Sunday, 20 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-1

நண்பன் பால்குடியின் அழைப்பை மதித்து பாடசாலைக் காலத்தை மீட்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே பல பதிவுகளில் என் பள்ளிப் பருவ அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். ஆசிரியர்கள் பற்றி ‘தகப்பன் சாமிகள்' என்ற தலைப்பில் எழுதிய தொடர் ஒன்று ஓராம் வகுப்பில் அதிபராய் இருந்த வைத்தியநாதக் குருக்களுடன் நின்றுவிட்டது. வெகுவிரைவில் அதையும் தொடரவேண்டும். அதைவிடத் தலைக்கு மேல் வேலை. ஆணி புடுங்கிவிட்டு பதிவு எழுதும்போது பதிவு வசீகரமாக வரவேண்டும் என்கிற ஆர்வத்தில் தூக்கம் தொலைந்து கண்ணைச் சுற்றிக் கருவளையம் விழுகிறது, கண் போதையிலிருப்பவன் போல் சிவந்துபோய்க் கிடக்கிறது. இருந்தாலும் பதிவுலகம் என்னை விடுவதாயில்லை. இந்த ஒரு எரிச்சல் கலந்த அவஸ்தையான காலப் பகுதியில் என் வாழ்வின் பசுமையான பகுதிகளை மீட்குமாறு பால்குடி கேட்டது, பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதான்.

என்னுடைய நேர்சரியில் இருவரிடம் படித்தேன். ஜெயமணி ரீச்சர் மற்றது ஜெயா ரீச்சர். அந்த வயதில் கொஞ்சம் ஈயாப்பி. சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போடுவேன். பென்சில் கூடக் கடன் கொடுக்க மாட்டேன். ஜெயா ரீச்சர் ஒரு முறை இதை அப்பாவிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. கேம்பிறிஜ் கலாசாலை நேர்சரியில் ஜெயமணி ரீச்சரிடம் ஒரு கொஞ்சக்காலமும், மீதியை ஜெயா ரீச்சரிடமும் படித்தேன். 1990 டிசம்பரில் அக்காவின் திருமணம் காரணமாக இந்தியா போய், இலங்கைக்குத் திரும்பி வர பிந்திப் போனதால் கொஞ்சம் பிந்தித்தான் ஓராம் வகுப்பில் சேர்ந்தேன்.

ஓராம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை என்னை வளர்த்தது அப்பா பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் யா/ கரணவாய் தாமோதர வித்தியாலயம். வைத்தியநாதக் குருக்கள் அதிபராக இருந்தார். இவர் வாழைப்பழத்தை வாயைப் பயம் என்று உச்சரிக்க நான் அப்படியே எழுதி, பிறகு ஐயோ என்பதை ஐழோ என்று எழுதி அடிவாங்கிய கதையை முன்னொருமுறை எழுதியிருக்கிறேன். முதலாம் வகுப்பிலேயே எனக்கு டீன் தூசணம் சொல்லித் தந்தான் (அப்பவே ராகிங்). ஓராம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்த ‘நுள்ளு' புகழ் ஆறுமுகம் வாத்தியார்தான் அந்தப் பாடசாலையில் எனக்குப் பிடிக்காத ஒரு வாத்தியாராக இருந்தார். மூன்றாம் வகுப்பில் படிப்பித்த இந்திராணி ரீச்சரும் கொஞ்சம் கடுமையானவர்தான்.

