Monday 29 June 2009

அக்கரைப் பச்சை

பதிவர் வந்தியத்தேவனின் 'இளையராஜா ஒரு சகாப்தம்' படித்தேன். பல சாதனைகள் செய்த ராஜாவை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது பற்றியும் பதிவுலகில் இருக்கும் அவர்பற்றிய மாற்றுக் கருத்துகள் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். மக்கள் மத்தியில் வரும் எல்லாமே விமர்சனத்துக்குரியவைதான். ஆனால், பதிவுலகில் ஒரு புற்றுநோய் பரவி வருகிறது. அதாவது, விமர்சனம் (Criticism) என்பதை விடுத்து, முக்கால்வாசிப் பேர் பதிவுகளுக்கு அதிக ஹிட் கிடைப்பதற்காக நிந்தனையில் (Bashing) ஈடுபடுவதுதான் அந்த நோய். ராஜாவை மட்டுமல்ல, கலைத்துறையில் இருக்கும் 99சதவீதம் பேரையுமே இவர்கள் வெளிநாட்டுக் கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் வைக்கும் ஒரு பாரிய குற்றச்சாட்டு இயக்குனர்கள் வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறார்கள் என்பதே. உண்மை, பல பேர் அப்படி வெளிநாட்டுப் படங்களை ஒரு Inspirationஆக வைத்துப் படம் எடுக்கிறார்கள் எனபது உண்மைதான். அதற்காக, ஒரு மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதைவைத்துப் படம் பண்ணும் இயக்குனர்களையும் ‘காப்பி காப்பி' என்று சொல்லி நிந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு தனது வேலைக்குத் தேவையான வாகனத்தைத் தொலைத்துவிட்டுத் தேடும் ஒருவனை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட படம் 'Bicycle Thieves' என்ற படம். அந்தக் கருவை மட்டும் பின்னணியாக வைத்துக்கொண்டு பொல்லாதவன் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். கடத்தல் செய்யும் தாதாக்கள், ஒரு காதல், திருடிய மோட்டார் சைக்கிள்கள் என்னாகின்றன இப்படி பல விடயங்களை நுணுக்கமாக நுழைத்திருப்பார் வெற்றிமாறன். இவைகளைப் பாராட்டாமல், பொத்தாம் பொதுவாக ‘பொல்லாதவன் ஒரு காப்பி' என்று மட்டுமே சொல்கிறார்கள் நம்மவர்கள்.

கமல் அல் பாசினோ போல், மார்லின் பிராண்டோ போல் நடிக்கிறாராம். வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறாராம். இப்படியெல்லாம் குற்றம் சுமத்தும் இவர்கள், இந்தியாவின் கிராமங்களினைப் படம்பிடிக்க அவர் முயன்ற போது அவர் எதிர்நோக்கிய நெருக்கடிகளைக் கண்டுகொள்வதேயில்லை. 'தேவர் மகன்' படம் எடுத்தபோது சாதிச் சண்டைகளையும், அரிவாள் கலாசாரத்தையும் தூண்டுகிறார் என்று கூக்குரலிட்டார்கள். விருமாண்டியில் கூட அதுதான் நடந்தது. இந்தியாவின் கிராமங்களிலிருந்து வந்த யாராவது சொல்லுங்கள், இன்றைக்கும் கமல் காட்டிய கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லையா? அதைவிடுங்கள் விருமாண்டியில் அப்பத்தா செத்ததும் ‘என்ன விட்டுட்டு போயிட்டியே நாயே, என் தாயே' என்று புலம்பும் அந்த நடிப்பை கமல் எங்கிருந்து சுட்டார்? அல் பாசினோ அப்படி ஒரு அசல் கிராமத்தானாக ஒப்பாரி சொல்லி அழுததை நான் அறியவில்லை.

அதற்காக கமல் உட்பட எல்லாக்கலைஞர்களுமே சுத்தமாகத் தான் படம் எடுக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட மாட்டேன். நிச்சயமாக சில காட்சியமைப்புகளையும், சில தரமான கதைசொல்லும் முறைகளையும் உருவுகிறார்கள் என்பது உண்மை. அதே போல், ஏன் இந்தியப் படங்களிலிருந்து மற்ற நாட்டு இயக்குனர்கள் காட்சிகளையோ, கதை சொல்லும் பாணியையோ உருவுவதில்லை என்றும் கேள்விகள் உள்ளன. ஒரே காரணம், நம்மவர்களைப் பொறுத்தவரையில், இக்கரைக்கு அக்கரை பச்சை. அதாவது, வெளிநாட்டு தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் நம்மூர் படங்களைத் தமது தியேட்டர்களில் காசு கொடுத்து வாங்கிப் போடுவதில்லை. எம்மூர் டி.வி.டி. க்கள் அவர்களின் டி.வி.டி. கடைகளில் கிடைப்பதில்லை. நம்மூர் பட டி.வி.டி க்களை வெளிநாட்டு மக்கள் தேடிப்போய் வாங்குவதில்லை.

