Saturday 19 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 13-டிசம்பர் 19, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவினுடையது என்று கூறப்படும் உடலம் ஒன்றின் புகைப்படங்கள் இந்தவாரம் வெளியாகியிருக்கின்றன. வழமைபோலவே நிர்வாணப்படுத்தப்பட்டு சுடப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இருப்பது துவாரகாவிப் உடலம்தான் என்று ஊடகங்கள் சொல்ல, அது துவாரகாவின் உடலம் இல்லை என்று இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான உதய நாணயக்கார மறுப்புத் தெரிவித்திருக்கிறார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி தவிர அவரது குடும்பத்தினரின் உடலங்கள் எதையும் நாம் இன்னும் அடையாளம் காணவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அது துவாரகாவின் உடலமா இல்லையா என்பதைவிட, கிடைத்த உடல்களை எல்லாம் நிர்வாணப்படுத்திப் படம் பிடித்து வலைகளில் மேயவிடுகிற வக்கிரம் கண்டிக்கத்தக்கது.

வருகிற ஜனவரி மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். அதற்கான கட்டுப்பணத்தைத் தேர்தல் ஆணையத்தில் செலுத்தி, தேர்தல் களத்தில் முற்றுமுழுதாக இறங்கிவிட்டார். மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார். இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தான் ஈடுபட இருப்பதாகவும், வடக்குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் தான் பிரசாரம் செய்யப்போவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அரசியல்-புகுந்தகம்
புவி வெப்பமாதல் பற்றி டென்மார்க்கில் நடந்த மாநாட்டில் கனடா மீது கடும் கண்டனங்கள் வெளிவிடப்பட்டிருக்கின்றன. சூழல் மாசடைதல் தடுப்பு முயற்சிகள் மற்றும் உமிழ்வுக் கட்டுப்பாட்டின் கனடா பின்தங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் ரொரன்ரோ நகரத்தின் சூழல் மாசடைதல் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பாராட்டும் ஆதரவும் கிடைத்திருப்பது ரொரன்ரோ நகரவாசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்பதாக நகரபிதா டேவிட் மில்லர் தெரிவித்திருக்கிறார். நகரசபை ஊழியர்களின் பல்வேறுவகையான முயற்சிகளும், ரொரன்ரோ வாசிகளின் முழுமையான ஒத்துழைப்புமே இதற்கு முக்கிய காரணம் என்று மில்லர் தெரிவித்தார்.

இதே வேளை இதே சூழல் மாசடைதல் கருத்தரங்கு கனடாவில் இன்னொரு சிறிய அரசியல் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. ஒன்ராரியோ மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் John Gerretsen மற்றும் கியூபெக் மாநில பிரதம அமைச்சர் Jean Charest, ‘அல்பேர்ட்டாவில் உமிழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறபோது நாங்கள் மட்டும் ஏன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும்?' என்கிற ரீதியில் வெளிவிட்ட கருத்துக்களால் அல்பேர்ட்டா மக்கள் தனி நாடாகப் பிரிந்து போவது பற்றிப் பேசத்தொடங்கியிருப்பதாக அல்பேர்ட்டா பிரதமர் Ed Stelmach தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் பிரிவினைக் கோரிக்கையை வைத்துக் கியூபெக் வாழ்கிறது. இனி அல்பேர்ட்டாவும் அதே வழியில் போகுமா என்பதற்குக் காலமே பதில் சொல்லும்.

அரசியல்-உலகம்
தனித் தெலுங்கானா மாநிலம் தொடர்பான பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது. 9 நாட்களாகக் கடையடைப்பு நடக்கிறது. பலபேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பலரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இதே வேளை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதிக் கட்சியின் தலைவர் மணிபால் ரெட்டி என்கிறவர் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் தலையைக் கொண்டுவந்தால் 50 இலட்சம் பரிசு கொடுப்போம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மனித உரிமை ஆணயத்திடம் காங்கிரஸ் புகார் கொடுத்திருக்கிறது. காவல்துறை, நீதித்துறை எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மும்பையில் 26/11 நடந்த தாக்குதல் போல இலண்டனிலும் நடக்கலாம் என்று ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாக ஸ்கொட்லாந்து யார்ட் அறிவித்திருப்பதால் இலண்டனில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Blackberry தயாரிப்பாளர்களான RIM என்றழைக்கப்படும் Research In Motion நிறுவனம் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான இலாபம் ஈட்டியிருக்கிறது. நான்காவது காலாண்டு தொடர்பான அவர்களின் எதிர்வுகூறலும் நன்றாக இருப்பதால் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்வு கூறிய இலக்குகளை RIM நிறுவனம் வெகு இலகுவில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளின் சந்தைவிலை கூடியிருக்கிறது.
2002 தொடக்கம் 2009 இரண்டாவது காலாண்டு வரை கிட்டத்தட்ட 75 மில்லியன் Blackberry Smartphone களை உற்பத்தியிடங்களில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிய RIM நிறுவனம், 2009 ன் மூன்றாவது காலாண்டில் மட்டும் 10 மில்லியன் Blackberry களை உற்பத்தி சந்தைப்படுத்தியிருப்பது அவர்களின் வரலாற்றில் ஒரு மைல்கள் மட்டுமல்ல, ஒரு வியத்தகு சாதனை என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். நான்காவது காலாண்டிலும் அதே போல் 10 மில்லியன் Blackberry களைச் சந்தைப்படுத்தும் திட்டம் தங்களிடம் இருப்பதாக RIM கூறியிருக்கிறது.

விளையாட்டு
இலங்கை-இந்தியா ஒரு நாள் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. சேவாக் 146 அடித்து இந்தியாவை 414 என்ற இமாலய எண்ணிக்கை பெற வைக்க டில்ஷானின் 160 மற்றும் சங்காவின் 43 பந்துகளில் எடுத்த 90 சகிதம் 411 ஓட்டங்களைப் பெற்று முதல் ஒரு நாள் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி, தோனியின் சதம் காரணமாக இந்தியா பெற்ற 301 ஓட்டங்களை டில்ஷானின் அருமையான சதத்தின் உதவியுடன் கடந்தது. என்னதான் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளங்களாக இருந்தாலும் இரண்டு போட்டிகளும் மிகவும் பரபரப்பாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.

மிக ஆறுதலாக 50 ஓவர்களை வீசி முடித்தார் என்கிற காரணத்தால் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் தோனிக்கு துணிவாக விதித்த இந்தத் தடை பாராட்டப்பட வேண்டியது. இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் கிரிக்கெட் என்கிற ஆட்டத்தைவிட வீரர்களான தாங்களே பெரியவர்கள் என்பது போல் நடந்து கொள்வது அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பன்றிக் காய்ச்சலால் யுவராஜும் விளையாட முடியாமல் இருக்கிற நிலையில் இந்தியாவுக்கு இது பேரிழப்பே.

சினிமா-பொழுதுபோக்கு
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான விஞ்ஞானப் புனைவுப் படமான Avatar உலகம் முழுவதும் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் 73 மில்லியன் வசூலுடன் நேரடியாக முதலாவது இடத்துக்குத் தாவியிருக்கிறது. டிசம்பர் மாதம் வெளிவிடப்பட்ட ஒரு படத்துக்கு முதல் வாரத்தில் இவ்வளவு வரவேற்புக் கிடைத்திருப்பது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் 2007ல் வில் ஸ்மித்தின் I am Legend படத்தில் 77.2 மில்லியன் சாதனையை முறியடிக்க முடியவில்லை இந்தப் படத்தால். இந்தியாவில் 18ம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் படம் முதல் நாளிலேயே 6.75 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது.

புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் ‘வேட்டைக்காரன்' நல்ல ஆரம்பம் பெற்றிருக்கிறதாம். புலம் பெயர் நாடுகளில் நிலவரம் தெரியவில்லை. இங்கிலாந்தில் 7 காட்சிகள் ஓடுகிறதாம். கனடாவில் சில முக்கிய தமிழர் திரையரங்குகள் புறக்கணித்திருந்தாலும், famous players பக்கம் கூட்டம் அலைமோதுவதாகக் கேள்வி.

அடப் பாவிகளா........
OnlineFamily.Norton நிறுவனத்தின் ஆய்வுப்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் 2009ம் ஆண்டு வலையில் தேடியது என்ன தெரியுமா? பாலுறவுப் படங்களையும், மைக்கல் ஜாக்சனையும்தானாம். சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட இந்த அறிக்கைப்படி இளம் ஆண்கள், பெண்களின் தேடுதல் பட்டியலில் முன்னுக்கு நிற்கும் விஷயங்கள் வருமாறு:

வயது ரீதியான பாகுபடுத்தல் வருமாறு:


2 comments:

sellamma said...

நண்பரே,,
அருமையான அலசல்,,,,

வயசுப்பசங்களின் தேடல் புல்லரிக்க வைக்கிறது,,,,
எங்களுக்கெல்லாம் தேட தெரியலையா?? இல்லை தேட தோணலையா???

priyanka87 said...

Not bad