இரண்டாம் வகுப்புப் படிப்பித்த இராஜசுலோசனா ரீச்சரை மறக்க முடியாது. அதே போல் நான்காம் வகுப்பில் படிப்பித்த சிவமாலினி ரீச்சரையும். இராஜசுலோசனா ரீச்சரை தனிப்பட்ட முறையிலும் தெரியும். அவரது குடும்பத்தைப் போராடித் தூக்கி நிறுத்திய ஒரு பெண் அவர். பெண்கள் மீதான ஒரு மரியாதையான பார்வைக்கு முழுமுதற் காரணம் ரீச்சர்தான். கம்பீரமானவர். இப்போது எப்படி எங்கே இருக்கிறாவோ தெரியவில்லை. அதே போல் சிவமாலினி ரீச்சர், இல்லையென்றால் அன்பாக மாலியக்கா. அடி என்றால் அப்படி ஒரு அடி. அக்கறை என்றால் அப்படி ஒரு அக்கறை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மாலியக்கா கூப்பிடு தூரத்தில்தான் கனடாவில் இருக்கிறா. ஆனா வாழ்க்கையில் ஸ்திரமாக ஜெயிக்காமல் மாலியக்காவைப் பார்க்கப் போவதில்லை. ஒரே ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பார்த்த போது அதே நாலாம் வகுப்பில் பார்த்த அன்பு கலந்த கண்டிப்போடு மாலியக்கா நலம் விசாரித்தபோது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. லேசாகப் பாடகி சுஜாதா சாயல் இருக்கும், மெல்லிய குரலில் பேசும் என்னுடைய முதல் ஆங்கில ஆசிரியை தேன்மதி ரீச்சரையும் மறக்க முடியாது. 13ம் வகுப்பில் ஆங்கில தினப் போட்டிக்குப் போனபோது கூட என்னை மறக்காமல் கூப்பிட்டுக் கதைத்தார்.

அதன் பிறகு ஆறாம் வகுப்புத் தொடக்கம், ஹாட்லிக் கல்லூரி. என்ன நிலைக்கு உயர்ந்தாலும், ஹாட்லியில் 1996-2004 வரை நான் படித்த காலத்து வசந்தம் திரும்பி வராது. உடம்பைத் தடவி, சில சமயம் விதைகளை நசுக்கி எங்களை 'அவர்கள்' சோதிக்க, ‘விடுங்கோ சேர்' என்று கூனிக் குறுகிவிட்டு, அசிங்கத்தை மிதித்த உணர்வோடு உள்ளே போகும் எங்களை, 'எங்கடை சேர்மார்' வழி நடத்தினார்கள். நாங்களும் வழி நடந்தோம். சினேகிதி ஒரு பதிவில் சொன்னார். பல பாடசாலைகளில் மாணவனின் அறிவுக்கு ஏற்றபடி ‘ஏ' ‘பி' ‘சி' ‘டி' என்று வகுப்பில் விடுவார்கள் என்று. அப்படி இல்லாமல் எல்லா வகுப்பிலும் எல்லாத் திறமைகளும் கலந்திருக்குமாறு வகுப்புகள் பிரித்து, என்னில் இருந்த இன்னொரு என்னை எனக்கு அடையாளம் காட்டியது, ஹாட்லிதான்.

ஆறாம் வகுப்பில் வகுப்பாசிரியராக வந்த தவராசா சேர், இடையில் எங்கள் பார்வையில் கொஞ்சம் புளித்துப் போனாலும், ஒரு நல்லாசிரியராகக் காட்டிக் கொண்டவர். இடப் பற்றாக்குறையால் இரண்டு வகுப்புகள் சேர்ந்து இருந்தபோது, தவராசா சேருடன் வகுப்பாசிரியராக இருந்த தவநேசன் சேர், விஞ்ஞானம் படிப்பித்த முத்துலெட்சுமி ரீச்சர், ஆங்கிலம் படிப்பித்த அந்தோனிமுத்து சேர், செல்வராஜன் சேர், கணிதம் படிப்பித்த சர்வானந்தா சேர், சித்திரம் படிப்பித்த (அடியும் போட்ட) சற்குணராசா சேர் இவர்கள் ஆறாம் வகுப்பில் மறக்க முடியாதவர்கள். அதே போல் ஏழாம் வகுப்பில் இருந்து மறக்க முடியாத இன்னும் பலர் வந்து வாய்த்தார்கள். அவர்களின் பெயர்களை இங்கே சொல்கிறேன், பாடங்களுடன்
பாலேந்திரா சேர், ஜெயகோபால் சேர், சேந்தன் சேர், மரியதாஸ் சேர் (ஓ/எல் வரை கணிதம்) ஈஸ்வரநாதன் (ஈசப்பா) சேர், விஜயகுமார் (வீ.கே) சேர் (விஞ்ஞானம்) பாலகங்காதரன் சேர் (ஏழாம் வகுப்பில் சமயம், ஏ/எல்லில் கணிதம்) ராகுலன் சேர் (சித்திரம்), கலைச்செல்வன் சேர், கனகசபாபதி சேர் (சமூகக் கல்வி), ராகவானந்தம் சேர் (தமிழ், சுகாதாரம், விஞ்ஞானம்), ராகவன் சேர், ரகுவரன் சேர் (விஞ்ஞானம்/சுகாதாரம்), ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் கற்றுத்தந்த சத்தியசீலன் சேர், திருச்செல்வம் சேர், செல்வராஜா சேர் விஞ்ஞானமும் கணிப் பொறியும் சொல்லித்தந்த பரணி அண்ணா, சமயம் சொல்லித்தந்த நவத்தார், இரசாயனவியல் படிப்பித்த தங்கராசா சேர், பௌதிகம் படிப்பித்த அமரர் விநாயகமூர்த்தி சேர்................... நீண்ட நெடும் பட்டியல் அது.

