Wednesday, 30 December 2009

வெடியரசன்-திருட்டுத்தனம்-தரமான இலக்கியம்

1.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் எங்களிடம் சொல்லுங்கள் என்ற கோஷமும் இருக்கிறது. (இவர்களைவிடப் பலம்வாய்ந்த அமைப்பு ஒன்று எனது பாடசாலைக் காலத்தில் போட்ட கோஷமிது). இந்த அமைப்பினரின் முதல் நடவடிக்கையாக முறைகேடாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு எதிரான கண்டனங்கள் அமைந்திருக்கின்றன. அப்படியாக முதலாவதாக முகமூடி கிழிக்கப்படுபவர் கொக்குவில் இந்துக் கல்லூரி உப அதிபர் திரு.மு.வேலாயுதபிள்ளை என்பவர். அவர் பற்றிய அறிக்கை ஒன்றை மாணவர் படை வெளியிட்டிருக்கிறது.

வேலாயுதபிள்ளை மீதான குற்றச்சாட்டுகள் எவ்வளவு உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதேவேளை ‘அங்க இப்பிடியாம், அவர் அப்பிடியாம்' என்கிற கதையோடு மட்டும் நின்றுவிடாமல் ‘இன்னார் இன்ன தவறு செய்கிறார்' என்று நேரடியாக வெளிக்கொணர்வது நல்ல முயற்சியே. ஆனாலும், அதே நபரை உடல் ரீதியாகத் துன்பம் செய்யாமல் வேறு வழிகளில் திருத்த முயல்வது நலம் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த எச்சரிக்கைக் கடிதம் அந்த நம்பிக்கையைத் தரவில்லை என்பதையும் இங்கு குறித்துச் சொல்லியாகவேண்டும் (சிறு தண்டனைக்குள்ளாகிறார்?????).

இப்படியான போராட்டங்களில் மாணவர்கள் இறங்குவது வரவேற்கத்தக்கதே. இவர்களின் கலாசாரம் மீதான அக்கறை நவம்பர் 16 2005 தினேஷ் என்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு வழிகோலக்கூடாது. ‘பெண்களைத் தெய்வங்களாக மதிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம்' என்கிற போலிப் போர்வையிலிருந்து இவர்கள் வெளிவந்து, பெண்களுக்கான சம உரிமை தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். பெண்களை பாலியல் குறியீடுகளுடன் கிண்டலடிக்கும் நண்பனைத் தட்டிக் கேட்க வேண்டும். சாதீயத்துக்கு எதிரான முழுமூச்சிலான முன்னெடுப்புகள் வேண்டும். இந்தக் குழுமங்களில் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டு அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைத் தீர்க்கும் வழியாக இந்த மாணவர்படை பயன்படுத்தப்படக் கூடாது. தண்டனை என்பது ‘உடல்ரீதியான தாக்குதல்' என்ற வடிவத்தை ஒருபோதும் எடுக்கக்கூடாது. இவர்களுக்கான மக்கள் ஆதரவு என்பது இனிமேல் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இருக்கும். பல்கலைக் கழகத்தைச் சுற்றியிருக்கும் ‘பியர்' கடைகளை மூட முடியாமல் கள்ளச் சாராய ஒழிப்பைக் கைவிட்ட எம்.பி. போல் இவர்களும் ஆகாமலிருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

2.
சென்ற வார இறுதியில் விஜய் ரி.வி.யில் அனுஹாசனோடு ஆண்ட்ரியா மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார் கோப்பி குடித்தார்கள். மாலை நேரம் வந்தால் பாடலில் ‘காதல் இங்கே ஓய்ந்தது?' என்கிற வரியை ‘காடல் என்கே வாய்ந்தது' என்பது மாதிரி பிழை பிழையாகப் பாடி ஒரு நாள் முழுக்க ஒலிப்பதிவு செய்தோம் என்று பெருமையாகச் சொன்னார் ஆண்ட்ரியா, அதற்கு ஒத்து ஊதினார் ஜி.வி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் இருவரிடமும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது செயற்கைத்தனம் இல்லாமல் பேசியது Season-1 ல் வந்த மணிவண்ணனும், இரண்டொருமுறை வந்த ஜெயராமும் மட்டுமே. மற்றபடி மேல்தட்டு மக்களுக்கான நுனி நாக்கு ஆங்கில நிகழ்ச்சியாகவே இது தெரிகிறது. ஜி.வி., ஆண்ட்ரியா பங்குகொண்ட நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்' இருவருக்கும் தொடர்புடைய படம் என்பதால். அங்கேதான் ஜி.வி. ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

