Saturday 5 December 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 29-டிசம்பர் 05 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் என்று சிவாஜிலிங்கம் எம்.பி. சென்னையில் தெரிவித்திருக்கிறார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவையோ, பொன்சேகவையோ ஆதரிப்பது இயலாத காரியம். ஆகவே நாங்களும் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். அப்படி கட்சி ஒரு வேட்பாளரை நியமிக்காத பட்சத்தில் நானே சுயேட்சையாகப் போட்டியிடுவேன்' என்று சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கும் காரணமும், வெளிப்படையாக அதைச் சொன்ன விதமும் வரவேற்கத்தக்கது. அந்த வேட்பாளர் யாராக இருப்பினும் ஜனாதிபதியாக வரமுடியாது எனிலும், வாக்குகளைப் பிரித்து, தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும், முக்கியத்துவத்தையும் ஓரளவுக்காவது நிரூபிக்கலாம். அதேவேளை தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியுமா என்பதையும் இந்தத் தேர்தலே கோடிட்டுக் காட்டும். சுதந்திரமாக வாக்களிக்கத் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா, இல்லை 22 எம்.பி. க்களை அனுப்ப, செல்வராசா கஜேந்திரனை வரலாறு காணாத வெற்றி பெறவைக்க தமிழ் மக்கள் விதைத்த விதையை ஈ.பி.டி.பி. போன்ற ஒட்டுக்குழுக்களின் வாயிலாக அறுவடை செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமான ஒரு ஆளாக இருந்த கே.பி. என்கிற செல்வராசா பதமநாதனை நினைவிருக்கிறதா பலருக்குத் தெரியவில்லை. பிரதிநிதி, துரோகி, புதிய தலைவர் மீண்டும் துரோகி என்று பல அவதாரங்களைக் கொடுத்து பின்னர் எவ்வளவு வேகமாக தமிழீழ அரசியலில் முக்கியமானாரோ அதைவிட வேகமாக மறக்கப்பட்ட கே.பி. தன்னிடம் 5 கப்பல்களும், 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் இருப்பதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகளுக்குச் சொல்லியிருக்கிறாராம். இவரது தகவலின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மடக்கப்பட்டிருக்கின்றனவாம். இப்போது கே.பி.க்கு என்ன புது அவதாரம் கொடுக்கப்போகிறோம்?

அரசியல்-புகுந்தகம்
இந்த வாரம் ஒன்ராரியோ மாகாண அரசியலில் சூடான வாரம் என்று சொல்லலாம். மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களான, கொன்சேர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்தவர்களான ரிக் ஹில்லியேர் மற்றும் பில் மர்டோச் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஒன்ராரியோ மாநிலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு எதிராக அமளி செய்த காரணத்துக்காக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டீபன் பீற்றேர்ஸ் அவர்களால் அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்கள். ஆனால் மேற்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் தொடர்ந்து இரு நாட்களாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறாமல் முரண்டு பிடித்தார்கள். இறுதியாக நேற்று சில நிபந்தனைகளுக்கு ஒன்ராரியோவை ஆளும் லிபரல் கட்சியினர் சம்மதிக்க, தம்முடைய போராட்டத்தை இருவரும் முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

இதுவரை காலமும் மத்திய அரசின் விற்பனை வரியாக 8%ம், மாநில அரசின் விற்பனை வரியாக 5% ம் அறவிடப்பட்டு வருகிறார்கள். வரும் ஜூன் 1 ம் தேதி இவை ஒருங்கிணைக்கப்பட்டு 13% விற்பனை வரி அறவிடப்படுவதற்கு ஒன்ராரியோ லிபரல்கள் முனைகிறார்கள். கொன்சேர்வேற்றிவ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த முறமை இருக்கிறது. அப்போது HST என்பதை SHT அதாவது Stephen Harper Tax என்று வாசியுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரையும், கொன்சேர்வேற்றிவ் கட்சியையும் நக்கலடித்தார் மத்திய லிபரல் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ். இப்போது ஒன்ராரியோ மாநில லிபரல்கள் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஆதரிக்க, ஒன்ராரியோ கொன்சேர்வேற்றிவ்கள் அதை எதிர்க்கிறார்கள். அரசியல்வாதிகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான்.

