Friday, 27 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 22-நவம்பர் 28 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்+புகுந்தகம்+பக்கத்து வீடு
மாவீரர் வாரம்தான் இந்த வாரத்தில் தாயக அரசியலின் மிகப்பெரிய செய்தியாகும். தாயகத்தில் இந்த முறை இந்த நாள் அனுட்டிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளை, தகப்பன்களை, சகோதரன்களை, சகோதரிகளை இழந்த சொந்தங்கள் எத்தனையோ ஊமையாக அழுதிருக்கும். அந்தக் குறையைப் போக்குவது போல் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லியாகவேண்டும். இப்படியாவது ஒன்றுபட்டால் நலம்.

சீமானை கனடாவுக்கு அழைத்து இங்கே ஒரு விழா நடத்தினார்கள். அவரை கனேடியக் காவல்துறை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. இப்படியான உணர்வு பூர்வமான நிகழ்ச்சிக்கான ‘சிறப்பு விருந்தினர்' அழைப்பு, அவரது பேச்சுக்கான விசில்கள் பற்றிய விமர்சனங்களைக் கடந்து, கனேடிய அரசின் இந்தச் செயல் கீழ்த்தரமான அரசியல் அழுத்தங்களைக் கொண்டது என்பதை இங்கே பதிவுசெய்தாக வேண்டும். ‘தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஒரு சிங்களன் கூட உயிருடன் இருக்கக்கூடாது' என்ற தொனியில் பேசியதைவிட கனடாவில் வன்முறை ஒன்று தோன்றும் அளவுக்கோ, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும்வகையில் இளைஞர்களைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. இது இந்திய/இலங்கை அண்ணன் தம்பிகளின் அழுகையைத் துடைக்க கனேடியப் பெரியண்ணன் செய்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு என்பது மட்டும் உண்மை.

இலங்கை அரசியல்களம் விரைவில் இன்னும் சூடேறப்போகிறது. வருகிற 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பாகப் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர ஆலோசனை செய்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வன்முறையில்லாமல் நேர்மையான ஒரு தேர்தலுக்குச் சாத்தியமிருப்பதாகத் தெரியவில்லை. சொந்தங்களையும், நட்புக்களையும் நினைக்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகிறது.

அரசியல்-புகுந்தகம்+உலகம்
சென்ற வார ‘நான் பார்க்கும் உலகம்' தொகுப்பில் ஆஃப்கான் போர்க்கைதிகள் மீதான வன்கொடுமைகளில் கனடாவுக்கும் பங்கிருக்கிறது என்கிற செய்தி இப்போது கனேடிய அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியலையே உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்திலும் இது தொடர்பான மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. தாம் கைது செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டதாக சில பாகிஸ்தானியர்கள் சொல்லியிருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் ‘குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லும்போதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத மனித உரிமை மீறல்கள் இப்போது தெரியும் விந்தை அரசியலை விளங்கிக்கொள்வது என் போன்ற பாமரர்களுக்கு இயலாத காரியம்.

இதே வேளை இப்படியான துன்புறுத்தல்கல் பற்றி 2006ம் ஆண்டளவிலேயே செஞ்சிலுவைச் சங்கம் மின்னஞ்சல்கள் மூலமாகத் தங்களுக்கு அறிவித்திருந்தது என்று கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே கூறியிருக்கிறார். இதுவரை காலமும் தீவிரமாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அரசதரப்பில் இருந்து இப்போது முழுமையான குத்துக்கரணம் அடித்திருக்கிறார் மக்கே. முன்னைநாள் அமெரிக்க அதிபர் புஷ், முன்னைநாள், இற்றைநாள் பிரித்தானியப் பிரதமர்கள் ரொனி பிளேயர், கோர்டன் ப்ரவுன் ஆகியோரின் தலைமையில் உலகின் பெரியண்ணன்கள் பலர் சேர்ந்து ஆடும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இது. கைதிகளைத் துன்புறுத்தவென்றே 'குவாண்டனாமோ பே'யில் சிறைக்கூடம். பின்னர் இப்படியான நாடகங்கள். இந்த மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் திரும்பவும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வினைகெட்ட அமைப்புகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
இந்தவார வணிகம் பொருளாதாரம் சம்பந்தமான மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருப்பது துபாய் பற்றிய செய்திகளே. துபாய் அரசால் நிர்வகிக்கப்படும் துபாய் வேர்ல்ட் எனப்படும் சார்புவைப்புக் குழுமம் பெரும் கடன் நெருக்கடியில் இருப்பதாக அறிவித்ததை அடுத்து உலகின் பல பாகங்களிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆசியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதில் பெரும் அதிர்ச்சி இல்லையென்றாலும், வழமையாக அமெரிக்கப் பங்குச் சந்தை ஒரு விடுமுறை தினத்தில் மூடப்பட்டிருக்கும்போது உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. டொலரின் சரிவும் முதலீட்டாளர்களைக் கொஞ்சம் ஆடவைத்திருக்கிறது.