அதே போல் தனியார் கல்வி நிலையங்களில் கற்றுத்தந்ததங்கராசா சேர், நவமணி ரீச்சர், வள்ளி ரீச்சர், சிவராசா சேர் (கணிதம்), ஜெயானந்தம் சேர், ஜெபரட்னம் சேர், திரவியநாதன் சேர் (விஞ்ஞானம்), பரராசசிங்கம் சேர், சரவணமுத்து சேர் (ஆங்கிலம்), பண்டிதர் நடராசா, சிவசுப்பிரமணியம் சேர், அன்பழகன் சேர், புஸ்வாணம் சேர் (அம்மாவாண அவரின்ர பேர் ஞாபகத்தில் இல்லை), பால முரளி சேர், மதியழகன் சேர், செந்தூரன் சேர், உயர்தரக் கணிதம் கற்பித்த தில்லையம்பலம் சேர், நல்லையா சேர், செந்தில்ராஜ், பௌதிகம் சொல்லித்தந்த சோதி மாஸ்ரர், பிரபா அண்ணா, சந்திரப்பிரகாசம் சேர் (மன்மத ராசா), இரசாயனம் சொல்லித்தந்த சண் சேர் போன்றவர்களையும் நான் என்றுமே நன்றியுடன் நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இவ்வளவு பேரையும் நினைவு கூர்ந்தால் மட்டும் போதாதல்லவா... இவர்கள் பற்றிய சில நினைவு மீட்டல்கள், நான் பெற்ற விழுப் புண்கள் (ஹி ஹி... அடி வாங்கின கதைகள்), செய்த குழப்படிகள் (நான் எங்க செய்தனான்.. எல்லாம் உவன் நிதியும் மகியும் செய்ததுதான்) எல்லாம் பகிர்கிறேன்.... அடுத்த பாகத்தில். அதெல்லாம் எழுதினால் இந்தப் பதிவு நீ............................ண்டு விடும். சந்திப்போமா??

14 comments:

சினேகிதி said...

VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர்? ஹாட்லில படிப்பிச்சவரா? நானும் அவரட்ட படிச்சிருக்கிறன்.

நவத்தார் என்றது நவரட்ணம் மாஸ்டரா? 5நிமிசத்துக்கு ஒருக்கா தம்மடிப்பாரா? அக்கா படித்திருக்கிறார் அவரிடம்.

விநாயகமூர்த்தி மாஸ்டரும் என்ர மாமாவும் ( பஞ்சாச்சரமூர்த்தி மாஸ்டர் - கணிதமும் விஞ்ஞானமும் படிப்பித்தவர்) நெருங்கிய நண்பர்கள். தற்போது இருவரும் இல்லை. விநாயகமூர்த்தி மாஸ்டரின் துணைவியார் இப்போதும் எங்கள் குடுப்பத்துக்கு பல விதத்தில் உதவியாக இருப்பவர்.