அரசியல்-உலகம்
ரஷ்யாவின் பெர்ம் (Perm) நகரின் இரவு விடுதி ஒன்றில் நடந்த வெடி/தீ விபத்தில் 109 பேர் பலியாகியிருக்கிறார்கள். சோவியத் யூனியன் பிரிந்த காலத்துக்குப் பிறகு இடம்பெற்ற மிக மோசமான இந்த வெடி/தீ விபத்தில் 130 பேர் காயமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த விபத்திற்கு எந்தவித தீவிரவாதத் திட்டமும் காரணமில்லை என்று ரஷ்யப் புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். மாறாக ரஷ்ய அதிபர் திமீத்ரி மெட்வெடெவ் (Dmitri Medvedev) இப்படியான இரவு விடுதிகளின் பாவனையாளர்களுடைய பாதுகாப்புக்கு உகந்த வண்ணம் விடுதிகளின் உள்புறங்களை மீள் வடிவமைப்பதில் பின்னிற்கும் விடுதி உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ரஷ்யாவில் நாளை திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கொஞ்சக் காலத்துக்கு முன்வரை வேலை தேடும் பலருக்குப் பலர் சொன்ன ஒரு அறிவுரை அல்பேர்ட்டா மாகாணத்தில் வேலைகள் இலகுவாகக் கிடைக்கும் என்பதே. இனிமேலும் யாராவது அதையே சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் கனேடியர்கள். கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அல்பேர்ட்டா மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்கரியில் மேலும் மேலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என்பதே. இந்த வருடம் இது வரையிலும் கல்கரியில் மட்டும் 16,600 பேர் வேலை இழந்திருக்கிறார்கள். சென்ற வருட இறுதியில் 3.7 ஆக இருந்த வேலையமைவின்மைச் சுட்டெண் இப்போது 7 ஆக அதிகரித்திருக்கிறது.

இப்படியான சிக்கல்களுக்கு முழுமுதல் காரணமாக எல்லோரும் அரசாங்கங்களின் நிர்வாகத்திறமையைச் சுட்டிக்காட்டினாலும், சாதாரண குடிமக்களின் பொறுப்புணர்வின்மையையும் காட்டுகிறது. உதாரணமாக ஒருவருக்கு $75,000 தேவைப்பட்டால், அவருக்காக $150,000 கடன் அனுமதி எடுத்து, அதில் $60,000 கொமிஷனைத் தாங்கள் எடுத்து, $90,000 கடனை குறித்த நபரிடம் கொடுக்கும் அருமையான வங்கி அதிகாரிகள் இருக்கிறார்கள். $90,000 கடனைக் குறித்த நபர் திருப்பிக் கட்டமாட்டார். முழுக் காசையும் உருவிவிட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் இவருக்கு வங்குரோத்துப் பாதுகாப்புப் பெற்றுத்தர ஆட்கள் இருக்கிறார்கள். இவர் மனைவியின் பேரில் ஐந்து அறை ரூமில் இன்பமாக வாழ்வார். நேர்மையாக முன்னேற நினைப்பவர்கள் இப்படிப் பொதுவெளியில் புலம்பிக்கொண்டிருப்போம்.

விளையாட்டு
இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. இன்னும் 4 விக்கட் தேவை. முதலில் துடுப்பெடுத்தாடி 393 ஓட்டங்களை இலங்கை பெற பதிலளித்தாடிய இந்தியா 726 ஓட்டங்களை 9 விக்கெட்டுக்குப் பெற்றது. சேவாக் அதிரடியாக ஆடி வெறும் 254 பந்துகளில் 293 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது. சங்ககார 133 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரை 2-1 என்று வென்று இங்கிலாந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நியூசிலாந்து-பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மேற்கிந்தியா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நடுவர்களின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கும் முறை பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன. இலங்கை இந்தியா தொடரில் இது இல்லாததால் இரண்டு முறை டில்ஷான் பாதிக்கப்பட்டார். இரண்டுமே மிக மோசமான முடிவுகள். ஆனால் அவுஸ்-மே.இ. தொடரில் கள நடுவர் பென்சன் எடுத்த சரியான முடிவு மூன்றாவது நடுவரால் பிழையாக மாற்றப்பட்டதால் பென்சன் கோபமடைந்து ஓய்வு பெற இருக்கிறார். எனக்கென்னவோ இந்த முறையை முற்றாக நீக்குவது நலம் என்றே படுகிறது. இந்த வருட முற்பகுதியில் ஹர்பஜனின் பந்தில் நியூசிலாந்தின் ரெய்லர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இருந்த எல்லாத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஆராய்ந்து வர்ணனையாளர்கள் நடுவர்களை ஒரு பாட்டம் திட்டி, மறுப்புத் தெரிவிக்காமல் வெளியேறிய ரெய்லரைப் பாராட்டி முடிந்தபின், அன்றைய நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் ரெய்லர் 'கூலாக'ச் சொன்னார், ‘அந்தப் பந்து என் மட்டையில் பட்டது என்று'. திருந்த வேண்டியது விளையாட்டை விளையாட்டாய் எடுக்கவும், நடுவர்களை மனிதர்களாகப் பார்க்கவும் தெரியாத கிரிக்கெட் வீரர்களே.