ஆசியாவில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தைச் சுட்டென் 3.18% வீழ்ச்சி கண்டது. ஹொங்கொங்கின் ஹாங் செங் 1.8%, ஜப்பானின் நிக்கேய் 0.6%, இந்தியாவின் மும்பை 2.67% சரிவைச் சந்தித்தன. ஐரோப்பாவில் லண்டன் பங்குச்சந்தை 3.25% வீழ்ச்சியையும், ஃப்ராங்ஃபேர்ட் பங்குச் சந்தை 3.18% வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன.

விளையாட்டு
இந்த வாரம் ஒரே கிரிக்கெட் கொண்டாட்டம். இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான்-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலியா-மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா ஒரு நாள் போட்டிகள் என்று முக்கிய எட்டு அணிகளும் மோதிக்கொண்ட வாரம் இது. இந்தியா இலங்கையை இன்னிங்ஸ்சால் வென்று தமது 100வது டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. அவுஸ்திரேலியா மேற்கிந்தியாவை மூன்று நாட்களில் சுருட்டியது. இங்கிலாந்து ஒரு போட்டியையும், தென்னாபிரிக்கா இன்னொரு போட்டியையும் வென்று சமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வாரத்தின் அருமையான போட்டி நியூசிலாந்து-பாகிஸ்தான் போட்டி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் கடைசி நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இரு அணிகளும் போராடி, நியூசிலாந்து 32 ஓட்டங்களால் வென்றது. இப்படியான போட்டிகள்தான் டெஸ்ட் கிரிகெட்டை வாழவைக்கும். அகமதாபாத் போன்ற போட்டிகள் அல்ல.

முதல் போட்டியிலேயே 129+75 ஓட்டங்களைப் பெற்ற 19 வயதான உமார் அக்மல், பந்து வீச்சில் கலக்கும் 17 வயது முகம்மட் ஆமீர் ஆகியோருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய எதிர்வுகூறல்கள் எப்போதும் சரியாவதற்குரிய வாய்ப்புகள் குறைவு. பார்ப்போம், இந்த இளம்புயல்கள் என்ன செய்கிறார்கள் என்று. அதே போல் அடுத்த இளம் புயல் மேற்கிந்தியாவின் அட்ரியன் பரத்.

சினிமா-பொழுதுபோக்கு
சமீபத்தில் வெளியான அமீரின் ‘யோகி' படம் வெளியான உடனேயே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமீரும் இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் காட்சிக்குக் காட்சி ‘டுட்சி' என்ற தென்னாபிரிக்கப் படத்தை சுட்டு விட்டார்கள் என்று திரையுலகம், வலையுலகம் எல்லாம் குதறுகிறார்கள். 'துபாய் திரைப்பட விழாவுக்குப் போகிற படம் எப்படி சுட்ட படமாக இருக்கும்?' என்று கொதிக்கிறார் அமீர். மொத்தத்தில் இரண்டு வருடமாக அமீர் 'செதுக்கிய' யோகி, ஊத்திக்கொண்டாயிற்று.

ஒரு மாதிரி அடுத்த ஐ.பி.எல் வரமுன்னரே காதலித்த ஷில்பா ஷெட்டியை நவம்பர் 22ல் கைப்பிடித்து விட்டார் ராஜ் குந்த்ரா. ஷேன் வோர்னின் குக்ளிகளைச் சமாளிக்க முடியாமல் விரைவில் இந்தத் திருமணம் நடக்கும் என்று 'Fake IPL Player' எப்போதோ சொல்லியிருந்தது ஞாபகம் வருகிறது. வோர்ன் ஷமீதாவுக்கு இனி குக்ளிகளை வீசவேண்டியதுதான்.

அடப் பாவிகளா........
ஆணி புடுங்கும் இடத்தில் Levi Strauss ன் ஆண்களுக்கான பணப்பைகளை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பணப்பைகள் அடைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பைகளில் எழுதியிருந்த வசனம் கொஞ்சம் குழப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கொஞ்சக் காலத்துக்கு முன்னர் வந்த பரபரப்பையும் சேர்த்து ஒரு வாசகம் அடித்திருந்தார்கள். ‘This is not a toy made in China. But keep away from kids'. கிட்டத்தட்ட சீனத் தயாரிப்புகள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வாசகம் அது. வேடிக்கை என்னவென்றால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இடுப்புப்பட்டிகளும், பணப்பைகளும் இங்கே வைத்துப் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான்.

No comments: