ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இருந்தும் இன்னும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் அது தொடர்பாக சட்டத்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இலங்கைத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மே மாதம் வன்னிக் காடுகளில் நடந்த கடுமையான சண்டைகளின் முடிவில் பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலைக் காட்டிய இலங்கையிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்து வைப்பதற்கு ஏதுவாக இறந்தது பிரபாகரன்தான் என்பதற்கான ஆதாரங்களையும், இறப்புச் சான்றிதழையும் கோரியிருந்தது இந்தியா. அந்த ஆதாரங்களில் இறப்புச் சான்றிதழ் தவிர மிகுதி எல்லாவற்றையும் தாம் இந்தியாவிடம் காட்டிவிட்டதாக இலங்கை தெரிவித்திருக்கிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றன. டிசம்பர் 12ம் திகதி பிரான்சின் இந்த வாக்குப்பதிவுகள் நடக்கின்றன. வருகிற பத்தொன்பதாம் திகதியன்று கனடாவிலும் நாடுதழுவிய வாக்கெடுப்புகள் நடக்க இருக்கின்றன. கனடா வாழ் தமிழர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை தமிழர் தேர்தலுக்கான கூட்டணியின் வலைப்பக்கத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அரசியல்-புகுந்தகம்
ஆஃப்கானில் கைதிகளை அந்நாட்டு அதிகாரிகளிடம் கையளித்தது தொடர்பான தணிக்கை செய்யப்படாத ஆவணங்களை பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் ஹார்ப்பர் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அந்த ஆவணங்களை வருகிற ஜனவரி 25ம் திகதி மீண்டும் கீழ்ச்சபைக்கு வரும்போது ஹார்ப்பர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கீழ்ச்சபை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றக் கீழ்ச்சபை ஒன்றுகூடலிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேற்படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இருந்த போதும், சட்டரீதியான சில ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என அரச தரப்பு அறிவித்திருக்கிறது. தேசியப் பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும், இராணுவ வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நேச நாடுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்கவும் ஒரு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என்கிற அரசின் வாதம் அடிபட்டுப் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏற்கனவே வெறும் 38% பெரும்பான்மை கொண்ட ஹார்ப்பர் அரசின் மீது, இவ்வாறான ஆவணங்களை மறைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் அறியும் உரிமையை மட்டுமல்லாது சாதாரணக் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையையும் மறுக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.
இதே வேளை தமிழகத்தின் தென் மாவட்டங்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதாக ராமதாசுவும், உத்தரப் பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்று மாயாவதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தேசப்பற்று என்கிற மாய நூல் மூலம் தைக்கப்பட்டிருந்த இந்தியாவின் தையல்கள் இத்துப்போக ஆரம்பித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தேசப்பற்று இன்னமும் அவர்களிடம் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது. தம் நாட்டில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்து சாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், இன்னொரு நாட்டில் இவர்களைத் தொப்பூள் கொடி உறவுகளாக நம்பிய ஒரு கூட்டமே கொத்துக் கொத்தாக செத்தபோது இறையாண்மை பேசினார்களல்லவா???

அரசியல்-உலகம்
சந்திர சேகர ராவின் உண்ணாவிரதம், மாணவர் கலகம் இவை எல்லாவற்றிம் முடிவாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்துத் தனித் தெலுங்கானா மாநிலம் என்று ஒன்றை உருவாக்க இந்திய அரசு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருக்கிறது. இனிமேல் அதற்குரிய அமைப்புரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. மத்திய அரசின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து ஆந்திர மாநில அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரோசய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க விருப்பம் தெரிவித்த பல கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு ரோசய்யாவை நட்டாற்றில் விடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. (ஏற்கனவே 138 சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது).
வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Globalive Wireless என்கிற தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் கனேடிய சந்தையில் அரசாங்கம் அனுமதித்தது பற்றி கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. ரோஜேர்ஸ், பெல், ரெலஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இவ்வாறான அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. அதிலும் ரோஜேர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து 6.7% ஆல் மதிப்புக் குறைந்திருக்கின்றன. 725 மில்லியன் சந்தை முதலாக்கத்தையும் ரோஜேர்ஸ் இழந்திருக்கிறது. இருந்த போதும் எப்படியான போட்டியாளர்களையும் சந்திக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதேவேளை Globalive நிறுவனத்தின் செல்லிடப் பேசிச் சேவையான Wind Mobile வரையறையற்ற பயனர் திட்டங்கள், ஒப்பந்தங்கள் இல்லாத சேவை போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருப்பது மேற்படி மூன்று நிறுவனங்களையும் கலங்கிப்போக வைத்திருக்கும். இப்போதுதான் இவர்கள் system acess fee நீக்கினார்கள். இப்போது இன்னும் பல கட்டணங்களைக் குறைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. வர்த்தக உலகில் போட்டிகள் அதிகரிப்பது யாருக்கு லாபமோ இல்லையோ சாதாரண பயனாளர்களுக்குப் பெரும் லாபம்.

விளையாட்டு
இந்தியா-இலங்கை இருபது-இருபது போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளில் சங்ககார எடுத்த 78 ஓட்டங்கள் மற்றும் கப்புகெதர, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடி காரணமாக 215 ஓட்டங்களை இலங்கை அணி குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்தியாவுக்கு கம்பீரும், சேவாக்கும் திறமையாக ஆடிய போதும் 40 வயது இளைஞர் சனத்தின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா 29 ஓட்டங்களால் தோற்றுப்போனது. சனத் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியிலும் சங்கா, சனத், ஜயசிங்க, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 206 ஓட்டங்களைப் பெற்ற போதும் சேவாக் 64 (36 பந்துகளில்), யுவராஜ் 60 (25 பந்துகளில்), தோனி 46 (28 பந்துகளில்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுகளால் வென்று தொடரைச் சமன் செய்தது. இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கண்ட சங்கா ஆட்டத்தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இருபது இருபது போட்டிகளில் சங்கா போன்றோர் ஓட்டம் குவிப்பதைப்போல் கிரிக்கெட்டில் வேறு எதையும் ரசிக்க முடியாது. இயலுமானளவுக்கு சரியான அடிகளை அடிக்கும் சங்கா, மகேல போன்றோர் ஓட்டம் குவிப்பதற்கும் மற்றவர்கள் ஓட்டம் குவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக technically correct என்று சொல்லக்கூடிய வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இருபது இருபது போட்டிகளிலும் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சினிமா-பொழுதுபோக்கு

அட........

2 comments:
//ஒளித்துவைக்கப்பட்ட அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் படங்களில் இனி அவர் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ரஜனி-60 க்கான வாழ்த்து அல்லது வேண்டுகோள்.//
அதே.. அதே.. என்னுடைய வேண்டுகோளும்!! உங்களுடைய நான் பார்த்த உலகத்தை மறக்காமல் படிச்சிடுவேன் கீத்..
நன்றி கலை.... மறக்காம படிக்கிறதுக்காக
Post a Comment