விடுவோம். அடுத்த வல்லரசு நாங்கள்தான் என்று மார்தட்டிப் பேசும் இந்திய அரசியல்வாதிகள் இனிமேல் அந்த வசனத்துக்கு முன் ஒரு கணம் யோசிப்பார்கள். இந்திய வல்லரசுக் கனவில் விழுந்த இன்னொரு பலமான உதை சில மணிநேரமாக ‘ரெட்டி போன உலங்கு வானூர்தியைக் காணவில்லை' என்று இவர்கள் தேடித் திரிந்ததுதான்.


இந்தோனேஷியாவில் இன்னொரு நிலநடுக்கம். 46 பேர் செத்துப் போயிருக்கிறார்கள். 700க்கு மேற்பட்ட வீடுகள் நாசமாகி இருக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நில நடுக்கம் ஜாவா தீவுப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் சியான்ஜூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் நிலச்சரிவால் புதையுண்டு போய்விட்டதாயும், 50 பேரைக் காணவில்லை என்றும், அதில் 10 பேர் பிணங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்பே சிவம் படத்தில் மாதவன் பேசும் ‘கடவுளே, என்ன மாதிரி டிசைன் இது' என்ற வசனம் ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


வணிகம்- பொருளாதாரம்
வருகிற வாரம் பாடசாலைகள் திரும்பத் திறக்கப்பட உள்ளன. இந்தக் காலங்களில் Back to School Sales என்று சொல்லி சில்லறை விற்பனையாளர்கள் (retailers க்கு இது தமிழ் என்றால் Wal-Mart போன்றனவும் இதில் அடங்குமா?) நல்ல வருமானம் பார்ப்பார்கள். அதுவும் பாடசாலைகள் தொடங்குவதற்கு முதற் கிழமை இவர்களுக்கு வருமானம் குவியும். இந்த முறை அமெரிக்காவில் பெரிதாக வருமானம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கனேடியப் பெற்றோர் இந்த விஷயத்தில் தாராளமாக இருப்பார்கள் என்று போன கிழமை ஒரு ஊடகம் கருத்துக் கணிப்பு நடத்திச் சொன்னது எந்தளவு உண்மை என்று அடுத்த வாரம்தான் தெரியவரும்.

பொருளாதார நெருக்கடியால் சுருங்கியிருக்கும் நெஞ்சங்களுக்கு கொஞ்சம் ஆறுதலளிக்கிறார்கள் Orgnization of Economic Co-operation and Development என்ற அமைப்பு. அதாகப்பட்டது, பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகம் மெதுவாக மீண்டுகொண்டிருக்கிறது. முன்பு எதிர்வுகூறப்பட்ட வேகத்தைவிட வேகமாகவும், ஆனால் சராசரிக் குடிமகனின் எதிர்பார்ப்புக்கு மிக ஆறுதலாகவும் உலகம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்கிறதாம்.

விளையாட்டு
அமெரிக்க ஓப்பன் ரென்னிஸ் போட்டிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. மராட் சஃபின் தவிர்ந்த முன்னணி வீரர்கள் பிரச்சினை இல்லாமல் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி இருக்கிறார்கள். சானியா மிர்சா முன்னணி வீராங்கனை இல்லையா என்று கேட்கலாம். அவர் ஆள் அழகுதான், ஆனால் ஆட்டத்தில் ஒருபோதும் நேர்த்தி இருக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அந்தப் பலவீனத்தை அவரது அழகு மறைத்தது துரதிர்ஷ்டம். இப்போதெல்லாம் ரென்னிஸ் ஆட்டத்தில் 'ஆடும் அழகு' என்பது அற்றுப்போய் பலம் சார்ந்த ஆட்டமாக மாறிவிட்டது (ஃபெடரர் ஆடும்போது மட்டும் கால்களால் நாட்டியம் ஆடுகிறார் என்பது வேறுகதை). அந்த அசுர பலமும் சானியாவுக்கு இல்லை. இந்த முறையும் 6வது அமெரிக்க ஓப்பனைக் குறிவைத்துள்ள ஃபெடரர்தான் நான் பணம் கட்டும் குதிரை. அரை-இறுதியாட்டம் வரை அவருக்கு கஷ்டம் கொடுக்கும் ஆட்டக்காரர்கள் இல்லை என்றே சொல்லலாம். நடாலும் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருக்கிறார். நான் தொடரும் ஐவர், ஃபெடரர், நடால், ரொடிக், மர்ரே, ஹ்யூவிற்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரரான கயேல் ககுடா என்பவரை லென்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை உடைத்து தமது அணிக்கு இழுத்தார்கள் என்ற காரணத்தால் 2011 ஜனவரி மாதம் வரை எந்தப் புதிய வீரரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று செல்ஸீ அணிக்கு சர்வதேசக் கால்ப்பந்தாட்ட சம்மேளனம் தடை விதித்திருக்கிறது. பணம் காட்டி வளைத்துப் போடுவதில் செல்ஸீயை மிஞ்ச யாருமில்லை. (ரியால் மட்ரிட் கிட்ட வரலாம்). அதனால்தான் எனக்கு செல்ஸீயைப் பிடிப்பதில்லை. எவ்வளவு நன்றாக ஆடினாலும், உலகிலுள்ள எல்லா நட்சத்திர வீரர்களையும் பணம் கொண்டு பிடித்தவர்கள் என்ற எண்ணத்தை என்னால் மாற்ற முடிவதில்லை. ஆனால் இங்கிலாந்து முதன்மைக் கால்பந்தாட்டக் கழகங்களின் சுற்றுப்போட்டியில் இவர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள். 4 போட்டிகளில் 4 வெற்றி. முதல் ஐந்து இடங்களில் செல்ஸீ (4 போட்டி-12 புள்ளி), ஸ்பேர்ஸ் (4-12), மான்செஸ்டர் யுனைற்றட் (4-9), மான்செஸ்டர் சிற்றி (3-9), ஸ்டோக் (4-7).