‘உன்மேல ஆசதான்' பாடல் ஏலவே யுவன் சங்கர் ராஜா போட்டுக் கொடுத்த மெட்டு என்பது கிட்டத்தட்ட குழந்தைக்கும் தெரியும். செல்வராகவனோடு சண்டை போட்ட பின் யுவன் சங்கர் ராஜா அந்த மெட்டை சர்வம் படத்தில் ‘அடடா வா அசத்தலாம்' என்று பாவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.வி. சொல்கிறார் ‘உன்மேல ஆசதான்' பாடலுக்கான காட்சிகளை ஏலவே செல்வராகவன் படமாக்கியிருந்தாராம். அந்தக் காட்சிகளுக்கு தான் மூன்று மணிநேரத்தில் இசையமைத்தாராம். யுவன் சங்கர் ராஜா சுட்டுத்தான் பாட்டுப் போடுகிறார், ஜி.வி. சுட்டால் என்ன?, அல்லது இருவரும் ஒரே loops பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சப்பைக் கட்டுகள் இங்கே எடுபடாது. ஒரே Loops பயன்பட்டிருந்தால் ஒலிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கும், மெட்டுமா? ‘ஏற்கனவே யுவன் போட்ட மெட்டுக்கு செல்வா காட்சிகளை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதே மெட்டை வைத்து முழுமையாக வேறொரு பாடலை உருவாக்கினேன்' என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச நேர்மைகூட தமிழ் சினிமாக் கலைஞர்களிடம் இல்லை.

3.
சமீபத்தில் அரைவாசி வாசித்து முடித்த ஒரு புத்தகம் ஜே.ஜே. சில குறிப்புகள். பலரால் கொண்டாடப்படும் இந்தப் புத்தகம் சராசரி வாசகனான எனக்கு புரிவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதை மூடிவைத்துவிட்டு கொற்றவையைத் திறந்தாலும்கூட, பயங்கரமான வாசிப்பனுபவமும் இலக்கிய ரசனையும் உள்ளவர்களால் மட்டுமே இலகுவாக கிரகிக்ககூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது (ஜே.ஜே. வை விட இலகுவான நடை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்). அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை. அதைப் பிழையென்று சொல்லமுடியாது. எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக படைப்புகள் வந்தாகவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சிலவேளை இன்னுமொரு நான்கு ஐந்து வருடங்களின் பின் இந்தப் புத்தகங்கள் மீதான என்னுடைய கண்ணோட்டம் வேறாக இருக்கலாம். அதற்காக என்னால் புரிந்து கொள்ளமுடியாத புத்தகம் ஒன்றை சிலாகிக்க நான் தயாராயில்லை. பேசாமல் குருநாதரின் புத்தகங்களை வாசித்துச் சிரித்துவிட்டுப் போகலாம்.

இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. மற்றது தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.

நன்றி: நண்பன் செல்லம்மா. வெடியரசன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொண்ட காரணத்துக்காக.

9 comments:

Karthikeyan G said...

//அதாவது முற்போக்கு, பிற்போக்கு இலக்கியங்கள் குறித்த குழுமத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே கிரகிக்ககூடியதாக இருப்பதுதான் கொடுமை.//

நிச்சயமாக இல்லை. நீங்கள் இலக்கியம் குறித்த தவறான பிம்பத்தை கொண்டிருக்கிறீர்கள். அதே பிம்பத்தின் துணையோடு இந்த புத்தகங்களை படித்ததால்தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.

Karthikeyan G said...

// இப்போதைக்குத் தரமான இலக்கியவாதிகளாக கணிக்கப்படுபவர்களுக்கு இரு குணவியல்புகள் இருக்கின்றன. ஒன்று, பெரும்பாலானவர்களுக்குப் புரிபடாமல் எழுதுவது. //

இப்போது எழுதுபவர்களை விட பழங்கால இலக்கியவாதிகள் இதைவிட புரியாத படைப்புகளையே அளித்துள்ளனர். (கம்பராமாயணம், நற்றினை, புறநானுறு, அகநானுறு).

-//தன்னைத் தவிர எழுதுபவன் எல்லோரையும் மட்டமான மொழியில் திட்டுவது.
//-

மிக மிக தவறான கருத்து. மோசமான படைப்புகளை/ கருத்துக்களை விமர்சித்தால் "திட்டுறான்" என முத்திரை குத்தி விடுவதா. ஜெமோ, சுகுமாரன், எஸ்ரா, பிரபஞ்சன், சாரு, நாஞ்சில்நாடன் போன்றோர் தரமான படைப்புகளை தங்கள் விமர்சனங்களால் ஊக்குவித்தே வருகிறார்கள்.

Unknown said...

///நீங்கள் இலக்கியம் குறித்த தவறான பிம்பத்தை கொண்டிருக்கிறீர்கள். அதே பிம்பத்தின் துணையோடு இந்த புத்தகங்களை படித்ததால்தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.///
என்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறேன் கார்த்திகேயன். அவ்வளவுதான்.