சினிமா-பொழுதுபோக்கு
முன்னாள் இளைஞர்களை மட்டுமல்லாமல் இன்றைக்கு அவர் படத்தைப் பார்ப்பவர்களையும் ஒரு கணம் சலனமடைய வைக்கும் மர்லின் மன்றோவின் அறியப்படாத வாழ்க்கை பற்றிய ஒரு காணொளி ஒன்றை கெயா மோர்கன் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். அந்தக் காணொளியில் அந்த எப்போதும் பசுமையான கனவுக்க கன்னி போதை மருந்து புகைப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றனவாம். 50 வருடங்களுக்கு முன் மர்லின் ஒரு விருந்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட காணொளியிலேயே இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கின்றனவாம். ஜோன்.எஃப்.கென்னடி போன்ற அரசியல் பிரமுகரே மயங்கித் தவமிருக்க வைத்த மர்லின் மறைந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எனது ஞாபகத்தில் 1962ல் மர்லின் இறந்தார் என்று நினைக்கிறேன்). நமீதாவைப் பார்த்து ‘நீ மார்லின் மன்றோ குளோனிங்கா' என்று எழுதிய கவிஞனது கற்பனை....ஆஹா.... ஆஹா....அஹ்ஹ்ஹஹஹா... நல்லவேளை இதெல்லாம் கேட்காமல் மார்லின் இறந்து போனார். இல்லாவிட்டால் தன்னோடு ஒப்பிடப்பட்ட மாமிச மலையின் படத்தைப் பார்த்து நெஞ்சு வெடித்துச் செத்திருப்பார்)

நான் இன்னும் ‘பா' படம் பார்க்கவில்லை (படம் வந்து 2-3 மாதம் கழித்தே தரமான டி.வி.டி.க்களைத் தரவிறக்க முடிகிறது. அண்ணன் கானா பிரபா பார்த்து விமர்சனம் வேறு எழுதியிருந்தார். அதற்கிடையில் படம் பற்றிய சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்கியதாக ஒருவர் 'பா' படத்தைத் தடை செய்யச்சொல்லி வழக்குப் போட்டிருக்கிறார். இன்னும் பல விமர்சனங்களையும் படித்து, படமும் பார்த்த பின்தான் உண்மையிலேயே அமிதாப் பச்சனின் பாத்திரம் அப்படியாக ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்குகிறதா, அல்லது இந்த வழக்கு இன்னொரு publicity stunt ஆ என்று சொல்லமுடியும். மிருகங்களை வைத்துப் படமெடுப்பதற்கு எதிராகக் கூடப் போராடுகிறார்கள், பெண்களையும், அரவாணிகளையும் கேவலாமாகச் சித்தரித்து எடுக்கும் படங்களைப் பற்றி யாருமே பேசுவாரில்லை.

அடப் பாவிகளா........

நிறம், மதம், மொழி, அது இது என்று எந்த வேறுபாடும் இல்லாமல் ஆண்கள் எல்லாம் செய்யும் ஒரு வேலை தெரியுமா நண்பர்களே? பல நாட்களாக அவதானித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நீங்களும் அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்ன வேலை தெரியுமே? Western Toiletல் நின்றபடி 'கொள கொள' சத்தத்தோடு ஒன்றுக்கடிப்பது. இன்றைக்கு படிக்கிற இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரும், ஒரு ஆபிரிக்கரும் அதைத்தான் செய்தார்கள். விஜய் அதைத்தான் செய்கிறார். வேலையிடத்தில் பல வெள்ளைக்காரர்கள் அதைத்தான் செய்கிறார்கள். மருமகனும் அதைத்தான் செய்கிறான். அவன் நண்பர்களும் அதைத்தான் செய்கிறார்கள். நான் மட்டும் Comet ல் உட்கார்ந்து போகிறேனோ என்று பயமாயிருக்கிறது. நான் போகிற வழியில் ஒரே ஒரு தொல்லை மட்டும் இல்லை. துன்னாலை அக்கவுண்டண்ட் சொல்லும் ‘ஒன்றுக்கிருந்துவிட்டு ஒருதரம் சுண்டாவிட்டால் நிண்டிட்டு விழுமாம் ஒரு துளி நீர்' என்கிற பிரச்சினை இருப்பதில்லை.

8 comments:

கானா பிரபா said...

நல்லாயிருக்கு

Unknown said...

நன்றி பிரபா அண்ணா... ஈழத்து முற்றப்பக்கம் வரத்தான் வேண்டும். பார்ப்போம்

Karthikeyan G said...

Intresting....

Unknown said...

நன்றி கார்த்திகேயன்

அருண்மொழிவர்மன் said...

“பெண்களையும், அரவாணிகளையும் கேவலாமாகச் சித்தரித்து எடுக்கும் படங்களைப் பற்றி யாருமே பேசுவாரில்லை.”

நண்பா, அதை செய்தால் தமிழ்ப் பெருநடிகர்கள் எவரது படங்களுமே வெளிவர முடியாதே...... அவர்கள் நாளைய முதல்வர்கள் அல்லவா, அவர்கள் படங்களை எப்படி தடுப்பது????

Anonymous said...

ஒண்டுக்கிருந்து உசுப்பாதான் வாழ்வில்
பின்னின்று சொட்டு விழும் என்பதே
அந்த கிறள்(குற்ள்)ன் வடிவம்.
ம.பரணீதரன்.

Unknown said...

///அதை செய்தால் தமிழ்ப் பெருநடிகர்கள் எவரது படங்களுமே வெளிவர முடியாதே///
அதெண்டா உண்மை பாருங்கோ. ஆனாலும் நான் பொதுவாக எல்லா மொழித் திரைக் கலைஞர்களையும் சொன்னேன்.

Unknown said...

தகவலுக்கு (????!!!!!) நன்றி பரணீதரன்