இங்கே வெளிநாடுகளில் இந்தியப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் பெரும்பாலும் இந்தியர்களாலேயே நடாத்தப்படுகின்றன. இல்லையெனில் சில விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படம் போடுகிறார்கள். மற்றபடி எந்த வெளிநாட்டு தியேட்டர் முதலாளியும் தேடிப்போய் வெளிநாட்டுப் படங்களை போடுவதில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலப் படங்களைப் போடுவதற்கு என்றே தியேட்டர்கள் இருக்கின்றன அல்லவா. அதேபோல் மேலைநாட்டு மக்கள் மற்ற நாட்டுப் பட டி.வி.டி. க்களைத் தேடிப்போய் வாங்குவதில்லை. அவர்கள் அவர்களின் மொழி, நாடு சார்ந்த கலைஞர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நாம் எங்கே அந்தக் கலைஞர்களைக் குத்தலாம் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

விமர்சனம் செய்வது கூடப் பரவாயில்லை. ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக் கூடாது. ஒரு அதிமேதாவிப் பதிவர் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு இயக்குனரும் நல்ல இயக்குனர் இல்லை என்றும், இதிகாசங்களை அடிப்படையாக வைத்துப் படமெடுக்கக் கூடாது என்றும் தடா போடுகிறார். இன்னொருவர் மணிரத்னத்தை மட்டம் தட்டும் ஒரே நோக்கில் 1995ல் மணிரத்னம் எடுத்த ஒரு படத்தை 2004 ல் வந்த ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பி என்கிறார். வெளிநாட்டுப் படங்களின் பெயர்கள் தெரிந்து விட்டால் போதும், உடனே அது இதன் காப்பி, இது அதன் உல்டா என்று வரிந்துகட்டிக் கொண்டு பதிவிடும் இவர்கள், சொந்த முயற்சியில் யாராவது ஒரு நல்ல படம் எடுத்தால் அது ‘க்ளீஷே, நாடகம்' என்று ஊதித் தள்ளிவிடுகிறார்கள். ஒரு நல்ல காட்சி வைத்தால் அதைப் பாராட்டுவதும் இல்லை.

எப்போதுமே கீழைத்தேய நாடுகளில் பிறந்து புகழ் பெற்ற எவருமே மதிக்கப்படுவதில்லை. அது கலை, சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் சகஜம். சச்சின் 90களில் மிக மெதுவாக ஆடுகிறார் என்பார்கள். 2007ல் சர்வதேசக் கிரிக்கட்டில் மூன்று 99கள் உட்பட 7 முறை சச்சின் 90களில் ஆட்டமிழந்த போது, 100க்கு மேல் அடித்து பெரிய ஸ்கோர் பெறாமல் 90களில் பொறுப்பில்லாமல் ஆடி ஆட்டமிழக்கிறார் என்று திட்டினார்கள். இப்படித்தான் இந்தியா முழுதும், விமர்சனம் என்ற பெயரில் நிந்தனை மட்டுமே செய்பவர்கள் கணக்கிலடங்காதவர்கள் என்பது என் கருத்து. 'வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமல் இருங்கள். எங்களவரே நாங்கள் சாண் ஏறினால் முழக்கணக்கில் இழுத்து வீழ்த்தும்போது எங்களால் எப்படி உலக அளவில் சாதனைகள் படைக்க முடியும்?' என்று சேரன் ஒரு பேட்டியில் கேட்ட கேள்வி அர்த்தம் மிகுந்தது. வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தூற்றுவதில் நமக்கு நிகர் நாமே.

4 comments:

வந்தியத்தேவன் said...

கீத் இதனைவிட சிறப்பாக சில விமர்சகர்களைச் சாடமுடியாது. அதிமேதாவித்தனமான இவர்களின் விமர்சனங்கள் வாசிக்கும்போது எரிச்சல்தான் வரும். ஒரு சின்னக்கதை :

திருவாளர் ஜீ என்பவர் சிறந்த எழுத்தாளர் ஆனால் இன்னமும் பிரபலமாகவில்லை. அவர் தனக்குத் தெரிந்த பிரபல விமர்சகரான ஜியாங்கைச் சந்திக்கிறார். ஜீயாங் ஜீயிடன் நீங்கள் ஒரு பெரிய கட்டுரை ஒன்று எழுதித்தாருங்கள் அதனை நான் பிரபலமான பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கச் செய்கிறேன் எழுதித்தாருங்கள் எனக்கேட்டார்.

அதற்க்குப் பதில் அளித்த ஜீ "தயவு செய்து என்னுடைய எழுத்தைப்புகழாதீர்கள் என்னுடைய படைப்பை கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்யும் படைப்புகள் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி மிகுந்த வரவேற்பைப் பெற்றன எனக்கேட்டுக்கொண்டார்.

இந்தக் கதையில் வரும் விமர்சகர் போலதான் சிலரும் ஒருவரையோ அவருடைய படைப்பையோ கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் பக்கம் மற்றவர்களின் பார்வையைத் திருப்புவார்கள்.

அருண்மொழிவர்மன் said...

நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கின்றேன். எம்மவர்களில் என்ன பிரச்சனை என்றால் நம்து தயாரிப்புகள் எல்லாம் குப்பை, என்று சொல்லி சும்மா வெளிநாட்டு படங்கள் பற்றியெல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டால் உடனே தாம் மேதவிகள் என்று நினைப்பது. இந்த மன நிலை சரவண பவனில் போய் மட்டன் குருமா கேட்கும் மனநிலை.

அது மட்டுமல்ல, பிரபலமானவர்களை விமர்சிப்பது / திட்டுவது மூலம் தாம் பிரபலமாக முடியும் என்ற நம்பிக்கையும் இதன் காரணம்

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் முக்கியமாகக் கதைக்கும் நன்றி வந்தியத்தேவன்...

அருண்மொழிவர்மன்... இவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை திட்டாமல் இருக்கலாம அல்லவா?

Anonymous said...

நீங்கள் நல்லவனா கெட்டவனா? மாத்தி மாத்தி எழுதி என்னையும் குழப்புகிறீர்கள்.