சினிமா
கந்தசாமி பார்த்தாயிற்று. இது தொடர்பாகப் பதிவுலகம் கொடுத்த விமர்சனங்கள் தமிழ்சினிமா.கொம் இணையத் தளத்தைக் கலக்கியதோடு, வேறு சில விமர்சனங்கள் கலைப்புலி தாணுவையும் கோபப்படுத்தி இருக்கின்றன. கந்தசாமி மோசமான படம் இல்லை. பார்க்கலாம். ஆனால் குழந்தைகளுக்கான படம், பாடல்கள் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை என்று திரும்பத் திரும்ப விக்ரம் கூறுவது சிரிப்பாக இருக்கிறது. அதுவும் ‘மியா மியா', ‘என் பேரு' பாடல்களில் இருக்ககூடிய நடன அசைவுகள் குழந்தைகளுக்கானவை என்றால், பாலா கண்டுபிடிக்க முன் விக்ரத்துக்கு சினிமா பற்றி எவ்வளவு அறிவு இருந்ததோ, அதைவிடக் கொஞ்சம்கூட அவர் கற்றுக்கொள்ளவில்லை என்பேன். தாணு படம் தயாரிப்பதை விடுத்து, மற்றத் தயாரிப்பாளர்களின் படங்களை சந்தைப்படுத்துவதை முக்கிய தொழிலாகச் செய்யலாம் என்பது என் கருத்து. மற்றபடி இவர் ஒரு ‘கலை எலி' கூட இல்லை.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்வது பற்றி ஏன் இவ்வளவு சர்ச்சையோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதையும் வாழ்க்கையையும் ஏன் சேர்த்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. சினிமாக்கள் சில காட்சிகளில் உண்மை வாழ்வைப் பிரதிபலித்தாலும் சினிமா மட்டுமே வாழ்வில்லை. விஜய் காங்கிரசில் சேர்வதாலோ, சேராமல் விடுவதாலோ ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்பது என் கருத்து. என்னவோ, என் மனதில் பட்டதை சொல்கிறேன். விரிவாக ஒரு பதிவு எழுதவேண்டும்.

அடப்பாவிகளா தருணம்
பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கும் ஒரு பெண்ணுடன் ஒருவர் சேட்டை செய்கிறார். அப்போது பஸ் வர அந்தப் பெண் பஸ்ஸில் பாய்ந்து ஏறுகிறார். தொடர்ந்து ஏறும் தொல்லை தந்த்வர் ஏதோ தீப்பிடிக்கத் தக்க திரவத்தை ஊத்தி பஸ்ஸைக் கொழுத்தி விடுகிறார். இதெல்லாம் எங்கே நடந்தது என்கிறீர்களா? ரொரன்ரோ நகர மத்தியில். ஸ்டீபன் எட்வேர்ட்ஸ் என்ற இனத் மனிதரைத் துரத்திப் பிடித்துவிட்டார்கள் ரொரொன்ரோ பொலிஸார். அதிகாலை நேரம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் சமயோசிதமாகச் செயற்பட்ட பஸ் ஓட்டுனரால் தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




இதைத்தான் பார்த்தார்கள்
மேற்படி சம்பவம் தொடர்பான வீடியோ தேடிய போது ‘ரொரன்ரோ சன்' என்ற பத்திரிகையின் வலைத்தளம் போனேன். அவர்களின் காணொளிப் பகுதியில் அதிகம் பார்வையிடப்பட்ட காணொளியாக இது அல்லது மைக்கல் ப்ரையன் சம்பந்தப்பட்ட காணொளி இருக்கும் என்று நினைத்தேன். முதல் ஐந்து இடங்களில் நான்கு ‘சன் ஷைன் கேர்ள்' என்ற பெயர்களில் அவர்கள் போடும் பெண்கள் (மொடல்கள்) பற்றிய காணொளி. முதலிடத்தில் இருந்தது அதே சன் ஷைன் கேர்ள் மொடல்கள் மேலாடை எதுவுமின்றி, கைகளை மேலாடை ஆக்கி, கடற்கரையில் எடுத்துக்கொண்ட காணொளியும், அப்படி மேலாடை இன்றி படம் பிடிக்கப்பட்டது பற்றிய அவர்களின் அனுபவக் கோர்வையுமே ஆகும். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கவேண்டிய வீடியோ இது, என்னிடம் இணைப்பு இருக்கிறது, இங்கே இணைத்தால் சண்டை வரும் ஆகவே இணைக்க மாட்டேன். கொஞ்சம் மூளையை உபயோகித்தால் பார்க்கலாம். (எல்லா இடத்திலையும் ஆண்கள் ஒரே மாதிரித்தான்....ஹி ஹி... நானும்தான்... என்னதான் வெளிநாடு அது இது எண்டாலும்... ம்ஹூம்)

3 comments:

கலையரசன் said...

அருமையான கலக்கல் செய்திகள்..
ஆனால் பதிவு கொஞ்சம் நீளம் அதிகமாக இல்லை கீத்?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Unknown said...

உண்மைதான் கலை... இந்தமுறை கொஞ்சம் நீ............ண்டு விட்டது