///மிக மிக தவறான கருத்து. மோசமான படைப்புகளை/ கருத்துக்களை விமர்சித்தால் "திட்டுறான்" என முத்திரை குத்தி விடுவதா.///
படைப்புகள் சம்பந்தமான விமர்சனங்களை நான் இங்கே சொல்லவில்லை.

///ஜெமோ, சுகுமாரன், எஸ்ரா, பிரபஞ்சன், சாரு, நாஞ்சில்நாடன் போன்றோர் தரமான படைப்புகளை தங்கள் விமர்சனங்களால் ஊக்குவித்தே வருகிறார்கள்.///
ஊக்குவிக்கிற அதே வேளை, சக படைப்பாளியை படைப்புகளைச் சாராமல் திட்டுவதிலும் நீங்கள் சொன்னவர்களில் சிலர் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்

Unknown said...

கார்த்திகேயனுக்கு...
இப்போதிருக்கிற இலக்கியவாதிகள் சிலர் பாவிக்கிற மொழிநடையும், சொற்களும் விமர்சனம் போல் தெரிவதில்லையே. நேரிடையான வசையாகத்தானே தெரிகிறது. இலக்கியவாதிகள் பேசுவதால் வசைச் சொற்கள் இலக்கியமாகிவிடா.

Karthikeyan G said...

கிருத்திகன், நீங்கள் சாருவை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத்துகளில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக எதிர்ப்புகளை வெகுஜன மொழியில் பதிவு செய்யும் போது அது சிலருக்கு 'வசை' போல் தோன்றிவிடுகிறது.

இலக்கியம் இன்னும் 0.001% தமிழர்களை கூட சென்றடையவில்லை. இணையத்தில் பிரபல எழுத்த்தாளர்களுக்கு இடையே நடக்கும் இலக்கிய சர்ச்சைகள் looks like well planned mind games played with the net reading youths. இத்தகைய இலக்கிய சச்சரவுகளில் இனைய வாசகர்களை ஆர்வம்கொள்ள வைப்பதின் மூலம் அவர்களுக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகிறது. அதுவே அவர்களை இலக்கியத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைக்கிறது.

EKSAAR said...

சட்டத்தை கையில் எடுப்பதை ஒருபோத்ம் ஆதரிக்கக்கூடாது. நியாயத்திற்காக போராடுவதை ஆதரிப்பதும் அநியாயங்களை வெளிக்கொணர்வதை
ஆதரிப்பதும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கூட.. இந்த துண்டுபிரசுர குற்றச்சாட்டு முறை
ஒழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்திய கட்டப்பஞ்சாயத்து
முறைபோலாகிவிடும்.

Unknown said...

///இந்த துண்டுபிரசுர குற்றச்சாட்டு முறை
ஒழிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்திய கட்டப்பஞ்சாயத்து
முறைபோலாகிவிடும்.///

என்ன கொடுமை சார்...
துண்டுப்பிரசுரம் மூலம் பிழைகளை வெளிக்கொணரல் சரியே. தண்டனை வழங்கல் என்பதுதான் பிழை

Unknown said...

கார்த்திகேயன்..
அவரைத்தான் சொல்கிறேன். உதாரணத்துக்கு இதைக் கவனியுங்கள்.
///நானும் மனுஷ்ய புத்திரனும் சந்தித்தால் இரண்டு நல்ல விஷயங்களையும், ஒரே ஒரு கெட்ட விஷயத்தையும் பற்றி மட்டும்தான் கதைப்போம். வேறு எது பற்றியும் கதைக்க மாட்டோம். ரெண்டு நல்ல விஷயம்: குடி, குட்டி. கெட்ட விஷயம்: ஜெயமோகன்.///
இப்படித் தனிமனிதத் தாக்குதல் செய்து இலக்கியம் வளர்க்க வேண்டுமா?

இரண்டாவது எழுத்துக்களில் சுவாரஸ்யத்தைக் கூட்ட வெகுஜன மொழியில் எழுதலாம் என்றால். சுஜாதாவை இலக்கிய விபசாரி என்றழைப்பது ஏன்???

Karthikeyan G said...

இத்தகைய விமர்சனங்கள் தவறென்று தோன்றவில்லை. சுஜாதா ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதர் அல்ல. சுஜாதாவை 'இலக்கிய விபசாரி' என்றழைப்பது உண்மையாக கூட இருக்கலாம். இவையெல்லாம் தவறாக இருக்கும் பட்சத்தில் கூட சாருவை தவிர்த்து மற்ற நுற்றுக்கு மேற்பட்ட தீவிர இலக்கியாவதிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களையாவது படிக்கலாம். ஒருவருக்காக அனைவரயும் புறக்கணித்து விடாதீர்கள்.