மற்றது நான் சொன்ன ABCD என்று பிரிப்பது ஊரில் உள்ள பாடசாலைகளில் குறைவு. ஆனால் நேரடியாக வெளியே சொல்லாவிட்டாலும் படிப்பிக்கிற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் A பிரிவில் படிக்கும் பிள்ளைகள் ஏதோ கொஞ்சம் உசத்தி என்ற எண்ணம் இருக்கும். அதனால் சில மாணவர்கள் பாதிக்கப்படலாம். இதனாலேயே என்னை A வகுப்பில் விடுங்கோ என்று அழுதிருக்கிறார்கள் மாணவர்கள்.

vasu balaji said...

பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழுதுங்க கிருத்திகன்.

Unknown said...

சினேகிதி..
VK நாங்கள் 10ம் வகுப்பு படிக்கேக்க ஹாட்லிக்கு வந்தவர்.. அந்தாளுக்கு நாங்கள் செய்த அநியாயம் கனக்க.. அது பற்றி பிறகு எழுதிறன்..நவத்தார் ‘தம்' அடிப்பதில்லை.. நீங்கள் சொல்லும் நவம் A/L Arts Stream, Logic or தமிழ் படிப்பிச்சிருக்கோணும். இந்த நவம் சமயம் படிப்பிச்சது.

///ஆனால் நேரடியாக வெளியே சொல்லாவிட்டாலும் படிப்பிக்கிற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் A பிரிவில் படிக்கும் பிள்ளைகள் ஏதோ கொஞ்சம் உசத்தி என்ற எண்ணம் இருக்கும்./// அது உண்மை. ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனா நான் ஹாட்லியில படிக்கேக்க ஒரி செக்கனும் எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் வரேல்லை

Unknown said...

///பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழுதுங்க கிருத்திகன்///

நிறையப் பேரை மறந்துவிட்டேன் பாலா.. இவ்வளவு பேர் ஞாபகம் இருப்பது எனக்கும் சந்தோசமாக இருக்கு

நிலாமதி said...

பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டி பார்ப்பதே ஒரு சுகம்.
தொடருங்கள். ...

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் பெரிய பதிவு மற்றும் தொடரும் தொடர் பதிவுக்கு

M.Thevesh said...

நினைவு மீட்டல் ஒரு சுகமான அனுபவம்.உங்கள் தொடர் படிக்க சுவார
சியமாக இருக்கிறது.

வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர்? ஹாட்லில படிப்பிச்சவரா? நானும் அவரட்ட படிச்சிருக்கிறன்.//

இடம் நான் மட்ஸ் சென்டரில் விஞ்ஞானம் படிச்சேன், நாங்கள் படிக்கின்ற காலத்தில் அவர் மெதடிஸ்டிலை படிப்பித்தவர்.

சினேகிதி சொல்லும் நவம் சேர் வேறை, அவர் தமிழ் நவம் அடிக்கடி தம் அடிப்பார். அவரின் மகள் எங்கள் வகுப்பு. ஓஎல் ரியூசனில் அவரிடம் தமிழ் படித்தேன்.

எனக்கும் உந்த A,B,C,D களில் நம்பிக்கை இல்லை நான் C வகுப்பு மாணவன் எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருவர் அந்தக்காலத்தில் 8D எடுத்தார்கள். உந்த A,B,C,D களில் ஒரு கோதாரியும் ஹாட்லியில் இல்லை.

Unknown said...

நன்றி நிலாமதி அக்கா

Unknown said...

நன்றி யோகா

Unknown said...

நன்றி தேவேஷ்

Unknown said...

///எனக்கும் உந்த A,B,C,D களில் நம்பிக்கை இல்லை நான் C வகுப்பு மாணவன் எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருவர் அந்தக்காலத்தில் 8D எடுத்தார்கள். உந்த A,B,C,D களில் ஒரு கோதாரியும் ஹாட்லியில் இல்லை///

என்ர செல்லமே வந்தியத்தேவா.... ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்கள்.. (கோதாரி)

பால்குடி said...

அழைப்பையேற்று பதிவைத் தொடர்ந்ததுக்கு நன்றிகள். இத்தனை பேரை ஞாபகம் வச்சிருக்கிறீரோ...? என்னால முடியல....

Unknown said...

பால்குடி...
படிச்சதெல்லாம் மறந்து போச்சு இதையாவது ஞாபகம் வச்சிருக்கிறன்.. அவ்வளவுதான்