Tuesday, 3 November 2009

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். 'போர் தின்ற சனங்களின் கதை' என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை'.
  1. ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
  2. ஒரு ஊரில் ஓர் கிழவி
  3. மந்திரக்காரன்டி அம்மான்டி
  4. குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
  5. ஒருத்தீ
  6. சித்தி
  7. நீ போய்விட்ட பிறகு
  8. சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
  9. தோற்ற மயக்கங்களோ
  10. கரைகளிற்கிடையே
  11. செய்தியாக துயரமாக அரசியலாக
  12. நரைத்த கண்ணீர்
மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை'. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்' கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்' கண்ட அரசியலையும்தான்.

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்' என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா' என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி'யாகப் பார்க்கப்படுகிற அவரது 'சித்தி'யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை' என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்..... முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ'. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்' என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை'யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்' ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்' என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்' என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?' என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்' என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் 'ஆக்க இலக்கியங்கள்' உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற' தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்' அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.


பதிப்பகம்
வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா' சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை' கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை' விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்' அற்புதமாக வந்திருக்கிறது.
வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

சின்னச் சர்ச்சை
ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். 'சொல் விளக்கக் குறிப்புகள்' எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)

9 comments:

கலையரசன் said...

அறிமுகத்துக்கு நன்றி கீத்! கீப் கோயிங்!!

M.Thevesh said...

உங்கள் அறிமுகம் அந்தப்புஸ்தகத்தைத்
தேடிவாங்கவேண்டும் என்று என்னுள்
ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அது உங்கள் அறிமுகத்திற்குக்கிடைத்த
வெற்றி.

Unknown said...

நன்றி கலை

Unknown said...

தேவேஷ் நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள்... புத்தகத்துக்கு ஏற்பாடு செய்யவா

Anonymous said...

வடலி புத்தகங்கள் கனடாவில் எங்கே வாங்கலாம் ?

MANO

ஆதிரை said...

ஆறுதலாக வாசிக்கவேண்டுமென்று சேமித்து வைத்த பதிவிது. வெள்ளிகிழமையொன்றின் மாலையில் வந்து வாசிக்கின்றேன்.

இப்புத்தகத்திலுள்ள சம்பவங்களில் (ஆம்... அவை சம்பவங்கள் தான். கதைகள் அல்ல...) ஒரு சில அகிலனின் தளத்தில் வாசித்துள்ளேன்.

என்றாவது ஓர் நாள் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்ற வெறியில் இருக்கின்றேன். அது கைகூடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

Unknown said...

கட்டாயம் வாசியுங்கோ ஆதிரை அண்ணா... 12 சம்பவங்கள், 12க்கு மேற்பட்ட மரணங்கள்... எண்ணிக்கை இல்லாத கண்கலங்கல்கள்... புத்தகமாக வாங்கி வாசித்தால் ‘வடலி' நண்பர்களுக்கு ஊக்குவிப்பாகவும் இருக்கும்

ஆதிரை said...

புத்தகமாக வாங்கி வாசித்தால் ‘வடலி' நண்பர்களுக்கு ஊக்குவிப்பாகவும் இருக்கும்

இலங்கை மணித்திருநாட்டில் கிடைக்காதாமே... என்ன செய்ய?

Unknown said...

ஆதிரை..
சயந்தனைக் கேட்டீர்களா??